கிளிநொச்சியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில். 4 சிறிலங்கா இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி – காளிகோயில் 55ஆம் கட்டை பகுதியில் ரயில்வே கடவையில் இராணுவத்தினர் பயணித்த லொறியொன்று கடுகதி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (25ஆம் திகதி) பிற்பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்தியா கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்து புறப்பட்டுச் சென்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லையென, அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் ஈழத் தமிழர்களாவர். இவர்களின் நிலை குறித்து அறிய மத்திய அரசும், மாநில அரசும் உதவி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து விசாரித்து வரும் கேரள அரசு, இவர்களை நியூசிலாந்து அனுப்ப உதவி செய்த 10பேரை கைது செய்துள்ளதாகவும், மூன்று பேரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரும் இனப்படுகொலை ஒன்றில் ஈடுபட்ட தனது இராணுவத்தை தமிழ் மக்களைக் காப்பாற்றும் ஒரு மனிதநேயமிக்க மீட்பாளராக காண்பிப்பதில் சிறீலங்கா அரசு மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள பெருமளவான இராணுவத்தை தக்கவைக்கவும், தமிழ் மக்களின் மனங்களை வெல்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை செய்வது என்ற போர்வையில் ஒரு மறைமுக இராணுவ ஆக்கிரமிப்பில் அவர்களை வைத்திருக்கவும் வேண்டிய வழிகளை நோக்கி சிறீலங்கா இராணுவமும் அரசும் செயற்பட்டு வருகின்றது.
வெள்ளம் வந்தால் படையினர் தான் ஓடுகின்றனர், உணவு விநியோகம், உதவிப்பொருட்கள் விநியோகம், கட்டிடம் கட்டுதல், கோவில் திருவிழாக்கள் என எல்லாவற்றிலும் வடக்கில் சிறீலங்கா இராணுவமே முன்னின்று செயற்பட்டுவருகின்றது. ஆனால் தெற்கில் அவ்வாறான ஒரு நிலை இல்லை. அது மட்டுமல்லாது, செய்யப்படும் உதவிகளை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாக எடுத்து அதனை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு.
கடந்த ஏப்பிரல் தெற்கில் குண்டு வெடித்தபோதும், வடக்கில் தான் அதிக காவலரன்கள் முளைத்துள்ளன. வடபகுதியில் உள்ள பாடசாலைச் சிறுவர்கள் மீது தான் சிறீலங்கா இராணுவம் அதிக அக்கறை காண்பிக்கின்றது. சிறீலங்கா அரசின் இந்தப் பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக கடந்த வாரம் “அயலவர்” என்ற பெயரில் புதிய பத்திரிகை ஒன்றையும் சிறீலங்கா இரணுவம் வெளியிட்டு வருகின்றது.
அதில் தமிழ் மக்களுக்கு பலவந்தமாக செய்யப்படும் உதவிகள், மற்றும் அவர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் வழங்குவதை ஏதோ படையினர் தம்வசம் உள்ள காணிகளை வழங்குவது போன்று பிரச்சாரப்படுத்திய புகைப்படங்களுடன் தமிழ் மக்களைக் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பத்திரிகை.
அதாவது தமிழ் இனத்தின் மீது தான் மேற்கொண்ட இனப்படுகொலையின் வடுக்களை அடுத்த தலைமுறையின் மனங்களில் இருந்து அழிக்க முற்படுகின்றது சிறீலங்கா இராணுவம். வயதான மூதாட்டியை இரு கரங்களில் ஏந்தியவாறு வெள்ளத்தில் நடந்துவரும் சிறீலங்கா இராணுவச் சிப்பாயின் படத்தினை பத்திரிகையில் பார்க்கும் தமிழ் குழந்தைக்கு எமது வரலாறு மறுவளமாகத் தான் மனதில் பதியும்.
அதாவது சிறீலங்கா அரசு மிகவும் அனுபவமும் அறிவும் மிக்க வெளிநாட்டு அமைப்புக்களின் வழிகாட்டலில், மிகவும் சக்திவாய்ந்த ஒரு உளவியல்போரை ஆரம்பித்துள்ளது. அதில் வெற்றியும் கண்டு வருகின்றது. ஏனெனில் சிறீலங்கா படையினர் அரிசி கொடுத்தாலும், துவிச்சக்கர வண்டி கொடுத்தாலும் ஓடிச்சென்று வாங்கும் தமிழ் மக்கள் தமது இனத்தின் அடையாளங்களை தொலைத்து நிற்கின்றனர். கொடூரமான இனப்படுகொலை ஒன்றைச் செய்த இராணுவம், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனநிலை, அவர்களின் துன்பங்கள் என்பவற்றை மறந்து சிங்கள இராணுவத்தின் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் ஒரு பகுதி மக்களும், சில அரசியல்வாதிகளும் முன்நிற்பது தான் எமது இனம் பெற்றுள்ள சாபக்கேடு.
இனப்படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்கா இராணுவத்திற்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தடைசெய்து வருகின்றன அனைத்துலக அமைப்புக்கள். அதில் முக்கியமானது உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பு.
அதன் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவுடன் அண்மையில் ஒரு சந்திப்பு ஒன்றை மேற்கெண்டிருந்தேன். ஆதாரங்களைத் திரட்டி சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரி சவீந்திர டீ சில்வாவுக்கு எதிராக எவ்வாறு வழக்குகள் பதிவு செய்துள்ளோம் என்பதில் ஆரம்பித்து, சிறீலங்கா படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரித்து வருவது தொடர்பில் தமது அமைப்பின் நடவடிக்கைகளை அவர் தெளிவாகக் கூறியிருந்தார்.
கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் பின்னர் சிறீலங்கா அரசு எவ்வாறு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என முன்னர் இனங்காணப்பட்ட படை அதிகாரிகளை மீண்டும் களத்தில் இறக்கியுள்ளது. அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்தும் இந்த அமைப்பு தெளிவான அறிக்கை ஒன்றை மக்களுக்கும், அனைத்துலக சமூகத்திற்கும் வெளியிட்டிருந்தது. இந்த அமைப்புக்களுக்கு உள்ள அக்கறைகள் ஏன் எமது மக்களில் ஒரு பிரிவினருக்கும், தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினருக்கும் இல்லாமல் போனது?
சிறீலங்கா அரசைப் பொறுத்தவரையில் தமது இராணுவத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் இனஅழிப்புக்களை மறைக்கும் முயற்சிகளை அது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதற்கு சிறந்த உதாரணம் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற கூட்டமாகும்.
சிறீலங்காவின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் தீபிகா உடுகம மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் சாந்தா கொட்டகொட ஆகியவர்களை அழைத்த சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைக்கான பணியில் சிறீலங்கா படையினர் அதிக அளவில் ஈடுபடவேண்டும் எனவும், அதற்கு தடையாக உள்ள காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வைக் காணுமாறும் பணித்திருந்தார்.
அமைதிப் பணியில் சிறீலங்கா இராணுவம் ஈடுபடுவது தாமதமானால் ஐ.நா அமைப்பில் சிறீலங்கா இராணுவத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும், அதிகளவில் சிறீலங்கா இராணுவத்தினரை ஐ.நா அமைதிப்படையில் இணைப்பதற்கான வழிகளைத் தேடுமாறும் பணித்திருந்தார். அதாவது ஒருபுறம் ஐ.நாவின் அமைதிப்படையில் சிறீலங்கா இராணுவம், மறுபுறம் வடக்கில் தமிழ் மக்களுக்கு உதவுவதில் சிறீலங்கா இராணுவம், அதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கான பத்திரிகையை வெளியிடுகின்றது சிறீலங்கா இராணுவம்.
அதாவது சிறீலங்கா அரசும் அதன் படைகளும் மிகவும் சிறந்த திட்டமிடலுடன் தெளிவான பதையில் பயணிக்கின்றனர், ஆனால் 30 வருடத்திற்கு மேலாக குருதி சிந்திப் போராடிய இனம் இன்று அரசியல் தெளிவின்றி தமக்குள் முரண்பட்டு, தெருச் சண்டைக்காரர்களாக மாறி, தமது மக்களை எதிரியிடம் கையேந்த வைத்து நிற்கின்றது.
இந்த நிலைக்கு மக்களைக் கொண்டு சென்றதற்கான பொறுப்பை தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் அனைத்தும் ஏற்க வேண்டும் என்பதுடன் இதில் இருந்து மக்களை மீட்பதற்கான வழிகளைத் தேடவேண்டும். இல்லை எனில் விரிவாக்கம் பெற்றுவரும் பௌத்த ஆலயங்கள் மூலம் நிலங்களை இழந்தது போல எமது மக்களையும் இனப்படுகொலையாளிகளிடம் இழந்து வரலாற்றை தொலைத்த இனமாக வெளிநாடுகளில் அலையவேண்டிய நிலை ஒன்று ஏற்படும்.
என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ‘பிரஜா ஜல அபிமானி’ வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (23) கண்டி, தெல்தோட்டையில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; எங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்து பாவிகள் சிலர் செய்த
பயங்கரவாத செயலினால், அப்பாவிகள் பலர் இன்றும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்று அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பல விடயங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணாமல் அரசாங்கத்துடன் சேர்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.
பெண்களின் ஆடை விடயத்தில் தேவையில்லாத சுற்றுநிருபத்தை கொண்டுவந்துள்ளதால், அரச தொழில்களில் இருக்கின்ற முஸ்லிம் பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரத்துக்குள் அதை நிவர்த்திசெய்ய வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் வலுக்கட்டாயமாக சொல்லியிருக்கிறோம்.
குறித்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டு, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பது நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றாகும்.
முஸ்லிம்கள் மீதான பாரபட்சம் நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் எந்த முகத்துடன் அரசாங்கத்தில் இருப்பது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்றுத்தருவோம் என்ற உத்தரவாதத்துடன்தான் எமது அமைச்சர்கள் இருவர் பதவிகளை மீளப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
தமிழ் தலைமைகளின் இயலாமை காரணமாகவே தமிழ் மக்கள் மாற்று வழி தேடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கிழக்கு தமிழர்களின் மாற்று தேரர்கள் அல்ல அதேபோல் தமிழர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு, தேரர்கள் உள்ளே நுழைந்தமைக்கு பிடிவாதகார முஸ்லிம் தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான விளைவு விரைவில் அனைவரையும் சுடும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் வரித்துக்கொண்ட அரசியல் நாகரிகம் ஒன்று இருக்கிறது. எனது கொள்கையை விட்டுக் கொடுக்கா மல், இயன்றவரை அனைவரையும் அன்பு டன் நிதானமாக அனுசரித்து போவேன். அப்படித்தான் நான், த.தே.கூட்டமைப்பை யும் அரவணைத்து அனுசரித்து போகிறேன். அத னால்தான் கல்முனை மக்களின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு போக முடிவு செய்த போது கூட்டமைப்பின் அம்பாறை எம்.பி. கோடீஸ்வரனை அழைத்து சொன்னேன்.
அவர்தான் நண்பர் சுமந்திரன் எம்.பி.யை, வஜிர அமைச்சரின் உறுதி கடிதத்துடன் கூட்டி வாருங்கள் அண்ணா என்று என்னை வலிந்து கேட்டுக்கொண்டார்.
ஆகவே நான்தான் நண்பர்கள் தயாகம கேவையும், சுமந்திரனையும் கல்முனை க்கு அழைத்து வந்தேன். அங்கே சுமந்திரனுக்கு கிடைத்த எதிர்மறை வரவேற்பை நான் வெறுக்கிறேன். எனக்கு நேர்மறை வரவேற்பு கிடைத்தது, என்பதற்காக சுமந்திரனை தாக்க முயன்றதை நான் ஒருபோதும் ஏற்க முடியாது. த.தே.கூ. பல விடயங்களை கோட்டை விட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்கான பதில் இதுவல்ல.
அதேபோல், மக்களால் தெரிவு செய்யப் பட்ட அரசியல்வாதிகளை நிராகரித்து விட்டு, பெளத்த தேரர்கள் கூறியதன் பேரில் போராட்டத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் முனைவது சரியானதல்ல.
மனிதமும் தர்மமும் மரித்து விட்ட உலகின் ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குபவர் யஸ்மின் சூக்கா அம்மையார் அவர்கள். உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் பொறுப்பை ஏற்று மனித உரிமை தளத்திலே ஒடுக்கப்படும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் இன மத மொழிகளை கடந்து தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற் கொண்ட இன அழிப்பு செயற்பாடுகளையும், இறுதி யுத்தத்திலே இலங்கை அரசு மேற் கொண்ட போர்க்குற்றங்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக அவர் தீவிரமாக கடமையாற்றிவருகிறார். குறிப்பாக இலங்கை அரசபடைகள் தமிழ் பெண்கள் மீது மேற் கொண்ட வன்முறைகளின் சாட்சியங்களை தொகுத்து ஐ.நா.மன்றத்திடம் கையளித்து உலகில் உள்ள தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
இந்த நிலையில் யஸ்மின் சூக்கா அவர்களுடன் இலக்கு மின்னிதழ் மற்றும் இணையத்தளத்தின் குழு ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தது.
ஏறத்தாள ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், பல விடயங்கள் ஆராயப்பட்டன. நாம் யஸ்மின் சூக்காவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் மிகவும் நீண்டதாக அமைந்ததால் அதனை பகுதிகளாக இங்கு தருகின்றோம்.
கேள்வி: இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் அதன் பின்னரும் இலங்கை அரச படைகளினால் இழைக்கப்பட்ட கொடூரங்களை உங்களால் வழிநடத்தப்படும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்றிட்டம் (ITJP) ஆவணப்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் இந்த அமைப்பு எப்படிப்பட்ட பங்களிப்பை இதுவரை வழங்கியிருக்கிறது என்பதைக் கூறமுடியுமா?
பதில்: 2011ம் ஆண்டு ITJP ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூவர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை நிறைவுசெய்திருந்தது. அந்தக் குழுவில் நானும் அங்கம் வகித்தேன். டெனா, பிரான்சிஸ் கரிசன் போன்றோர் இந்த நிபுணர் குழுவுக்கு உதவியளித்துக்கொண்டிருந்தார்கள். அக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பலதரப்பினரிடமிருந்தும் எங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் எங்களுக்குக் கிடைத்திருந்தன. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இப்படிப்பட்ட ஒரு செயற்றிட்டத்தை நிறுவ நாங்கள் முடிவு செய்தோம்.
போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவது எமது முக்கிய நோக்கமாக இருந்தது. ஐக்கிய நாடுகள் தாபனம் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு அப்போது இருந்தது. ஆரம்ப கட்டத்தில் எங்களால் தயார்செய்யப்பட்ட அறிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஐநா நிபுணர் குழுவின் பணியைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் ஏற்படுத்தப்பட்ட விசாரணைகள் நடைபெற்று, இறுதியாக 2015ம் ஆண்டு இணை அறிக்கை வெளிவர காரணமாக அமைந்தது.
2011 இலிருந்து 2015 வரை இக்காலப்பகுதி நீண்டிருந்த போதிலும், உண்மையைச் சொல்லப்போனால், இச்செயற்பாடுகளின்றி ஐ.நாவின் விசாரணை முயற்சிகள் சாத்தியமான நிலையை அடைந்திருக்க மாட்டாது என்றே நான் கருதுகின்றேன். ஓஐஎஸ்எல் என்ற ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விசேட அமைப்பு தனது பணிகளைச் செய்ய நாங்கள் உதவினோம். ஒரு புறத்தில் எம்மிடமிருந்த வாக்குமூலங்களை நாங்கள் அவர்களிடம் கையளித்ததுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களுடனும் பாதிக்கப்பட்ட சமூகங்களுடனும் அந்த அமைப்பு நேரடியாகத் தொடர்புகளை மேற்கொள்ள நாங்கள் வழிவகை செய்தோம். ஐக்கிய நாடுகள் தாபனம் இலங்கை தொடர்பான தனது பணிகளைக் காத்திரமான முறையில் மேற்கொள்வதற்கு வேண்டிய உதவிகளை வழங்குவதே அப்போது எமது முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
இணை அறிக்கை வெளிவந்ததன் பின்னரான காலப்பகுதியில், அதாவது 2016, 2017ம் ஆண்டுகளில் – இலங்கையில் ஒரு புதிய அரசு பதவியேற்றிருந்ததுடன் சர்வதேச சமூகமும் காணாமல் போனோர் பணிமனை (ஓஎம்பி) போன்ற செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்கக் கூடியவிதத்தில் இலங்கைக்கு உரிய வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்தது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய ஒரு நீதிமன்றை நிறுவுவதும் அவ்வேளையில் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதே நேரத்தில் 2016ம் ஆண்டளவில் நீதியை நிலைநாட்டுவதற்கான உண்மையான ஆர்வத்தை இலங்கை அரசு கொண்டிருக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் தெளிவாகவே புரிந்துகொண்டோம்.
அந்த நேரத்தில் இலங்கை அரசு மக்களின் கருத்தை அறிந்துகொள்ள ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொள்வதற்காக ஒரு குழுவை நியமித்தது. நீதிப்பொறிமுறைகள் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள், செய்யப்படவேண்டிய பரிகாரங்கள் என்பன தொடர்பாக எம்மிடம் வாக்குமூலத்தை அளித்திருந்த பாதிக்கப்பட்ட மக்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அந்த மக்கள் மத்தியில் நாங்களும் ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டோம். எமது ஆய்வின் முடிவுகளை நாம் பகிரங்கப்படுத்தினோம்.
அதுமட்டுமன்றி இலங்கையில் அரசினால் இந்த நோக்கத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கும் எமது அறிக்கையை நாம் அனுப்பி வைத்தோம். எம்மை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விடயம் என்னவென்றால் இலங்கை அரசோ, தாம் நியமித்த குழுவின் அறிக்கையைக்கூட பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்பதாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பதை உறுதிப்படுத்துவதோடு அதற்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதையும் மக்கள் எதிர்பார்த்தார்கள்.
குற்றவியல் தொடர்பான நீதிப்பொறிமுறையையே பெரும்பாலானோர் எதிர்பார்த்தார்கள். இலங்கை அரசாங்கத்திடம் நீதியை நிலைநாட்டும் ஆர்வம் இல்லாத ஒரு பின்புலத்தில் பொறுப்புக்கூறலை எப்படி முன்னெடுக்கலாம் என்று நாங்கள் சிந்தித்தோம். இப்படிப்பட்ட ஒரு நிலையில் நாங்கள் எப்படிச் செயலாற்றலாம் என எண்ணிப்பார்த்தோம். இவ்விடயங்கள் தொடர்பாக பல மூலோபாயங்களை நாங்கள் வகுத்தோம். உண்மையை மீட்டெடுக்கும் செயற்பாடு அவற்றிலே முக்கியமானதொன்றாக இருந்தது. போரிலே குற்றங்களில் ஈடுபட்ட தனிநபர்கள் தொடர்பான உண்மைகளை வெளியிட முடிவு செய்தோம். இவ்வாறாகத்தான் போர்க்குற்றங்களைப் புரிந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான ஆவணக்கோப்புகளை மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய விதத்தில் நாம் வெளியிடத் தொடங்கினோம். போர்க்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்பை வகித்த ஜகத் ஜயசுரிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தூதுவராகப் பணியாற்றத் தொடங்கினார்.
இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நீதிச் சட்டங்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தொடங்கினோம். யாரோ சிலர், ஒருவேளை பிரேசில் நாட்டைச் சேர்ந்த இராணுவத்தினராகக்கூட இருக்கலாம் அவருக்கு முன்கூட்டியே தகவலைக் கொடுத்துவிட்டார்கள். இதனால் அவர் திடீரென லத்தீன் அமெரிக்க நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் திடீரெனத் தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை உற்றுநோக்கும் போது அங்கு நீதி நிலைநாட்டப்பட்டதையே நாம் உணருகின்றோம். உண்மையிலே ஜகத் ஜயசுரிய தானாக விரும்பி நாட்டுக்குச் செல்லவில்லை. தொடர்ந்து அங்கு தங்கியிருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அங்கு இருந்தது. அவர் திடீரென நாடுதிரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அவர் மிகவும் குழப்பமடைந்திருந்தார். அப்போது அவர் சொன்ன முதல் விடயம் தன்னால் இனிமேல் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாதென்பதும் அமெரிக்காவுக்கு இனி ஒருபோதும் தன்னால் பயணம் மேற்கொள்ள முடியாதென்பதையும் குறிப்பிட்டார். அவர் தப்பிச் சென்ற காரணத்தினால் அவர் மீது வழக்கைத் தொடர்வதில் நாம் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவரது பெயர் பட்டியலில் இருக்கிறது. அவரால் இலங்கைக்கு வெளியே பயணங்களை மேற்கொள்ள முடியாது. அப்படி அவர் பயணஞ் செய்தால் அவர் கைதுசெய்யப்பட்டு பிரேசிலுக்கோ அல்லது ஏதாவதொரு இலத்தீன் அமெரிக்க நாடொன்றுக்கு நாடுகடத்தப்படும் ஆபத்து அவருக்கு இருக்கிறது. இரண்டாவதாக சவேந்திர சில்வா தொடர்பாக நாம் மேற்கொண்ட செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். இவரை இலங்கை அரசு ஒரு முக்கிய பதவிக்கு நியமித்திருந்தது.
சவேந்திர சில்வா தொடர்பாக நாங்கள் ஒரு விரிவான ஆவணக் கோப்பைத் தயாரித்தோம். ஏனென்றால் சவேந்திர சில்வா யார் என்பதையும் போர்க்காலத்தில் அவர் எப்படிப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதையும் பொதுவாக எல்லோரும் மறந்திருந்த நிலையே காணப்பட்டது. அவர் பற்றிய ஆவணக் கோப்பை நாங்கள் பகிரங்கப்படுத்திய போது பல நாடுகளின் அரசுகளிடமிருந்தும் எங்களுக்குப் பல அழைப்புகள் வந்தன. சவேந்திர சில்வா பற்றிய ஆவணக் கோப்பின் ஒரு பிரதியை தமக்கும் அனுப்பி வைக்குமாறு அவர்கள் கேட்டிருந்தார்கள். அவர் தங்கள் நாட்டுக்குப் பயணம் செய்யும் தறுவாயில் தாம் அவருக்கு விசா வழங்குவதா? இல்லையா? என்ற முடிவை மேற்கொள்ளும் கடப்பாடு அந்த அரசுகளுக்கு இருக்கிறது.
இந்த ஆவணக் கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களின் காரணமாக பல அரசுகள் அவருக்கு விசா வழங்க மறுக்கும் என்றே நான் கருதுகின்றேன். ஒரு போர்க்குற்றவாளியாக சவேந்திர சில்வா குற்றம் சாட்டப்படக்கூடிய நிலை இருப்பதை இந்த ஆவணக்கோப்பு சுட்டிக்காட்டுகின்றது. மே பதினெட்டாம் திகதி எமது இணையத்தளத்தில் இந்த அறிக்கையை பதிவேற்றம் செய்த பின்னர் வோஷிங்டனுக்கு நான் ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தேன். அங்குள்ளவர்கள் அந்த அறிக்கையைப் பார்த்து தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். உண்மையில் போரின் போது நடைபெற்ற விடயங்களைப் பலர் இப்போது மறந்துவிட்டார்கள்.
இதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் விளைவாக போரிலே இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது ஒரு முக்கியமான விடயம் என்பதை நாம் இனங்கண்டு கொண்டோம். இதன் விளைவாக இணையத்தளத்தில் ஒரு செயற்பாட்டை நாம் முன்னெடுத்திருக்கிறோம். இவ்விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற பற்றிக் போல் என்பவரது உதவியை நாம் நாடியிருக்கிறோம்.
மே 17, 18, 19 ஆகிய திகதிகளில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய தரவுகளைக் கொண்டு அங்கே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். இந்த எண்ணிக்கையை நாம் கணக்கிடும் போது அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஒரு உறுதியான முடிவுக்கு நாம் வரக்கூடியதாக இருக்கும். இன்றும் கூட யார் உண்மையில் உயிரோடு இருக்கிறார்கள்? யார் இறந்துவிட்டார்கள்? என்பதை எம்மால் கூறமுடியாதிருக்கிறது. எமக்குக் கிடைத்த புகைப்படங்கள் மற்றும் ஒளிநாடாக்களின் உதவியுடன் ஒரு சிலரது உடலங்களை நாம் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது என்பது உண்மைதான். இது பற்றிய முழுமையான உண்மை எங்களுக்குத் தெரியாது.
இதன் விளைவாகத் தான் இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு பட்டியலை உருவாக்க நாம் முடிவுசெய்தோம். இத்தருணத்தில் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்ட உங்கள் உறவுகளின் புகைப்படங்கள் உங்களிடம் இருக்குமாயின் அல்லது இராணுவத்திடம் யாரையாவது நீங்கள் கையளித்திருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் அல்லது அக்காலப்பகுதியில் யாராவது இராணுவப் பகுதிக்கு செல்வதை நீங்கள் அவதானித்திருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் போன்றவற்றை தயவு செய்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.
எமக்குக் கிடைக்கும் இத்தரவுகளைப் பயன்படுத்தி போரின் இறுதி நாட்களில் உண்மையில் எவ்வளவு பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வரக்கூடியதாக இருக்கும். எமது இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 350 தனிநபர்களின் விபரங்களை நாம் பதிவேற்றம் செய்திருக்கிறோம். இவர்களில் 29 பேர் சிறுவர்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எமக்குக் கிடைத்த தரவுகளை நோக்கும் போது கிட்டத்தட்ட 500 பேர், போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம் என்று இவ்விடயத்தில் நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் பற்றிக் போல் எமக்கு அறியத்தருகிறார்.
நேர்காணலின் முதலாவது பகுதியை வாசிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்:
சிறிலங்கா பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறையை இரத்துச் செய்யும் இடைக்கால தடையுத்தரவைக் கோரி உயர் நீதிமன்றில், அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக அடுத்த மாதம் 31ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்த்தன, எல்.டி.பி.தெஹிதெனிய மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழுவினர் முன்னிலையில் குறித்த மனு 24ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக தாம் கவலை கொண்டுள்ளதாக, ஐ.நா. சபை மனித உரிமைகள் மிஷேல் பெச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. சபையின் 41ஆவது அமர்வு இன்று (23) ஜெனீவாவில் ஆரம்பமானது. இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இலங்கை தொடர்பான இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான ஒற்றுமையில்லா தன்மை நாட்டு மக்களின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், முஸ்லிம்களின் மீதான தாக்குதல், மதத் தலைவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் கவலையளிப்பதாகவும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் என்றும் தனது உரையில் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக கைதாகிய சந்தேக நபர், கைதாகி 15 ஆண்டுகளின் பின்னர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை அரசியல் கைதிகள் நலன் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் வெளியிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் சடலத்தைப் பொறுப்பேற்க அவரது உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகவீனமுற்றிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லக்ஸ்மன் கதிர்காமர் 12 ஓகஸ்ட் 2005ஆம் ஆண்டு கறுவாத் தோட்டம் பகுதியிலுள்ள அவரின் இல்லத்திலுள்ள நீச்சல் குளம் அருகில் வைத்து சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இவர் பதவியிலிருந்த காலப்பகுதியில் எப்போதுமே தமிழருக்கு எதிராகவும் தமிழ் இனத்தின் தேசியத்திற்கு எதிராகவும் செயற்பட்டதுடன், சிறிலங்கா அரசாங்கத்தின் விசுவாசியாகவே இருந்திருக்கின்றார். வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளை தடை செய்ய முயற்சி எடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.
2009 முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வில் வந்த மக்களை தடுத்து வைத்திருந்த முகாம்களில் ஒன்றிற்கு கதிர்காமரின் பெயரை அரசாங்கம் இட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.