Home Blog Page 2708

நல்லதொரு செய்தி; எபோலோவிற்கு மருந்து

ஆப்பிரிக்காவின் கொங்கோ ஜனநாயக குடியரசில் ’எபோலா’ பரவியதை தொடர்ந்து 1,800 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவ  ஆராய்ச்சியாளர்களின் ‘எபோலா’ நோய்க்கு எதிரான போராட்டத்தில், ஒரு வளர்ச்சியாக, இரண்டு பரிசோதனை சிகிச்சைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அவை இப்போது காங்கோ ஜனநாயக குடியரசில் ’எபோலா’வால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

REGN-EB3 மற்றும் mAb114 என பெயரிடப்பட்ட மருந்துகள், ‘எபோலா’ வைரஸ்  வளர்ச்சியைத் தடுத்து, மனித உயிரணுக்களில் அதன் தாக்கத்தை  நடுநிலையாக்குகின்றன. இந்த இரண்டு மருந்துகளின் சோதனை முடிவுகள் கணிசமான விகிதங்களைக் காட்டிய பின்னர், ‘எபோலா’ விரைவில் “தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய” நோயாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் அமைப்பு , ’எபோலாவு’விற்கு எதிரான போராட்டத்தில் இது “மிகவும் நல்ல செய்தி” என அறிவித்துள்ளது.
ZMapp மற்றும் Remdesivir எனப்படும் மற்ற இரண்டு சிகிச்சைகள் சோதனைகளில் குறைவான செயல்திறன் கொண்டவை என்று கண்டறியப்பட்டதால்  விலக்கப்பட்டுள்ளன.

அவுஸ்ரேலியாவில் பலருக்கு கத்திக் குத்து

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில், முகமூடி அணிந்தபடி கத்தியுடன் வந்த நபர், கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினார். சிட்னியில் அதிக வணிகம் நடைபெறும் வர்த்தக மையமாக விளங்கும் சிபிடி பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு இருந்த போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவரவில்லை.

”சமையலறையில் பயன்படுத்தக்கூடிய நீண்ட கத்தியை வையில் வைத்திருந்த படி அல்லாஹு அக்பர் என்று சத்தமிட்டபடி, என்னை சுடுங்கள் என்று பிடிபட்ட அந்த நபர்  சொல்லிக்கொண்டே ஓடும் காட்சிகள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் ஒளிபரப்பாகின. இந்த சம்பவத்தையடுத்து கிங் ஸ்ட்ரீட் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த 21 வயது நபர் மனநிலை பதியப்பட்டவர் என தெரியவருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் – சம்பந்தன் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமயிலான குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு 12.08 அன்று கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பு பற்றி கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குழுவினருடன் பேசிய சம்பந்தன் குழுவினருக்கு சரியான விபரத்தை தெளிவுபடுத்தினார். அவர்கள் 1994ஆம் ஆண்டிலிருந்து நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் தீர்ப்பளித்து வருகின்றனர். இந்த பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதானது மக்கள் ஆணையை மீறும் ஒரு கபடச் செயல் என தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90%இற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். அதன் விளைவாக ஒரு புதிய அரசியலமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் அவை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 வருடங்களாக புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக பல்வேறு தீர்வுத் திட்டங்கள் முன்மொழியப்பட்ட போதும், அவற்றுள் எதுவும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

எனவே தற்போது நாட்டிற்குத் தேவையானது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல. ஒரு புதிய அரசியல் யாப்பேயாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை – மு.திருநாவுக்கரசு

ஒரு நூற்றாண்டுக்கு மேலான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றை கணக்கிட்டு  பார்க்கும் போது அது  ஒரு நூற்றாண்டுக்கு  முன் தொடங்கிய இடத்திலிருந்து  மேலும் பின்னோக்கிக் சென்றுள்ளதையும் மேலும் தேய்ந்து சிறுத்து உள்ளதையும் காணலாம்.

பெருந்தலைவர்கள்  ஆனால் பெரும் தோல்விகள். இத்தனைக்குப் பின்பும் தோல்விகளுக்கும், வீழ்ச்சிகளுக்கும், அழிவுகளுக்குமான  காரணங்களையும், அவற்றிற்கான பொறுப்பாளர்களையும் கண்டுகொள்ள  நாம்  இன்னும் தயாரில்லை  என்பது மேற்படி அடைந்த அனைத்து  தோல்விகளையும்விட  பெரும் தோல்வியாகும்.

இன அழிப்பு நடவடிக்கைகளை சிங்களத் தலைவர்கள் திட்டமிட்ட வகையில் காலத்துக்கு காலம் பொருத்தமாக முன்னெடுத்து வருகிறார்கள் என்பது உண்மை. அதேவேளை சிங்களத் தலைவர்களின்  இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு துணைபோகும் வகையில் அல்லது அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தமிழ் தலைவர்களின்  அரசியல் வழிநடத்தல்கள் அமைந்துள்ளன.   இந்த வகையில் தமிழ் மக்களை அரசியல் படுகுழியில்  வீழ்த்தியதற்கான  பெரும் பொறுப்பு தமிழ்த் தலைவர்களைச்  சார்ந்தது என்கின்ற இன்னொரு பக்கத்தையும் கருத்திலெடுக்க தவறக் கூடாது.

வரலாற்றில் பல வேளைகளில் தோல்வியின் வடிவில் வெற்றியையும்  வெற்றியின் வடிவில் தோல்வியையும் நண்பனின் வடிவில் எதிரியையும் எதிரியின்  வடிவில் நண்பனையும் காணமுடியும்

என்னவன்  – உன்னவன்,  தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள்  மற்றும்  முற்கற்பிதங்கள்  என்பனவற்றை எல்லாம் தாண்டி தமிழ் மக்களின் அரசியலை  சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பாங்கு வேண்டும்.  வெற்றி தோல்விகளை புரிந்தேற்று  மக்களின் நன்மை கருதி   தலைமைத்துவ தவறுகளை   சரி செய்து முன்னேற தயாராக வேண்டும்.

தேசிய தலைமைத்துவம், தேசிய இனப்பிரச்சினைக்கு தலைமை தாங்குதல் போன்ற  விடயங்கள்  வரலாற்றில் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்புடன் நோக்கப்படும்   அம்சங்களாகும்.  புரட்சி என்பது   குறித்த வர்க்க அடிப்படையிலான தலைமைத்துவமாகும். ஆனால் தேசிய விடுதலை என்பது சமூகத்தின் பலதரப்பட்ட மக்கள் பிரிவினரையும், பல்வகைப்பட்ட வர்க்கத்தினரையும்   ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் ஒரு பரந்துபட்ட மக்கள் அமைப்பாகும்.

இதனால் ஒரு தேசிய தலைவன் என்பான் பல்வேறு பிரிவினரையும் பல்வேறு தரப்பினரையும்  பல்வேறு வர்க்கத்தினரையும்  அரவணைக்க கூடிய சிறப்பியல்புகள் உள்ளவராக இருக்க வேண்டும்.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  இனக் குழுக்களையும், இனப் பிரிவினர்களையும் மற்றும் மக்கள் பிரிவினர்களையும்  ஒரு கோட்டில் இணைத்து வெள்ளையின  ஆதிக்கத்திற்கெதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலா  வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றார்.

ஒரு தேசியத் தலைவன் என்பவன் பல்வேறு பிரிவினரையும் , பல்வேறு தரப்பினரையும் அரவணைக்க வல்லவனாய் , இதயசுத்தி உள்ளவனாய், பரந்த மனப்பாங்கு உடையவனாய் காணப்பட வேண்டும்.  ஈழத் தமிழர்கள்  அளவால்  ஒரு சிறிய  தேசிய இனம்.   எதிரியோ   மிகவும் பலம் வாய்ந்த  அரச அமைப்புடன் கூடிய  அளவால் பெரிய இனம். இந்நிலையில் ஈழத்தமிழர்  தமக்கிடையே கூறுபட்டுக்  கிடக்காமல், தமக்குள் பிளவுண்டு, சிறுத்து , அழிந்து போகாமல் பெரிதும் ஐக்கியப்பட்டு   பரந்த அடிப்படையிலான  ஒரு பலமான கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்க வேண்டும். பலமான ஒரு பரந்த கூட்டு முன்னணி இல்லையேல் ஈழத் தமிழ் மக்களுக்கு என்று ஒன்றுமில்லை.

ஈழத் தமிழரின் வரலாற்றை ஒரு கணம் கண்கொண்டு திரும்பிப் பார்த்தால் தொடங்கிய இடத்தைவிடவும் அதிகம் பின்னோக்கி   சென்றுவிட்டதை காணலாம்.  இலங்கை  சுந்திரம் அடையும் போது தமிழ் மக்களின் தாயகமான வடக்கு- கிழக்குப் பகுதி சிங்களக் குடியேற்றங்கள் இன்றி முற்றிலும்  தமிழ் பேசும் மக்களால் நிறைந்திருந்தது.

தமிழரை சனத்தொகை ரீதியாகவும்,  இனப்பரம்பல்  ரீதியாகவும், குறைப்பதையும்   , சிதைப்பதையும் அதன்வழி   தமிழினத்தை அழிப்பதையும் எதிரி தனது  முதல்  இலக்காக கொண்டான். சுதந்திரம் அடைந்தை உடனடுத்து  டி. எஸ். செனநாயக அரசாங்கம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை என்பனவற்றை  பறித்து அவர்களை அரசியல் அநாதைகளாகவும் நாடற்றவர்களாகவும் ஆக்கியதன் மூலம்  தமிழினத்தின் சனத்தொகை பலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஒரு முனையில் உடைத் தெறிந்தார்.

கிழக்கே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி கல்லோயா, அல்லை – கந்தளாய் குடியேற்றத் திட்டங்களின் வாயிலாக சிங்கள சனத் தொகையை கிழக்கு மண்ணில் அதிகரித்தார். தமிழர் வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள்    ஒரு நாள் இந்தியாவின் மாநிலமாக மாறிவிடக்கூடிய  ஆபத்து உண்டு என்ற  தனது கவலையை   செனநாயக்க   ஓர் ஆங்கில கனவானிடம் தெரிவித்த  போது அதனை   தடுப்பதற்கான வழியாக  சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறு அந்த ஆங்கில கனவான்  ஆலோசனை  கூறியதன்  பெயரில் டி. எஸ். செனநாயக்க சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்தார்  என்று  ஒரு செவிவழி தகவல் உண்டு.gal oya 1 பலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை - மு.திருநாவுக்கரசு

எப்படியோ அத்தகைய சிங்களக் குடியேற்றங்களால் முதலில் கிழக்கு மாகாணம் பறிக்கப்பட்டு தமிழ் மக்கள் அங்கு  சிறுபான்மையினர் ஆக்கப்பட்டு விட்டனர்.  அதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்திலும் மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள்  மேற்கொள்ளப்பட்டு  வடக்கும் கிழக்கும் புவியல் தொடரப்பற்ற  பகுதியாக ஆக்கப்படும்  நிலை தற்போது பெரிதும் வளர்ந்துள்ளது.

உடும்புக்கு வால் இருப்பது அதனை அதன் வாலால்  கட்டுவதற்கே என்பது   வேட்டை காரனின் பார்வையாகும்.  அப்படி தமிழரைத்  தமிழ்த் தலைவர்களால் கட்டிப்போடும் வித்தையை செனநாயக்க  ஆரம்பித்து வைத்தார்.

தனிச்  சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை  ,  போலீஸ்   மற்றும் நிர்வாக வகைகளிலான ஒடுக்குமுறை   1983 கறுப்பு ஜூலை உட்பட 1958 ஆம் ஆண்டு போன்ற  இனக்கலவர  வடிவிலான   பல்வேறு காலகட்ட  இனப்படுகொலைகள் , “”பயங்கரவாத தடுப்புச் சட்டம் “” மற்றும் இராணுவ  ஒடுக்குமுறைகள், படுகொலைகள் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை  என சிங்கள மேலாதிக்கம் தமிழ் மண்ணை  பெரிதும் ஆக்கிரமித்து கபளீகரம்  செய்து கொண்டுள்ளது.

1979ஆம் ஆண்டு “”பயங்கரவாதத் தடைச் சட்டம்””    நிறைவேற்றப்பட்டு வடக்குக்கு இராணுவம் அனுப்பப்பட்ட போது  இலங்கையின் மொத்த இராணுவம்  8500   வரையான சிப்பாய்களை கொண்டிருந்தது.  தற்போது இலங்கையின் மொத்த படையினர் தொகை 3,46,000.  இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் தமிழ் மண்ணில் நிலை  கொண்டுள்ளனர்.ArmyInJaffna CI பலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை - மு.திருநாவுக்கரசு

கடந்த ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் குறிப்பாக சுதந்திரத்தின் பின் சிங்கள பௌத்த மேலாதிக்கமானது அனைத்து வகையிலும்  தமிழர் மீதான தமது ஆக்கிரமிப்புகளை பெரிதும் முன்னெடுத்து தமிழரை மேலும் மேலும் கொடுமைப் படுத்துவதிலும்  சிறுக்கப் பண்ணுவதிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மக்களின் சனத்தொகை விகிதாசார ரீதியில் மிகப் பெரிய   அளவில்  வீழ்ச்சியடைந்து செல்கிறது. ஒரு தமிழ் மகனின் , ஒரு தமிழ் மகளின் ,ஒரு தமிழ் தந்தையின் ,  ஒரு தமிழ் தாயின் இலட்சியம் என்ன என்று அவர்களிடம் கேட்டால்   வெளிநாடு செல்வதுதான் தமது இலட்சியம் என்று சொல்லும் அளவுக்கு  நிலைமை  அதிகம் அதிகம் மோசமடைந்துள்ளது.

இந்நிலையில்  தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் அதிகம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் . அது உள்நாட்டிலும்  கூடவே புலம்பெயர் நாடுகளிலும்  அவசியமானதாகும். ஒரு மாகாண அமைச்சர் குற்றவாளி என குற்றம் காணப்பட்டாலும் அவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கையின் நீதித்துறை தீர்ப்பளித்துள்ளது.  மாகாண  சபைகள் அதிகாரம்    அற்றவை என்ற உண்மையை தெளிவாக பறைசாற்றும் வகையில்  இது அமைந்துள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் ,  மாகாண சபை தேர்தல்கள் சனாதிபதித் தேர்தல்  என்பவற்றின் வாயிலாக தமிழ் இனம்  பலவீனமானது என்பதையும் அது  தேசிய முக்கியத்துவம் குறைந்த  ஓரினம்  என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் சிங்கள பேரினவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

மேற்படி தேர்தல்களில் எல்லாம் சிங்களத் தேசியக் கட்சிகள் , தேசிய கட்சிகளுடன்  கைகோர்க்கும்  சார்புக்  கட்சிகள்,   மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்போர் எல்லாம்  கைகோர்த்து செயல்படும் நிலையில்  தமிழ் தேசியத்திற்கான பிரதிநிதித்துவம் தொகை  அளவில்  குறைவானதாக காட்சியளிக்க கூடிய ஆபத்துண்டு.

இந்நிலையில்  தமிழ் தேசியம் பற்றி பேசும்  மாற்று தலைமைத்துவத்தை கையில் எடுத்துள்ள  தமிழ் தலைவர்கள் அதற்கான ஒரு பலம் பொருந்திய பரந்த கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர். சனநாயக அடிப்படையில் இலங்கையிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ஒரு முதலமைச்சர். ஆதலால்  மக்கள் தீர்ப்புக்குப் பணிந்து அவரை அடிப்படையாகக் கொண்டு ஒரு  பலம் வாய்ந்த பரந்த  கூட்டு முன்னணியை பல்வேறு அமைப்பினரும் , பொது அமைப்புகளும் , கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும்.

ஒரு தெளிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரைந்து  அதன் அடிப்படையில்   ஒரு  கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும்.

  1. சிங்களத் தேசிய கட்சிகளுக்கும் அவற்றுக்கு சார்பான கட்சிகளுக்கும் எதிரான கூட்டு முன்னணி. இதுவே இதன் முதலாவது அடிப்படையாக அமைய வேண்டும்.
  2. சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதற்காககளத்தில் இறங்கிநேரடியாக போராட சம்மதிப்பது.
  3. போர்க்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் என்பவற்றுக்கான சர்வதேச விசாரணையைகோரி அதன் பொருட்டு நேரடிப் போராட்டத்தில் ஈடுபடுவது.
  4. யுத்த விதவைகள் மற்றும் அங்கங்களை இழந்தவர்களுக்கானமறு வாய்ப்வை ஏற்படுத்தவல்ல வகையில்  உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும்  நிதிகளை திரட்டி அவர்களின் மறுவாழ்வுக்காக  இதய சுத்தியுடன் செயற்படுவது.
  5. வடக்கும் கிழக்கும்பிரிக்கப்பட முடியாத தமிழரின் தாயகம். அதன் அடிப்படையில் அவர்களுக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வது.

அதிக பிரகடனங்களை முன்வைப்பதில் பயனில்லை. உடனடி தேவைகளைக் கருத்தில் கொண்டு, உடனடியாகச் செய்ய வேண்டியதென்றவாறான  மேற்கண்ட குறைந்தபட்ச அடிப்படைகளின் கீழ் ஒரு தமிழ் தேசிய கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும் . இதில் இணைபவர்கள்  மேற்படி கொள்கையில் இருந்து அல்லது வேலைத்திட்டத்தில் இருந்து விலகும் போது அவர்களின் பதவி இயல்பாகவே விலக்கப்பட்டதாக அல்லது பறிக்கப்படுவதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும்.

மேற்படி கூட்டு முன்னணியில்  இணையும் கட்சிகளோ அல்லது பொது அமைப்புக்களோ தேர்தலில் பெறும் வாக்கு விகிதாசாரத்திற்கேற்ப அவர்களின்  மத்திய குழு உறுப்பினர் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மத்திய குழுவில் ஒரு மனதாக தீர்மானம் எடுக்கப்பட தவறும் வேளைகளிலெல்லாம் கண்டிப்பாக இரகசிய வாக்கெடுப்பின் மூலம்  அதற்குரிய பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும். எத்தகைய பிரச்சனைகள் ஏற்படும்  போதிலும்  இறுதியிலும் இறுதியாக மேற்படி மத்திய குழுவின் இரகசிய வாக்கெடுப்பில் எடுக்கப்படும் தீர்ப்பே இறுதியானது.

இதுவே குறைந்தபட்ச உடனடி சனநாயக ஏற்பாடாகும். எனவே சனநாயகத்தை நம்பி, அதன் அடிப்படையிலான ஒரு தேர்தல் கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டியது அவசியம். அந்தக் கூட்டு முன்னணி ஒரு தனிப்பட்ட நபருக்கு  அல்லது ஒரு கட்சிக்கு என்று வீட்டோ அதிகாரங்களை வழங்குவதாக அல்லாமல்  அதிகாரம் கொண்ட மத்திய குழுவினால் அது நிர்வகிக்கப்பட வேண்டும்.

எப்படியோ ஒரு நூற்றாண்டின் பின்பு , ஒரு நூற்றாண்டு கால அனைத்து போராட்டங்களின் பின்பு,  அனைத்து பெரும் தலைவர்களின் பின்பு,  அனைத்துப் போராட்ட வழிமுறைகளின் பின்பு  ,  இன்றைய நிலையில் ,  இறுதி அர்த்தத்தில் சிங்கள மேலாதிக்கத்தின் இரும்பு சப்பாத்து காலடியில் தமிழ் இனம்  வீழ்ந்து  அடிமைப்பட்டு கிடக்கின்றது.

திரு.விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு பலம் பொருந்திய கூட்டு முன்னணியை உருவாக்குவதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு எந்தொரு மாற்று வழியும்  தற்போது கிடையாது .

இன்றைய உலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு   ஊடாகவே  சர்வதேச அரசியலை   அணுகும்  போக்கை கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இல்லையேல் நிச்சயம் அந்தப் போராட்டத்திற்கு அங்கீகாரம் இருக்காது.  இந்தியாவோ, அமெரிக்காவோ, மேற்குலக நாடுகளோ  எவையாயினும்   தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை   அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையைதான் கோரி நிற்கும்.

தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி(நேர்காணல் சென்ற வார தொடர்ச்சி)

ஆறு அதிகார சபைகளின் அனுமதிகள் பெறப்பட்டே சிமாட் லாம் போல்கள் நிர்மானிக்கப்படலாம். ஆனால் அதன் பெயரில் நிர்மானிக்கப்பட்டு வரும் கோபுரங்களை அமைப்பதற்கு கூட எவ்விதமான ஒழுங்குவிதிகளும் பின்பற்றப்படாது யாழ்.முதல்வரின் அதிகாரம் பாய்ந்து செல்கின்றது என தமிழர் கல்வித்துறைக்கு அரும்பணியாற்றி யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி நாடாளவிய ரீதியில் தனக்கென்று தடம்பதித்திருந்த பொருளியல் ஆசான் மறைந்த வரதாராஜனின் புதல்வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வ.பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் இரண்டாவது பகுதி வருமாறு

கேள்வி:- இந்த விடயங்களை சபையின் கவனத்திற்கு நீங்கள் கொண்டு சென்றிருக்கவில்லையா?

பதில்:– முன்னதாக 19-06-2019 அன்று சிமாட் லாம் போல்கள் பூட்டப்படுகின்ற இடங்களில் மக்கள் தமது பலத்த எதிர்ப்பை வெளிகாட்டி வருகின்றனர். உதாரணமாக நல்லூர் செட்டித்தெருவில் குறித்த இடத்தில் அதனை பூட்டுவதற்கும் மிக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே இது பற்றி விவாதித்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். ஏன் என்றால் அபிவிருத்தி என்பது மக்களின் விருப்பப்படி மக்களின் பங்களிப்புடன் நடைபெற வேண்டியது என்ற நிலைப்பாட்டில்  சிமாட் லாம் போல்கள் அமைப்பது தொடர்பான 18 இடங்களையும் சபையில் தெரிவித்து அதற்கான அனுமதியினை பெற்று அதன்பிறகே பொருத்துமாறு கோரினோம். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

சிமாட் லாம் போல்களுக்குரிய நிறுவனத்திற்கும் யாழ்.மாநகர சபைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் நான்காவது பந்தியில் மேற்படி சிமாட் லாம் போல்களில் சிறிய ரக செலுனர் அன்ரனாக்கள் பூட்டப்படும் என்று உள்ளது. இந்த அன்ரனாக்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கை ஆகியவற்றையும் சபையில் கோரியிருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு தரப்படாமலேயே சிமாட் லாம் போல்கள் அமைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

மேற்படி சிமாட் லாம் போல்களில் கமராக்கள் பூட்டப்படுகின்றன. அது மிகவும் அத்தியாவசியமான விடயம். ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற சிமாட் லாம் போல்கள் சன நெருக்கடியான குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு பூட்டப்படும் கமராக்களின் மூலம் குடியிருப்புக்களில் வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையும்

எனவே மேற்படி காரணங்கள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பது தொடர்பிலும் மற்றும் மக்கள் சிமாட் லாம் போல்கள் அமைக்கும் இடங்கள் தொடர்பில் பலத்த ஆட்சேபனைகளை தெரிவித்து வருவதனாலும் உடனடியாக விசேட பொதுக் கூட்டத்தினை ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.

அதே நேரம் அவ்வாறு விசேட பொதுகூட்டம் ஒழுங்குபடுத்த முடியாது விடில் ஜுலை மாதம் 18ஆம் திகதி நடைபெற இருந்த மாதாந்த பொதுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராய்வதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறும் அது வரைக்கும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் சிமாட் லாம் போல்கள் அமைக்கும் செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மாநகர முதல்வரிடம் கோரிக்கை விட்டிருந்தோம்.

விசேட பொதுக்கூட்டம் ஒன்றினை ஒழுங்குபடுத்துவது மற்றும் சபையில் மேற்கூறப்பட்ட விடயப்பரப்புக்கள் விவாதிக்கப்பட்டு மக்கள் நலம்சார்ந்து மக்களின் விருப்பத்தை அறிந்து அவர்களின் அனுமதியுடன் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக முடிவு எட்டும் வரை குறித்த திட்டத்தை நிறுத்திவைப்பதற்குரிய கடிதமும் யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் அடுத்த மாநகர சபை கூட்டத்திற்கு முன்னதாக மாநகர முதல்வர் ஊடகவியலார் மாநாடொன்றைக் கூட்டி மக்களின் விழிப்புணர்வுக்கான நாம் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை எம்மீது அடுக்கி விட்டார்.

கேள்வி:- மாநகர சபையின் அமர்வு இடம்பெற்றதா? சிமாட் லாம் போல்களின் பாதிப்பு குறித்து சுட்டிக்காட்டினீர்களா?

பதில்:- ஆம், ஜுலை 18ஆம் திகதி மாநகர சபையின. அமர்வு நடைபெற்றது. இதன்போது நான் பல்வேறு விடயங்களை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். அவற்றின் முக்கிய விடயங்கள் சிலவற்றை இங்கு குறிப்பிட விளைகின்றேன். சிமாட் லாம் போல்கள் அமைப்பதற்கான தொடர்பிலான ஒப்பந்தத்தில் அவற்றை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய சூழல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி சபை, தொலைத்தொடர்பு அதிகாரசபை, விமானப்போக்குவரத்து அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சுகாதார அதிகாரி ஆகியோரிடமும் அனுமதி பெற்று அதன் பிரதிகள் ஆவணப்படுத்தலுக்காக மாநகர சபையில் சமர்ப்பிக்கவேண்டும் என்றுள்ளது.

ஆனால் அனுமதி பெறப்பட்டதாக கூறப்பட்ட ஆறு அதிகார சபைகளில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதற்கு அப்பால் பல முரண்பாடுகள் அதில் காணப்படுகின்றன. மே மாதம் இடம் பெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் கம்பத்தில் பொருத்தப்படும் பொருட்கள் அனைத்திற்கும் மாநகரசபையின் திட்டமிடல் பகுதியில் அனுமதி பெற்று பொருத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. குறித்த கம்பம் அமைப்பதற்கு யாழ்.மாநகர சபை திட்டமிடல் பகுதியில் அனுமதி பெறப்பட்டதா?

தற்போது யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வெட்டப்படுகின்ற கிடங்குகள் அனைத்தும் யாழ்.மாநகர சபையின் வீதி ஓரங்களில் அதாவது வீதியின் சோல்டர்களில் வெட்டப்படுகின்றன. இதற்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது. ஒரு சாமானிய குடிமகன் ஒருவர் தனது வீட்டுக்கு ஒரு மதிலைக்கட்டுவது என்றால் எத்தனையோ படிமுறைகள். ஆனால் இவ்வளவு பெரிய கோபுரம் ஒன்றை அமைக்கும் போது எந்த ஒழுங்குகளையும் பின்பற்றத் தேவையில்லையா?

2019.06.21அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியில் யாழ்.மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட வீதிகள், அதனுடைய நீளம் மற்றும் வீதிக் கோட்டு எல்லை என்பன வெளியிடப்பட்டன. உதாரணமாக நல்லூர் செட்டித்தெருவின் வீதிக்கோட்டு எல்லை 20அடி என்று உள்ளது. அதே போல் கஸ்தூரியார் வீதியின் வீதிக்கோட்டு எல்லை 33 அடியாக உள்ளது அவ்வாறு எல்லாம் இருக்கும்போது இரு வீதிகளிலும் வெறும் 10அடிக்குள் குறித்த பாரிய கம்பம் நடுவதற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது.

மேற்படி கோபுரங்கள் குறித்த இடங்களில் அமைக்கும் போது யாழ்.மாநகர சபையில் அதனுடைய திட்டவரைபினை கொடுத்து அனுமதிச்சான்றிதழ் பெற வேண்டும் என்பது நியதி. அந்த நியதி இத்திட்டத்தில் பின்பற்றப்படவில்லை. இங்கு அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களின் அடித்தளம் எவ்வளவு உறுதியானது? அதன் அடித்தளத்திற்குரிய ஆழம் எவ்வளவு? அதனுடைய கொங்கிறீட்டின் தடிமன் எவ்வளவு என்பது போன்ற எந்த ஒரு அடிப்படைத் தரவுகள் கூட எம்மிடம் இல்லை.

தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்காக மனமுருகும் இந்திய அரசியல்வாதி

தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழரகளின் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை மத்திய அரசு நிறைவேற்றப் போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நெல்லையில் 12.08 அன்று செய்தியாளர்களை சந்தித்த போதே சீமான் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பங்களாதேஷ் மற்றும் திபெத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு கொடுத்த முன்னுரிமையினை தமிழர்களுக்கு வழங்கவில்லை. இந்தியாவிலுள்ள ஈழத் தமிழர்களுக்கு அரசாங்கம் எந்தவொரு அடிப்படை வசதிகளையும் வழங்கவில்லை. இப்படியிருக்கையில் அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றுமா என்பது சந்தேகமே என்று சீமான் குறிப்பிட்டார்.

 

 

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – ஜே.வி.பியும் வேட்பாளரை அறிவிக்கின்றது

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட ஜே.வி.பி கட்சியும் தனது வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜிதா கெரத் இன்று (13) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் நாள் இடம்பெறும் மக்கள் பேரணியில் இதனை அறிவிக்கவுள்ளோம். மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏது நிலைகளை உருவாக்குவதில் இரு அரசுகளும் தவறிவிட்டன. எனவே நாட்டுக்கு மூன்றாவது அணி ஒன்று தேவையாக உள்ளது.

சிறீலங்காவில் வேறு ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை பேராயர் மல்கொம் ரஞ்சித் அவர்களும், மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய நாட்டின் தேவைக்குரிய வேட்பாளரே நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தென்னிலங்கையில் இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக ஜே.வி.பி களமிறங்கியுள்ளதால் சிங்கள மக்களின் வாக்குகள் சிதறும் நிலை தோன்றியுள்ளதாகவும், எனவே தமிழ் மக்களின் வாக்குகள் இங்கு முக்கியமாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுள்ள மாபெரும் மக்கள் எழிச்சிபேரணிக்கு ஆதரவு கொடுப்போம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு நாள் ஒவ்வொருவருடமும் ஆவணி 30ஆம் திகதி நினைவு கூறப்படுகிறது.

இவ்வாண்டு அந்நாளில் தமிழீழ தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி மாபெரும் எழுச்சிப் பேரணி நடைபெற உள்ளது.

வடக்கு மாகாணத்தில் வவுனியா A9 வீதியில் பன்றிக்கெய்த குளம் விநாயகர் ஆலயத்தில் தொடங்கி ஒமந்தை இராணுவ சாவடியில் இப்பேரரசு நிறைவுபெறும்.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் கல்முனை தரவைப் பிள்ளையார் கோவிலில் காலை 10மணிக்கு ஆரம்பமாகி கல்முனை தமிழ்பிரதேச முன்றலில் நிறைவுபெறும்.

இம் மாபெரும் எழுச்சி பேரணியை முன்னிட்டு வடக்குகிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அமைப்பால் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அதில் இப்போராட்டத்திற்கு இளைஞர்கள், அரச அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், வர்த்தகசங்க தொழிலாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேட்டுகொண்டனர்.

அத்துடன் 10வருடங்கள் ஆகியும் தமது உறவுகள் பற்றி எந்த முடிவுகளும் கிடைக்கவில்லை.

இராணுவத்திடம் கையால் ஒப்படைக்கப்பட்ட உறவுகள், சரணடைந்தவர்கள், இராணுவத்தாலும் துணைஇராணுவ குழுக்களாலும் கடத்தப்பட்ட உறவுகள் எங்கே?

அவர்களுக்கு என்ன நடந்தது?

அரசு இந்தக் கேள்விகளுக்கு உண்மையை கூறவேண்டும்.

பலமுறை அரசாங்கத்திற்கு அறிக்கை, மகஜர் கொடுத்துள்ளனர். ஐனாதிபதியை நேரில் சந்தித்தார்கள். ஆனால் எந்த பலனும் இல்லாமல் சர்வதேசத்தையும் சர்வதேச கலப்பு நீதிமன்றத்தையும் நம்பியிருப்பதாக கூறினார்கள்.

எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இதுவரை 38 பேருக்கு மேல் தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் என்ற எதிர்பார்ப்புடன் உயிரை இழந்துள்ளார்கள்.

Omp வேண்டாம் ,குற்றவாளிகளின் உள்ளக விசாரணை வேண்டாம்,சர்வதேசமே தலையிடு போன்ற விடயங்களை குறிப்பிட்டு யார் ஜனாதிபதியாக வந்தாலும் எமக்கான நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என ஊடக அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

புலத்திலும் அவர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் வெடிக்கட்டும்!

நன்றி: சிவந்தினி பிரபாகரன்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தான் செய்யப் போகும் வேலைகளை விபரிக்கின்றார்

காலிமுகத்திடலில் ஒரு பேரணியை நடத்தி தமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசாவை வரவேற்கும் மக்கள் பேரணி, 12.08 பிற்பகல் பதுளையில் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ரவீந்திர சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாட்டின் ஒரே நம்பிக்கை சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாகக் கொண்டு வருவதேயாகும் என்று கூறினார்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸவை கண்டு தான் அனுதாபப்படுவதாகவும் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய சஜித் பிரேமதாசா தெரிவிக்கையில், இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக் கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவோம் என தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு நாங்கள் நம்மை அர்ப்பணிப்போம் என்றும் பாதுகாப்பான முன்னேற்றமடைந்த நாட்டை உருவாக்குவேன் என்றும், அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்,

பொருளாதார மூலதனத்தை வலுப்படுத்தி முன்னேறி செல்ல வேண்டும். இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக் கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக்குவோம்.

அதேவேளை நாம் நாட்டைப் பலப்படுத்த வேண்டுமெனில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். சிங்கள – பௌத்த தலைவர்கள் என்ற ரீதியில் புத்த பகவானின் போதனைகளுக்கு மதிப்பளித்து இன, மொழி, மத பேதங்களை பாராது நாட்டு மக்களை சமனான விதத்தில் நடத்த வேண்டும்.

30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ள தம்மை அர்ப்பணித்த பாதுகாப்பு படை வீரர்களின் அபிவிருத்திக்கு நாங்கள் பாரிய பங்களிப்பினை வழங்குவோம். மலையக மக்களை பாதுகாப்போம்.

நாட்டிற்கு பயனுள்ள எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்து கொள்வதில் தவறில்லை. ஆனால், நாட்டின் சுயாதீனத்தை பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாம் எமது காலத்தில் செய்து கொள்ளப் போவதில்லை.

அத்துடன் நாட்டை நாம் பலப்படுத்துவதற்கு தேசிய பாதுகாப்பை பலப்படுத்தல் வேண்டும். எமது நாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு என்றும் இடமிருக்காது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு மாறாக அதனை முற்றாக அழிப்பதே எமது இலக்காகும். இதற்கான அனைத்து செயற்பாடுகளையும் நாம் எடுப்போம்.

நான் உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என் உயிரிலும் அதிகமாக மதித்துக் காப்பாற்றுவேன். நான் எவருக்கும் அச்சப்படுபவன் அல்ல.

எனக்கு 52 வயதாகி விட்டது. நான் மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்ல. எனது தந்தையைப் போல நடுவீதியில் மக்களுக்காக உயிரை விடவும் தயாராக உள்ளேன் என்று கூறினார்.

 

கோத்தபயா தொடர்பாக சந்திரிகாவின் கருத்து

ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோத்தபயாவிற்கு தான் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கின்றார். மேலும் தான் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கப் போவதாக பசில் ராஜபக்ஸ கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது என்றும்  ராஜபக்ஸக்களின் பேச்சை எவரும் நம்பப் போவதில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

கட்சியா நாடா என்ற தெரிவு வரும் போது, தான் நாட்டிற்கே முன்னுரிமை வழங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், கோத்தபயாவினால் நாட்டை ஆள முடியாது எனவும்   ராஜபக்ஸகளின் பேராசையே அவர்களது குடும்பத்தை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.