சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – ஜே.வி.பியும் வேட்பாளரை அறிவிக்கின்றது

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட ஜே.வி.பி கட்சியும் தனது வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜிதா கெரத் இன்று (13) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் நாள் இடம்பெறும் மக்கள் பேரணியில் இதனை அறிவிக்கவுள்ளோம். மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏது நிலைகளை உருவாக்குவதில் இரு அரசுகளும் தவறிவிட்டன. எனவே நாட்டுக்கு மூன்றாவது அணி ஒன்று தேவையாக உள்ளது.

சிறீலங்காவில் வேறு ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை பேராயர் மல்கொம் ரஞ்சித் அவர்களும், மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய நாட்டின் தேவைக்குரிய வேட்பாளரே நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தென்னிலங்கையில் இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக ஜே.வி.பி களமிறங்கியுள்ளதால் சிங்கள மக்களின் வாக்குகள் சிதறும் நிலை தோன்றியுள்ளதாகவும், எனவே தமிழ் மக்களின் வாக்குகள் இங்கு முக்கியமாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.