Home Blog Page 2706

ரணிலின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவுகள் போராட்டம்!

வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வவுனியா வைத்தியசாலையில் பிரதமரின் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு போராட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோது வைத்தியசாலை சுற்று வட்டத்தில் பொலிஸார் தடையை ஏற்படுத்தியமையால் ஏ-9 வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

இன்றுடன் 907 ஆவது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்புப் போராட்டம் நீதிமன்ற வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை சென்றடைந்ததும் விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார், கலகம் தடுப்புப் பொலிஸார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை தடுத்து நிறுத்தியதுடன் பேருந்து ஒன்றை வீதியின் குறுக்கே நிறுத்தி வீதியையும் தடை செய்தனர்.

இந்நிலையில், சுமார் 30 நிமிடங்களின் பின்னர் காணாமற்போனோரின் உறவுகளின் போராட்டக் களத்திற்கு பிரதமரை அழைத்து வருவதாக பொலிஸார் வாக்குறுதி வழங்கியதையடுத்து குறித்த எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் காரணமாக பிரதமர் பிரதான வீதியைப் பயன்படுத்தாமல் மாற்று வீதியூடாக நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து காய் நகர்த்தும் கோத்தபாய – பூமிகன்

இலங்கை அரசியலில் பலம்வாய்ந்த அணியாக இனங்காணப்படும் பொதுஜன பெரமுனையின் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்‌ச களமிறங்குகின்றார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக – சிங்கள மக்களின் ஹீரோவாக அவர் இருந்தாலும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பிரதான சவாலாக இருக்கப்போவது சிறுபான்மையினருடைய வாக்குகளை அவரால் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதுதான். முழுக்க முழுக்க சிங்கள வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்கினால் வெற்றிபெற முடியாமல் போய்விடலாம் என்ற அச்சம் அவரிடம் ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. சிங்கள வாக்குகளைப் பாதிக்காமல், தமிழ் வாக்குகளை எப்படிக் கவர்வது என்பதுதான் இன்று அவர்களுக்குள்ள பிரச்சினை.

இதற்கான வியூகங்களை அமைப்பதில் மொட்டு அணியினர் அவசரமாக இறங்கியிருப்பதை கடந்த இரண்டு வார காலத்தில் காணமுடிந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, விக்கியுடன் இருக்கும் அணியினரோ, கஜன் தரப்போ தம்மை வெளிப்படையாக ஆதரிக்கப்போவதில்லை என்பது ராஜபக்‌சக்களுக்குத் தெரியும். அதனால்தான் அவசரம் அவசரமாக சிறிய பத்து அணிகளை அழைத்து அவர்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை அவர்கள் கடந்த வாரம் கைச்சாத்திட்டார்கள். 2005 சனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளால்தான் மகிந்த வெற்றிபெற்றிருந்தார். அதனால், எந்த ஒரு சிறிய கட்சியையும் புறக்கணித்துவிட அவர்கள் இப்போது தயாராகவில்லை. “சிறு துரும்பும் பற்குத்த உதவலாம்” என அவர்கள் நம்புகின்றார்கள்.

இதன் அடுத்த கட்டமாக இரண்டாம் நிலையிலுள்ள கட்சிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டன. கடந்த மூன்று வாரகாலமாக அவர்கள் கொழும்பில் முகாமிட்டு, மொட்டு அணியினருடன் இரவிரவாகப் பேசிவருகின்றார்கள். அதில் குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப் பெருமாள், பிரபா கணேசன், டாக்டர் விக்கினேஸ்வரன், உதயராஜா, அருண் தம்பிமுத்து போன்ற தமிழ்த் தரப்பினருடன் இடதுசாரிக் கட்சிகளும் அடக்கம். ஆறுமுகம் தொண்டமானின் அணியும் இவர்களுடனேயே நிற்கிறது. இவற்றைவிட, தீவிர இனவாதக் கட்சிகளாக அடையாளம் காணப்பட்ட விமல் வீரவன்ச தரப்பு, உதய கம்பன்பில தரப்புக்களும் இந்த முகாமில்தான் உள்ளன.mahi tamil2 தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து காய் நகர்த்தும் கோத்தபாய - பூமிகன்

இதில் முக்கியமான தமிழ்த் தலைமைகள் தனித்தனியாக மகிந்தவை சந்தித்து நீண்ட பேச்சுக்களை நடத்தியிருக்கின்றனர். டக்ளஸ், வரதர் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இதன்போது அவர்கள் முக்கியமாகச் சுட்டிக்காட்டிய விஷயம், “கோத்தாவை தமிழ் மக்கள் முன்பாக சந்தைப் படுத்துவது கடினமானது” என்பதுதான். காரணம் கோத்தா ஏற்கனவே கடும்போக்கு சிங்கள அதிகாரியாக அடையாளம் காணப்பட்டவர். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அதனால், “இவர்தான் எமது சனாதிபதி வேட்பாளர்” என அறிமுகப்படுத்துவதில் தமக்குள்ள சிரமத்தை அவர்கள் மகிந்தவுக்கு விளக்கியிருக்கிறார்கள்.

பொதுஜன பெரமுன வட்டாரங்களில் கணிப்பின்படி, சிங்கள வாக்குகளில் பெருமளவைத் தம்மால் பெறமுடியும் என அவர்கள் நம்புகின்றார்கள். அதாவது, சிங்கள வாக்குகளில் 55 வீதத்துக்கும் அதிகமானதை தம்மால் பெறமுடியும் என அவர்கள் கணிப்பிடுகின்றார்கள். சஜித் களமிறங்கினால் போட்டி கடினமானதாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் மொட்டு வட்டாரங்களில் உள்ளது. அவ்வாறான நிலையில், தமிழ் வாக்குகள் அவசியம் என்பதை அவர்கள் உணர்கின்றார்கள். உண்மையில் தமிழ் மக்களின் உணர்வுகள் எப்படியுள்ளது? அவர்களுடைய குறைந்தபட்ச ஆதரவையாவது தக்கவைப்பதற்கு என்ன செய்யலாம்? என்பதுதான் அவர்களுக்குள்ள பிரச்சினை.

அதற்காகத்தான் அவசரமாக சித்தார்த்தனையும், பின்னர் சுமந்திரனையும் கோத்தா அழைத்துப் பேசியிருக்கின்றார். தாம் சந்திக்கவில்லை என சுமந்திரன் பின்னர் சொன்னாலும், சந்திப்பு நடைபெற்றது உண்மை என கொழும்பிலுள்ள அரசியல் வட்டாரம் ஒன்று பின்னர் உறுதிப்படுத்தியது. இதன்போது, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் பேசப்பட்டதாக சொல்லப்படுகின்றது. குறிப்பாக, அரசியல் தீர்வு விடயத்தில் கோத்தா எந்தவொரு வாக்குறுதியும் கொடுக்கமாட்டார் எனத் தெரிகின்றது. “செய்யக் கூடியவைகளையே நான் சொல்வேன். செய்ய முடியாத எதனையும் நான் வாக்குறுதியாகக் கொடுக்கமாட்டேன்” என அவர் இதன்போது உறுதியாகக் கூறியிருக்கின்றார்.Mahinda Sampanthan Sumanthiran 330 seithycim தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து காய் நகர்த்தும் கோத்தபாய - பூமிகன்

“நான் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்களையே பார்த்துக்கொள்வேன். அரசியலமைப்பு விவகாரங்களை அண்ணன் (மகிந்த) பார்த்தக்கொள்வார்” என்ற கருத்தை இந்த சந்திப்புக்களின் போது கோத்தா வெளியிட்டார். மகிந்த பிரதமராகப் பதவிக்கு வருவார் என்ற கருத்திலேயே தன்னுடைய நிலைப்பாட்டை கோத்தா வெளியிட்டார். “புதிய அரசியலமைப்பு தேவையானால் அதனை பாராளுமன்றம் தயாரிக்கலாம். அதில் நான் தலையிட மாட்டேன். அது பாராளுமன்றத்தின் பொறுப்பாக இருக்கும். இதில் பாராளுமன்றம் எடுக்கும் நிலைப்பாட்டை நான் ஏற்றுக்கொள்வேன்” என்பதுதான் தன்னுடைய அணுகுமுறை என கோத்தா விளக்கியதாகத் தெரியவந்திருக்கின்றது.

இதேவேளையில், தமிழ் மக்களைக் கவரக் கூடிய சில அறிவிப்புக்களை மகிந்த வெளியிடுவார் என மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லாமல், வடக்கில் இடம்பெறும் பிரச்சாரக் கூட்டங்களிலேயே இந்த விபரங்களை அவர் அறிவிப்பார். தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் சில விடயங்களை மகிந்த தரப்பு தயாரித்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. “மகிந்தவுடன் பல விடயங்களையிட்டும் பேசியுள்ளோம்.

அதில் சில விடயங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.  அதற்றை நாம் சொல்வதை விட அவர்கள் சொல்வது பொருத்தமானதாக இருக்கும்” என இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்ட வரதராஜப் பெருமாள் கொழும்பில் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார். “தேர்தலில் களமிறங்கும் இரண்டு வேட்பாளர்களில் ஒருவரை நாம் நேரடியக ஆதரிக்கப்போகின்றோமா? அல்லது மறைமுகமாக ஆதரிக்கப்போகின்றோமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி” எனக் குறிப்பிடும் வரதர், “ஐ.தே.க. எதனையும் செய்யப்போவதில்லை.

அதனால் அவர்களை நாம் ஆதரிக்க முடியாது” எனவும் குறிப்பிடுகின்றார். “இதனால் மற்றப் பக்கத்தைத்தான் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாங்கள் இருக்கிறோம். அதன்மூலமாக தமிழ் மக்களுக்கு அதிகபட்சம் எதனைப் பெற்றுக்கொடுக்க முடியுமோ அதற்காக முயற்சிக்கிறோம்” என தன்னுடைய நிலைப்பாட்டை வரதர் விளக்கியிருக்கிறார். வரதர் அணி கோத்தாவை ஆதரிக்கப்போகின்றது என்பது இப்போது பகிரங்கமாகியிருக்கின்றது.

“முன்னர் இருந்த சூழ்நிலை வேறு. இப்போது நிலை மாறிவிட்டது. மாகாண சபைகளை காத்திரமான முறையில் செயற்பட வைப்பேன்” என தம்மை ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகளிடம்  மகிந்த கூறியிருப்பதாகத் தெரிகின்றது. அரசியல் கைதிகள் விவகாரத்திலும், விரைந்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சொல்லியிருக்கின்றார். இது போன்ற பல விஷயங்களை மகிந்த தரப்பு பகிரங்கமாக வெளிப்படுத்தலாம். கடந்த கால அனுபவங்களும் மகிந்த தரப்பை வழிநடத்தலாம் என்பதும் வரதரின் கருத்தாக இருந்தது. இந்த வியூகங்களின் மூலம் தமிழ் வாக்குகளை எந்தளவுக்கு கோத்தா அறுவடை செய்கின்றார் என்பதிலேயே அவரது வெற்றி தங்கியிருக்கின்றது.

இதன் மறுபுறத்தில் கோத்தா தரப்பு மற்றொரு வியூகத்தையும் வகுக்கின்றது. தமிழ் வாக்குகளைப் பெறுவதன் மூலம், சர்வதேச அரங்கில் தம்மீது சுமந்தப்படும் போர்க் குற்றங்களின் சுமையைக் குறைத்துவிடமுடியுமா என்பதுதான் கோத்தாவின் திட்டம். தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்னும்போது, குற்றச்சாட்டுக்கள் நீர்த்துப் போய்விடும் என அவர்கள் நம்புவதாகத் தெரிகின்றது. ஐ.தே.க.வை விட ராஜபக்‌ச தரப்புக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. அதனையிட்டு அவர்கள் கரிசனையாக இருப்பதும் உண்மை. ஆனால், தமிழ் வாக்குகள் தமக்கு அதிகளவுக்குக் கிடைத்தால், அதனைச் சமாளிக்க முடியும் என கோத்தா தரப்பு நம்புகின்றது. அதனால், தமிழ் மக்கள் மிகவும் நிதானமாக தமது வாக்குச் சீட்டைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

எக்னெலிகொட தொடர்பில் மட்டுமல்ல அங்கிருந்த தமிழர்கள் தொடர்பாகவும் தொடர்பாகவும் விசாரணைகள் வேண்டும் – இரா.சிறீஞானேஸ்வரன்

ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்க அரசு தரப்பு முன்வரவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் நேற்று (14) ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘‘2019. ஒகஸ்ட் 10ஆம் திகதி டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் கிரித்தலை இராணுவ முகாமில் பணியாற்றிய லெப்டினட் கேணல் சம்மி அர்ஜூன் குமாரரத்ன உட்பட ஒன்பது சந்தேகநபர்களுக்கு எதிராக எக்னெலிகொட தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டுப் பதிவுசெய்து நீதாய நீதிமன்றில் அக்குற்றச்சாட்டை விசாரணைக்கு உட்படுத்துமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்‘‘

வழக்குத் தொடுனர்களின் தரப்பானது குறித்த இராணுவ முகாமானது பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது என்றும், ஆரம்பத்தில் அங்கு ஒன்பது விடுதலைப் புலிகள் உயிருடன் தடுத்து வைக்கபட்டிருந்தனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த போது சுமதிபால சுரேஸ்குமார் என்ற விடுதலைப் புலி உறுப்பினர் சரணடைந்து குறித்த இராணுவ முகாமில் இராணுவப் புலனாய்விற்கு ஒத்துழைப்பு நல்கியமையும், அவர் எக்னெலிகொட வுடனும் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எக்னெலிகொட தனது கழிவகற்றல் கடமைகளைக்கூடச் செய்யமுடியாதளவு தாக்குதலுக்குள்ளாகி சிறைக்கூண்டில் இருந்ததை மற்றொரு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேக நபரான எதிர்மன்னசிங்கம் அருச்சந்திரன் என்பவர் தெரிவித்திருந்ததாக வழக்குத் தொடுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கின் மிகப் பிரதானமான சாட்சியாக அரசு தரப்புச் சாட்சியாக மாறியுள்ள இராணுவ அதிகாரி ஜெயசுந்தர முதியான்சலாகே ரண்பண்டா எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக தனது சாட்சிகளை வழங்கியுள்ளார்.

எனவே மேற்கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் குறித்த முகாமில் சரணடைந்த மற்றும் கடத்தப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தெளிவாகின்றது.

அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ள ரண்பண்டா, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒன்பது இராணுவத்தினர் மற்றும் கிரித்தலை இராணுவ முகாமின் புலனாய்வுப் பதிவுகளைக்  கையேற்ற இராணுவ அதிகாரி மேஜர் பீரிஸ் ஆகியோரிடம்  மேலும் விசாரணைகளைத் தொடர்வதன் மூலம் எத்தனை தமிழ் இளைஞர்கள் அங்கு தடுத்து வைக்கப்படட்டிருந்தார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பது பற்றி அறிந்துகொள்ள முடியும் என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன் தெரிவித்தார்.

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் பெயர் இல்லை : என்ன செய்யப்போகிறார் கோட்டா

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30 வரையான காலப்பகுதியில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலை நேற்று அமெரிக்க இராஜாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

தனது அமெரிக்க குடியுரிமை துறப்பு ஆவணம், மே 3ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டதாகவும், ஏப்ரல் 17ஆம் திகதியில் இருந்து, அமெரிக்க குடியுரிமை பெற்றவராக கணிக்கப்படமாட்டார் என்றும், கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இதுதொடர்பான ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் பதிவாளர் வெளியிட்ட, முதலாவது காலாண்டில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில், கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.

இரண்டாவது காலாண்டுக்கான பட்டியலில், அவரது பெயர் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது.

எனினும், அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் இரண்டாவது காலாண்டுக்கான 17 பக்க பட்டியல் ஓகஸ்ட் 7ஆம் திகதியிடப்பட்டு, நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் அமெரிக்க குடியுரிமை கொண்டவராகவே கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை இழப்பு உறுதி செய்யப்படாததால், சிக்கலை எதிர்கொண்டுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

துயிலும் இல்லத்தில் படையினர் மேற்கொள்ளும் கட்டுமானங்கள் நிறுத்தப்படவேண்டும் – ஜீவராசா

விஸ்வமடு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரால் நிரந்தர கட்டிடம் உடன் நிறுத்த வேண்டும்!

இராணுவத்தினர் துயிலுமில்லத்தில் மேற்கொள்ளும் கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ஜீவராசா தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது விஸ்வமடு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் அண்மைக் காலமாக இராணுவத்தினரால் நிரந்தர கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது இது ஓர் சுமூகமான சூழ்நிலைக்கு எதிரானதொன்றாக நான் கருதுகின்றேன் இதனை உடனடியாக நிறுத்தி நிலைமைகளை சீர் செய்ய வேண்டும்

யுத்தத்தில் இறந்த வீரர்ககளை ஒவ்வொரு வருடமும் அமைதியான முறையில் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்துவருவதனை அனைவரும் அறிந்த விடையம் இனவாதிகளை பொறுத்தவை அவர்கள் புலிப் பயங்கரவாதிகள்??

ஆனால் அவர்கள் அனைவரும் எமது உறவுகள் எங்களின் பிள்ளைகள் அவர்களின் இழப்பு எங்களுக்கு ஈடு செய்யப்பட முடியாத ஒன்று அவர்களை வருடத்தில் ஒருநாள் நினைவு கூர்ந்து வருகின்றோம்

எமது பிள்ளைகள் விதைக்கப்பட்ட புனித பூமியில் இராணுவத்தினர் நிரந்தர கட்டிடங்களை அமைப்பது மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயலாகவே நான் பார்கின்றேன் முதலில் இவ்வாறான கடும்போக்கு வேலைகளை நிறுத்தி மக்களின் மனங்களை வெல்லப் பாருங்கள்.

அதனை விடுத்து தொடர்ந்தும் இவ்வாறான செயல்களை முன்னெடுத்து நீங்களே மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளிகளை அதிகரித்து செல்கிறீர்கள்.

துயிலுமில்லம் என்பது எங்களுக்கு கோவில் நாங்கள் பூசிக்கவே செல்கின்றோம் கடந்த காலத்தில் கல்லறைகளை கனரக வாகனங்கள் கொண்டு உடைத்தீர்கள் அவற்றை தாங்கிக் கொண்டோம் வழிபாட்டு இடம்போன்று கண்காணித்து வரும் இப் பூமியில் நிரந்தரக் கட்டிடம் அமைப்பதனை உடனே நிறுத்த வேண்டும்.

இல்லை எனில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப் படுவோம் இவை தொடர்பில் தற்போதைய நிலைமைகளை தெளிவு படுத்தி நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிப்பு ஒன்றை செய்ய உள்ளேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய கிராமங்கள் அதிகாலை சுற்றிவளைப்பு;பதட்டமான சூழல்

அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய கிராமங்கள் இன்று அதிகாலை முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே பொலிஸாரும் அதிரடிப்படையினரும் வீடுவீடாக சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கணக்கான படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் விபரங்கள் தொடர்பில் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் செய்தியாளர்கள் தெரிவித்தள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கைக்கு 300 ற்கும் மேற்பட்ட பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த பிரதேசத்திலிருந்து தகவல் கிடைக்கப்பபெற்றுள்ளது.

நாஜிக்கள் செய்ததை இன்று மோடி தரப்பினர் செய்கின்றனர் – இம்ரான் கான்

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இம்ரான் கான்,

பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் ஏற்படுத்த நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு பதிலடி தருவோம்.

18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது.

ஹிட்லருக்கு இருந்த அகங்காரமும், நரேந்திர மோடியின் அகங்காரத்துக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்கப்பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள்.

இந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும்.

இந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை. பாபர் மசூதி சம்பவம், முஸ்லிம்களை கொல்வது, காஷ்மீரில் செய்யும் அட்டூழியங்கள் என ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம் இந்தியாவில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது காஷ்மீருக்கு மோடி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது எனறும் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

எழுத்து மூலம் உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கே ஆதரவு – விக்கினேஸ்வவரன்

தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதங்களைத்தரும் கட்சிக்கும் அதன் வேட்பாளருக்குமே தமது அதரவு-களை வழங்கப்போதவாக வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான திரு சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் நேற்று (14) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது கட்சி வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை ஆனால் நாம் தேர்தலில் பங்கெடுப்போம். வடக்கு கிழக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், புத்தர் சிலைகளை நிறுவுதல், சிங்களக் குடியேற்றங்களை அமைத்தல் என்பன நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், 120 பேர் வரையில் தற்போதும் சிறையில் உள்ளனர். பல குற்றங்களைச் செய்த கருணா அம்மான் அரசியல்வாதிகளின் முன்னனி வரிசையில் அமர்ந்துள்ளபோது, கைதிகளை விடுவிப்பதில் என்ன பிரச்சனையுள்ளது.

காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் போர்க்குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் இதுவே எமது கோரிக்கைகள்.

நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, அதனால் பெறப்படும் சில ஆயிரம் வாக்குகளால் நன்மையில்லை. ஆனால் ஒரு மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடபகுதி மக்கள் சிந்திக்க வேண்டுமாம் – ரணில் கூறுகிறார்

வடக்கில் உள்ள மக்களை முன்பு ஆட்சி புரிந்த அரசு புறக்கணித்திருந்தது எனவே தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் நேற்று (14) கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போரின் பின்னர் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்த முன்னைய அரசு தமிழ் மக்களை புறக்கணித்திருந்தது. வடபகுதி மக்கள் தமது இறைமையை காப்பாற்ற வேண்டும். வவுனியாவின் அபிவிருத்திக்கு மட்டும் 20.5 பில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

இதனிடையே, ரணில் அரசும், முன்பு ஆட்சியில் இருந்த மகிந்தா அரசும் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அநீதிகளையே இழைத்து வந்திருந்தன. இராணுவ ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, பௌத்த ஆலயங்களை அத்துமீறி அமைத்தல் போன்றவற்றை இரண்டு அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருவது தமிழ் மக்கள் அறிந்ததே.

நல்லூர் கந்தனை தரிசித்த படைத் தளபதி

இன்றைய தினம் (14.08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேநாயக்க வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திற்கு சென்று விசேட புசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். அத்துடன் உற்சவ கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

இராணுவத் தளபதியுடன் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மற்றும் இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  அடுத்து ரணில் விக்கிரமசிங்கவின் வருகையை முன்னிட்டும் பாதுகாப்பு பல்படுத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க 3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு வருகை தரவுள்ளார். இதன் போது யாழ். நல்லூர் கந்தனை தரிசிக்க வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.