Home Blog Page 2694

நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பிணை நீடிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பிணை நீடிப்பு வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரில் ஒருவரான நளினி, தன் மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாதம் பிணை கோரி கடந்த பெப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மலகுமார் விசாரித்தனர். கடந்த ஜுலை 5ஆம் திகதி இந்த வழக்கில் காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட நளினி தானே தனக்காக வாதாடினார்.

அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் ஒருமாத பிணையில் ஜுலை 25ஆம் திகதி வேலூர் சிறையிலிருந்து நளினி வெளியே வந்தார்.

வேலூர் சாத்துவாச்சாரியில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேறகொண்டு வரும் நளினி, அதற்கான ஏற்பாடுகள் முடிவடையாத நிலையில் பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க கோரி தமிழக அரசிடமும், சிறைத்துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் திகதி மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த மனு ஆகஸ்ட் 13இல் நிராகரிக்கப்பட்டது. பின்னர் பிணையை ஒருமாதம் நீடிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பிணை வழங்குமாறு சிறைத்துறைக்கும், தமிழக அரசிற்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் பங்கு

சிறிலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் சார்பாக போட்டியிடவுள்ள முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண ஆளுநருமான M.L.A.M.ஹிஸ்புல்லா ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக சிவில் அமைப்புக்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாகவும், இதில் சாதகமான தீர்மானம் எட்டப்படும் போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறவேண்டும். ஆனால், இரண்டிற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிடும் போது, எந்தவொரு வேட்பாளராலும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாது போகும் என்று கூறினார்.

இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேச முடியும் என்றும், தமது பிரதான கோரிக்கைகளுக்கு இணங்கும் பிரதான வேட்பாளருக்கு, முஸ்லிம்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக தற்போது கோத்தபயா ராஜபக்ஷ, அனுரகுமார திஸநாயக்க ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஐ.தே.க சார்பாகவும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவர்.

இலங்கையில் முஸ்லிம்களின் வாக்குகள் கிட்டத்தட்ட 16 இலட்சமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 12 இலட்சம் முஸ்லிம்கள் வாக்களித்திருந்தனர். அவற்றில் 11 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே வழங்கப்பட்டன. அப்பிடியிருந்தும் கடந்த நான்கரை வருடங்களில் முஸ்லிம் சமூகம் எந்தவொரு நன்மையையும் அவரால் பெறவில்லை. ஜின்தோட்டம் தொடங்கி மினுவாங்கொட வரை முஸ்லிம்களின் சொத்துக்கள் தீப்பற்றி எரிந்தன. வில்பத்து முதல் நுரைச்சோலை வரை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தீவிரமடைந்தன. இவை தொடர்பில் எந்தத் தீர்வுகளும் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேன எந்தவொரு இடத்திலும் முஸ்லிம்கள் தனக்கு வாக்களித்ததாக சொல்லவில்லை. தனது வெற்றிக்கு தமிழ்க் கூட்டமைப்பே காரணம் என பல இடங்களில் கூறியிருக்கின்றார்.

எனவே தான் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் களமிறங்கி அவர் ஊடாக பிரதான வேட்பாளருக்கு விருப்பு வாக்கைப் பெற்றுக் கொடுக்கலாம். களமிறங்கும் முஸ்லிம் வேட்பாளருக்கு 25 வீதமான வாக்குகள் கிடைத்தாலே போதும்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளைத் தெரிவு செய்வதற்காக இதுவரை ஏழு தேர்தல்கள் நடந்துள்ளன. 1982, 1988, 1994, 1999, 2005, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் அந்தத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 1999, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அப்துல் ரசூல் என்பவர் போட்டியிட்டார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகமட் காசிம் இஸ்மயில், ஐதுரஸ் முகமட் இலியாஸ் மற்றும் முகமட் முஸ்தபா ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐதுருஸ் முகமட் இலியாஸ் மற்றும் இப்றாகிம் மிப்லார் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

 

கூட்டமைப்பினர் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தகுதியை இழந்து விட்டார்கள்

தேர்தல் அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடத்தில் தங்களை புனிதர்களாக காட்டிக்கொண்டு தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்கான உத்திகளை தற்சமயம் அரங்கேற்றி வருகின்றனர்.

அரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்று எந்தவித நிபந்தனையும் இன்றி அரசை காப்பாற்றி வரும் கூட்டமைப்பு இன்று மக்களிடத்தில் புனிதர்களாக தங்களை காட்டிக்கொள்வதற்காக அரும்பாடுபட்டு வருகின்றது கையில் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் கைநழுவ செய்தது மட்டுமன்றி உள்நாட்டில் ஆளும் அரசாங்கத்துடன் பேசி தீர்க்க வேண்டிய விடயங்களிலும் கோட்டை விட்டுவிட்டு இன்று மக்களிடம் அனுதாபத்தை தேடுவதற்காக கூட்டமைப்பினர் முன்னுக்குபின் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காப்பாற்றி போர்குற்றவாளிகளை பாதுகாத்துவிட்டு இன்று அரசாங்கத்தை எதிர்பதுபோல் காட்டிக்கொண்டு அதே அரசாங்கத்தை நிபந்தனையின்றி ஆதரித்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக நான்கரைவருடகாலம் அரசுக்கு முண்டு கொடுத்துவிட்டு குறிப்பாக ஜநா மனித உரிமை பேரவையில் சவேந்திர சில்வா உட்பட இராணுவத் தளபதிகளைளுடைய பெயரை போர்குற்றவாளிகளின் பட்டியில் இருந்து நீக்கியதும்
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை மின்சார கதிரையில் இருந்து காப்பற்றியவன் நானே என்று மைத்திரிபால சிறிசேனா பகிரங்கமாக கூறும் அளவிற்கு கூட்டமைப்பின் பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கால நீடிப்பு கையெழுத்து கடிதம் உதவி செய்துள்ளது.

இப்படி இருக்கையில்  சர்வதேச சமூகம் இன்னும் பார்வையாளராக இருக்கமுடியாது என்றும் நல்லாட்சி அரசு மக்களை ஏமாற்றி விட்டது சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்கள் இரத்தம் வழிகின்றது என்று புலம்புவது இவர்களின் வழமையான தேர்தல் கால பரப்புரைபோல் தெரிகின்றது.

தமிழ் மக்கள் நீதி கேட்டு வீதிகளில் இறங்கி தங்களாகவே முன்வந்து
போராடிவருகின்ற போதும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்கைளை தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு அல்லாமல் அரசாங்கத்தை பாதுகாக்கின்ற வகையிலே செயற்பட்டு வருவது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் ஆளும் அரசாங்கம் தங்களை
ஏமாற்றிவிட்டதாகவும் பொய்சொல்வதாகவும் இப்போது கூட்டமைப்பினர் கூறுகின்றமை வேடிக்கையாக உள்ளது.

போராளிகளினதும் பொதுமக்களினதும் தியாகங்களால் இன்று மக்கள் பிரதிநிதிகளாக வலம்வரும் கூட்டமைப்பினர் அன்றிலிருந்து இன்று வரை பல தொடர்ச்சியான வரலாற்றுதவறுகளை செய்துவருகின்றனர்இஆட்சி மாற்றத்திற்காக பல மில்லியனை பெற்றுக் கொண்டு அரசுக்கு ஆதரவு அளித்தது மட்டுமன்றி ஐநா மனித உரிமை பேரவையிலும் ஆறு வருடகாலம் தொடர்சியான காலநீடிப்பை பெற்றுக்கொடுத்தனர் சர்வதேச
இராஜதந்திரிகளுடன் தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேசவேண்டிய நேரத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இருந்து இலங்கையை காப்பற்றுவதற்கு இராஜதந்திரிகளுடன் இரவோடு இராவாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இறுதியில் அரசைக் காப்பாற்ற நீதி மன்றம் வரை சென்றனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி பல வருடகாலம் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஒரு நாள் கூட இவர்கள் நீதி மன்றம் செல்லவில்லை. தமிழர்களின் அன்றாட பிரச்சினையில் இருந்து அரசியல் தீர்வு வரை கொள்கைரீதியாக செயற்படவேண்டியவர்கள் இன்று தங்களுடைய சுயநலங்களிற்காகவும் அற்பசொற்ப சலுகைகளுக்காகவும் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு  இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலை மையப்படுத்திய பரபரப்பு அரசியலை முன்னெடுக்கின்றனர் அதாவது தங்களது கருத்துகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்று மக்களை நம்பவைப்பதற்காக ஊடகங்களில் வீரஆவசே பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர் அத்துடன் தங்களுக்கு இராணுவத்தால் அச்சுறுத்தல்
இருப்பதுபோல மக்களை நம்பவைப்பதற்காக தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களை தாங்களே இராணுவ சோதனை நடவடிக்கைக்கு வழி ஏற்படுத்தி வெறும் பதவிக்காகவும் பணத்திற்கானதுமான அரைவேற்காட்டு அரசியலை செய்கின்றனர். மக்கள் இவர்களின் உன்மை முகத்தை நன்கு புரிந்துவைத்துள்ளதுடன் இவர்களுக்கு உரிய பதிலடியை வழங்குவதற்கான காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை.

பற்றியெரியும் உலகின் நுரையீரல்…அமேசான் தீ சொல்லும் அழிவுச்செய்தி!

இந்தக் காட்டுத்தீயின் மூலம், நம்மை அழிக்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய கரிம வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகப்படுத்தப் போகிறார்கள். இதை எதிர்த்துப் போராடிய அமேசானிய பழங்குடிகளை, அந்தக் காட்டின் ஆதிப் பிள்ளைகளைத் துரத்திவிடப் போகிறார்கள்.

அமேசான் மழைக்காடுகள், கோடைக்காலத்தில்கூட அவ்வளவு எளிதில் தீ பற்றக்கூடியதல்ல. கலிபோர்னியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளிலுள்ள வறண்ட காடுகளைப் போல் இவை இல்லை. அதிகபட்சம் அடர்த்தியான ஈரப்பதம் மிக்கக் காடுகளைக் கொண்டது. அங்குக் காட்டுத்தீ ஏற்படக் காரணம் மனிதர்களே என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

பிரேசில் நாட்டின் ஆராய்ச்சி மையம் (INPE) இந்த வாரத்தில் இதுவரை உருவான காட்டுத்தீயின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 80 சதவிகிதம் அதிகம் என்கிறது. இதனால், உலகிலேயே அமேசான் காட்டிற்கு மட்டுமே சொந்தமான பல தனித்துவமிக்கச் சூழலியல் பகுதிகள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.

“அமேசான் காட்டுத்தீக்கு முழுக்க முழுக்க வறட்சியான காலநிலை, வறண்ட காற்று, அதீத வெப்பம் போன்றவையே காரணம்” என்கிறார் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ். வானியல் ஆய்வாளர் ஹேலி பிரிங்க், “இதற்குத் தட்பவெப்பநிலையோ காலநிலையோ, மின்னலோ எதுவும் காரணமில்லை. இது மனிதர்களால் உண்டான காட்டுத்தீ தான்” என்று சுற்றுச்சூழல் அமைச்சரின் கூற்றை மறுத்துள்ளார்.

ஈக்வடார் நாட்டிலிருக்கும் அமேசான் காட்டுப் பகுதியில் வாழும் வாவோரணி என்ற பழங்குடியின மக்கள் அந்தக் காட்டைச் சார்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே மாதம், ஏழு மில்லியன் ஏக்கர் வனப்பகுதியை ஆக்கிரமித்து எண்ணெய் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிறுவனத்திற்கு எதிராகப் போராடித் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தார்கள். அந்த நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்குச் சாதகமாக வரவிருந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் வெற்றி கண்டனர்.77bfa5ed7b1d4369bd5fe878cac175cc 18 பற்றியெரியும் உலகின் நுரையீரல்...அமேசான் தீ சொல்லும் அழிவுச்செய்தி!

அது நடந்த சில நாள்களிலேயே அமேசான் காடு முழுக்கக் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதையும் அது மனிதர்களால் ஏற்பட்டதுதான் என்று சூழலியல் மற்றும் வானியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுவதையும் எதேச்சையாக நடந்ததென்று கடந்து போக முடியாதென்று சூழலியல் ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.

இன்னொருபுறம், பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோதான் காரணமென்று பிரேசிலைச் சேர்ந்த சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பொல்சானாரோ அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அமேசான் காட்டைப் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவர் சொல்லியதைப் போலவே பண்ணையாளர்கள், விவசாயிகள், இயற்கை வள நிறுவனங்களைக் காடுகளைப் பயன்படுத்திக்கொள்ள விடப்போவதாகவும் அதற்காகவே மழைக்காட்டில் காட்டுத்தீ ஏற்படுத்தி அதன் பெரும் பகுதியை அழிக்கத் திட்டமிட்டு இதைச் செய்துள்ளதாகவும் அவர்மீது பிரேசிலைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

`கடந்த மூன்று வாரங்களாக அமேசான் மழைக்காடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் சாம்பலாகிவிட்டன. இதற்குக் காரணம், பண்ணையாளர்களும் பெருவிவசாயிகளும்தான். அவர்கள் இதைப் பிரச்னையின்றிச் செய்வதற்குத் தகுந்தவகையில் சட்டத்தை எளிமையாக்கியுள்ளார்கள். அதன் விளைவாகக் கட்டுப்பாட்டை மீறிக் காட்டுத்தீ வளர்ந்துவிட்டது. அவர்கள் பற்றவைத்த நெருப்பினால் உண்டான கோபம் அமேசானுக்கு இன்னும் அடங்கவில்லை” என்று பிரேசிலைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்மணி.

எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு பெருவிவசாயிகளை, ஆக்கிரமிப்பாளர்களை, நிறுவனங்களை அமேசானை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது. அங்கு உருவாகியிருக்கும் அரசும் அதைத்தான் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் உலகின் நுரையீரலை விற்பனைப் பொருளாக்கி அதன்மூலம் லாபம் பார்க்கமுடியும். அப்போதுதான் அந்த நிலத்தைப் பண்ணையாளர்களுக்குக் கூறுபோட்டு விற்றுத் தீர்க்கமுடியும். அப்போதுதான் நிறுவனங்கள் இயற்கை வளங்களைத் திருட வழி செய்துகொடுக்க முடியும். மழைக்காடுகளைத் திருடும் மாஃபியா கும்பலிடம் அமேசானைச் சிக்கவைத்துச் சீரழிக்க முடியும்.00128ff7 614 பற்றியெரியும் உலகின் நுரையீரல்...அமேசான் தீ சொல்லும் அழிவுச்செய்தி!

ஒரு காடு அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் நாடும் அழியும். ஆனால், அமேசான் அழிந்தால் அது உலக அழிவையே விரைவுபடுத்திவிடும். ஏனென்றால், அது வெறும் மழைக்காடு மட்டுமல்ல; அதுதான் உலகின் நுரையீரல். அதிகபட்ச பிராண வாயுவை வாரிக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளல். இன்று பிரேசில், ஈக்வடார் போன்ற அரசுகள் செய்துள்ள செயல் நமக்குப் பாதுகாவலனாக இருந்த காட்டைச் சீரழிக்கிறது. அதிலிருந்தே நம்மை அழிக்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் கரிம வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகப்படுத்தப் போகிறார்கள். இதை எதிர்த்துப் போராடிய அமேசானிய பழங்குடிகளை அந்தக் காட்டின் ஆதிப் பிள்ளைகளைத் துரத்திவிடப் போகிறார்கள்.

“நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்குக் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நம்மிடமிருக்கும் ஓர் ஆயுதம்தான் அமேசான். இப்போது அமேசானைக் காப்பாற்றுவதால் நாம் அதை மட்டும் பாதுகாக்கப் போவதில்லை, அதன்மூலம் நமக்கு நிகழவிருக்கும் பேரழிவிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம்”

நன்றி – விகடன்

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஓரளவு படிப்பும் பண்பும் இருக்க வேண்டும் – நீதியரசர் விக்னேஸ்வரன்

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் எனவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் நேற்று (22) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  1956 தொடக்கம் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் பணம், படிப்பு, பண்பு ஆகியவற்றைத் தெரியாதவர்களாக இருந்ததாகவும் இதன் காரணத்தினாலேயே அரசியலானது மாற்றமுற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே தற்போதுள்ளவர்கள் பணபலம் இல்லாவிட்டாலும் ஓரளவு படிப்பும் பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் எனகூறினார்.

மேலும் தேர்தலுக்காக பாரிய தொகையை செலவு செய்யும் பிரதிநிதிகள், அதை திருப்பிப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போதே ஊழல், சமூகத்தில் மலிந்து காணப்படுகின்றமைக்கு காரணம் என்றும் கூறினார்.

இதன் பின்னர் சாதி, மதத்தை பயன்படுத்தி மேலும்பணம் சம்பாதிக்கவும் அவர்கள் முயற்சி செய்வதாககுற்றம் சாட்டிய அவர், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் கூறினார்.

இதனால் எமது உறுப்பினர்கள் சுயசிந்தை அற்றுநடக்கத் தலைப்படுகின்றனர். இவையாவும் சேர்ந்தே அரசியல் ஒரு சாக்கடை என்ற பெயரைப் பெறவைத்துள்ளன என சுட்டிக்காட்டினார்.

ஆனால் தான் சாக்கடையின் விளிம்பில் நின்று அதில் தள்ளிச் செல்லப்படும் அசுத்தங் களை அவதானித்துக் கொண்டு இருக்கின்றேன் என்றும் இதுவரையில் அந்த அசுத் தத்தில் காலடி எடுத்துவைக்கவில்லை என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“எங்கள் வீடு எரிந்து கொண்டிருக்கிறது”- மக்ரோன் ; “21 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ மனநிலை”- போல்சனாரோ

“எங்கள் வீடு எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அமேசான் மழைக்காடு – நமது கிரகத்தின் நுரையீரல் 20% ஓட்ஸிசனை உற்பத்தி செய்கிறது இது ஒரு சர்வதேச நெருக்கடி” என்று மக்ரோன் வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமேசான் மழைக்காடுகளில் எரியும் காட்டுத்தீயை “சர்வதேச நெருக்கடி” என்று அழைப்பதன் மூலம் தனது பிரேசிலிய எதிர்ப்பாளரை கோபப்படுத்தியுள்ளார்.

“ஜி 7 உச்சிமாநாட்டின் உறுப்பினர்களே, இந்த அவசர முதல் உத்தரவை இரண்டு நாட்களில் விவாதிப்போம்!” #ActForTheAmazon என்ற ஹேஷ்டேக்கைச் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

பிரேசிலின் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மக்ரோன் “பரபரப்பானவர்” என்று வெடித்தார், மேலும் அவர் “அரசியல் ஆதாயத்திற்காக” தீயைப் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்.

“ஜனாதிபதி மக்ரோன் பிரேசிலிலும் பிற அமேசானிய நாடுகளிலும் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு உள் பிரச்சினையை கருவியாகக் கொண்டுவர முற்படுகிறார்” என்று போல்சனாரோ ட்வீட் செய்துள்ளார்.

“பிராந்தியத்தில் நாடுகள் இல்லாமல் ஜி 7 இல் அமேசானிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதியின் பரிந்துரை 21 ஆம் நூற்றாண்டில் பொருத்தமற்ற ஒரு காலனித்துவ மனநிலையை நினைவூட்டுகிறது” என்று அவர் இரண்டாவது ட்வீட்டில் தெரிவித்தார்.

நாட்டின் வணிக சார்பு ஜனாதிபதியின் கொள்கைகளால் துணிவு பெறும் கால்நடை வளர்ப்போரும் மரங்களை வெட்டி வாணிபம் செய்வோரும் காடுகளுக்கு தீவைப்பதாக சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆராச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பு ; ஒரு இஸ்ரேலியர் பலி இருவர் காயம்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

17 வயதான இஸ்ரேலிய பெண், தனது தந்தை மற்றும் சகோதரருடன் நடைபயணம் மேற்கொண்டபோது, டோலெவ் குடியேற்றத்திற்கு அருகே இக்குண்டு வெடித்துள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன்போது அந்த பெண் கொல்லப்பட்டதுடன் குறித்த பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தை காயமடைந்தனர்.

ஒரு இராணுவ ஹெலிகாப்டர் காயமடைந்தவர்களை வெளியேற்றியதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது.

தந்தை சுயநினைவுடன் இருப்பதாகவும்,, அதே நேரத்தில் அவரது மகன் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உலிலதாகவும் கூறப்படுகிறது.

பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக இஸ்ரேலினால் அதிகளவான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு வரும் பின்னணியில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளவுபடும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் சனாதிபதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கட்சிக்குள் இரண்டாக பிளவுபட்டுள்ள உறுப்பினர்கள் சஜித்திற்கும் ரணிலுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் சனாதிபதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கட்சிக்குள் இரண்டாக பிளவுபட்டுள்ள உறுப்பினர்கள் சஜித்திற்கும் ரணிலுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வகிக்கும் தொகுதி அமைப்பாளர் பதவியை பறிக்க ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி மாத்தறை, பண்டாரகம உட்பட பல தொகுதிக்களுக்கான புதிய அமைப்பாளர் கள் நியமிக்கப்படவுள்ளனர்.

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த அமைப்பாளர்கள் பலர் முயன்று வருவதன் காரணமாகவே ரணில் அதிரடியாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். ரணிலின் இந்த முடிவால் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சம் அடைந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்க ரணில் மறுப்பு தெரிவிக்கலாம் என பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

இதேவேளை சஜித் உங்களுடன் பேச வருகிறார் என்ற பிரச்சார கூட்டம் இன்று மாத்தறையில் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தினை அமைச்சர் மங்கள சமரவீர ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவேந்திர சில்வாவுக்கு எதிராக நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன – அமெரிக்க தூதுவர் செவ்வி

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன.

நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் அது சவேந்திர சில்வா விடயத்தில் நடக்கவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியிருக்கிறார்.

கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேற்று வியாழக்கிழமை நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் தூதுவர் அலைனா, தற்சமயம் முறைப்பாடுகளே இருக்கின்றன. அவை பாரதூரமானவையா? நம்பகத்தன்மையானவையா? அல்லது இல்லையா என்பது வேறு விடயம். சவேந்திர சில்வா விடயத்தில் பெருமளவு ஆவணப்படுத்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஐக்கிய நாடுகளினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன.

முப்பது வருடகால யுத்தத்தின் போது அதில் சம்பந்தப்பட்ட தரப்பினராலும் கொடூரங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முழுமையாக அடிவரை விசாரித்தறிய வேண்டிய தேவையிருக்கிறது, அதுவே இப்போதிருக்கம் சவால்களில் ஒன்று. உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தை முழுமையாகக் கையாள்வதற்கு செயன்முறையொன்று தேவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெனரல் சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்காவினால் வெளிப்படுத்தப்பட்ட அக்கறை இலங்கையின் இறைமையை மீறுவதாக மக்கள் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அதுபற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று அமெரிக்கத் தூதுவரிடம் கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:

‘அமெரிக்காவின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் பகிர்ந்து கொள்வதே எனது கடமை. புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பில் அமெரிக்காவினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்து தொடர்பிலும் இதையே நாம் செய்தோம். இலங்கையின் நற்பெயர், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கும் கடப்பாடு ஆகியவை குறித்து நாம் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கின்றோம். அவரை நியமியுங்கள், இவரை நியமியுங்கள் என்று நாம் கூறவில்லை. இந்த விடயத்தில் எனது நிலைப்பாட்டை மாத்திரம் நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம்.

‘எதைச் செய்ய வேண்டுமென்று ஒரு நாட்டிற்குக் கூறுவதற்கும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் குறித்து எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இலங்கை அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் கூறுவதாக மக்கள் வியாக்கியானப்படுத்திக் கொள்வார்கள் என்று நீங்கள் கூறுவது சரியானதே. என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்குக் கூறவில்லை. தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை இங்குள்ள அரசாங்கமும், மக்களும் தான் தீர்மானிக்க முடியும். எமது அக்கறைகளையும், ஏனைய நாடுகளின் அக்கறைகளையும் இலங்கை அரசாங்கமும், மக்களும் கருத்தில் எடுப்பார்களெ நிச்சயமாக நம்புகின்றேன்’

கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம்

கேள்வி : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிட்டுவிட்டதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் இப்போது ஒரு அமெரிக்கப் பிரஜை இல்லையா?

பதில் : முதலில் நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் நாம் குறிப்பிட்ட சில அந்தரங்கச் சட்டங்களைக் கொண்டிருக்கிறோம். தனிப்பட்டவர்களின் விவகாரம் குறித்து நாம் கருத்துச்சொல்ல முடியாது. கோத்தபாய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் குறித்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்கு ஊடகங்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. குடியுரிமையைக் கைவிடுவதென்பது ஒரு நிர்வாகச் செயன்முறை ஆகும். சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இறுதியில் குடியுரிமையைக் கைவிடலாம்.

இறுதியாக வெளியிடப்பட்ட பதிவேட்டில் கோத்தபாயவின் பெயர் இருக்கவில்லை என்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதை நான் அறிவேன். குடியுரிமை இழப்புத் தொடர்பில் பெயரைப் பட்டியலிடும் விடயத்தில் சமஷ்டிப் பதிவேடு பல மாதங்கள் பிந்திய நிலைவரத்தைக் கொண்டதாக இருக்க முடியும். இந்த விடயத்தில் திட்டவட்டமான ஒரு செயன்முறை இருக்கிறது என்பது தெளிவானது.

அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்க விரும்புகின்ற ஒருவர் விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். அவற்றைப் பெறும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர் கிரிமினல் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கிறாரா, இல்லையா, வரிக்கொடுப்பனவுகளை முறையாகச் செலுத்தியிருக்கிறாரா, இல்லையா என்ற பரிசீலனைகளை மேற்கொள்வர். அதன் பின்னர் அந்த நபர் அமெரிக்கக் குடியுரிமையை இழப்பது தொடர்பில் சத்தியப்பிரமாணத்தைச் செய்துகொள்ள வேண்டும்.

சமஷ்டிப் பதிவேடு பல மாதங்கள் பிந்திய தகவல்களைத் தருவதாகவும் இருக்கலாம். அதனால் அடுத்த காலாண்டுக்கு அல்லது அதையும்விடப் பின்னரும் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

கேள்வி : அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : வழக்குகள் கிரிமினல் வழக்குகளா? சிவில் வழக்குகளா? என்பதைக் குறித்ததே இந்த விடயம். குடியுரிமையைத் துறப்பதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக கிரிமினல் முறைப்பாடுகள் இருக்கக்கூடாது. முன்னர் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக கலிபோர்னியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கிறேன். அவை சிவில் வழக்குகளே.

கேள்வி : கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை அமெரிக்கா ஆதரித்ததாக முறைப்பாடுகள் இருந்தன. இத்தடவை கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா ஆதரிப்பதாக ஒரு கதை உலவுகிறது. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : நாங்கள் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுவதில்லை. தீர்மானத்தை எடுப்பது இலங்கை மக்களைப் பொறுத்தது. நாங்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் செயன்முறையை நாங்கள் ஆதரிக்கின்றோம். கடந்த காலத்தில் நாம் அவ்வாறு ஆதரிக்கின்றோம். ஜனநாயக செயன்முறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய விரும்புகின்றோம். பலம் பொருந்தியதும், ஆற்றல் மிக்கதுமான தேர்தல் ஆணைக்குழுவொன்று உள்ளது. அதன்மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

கேள்வி : 2015 இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை நீங்கள் வரவேற்றீர்கள். இத்தடவை?

பதில் : அரசாங்க மாற்றத்தை வரவேற்பதற்கும், கொள்கைகள் மாற்றத்தை வரவேற்பதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.

கேள்வி : சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்ட போது அமெரிக்கா விசனம் வெளியிட்டது. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த போது மௌனம் சாதித்தது. இவ்விருவருக்கும் எதிராக மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் இருக்கின்றன. விசனத்தை வெளிப்படுத்துவதில் அமெரிக்கா ஏன் இவ்வாறு வித்தியாசமாக நடந்துகொள்கிறது?

பதில் : இராணுவத் தளபதி ஒரு அரசாங்க அதிகாரி. ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வர ஆசைப்படும் ஒருவர். ஒரு அரசியல் கட்சி வேட்பாளரை நியமிப்பதற்கும், உத்தியோகபூர்வ பதவியில் அரசாங்கம் ஒருவரை நியமிப்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.

கேள்வி : நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறீர்கள். அவரது பதவிக்காலத்தில் இருதரப்பு உறவுகள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. அவரைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : நான் ஒரு வருடத்திற்கு முன்னரே இலங்கைக்கு வந்தேன். சில தடவைகள் ராஜபக்ஷவை சந்தித்திருக்கிறேன். அரசியல் கட்சிகள், குழுக்களை பரவலாகச் சந்திப்பதன் ஓரங்கமே அதுவாகும். அரசியல் தலைவருடன் தொடர்பில் இருக்க வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கின்றேன். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களையும் நான் சந்தித்தேன். தங்களது தலைவர்களைப் பற்றி இலங்கை மக்கள் தீர்மானமொன்றை எடுக்கப் போகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அரசியல்வாதிகளுடன் ஒன்றாக அமர்ந்திருந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றால், இணக்கத்தை நாம் கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்கள் எமது கொள்ககைளை, எமது நோக்குகளை, உறவு முறைக்கான நம்பிக்கைகளை வழங்கிக் கொள்வது முக்கியமாகும். அதனால்தான் நாம் பல்தரப்பட்டவர்களுடனும் தொடர்பில் இருக்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சு மிகவும் சுமூகமானதாக அமைந்திருந்தது.

வேட்பாளராக தெரிவாகும் முன்பேபிரச்சாரத்தை ஆரம்பித்த ரணில் – பூமிகன்

இலங்கையின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க.வுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவா? சஜித் பிரேமதாசவா? என்ற பிரச்சினையில் கட்சி இரண்டாகிப்போயுள்ளது.

மிகப் பெரும் நெருக்கடிக்குள் கட்சி சிக்கித் தவிக்கும் நிலையில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வந்து மூன்று நாட்களாகத் தங்கியிருந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்ற ரணில், அரசியல் தீர்வு குறித்தும் முதல் தடவையாகப் பேசியிருக்கின்றார். கூட்டமைப்பின் பேச்சாளரும், ரணிலின் தீவிர விசுவாசியாகக் கருதப்படுபவருமான சுமந்திரன் இலகுவாகப் பந்தைப் போட்டுக்கொடுக்க ‘ஸிக்ஸர்’ அடிக்க முயன்றுள்ளார் ரணில்.

இன நெருக்கடி விடயத்தில் பிரதான இரண்டு கட்சிகளுமே தமது தீர்வு இதுதான் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்வதற்கு தயங்கும் நிலைதான் தொடர்கி ன்றது. தீர்வைத் தரக் கூடிய கட்சிகளாகவும், தீர்வைக் குழப்பக் கூடிய கட்சி களாகவும் இரண்டு பிரதான கட்சிகளுமே இருந்தாலும், தமது தீர்வு இதுதான் என்பதை வெளிப்படுத்தும் அரசியல் துணிச்சல் அந்தக் கட்சிகளிடம் இல்லை. இப்போதும், தன்னுடைய தீர்வுத் திட்டம் இதுதான் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், சுற்றிவளைத்து “பாராளுமன்ற வழிநடத்தல் குழுவில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களே எமது நிலைப்பாடு” என ரணில் கூறியிருக்கின்றார்.

வழிநடத்தல் குழுவில் இணக்கம் காணப்பட்ட விடயம் என்ன என்பதோ, அது தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக்கூடியவை என்பதோ விவாதத்துக்குரிய விடயங்கள்தான்.

யாழ்ப்பாணத்தில் வைத்து இதனை அறிவிக்கவேண்டிய தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எழுப்பிய கேள்வி ஒன்றினால்தான் ரணிலுக்கு ஏற்பட்டது. யாழ். குருநகரில் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், ரணிலின் முன்பாக உரையாற்றிய சுமந்திரன் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

“உங்களை ஒரு பிரதமராக அல்லாமல், சனாதிபதி வேட்பாளராக அல்லாமல், முக்கியமான கட்சித் தலைவர் என்ற முறையில் ஓர் கேள்வி கேட்க விரும்புகின்றோம். எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? அதைத் தெளிவுபடுத்துவீர்களா?” என்பதுதான் சுமந்திரன் எழுப்பிய கேள்வி.

சனாதிபதி வேட்பாளரை ஐ.தே.க. தெரிவு செய்ய முன்னரே ரணிலை சனாதிபதி வேட்பாளர் என சுமந்திரன் அறிவித்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசமைப்பு பேரவை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கொள்கைக், கோட்பாடே தமிழர்களின் எதிர்பார்ப்புத் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு. இந்த நாட்டில் தமிழினம் இலங்கை சனநாயகக் குடியரசு என்ற கட்டமைப்புக்குள் சமத்துவமாக, கௌரவமாக, சுயமரியாதை யுடன், தங்களின் விடயங்களைத் தாங்களேமுடிவெடுத்துக் கையாண்டு வாழவேண்டும் என்பதே எமது நம்பிக்கை” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

சுமந்திரன் எழுப்பிய கேள்விக்கு பிடி கொடுக்காமல், வழிநடத்தல் குழுவில் எட்டப்பட்ட இணக்கத்தையே தமது தீர்வாக பிரதமர் வெளிப்படுத்தி யிருக்கின்றார்.

அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் மூல அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான கொள்கைகள், கோட்பாடுகள் என்ற தலைப்பில் 16 அம்சத் திட்டம் வரையப்பட்டிருந்தது. பல்வேறு கட்சிகளுடனும் நடந்த கலந்துரையாடல்களின் பின்னர் அரசமைப்புப் பேரைவையாகக் கூடிய பாராளுமன்றத்துக்கு, வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த இடைக்கால அறிக்கையில், எல்லாத் தரப்புகளும் ஏற்று இணங்கிக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கான அம்சங்கள் என 14 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையே தமிழர்களின் அபிலாசைக ளுக்கான தமது கட்சியின் நிலைப்பாடு என ரணில் இப்போது கூறுகின்றார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவை இணக்கம் காணப்பட்ட விடயங்கள் என ரணில் கூறினாலும், ராஜபக்ச தரப்பு இதற்கு முழுமையான இணக்கத்தை வெளியிட்டிருக்கவில்லை. அத்துடன், தமிழ் மக்களுடைய அபிலாசைகளை முழு அளவில் பூர்த்தி செய்யக் கூடியவையாகவும் இவை இருக்கவில்லை. அதனால்தான் அதன் விபரங்களை வெளிப்படுத்திக் கூறாமல், வெறுமனே இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எனக் கூறி அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த ரணில் முற்பட்டிருக்கின்றார்.

2015 இல் பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசு தீர்வைத் தரும் என கூட்டமைப்பு நம்பியதற்குப் பிரதான காரணமாக இருந்தது – அது தேசிய அரசாங்கமாக இருந்ததுதான். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பிரதான போட்டிக் கட்சிகளும் இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது அதுதான் முதல்முறை. அதனால், தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என கூட்டமைப்பு நம்பியது.  புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு தமது யோசனைகளைப் பெரும்பாலான கட்சிகள் சமர்ப்பித்த போதிலும், ஐ.தே.க. யோசனைகள் எதனையும் முன்வைப்பதை தவிர்த்துக்கொண்டது. இரண்டு பக்கத்தையும் சமாளிப்பதற்கான உபாயம்தான் அது. இந்த நிலையில், வழிநடத்தல் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்களைத் தமது தீர்வாக வெளிப்படுத்த ரணில் இப்போது முனைகிறார்.

இதனை முன்னெடுப்பதில் தமக்கிருந்த தடை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தம்மிடம் இருக்காதததுதான் எனவும் ரணில் கூறுகின்றார். சுமார் நான்கு வருடகாலம் பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை ஆராயப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் ஆதரவையும் பெறக்கூடிய நிலையில் பிரதமர் இருந்திருக்கின்றார்.

அதனைவிட எதிரணியில் உள்ள சிலரும் இனநெருக்கடிக்கான தீர்வுக்கு உதவத் தயாராகவே இருந்தார்கள். குறிப்பாக ஜே.வி.பி.. அதனால், வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தி பாராளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்க முடியும். அதற்கான துணிச்சல் ரணிலுக்கு இருக்கவில்லை. ஆக, இந்தப் பிரச்சினை நீடிப்பதற்கு ரணிலும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றார்.

நான்கு வருடங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்டு, இப்போது யாழ்ப்பாணம் வந்து, இரண்டு வருடங்களில் தீர்வு எனவும், வழிநடத்தல் குழுவில் இணக்கம் கண்ட விடயங்கள்தான் எமது கட்சியின் தீர்வுத் திட்டம் என்ற வகையில்  சொல்வது தேர்தலை இலக்காகக் கொண்ட கருத்தாக மட்டுமே இருக்க முடியும்.

தமது தீர்வு இதுதான் என்பதையும், தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதையும் திட்டவட்டமாக கூறக்கூ டியவராக ரணில் இல்லை என்பதை அவரது குருநகர் பேச்சு வெளிப்படுத் துகின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வொன்றைத் தரக்கூடியவர் அவர்தான் என்பதை வெளிப்படுத்த எந்தளவுக்குத்தான் சுமந்திரன் முற்பட்டாலும், ரணிலின் அணுகுமுறை, “ஆற்றைக் கடக்கும் வரை மட்டும்தான் அண்ணனும் தம்பியும்” என்பதாகவே உள்ளது.