முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
சூழல் அழிவிற்கு முன்னணி தொழில்துறை நாடுகளே காரணம் – பிரான்சில் ஆர்ப்பாட்டம்
உலகின் முன்னணி தொழில்துறை நாடுகள் பின்பற்றும் பொருளாதார மற்றும் காலநிலைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்பெயினுடனான பிரெஞ்சு எல்லையில் உள்ள ஹென்டே நகரில் ஆர்ப்பாட்ட மொன்றை முன்னெடுத்தனர்.
இன்று உலகில் இடம்பெறும் சூழல் அழிவு நடவடிக்கைகளுக்கு ஜி 7 போன்ற உலகின் முன்னணி தொழில்துறை நாடுகளே கரணம்
என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.உலகமயமாக்கலின் விளைவாக இன்று உலகம் பாரிய அழிவுகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உலகத்தலைவர்கள் இதுதொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் கோரினர்.
அமேசான் காட்டுத் தீயை அணைக்க 44,000 இராணுவத்தினர்
அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளில் சுமார் 44,000 இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இந்த தீ பரவலுக்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக பிரேசில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
ரோரைமா, ரொண்டோனியா, டொகான்டின்ஸ் பரா, அக்ரே மற்றும் மட்டோ குரோஸ்ஸோ ஆகிய ஆறு மாநிலங்களுக்கு இந்தப் படையினர் அனுப்பப்படவுள்ளனர் எனவும் செய்தி தெரிவிக்கின்றது.
முதல் கட்டமாக ரொண்டோனியா, மாநிலத் தலைநகரில் விமானங்களின் மூலம் 12000 லீற்றர் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத் தளபதி பதவி மூலம் அமைதி காக்கும் பணியை இழந்த சிறிலங்கா இராணுவம்
இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் தனது சர்வதேச அமைதி காக்கும் பணிகளை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது லெபனான், மாலி மற்றும் தென்சூடானில் அமைதி காக்கும் பணிகளில் சுமார் 415 சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அதிக சம்பளத்திலேயே இந்தப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பல சக்தி வாய்ந்த நாடுகளும் ஜெனீவா மனித உரிமை ஆணையாளரும் ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும் இராணுவத் தளபதியை நியமிப்பது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்து அரசாங்கம் அவர்களின் எதிர்ப்பை நிராகரித்தது.
அரசாங்கத்தின் இந்த பதிலை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தனது அமைதி காக்கும் நிலையை பேண வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வடக்கு நோக்கி நகரும் சீனாவின் பிரசன்னம்: யாரைப் பாதிக்கும்?
‘எழுக தமிழ்’ என்பது எந்தவொரு கட்சியையும் முன்னிறுத்துவதற்கான செயற்பாடல்ல – சி.வி.விக்னேஸ்வரன்
‘எழுக தமிழ்’ நிகழ்வினூடாக ஓர் கட்சியின் எழுச்சி முன்னிறுத்தப்படவுள்ளது என பலர் எண்ணுவது முற்றிலும் பிழையான விடையம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணிக்கு சமூக அமைப்புக்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகளில், நேற்று சனிக்கிழமை மீனவ அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில்,
“எழுக தமிழ் என்பது எந்தவொரு கட்சியையும் சார்ந்தது அல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்ய வேண்டியதே எமது நோக்கமாகும்.
கட்சி பேதங்களை மறந்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக வருங்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.
அடுத்த மாதம் ஜெனீவாவில் தமிழ் மக்களின் விடயங்கள் பேசப்படப் போகின்றன. அதேநேரத்தில் இலங்கையில் அடுத்தடுத்து மூன்று தேர்தல்கள் வரவிருக்கின்றன.
இந்த நிலையில் எமது பிரச்சினைகளை உலகறிய தமிழ் மக்கள் ஒருமித்து நின்று கூறவேண்டிய தேவை உள்ளது.
நாம் தனிப்பட்ட கட்சி ரீதியான காரணங்களுக்காக இவ்வாறான தமிழ் மக்கள் பேரவையினுடைய எழுச்சி நிகழ்வை காட்டவிருப்பதாக சிலர் எண்ணுகின்றனர்.
ஆனால் அவ்வாறு நாம் செயற்படவில்லை என்பதுடன், தமிழ் மக்களின் வருங்கால சிந்தனையை உலகறியச் செய்வதே நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.
எனக்கு எதிராக குற்றம் சுமத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் – சிறி. இராணுவத்தளபதி
தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எதிர்வரும் நாட்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என புதிய இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இயற்கையின் சட்டமொன்று உள்ளது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற சவேந்திர சில்வா நேற்று ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று நல்லாசிகள் பெற்றார். அதன் பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்துரையாற்றிய இராணுவத்தளபதி ,குற்றச்சாட்டுக்களை எவரும் முன்வைக்கலாம்.
ஆளால் அது பற்றி எதிர்காலத்தில் வெளிநாட்டு அமைச்சு விசாரணைகளை முன்னெடுக்கும். நாட்டுக்காக முன் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை தான் நேர்மையாகவும்சரியாகவும் முன்னெடுத்தேன்.கடந்த காலங்களிலும் இது போன்ற குற்றச்சாட்டுக்களை பலர் முன்வைத்தார்கள். அவை அனைத்தையும் தாண்டி முன்நோக்கி வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர் காலத்திலும் தன் உயிரைப் பணயம் வைத்தேனும் நாட்டுக்காக உழைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்ட போதும் ஜனாதிபதி தனக்கு இப்பதவியை வழங்கியமை பாராட்டத்தக்கது என்றும் கூறினார். நவீன மற்றும் எதிர்கால இராணுவ சக்தியாக இலங்கை இராணுவம் முன்னேறி வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
G 7 என்றால் என்ன? சீனா இதில் ஏன் சேர்க்கப்படவில்லை
2018ஆம் ஆண்டின் G 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏங்கலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள் பிரான்ஸின் பியரிட்ஸ் நகரில் G 7 45ஆவது உச்சி மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கின்றது. G 7 என்றால் என்ன? அதில் எந்தெந்த நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்? அதில் என்ன நடக்கும்? என்பது பற்றி ஆராய்வதே இந்தக் கட்டுரையாகும்.
முன்னேறய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே G 7 அதாவது Group of Seven.
இதில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன.
முதன் முதலில் 1975இல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.
அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன் பின் G 8 மீண்டும் G 7 ஆனது.
ஆண்டு முழுவதும் அவ்வப்போது அவ்வப்போது, G 7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விடயங்களை விவாதிக்கக்கூடுவார்கள்.
ஆண்டு தோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டிற்கான மாநாட்டை நடத்தும்.
ஆற்றல் உற்பத்தி கொள்கை, பருவநிலை மாற்றும், எயிட்ஸ் மற்றும் உலக பாதுகாப்பு ஆகியவை அங்கே விவாதிக்கப்படும் சில விடயங்களாகும்.
மாநாட்டின் இறுதியில் என்னவெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்டதோ அவையெல்லாம் அறிக்கையாக வெளியிடப்படும்.
G 7 மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்களோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் கலந்து கொள்வார்கள்.
பொதுவாக மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
இந்தாண்டு பியரிட்ஸில் நடைபெறும் மாநாட்டில் சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதில் கவனம் செலுத்தப்படுகின்றது.
தற்போதைய காலத்திற்கு தொடர்பில்லாமல் இருக்கின்றது என்று G 7 குழு விமர்சிக்கப்பட்டாலும், இதனால் சில நன்மைகள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. எயிட்ஸ், டிபி.மலேரியாவிற்கு எதிராக போராட சர்வதேச நிதி திரட்ட இந்த G 7 குழு உதவியிருக்கின்றது. இதனால் 2002ஆம் ஆண்டில் இருந்து 27 மில்லயன் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
2016 பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்த இம்மாநாடு உந்துகோலாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
உலகின் அதிக மக்கள் தொகை மற்றும் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. எனினும் தனிநபர் சொத்து என்பது குறைவாக இருக்கின்றது. G 7 உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் அளவிற்கு சீனா இல்லை என்பதால் அந்நாடு இக்குழுவில் இடம்பெறவில்லை.
G 7 நாடுகளுக்குள் அதிகளவில் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. இறக்குமதிக்கான வரி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கடந்தாண்டு கனடாவில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க அதிபர் டி ரம்ப் முரண்பட்டார்.
சமகால சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரங்களை இந்த மாநாடு பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் எந்த நாடுகளும் இந்த G 7 இல் இடம்பெறவில்லை.
மேலும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள், G 7 இன் உறுப்பினராக இல்லை.
இலங்கை ‘எல்ல’ காட்டுப் பகுதியில் காட்டுத் தீ
இலங்கையின் பிரதான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி அமைந்துள்ளது. இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல வனப்பகுதி ஈர்க்கின்றது. இந்த காலநிலை எல்லோராலும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
எனினும், எல்ல பகுதியிலுள்ள வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எல்ல வனப் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக குறித்த பகுதியில் சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.
இந்த வனப் பகுதியிலுள்ள இயற்கை மூலிகைகள், பெறுமதிமிக்க மரங்கள், செடிகள், இலங்கைக்கே உரித்தான உயிரினங்கள் என்பன அழிந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மனித செயற்பாடுகள் காரணமாகவே இந்த தீ பரவியிருக்கக்கூடும் என சூழலியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயானது பெரும்பாலும் இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாக கருத முடியாது என காணி மற்றும் விவசாய அமைப்பின் சுற்றுச் சூழல் ஆலோசகரும், சூழலியலாளருமான சஞ்சீவ ஷாமீகர ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
ஈரவலய காடுகள் அடர்த்தி குறைந்ததாக காணப்படுவதால், காட்டுத்தீ ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார். 1998ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 8 வருடங்களில் மட்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இவ்வாறான காட்டுத்தீ சம்பவங்கள் பெரும்பாலும் மனித செயற்பாடு காரணமாகவே ஏற்படுகின்றன.
சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பிற்காகவும் காட்டு யானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காகவும் காடுகளுக்குத் தீ வைக்கப்படுகின்றன.
ஜுலை – செப்டெம்பர் மாதங்களில் அதிகளவில் காட்டுத்தீ உருவாகின்றது. இந்தக் காலப்பகுதியில் ஏற்படும் மழை வீழ்ச்சியுடன் புதிய புற்கள் வளர்வதுடன், அது கால்நடைகளுக்கு சிறந்த உணவாகவும் அமைகின்றது. காடுகளிலுள்ள மூலிகை மற்றும் இயற்கை வளப் பொருட்களை பெறுவதற்காகவும், மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும் காடுகளுக்குத் தீ வைக்கப்படுகின்றது.
விநோத செயற்பாடுகளுக்காகவும் காடுகளுக்குத் தீ வைக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன. குறிப்பாக சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் காட்டு யானைகளின் பிரவேசத்தை கட்டுப்படுத்துவதற்காக அதிகளவிலான சந்தர்ப்பங்களில் காடுகளுக்குத் தீ வைக்கப்பட்டு வருகின்றது.
எல்ல பகுதியை எடுத்துக் கொண்டால், அதிகளவில் விநோத செயற்பாடுகளுக்காகவே காடுகளுக்குத் தீ வைக்கப்படுகின்றன. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். குறிப்பாக இலங்கையிலுள்ள இயற்கை காடுகளில் காட்டுத் தீ ஏற்படாது. இலங்கையில் பைனஸ் மரங்கள், எகேசியா மரங்கள், தேயிலை செடிகள் மற்றும் புற்தரைகள போன்றவற்றிற்கே இலங்கையில் அதிகளவில் தீ வைக்கப்படுகின்றது.
எல்ல பகுதி என்பது ஊவா மாகாணத்திலுள்ள மரங்கள் மற்றும் புற்தரைகளை கொண்ட ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளதாலேயே இந்த தீங்கு ஏற்பட்டுள்ளது. இது சுற்றுலாத்துறையை மட்டுமல்ல பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எல்ல பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையின் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை
விடுவிக்கப்ட வேண்டிய பொதுமக்களின் காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை – வேதநாயகன்
ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நான்காயிரம் ஏக்கர் காணிகளை விட இன்னும் விடுவிக்கப்ட வேண்டிய பொது மக்களின் காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை பருத்தித்துறை தறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வும், சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டங்களும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நேற்று மாலை வரையில் சுமார் ஐந்து இலட்சம் பேர் நன்மை அடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி விசேட செயலணியுடன் இணைந்து முன்னெடுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் கடந்த இரு தினங்களிலும் ஆயிரத்து 293 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்கள் 15 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் எதிர்வரும் 30ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நான்காயிரத்து 400 நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் 23ம் திகதி முதல் நாளாந்தம் யாழ்.மாவட்டத்தில் மக்கள் விழிப்பூட்டப்பட்டு வருவதுடன் நடை முறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுற்றாடல், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சிறுவர், மகளிர், முதியோர், விசேட தேவையுடையோர் பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டங்களும், தொழில் முயற்சிகள், வேலைவாய்ப்பு, நிதி மற்றும் வங்கி நடவடிக்கைகளும், வட மாகாணத்திற்கு ஏற்றவாறு மேற்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கின்றது. கிராம சக்தி, ஸ்மாட் ஸ்ரீலங்கா, சுத்தமான குடிநீர், சிறுநீரக நோய் நிவாரணம் என்பன உட்பட விவசாய, மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்திகளுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் பாரிய பங்களிப்புக்களை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பலாலி விமான நிலையத்திலிருந்து இந்திய அலையன்ஸ் எயார் நிறுவனம் தனது சேவையை ஆரம்பிக்கின்றது
ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவிற்கான விமான சேவைகளை நடத்துவதற்கு இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் பலாலி விமான நிலையத்திற்கான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. அதில் அலையன்ஸ் எயார் நிறுவனமும் ஒன்றாகும் என்று சிறிலங்கா சிவில் விமான சேவை அதிகார சபையின், விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு பணிப்பாளர் ரேஹான் வன்னியப்பா தெரிவித்துள்ளார்.
எயார் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயார் நிறுவனம், இந்தியாவில் 54 நகரங்களை இணைக்கும் வகையில் உள்நாட்டு விமான சேவைகளை நடத்தி வருகின்றது.
இந்த நிறுவனத்திடம், பலாலி விமான நிலையத்திற்கு இயக்கக்கூடிய, 70-72 ஆசனங்களைக் கொண்ட IATR 72 – 600 ரகத்தைச் சேர்ந்த 18 விமானங்களும் 48 ஆசனங்களைக் கொண்ட ஒரு ATR 42-320 விமானமும் உள்ளது.
2000ஆம் ஆண்டு இந்தியாவில் பா.ஜ.க அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்கள் கொழும்பிற்குப் பயணங்களை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் உதவியிருந்தது.
போயிங் B 737 மற்றும் எயார் பஸ் A320 விமானங்களை இயக்கக்கூடிய வகையில், இலங்கையின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க தற்போது பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பலாலி விமான நிலையத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு முகவர் அமைப்புக்களான குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறுகிய கால அவகாசத்தில் பலாலியில் குடிவரவு மற்றும் சுங்க பணிகளை ஆரம்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி.ரத்நாயக்க தெரிவித்தார்.