Home Blog Page 26

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை முறையாக பயன்படுத்துமாறு சஜித் வலியுறுத்தல்

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை பயன்படுத்தி, மனித உரிமை மீறல்கள் அல்லது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

உதய கம்மன்பில தலைமை வகிக்கும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்களுடன், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (04) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவே சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. எனினும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக தனிநபரின் மனித உரிமைகளை மீறுவதற்கு இந்த உடன்படிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை பயன்படுத்தி மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் எதிர்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச நீதி கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடையாளம் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும், இனப்படுகொலைக்கும், சர்வதேச நீதி கோரிய கையொழுத்து போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த கையொழுத்துப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவேண்டுமென தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த கையொழுத்து போராட்டம் கடந்த மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.  இந்தநிலையில், கிழக்கில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் போராட்டம், தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகர் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நாளை (05) திருகோணமலை மாவட்டத்தில், சிவன்கோவிலுக்கு அருகில் ஆரம்பித்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2027இற்குள் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

காணாமல் போனோர் அலுவலகத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்வதற்கான விசேட கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காத ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்கும் பணி இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரை குறித்த அலுவலகத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக 10,517 முறைப்பாடுகள் நிலுவையில் உள்ளன. அதற்கமைய, இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காக ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட 75 தகுதியான நபர்களைக் கொண்ட 25 உப குழுக்களை நியமிப்பதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: இந்திய மத்திய அரசு

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 2015 ஜன.9ம்  திகதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதி – அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது பற்றி பரிசிலீக்கப்படுகின்றது.

இணக்கம் எட்டப்பட்டால் அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும்.
தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.” – என்றார்.

மன்னாரில் 33 ஆவது வது நாளாக தொடரும் போராட்டம்…

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (04) 33 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை (4) 33 ஆவது நாளாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு கிராம மக்கள்,வர்த்தகர்கள்,பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையிலே 33 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு புனித செபஸ்தியார் பேராலய  பங்கு சபை, மற்றும்  பங்கு மக்கள் பங்கேற்கேற்று தமது ஆதரவை வழங்கினர்.

இதன் போது  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ,அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்று மீண்டும் மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.

மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

இலங்கையில்  பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால் தப்பித்து விட்டோம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். அவ்வாறு மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகளின் பின்னணியில் அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சக்தி இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலை எமது அரசாங்கத்தில் ஒருபோதும் ஏற்படாது. உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள். அதற்கு தைரியமாக செயற்படுங்கள்  என்று, காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

”போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும்” என்றார்.

159 ஆவது தேசிய  காவல்துறை  தினத்தை முன்னிட்டு  கொழும்பு  காவல்துறை மைதானத்தில்   புதன்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி நீதி கோரிய கையொழுத்து போராட்டம் கிழக்கில் இன்று ஆரம்பம்!

கிழக்கில் செம்மணி உட்பட  இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனபடு கொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையொழுத்து போராட்டம் வியாழக்கிழமை (04) மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது இதில் மக்கள் ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளது.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் புதன்கிழமை (3) மாலை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் களான செல்வம் அடைக்கலநாதன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன்  மு.சந்திர குமார், கோ.கருணாகரம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு அழைப்பினை விடுத்தனர்.

இந்த கையொழுத்து போராட்டம் கடந்த மாதம் 29 ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது இதற்கமைய கிழக்கில் வியாழக்கிழமை (04) மட்டக்களப்பில் காந்திபூங்காவில் ஆரம்பித்து வைக்கப்படும் அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகர் ஆர்.கே.எம் வித்தியாலயத்துக்கு அருகில் ஆரம்பித்து வைக்கப்படும்

ஆதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை 05ம் திகதி திருகொணமலை மாவட்டத்தில் சிவன்கோவிலுக்கு அருகில் ஈரம்பித்துவைக்கப்படும் இந்த கையொழுத்து போராட்டம் கிழக்கிலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் தொடர்ந்து இடம்பெறும்.

இந்த கையொழுத்துக்கள் மூலம் தமிழ் மக்கள் மீது ஒரு இனபடுகொலை இடம்பெற்றுள்ளதுடன் அவர்களின் மொழியை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக யுத்தத்தின் மூலலம் தமிழ் தேசிய இனம் இருக்க கூடாது என பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளது எனவே இதற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

எனவே கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவே இதனை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுபோக வேண்டும் என்ற கடமைப்பாடு எல்லோருக்கும் இருக்கின்றது எனவே ஜ.நாவுக்கு அனுப்பும் இந்த கையொழுத்து போராட்த்தில் கலந்து ஆதரவு வழங்கவேண்டும் என தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக அழைப்பு விடுக்கின்றோம் என்றனர்.

இலங்கையில் ஆண்டுக்கு 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பு

இலங்கையில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்  என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த  நிலைமையைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடக சந்திப்பில் பங்கேற்ற வைத்தியர் சுராஜ் பெரேரா இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“2022 ஆம் ஆண்டில், அடையாளம் காணப்பட்ட புற்றுநோய் நோயாளிகளில், 904 பேர் சிறுவர்கள் ஆவர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது சிறுவர் பருவ புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படவில்லை என்பது தெளிவாகக் காட்டுகிறது.  இந்த எண்ணிக்கை பொதுவாக 600 முதல் 800 வரம்பிற்குள் இருந்தது. தற்போது, ஆண்டுதோறும் சுமார் 900 சிறுவர் பருவ புற்றுநோயாளர்கள் பதிவாகின்றன.

தலைமை பதிவாளர் திணைக்களத்தின் கூற்றுகளின் படி, 2019 ஆம் ஆண்டில் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான தரவுகளும் சேகரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் குணமடையும் திறன் இருந்தபோதிலும் தாமதமாக கண்டறியப்பட்ட நோயாளிகளும் உள்ளனர். இந்த உயிரிழப்புகளை மேலும் குறைக்கலாம். அதேபோல், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை நாடினால் சிக்கல்களையும் குறைக்கலாம்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அவசியம்: இலங்கையிடம் ஜப்பான் தூதுவர் தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மிகவும் முக்கியமானது எனவும் ஊழலை ஒழிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் தெளிவான தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கைகளை உருவாக்குவது ஆகியவை முதலீடுகளை ஈர்ப்பதற்கு அவசியமானவை என்றும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாட்டா தெரிவித்தார்.

ஜப்பான் அரசின் 65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் ஹபரணை – வேயாங்கொட மின் பரிமாற்றத் திட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 3) ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜப்பானி தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாட்டா, எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் வசந்த எதிரிசூரிய, மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமைப் பிரதிநிதி கென்ஜி குரோனுமா ஆகியோர் ஹபரணை – வேயாங்கொட மின் பரிமாற்றத் திட்டத்தின்  ஆரம்ப நிகழ்வில் விழாவில் கலந்துகொண்டார்.

இந்தத் திட்டம், ஹபரணை மற்றும் வேயாங்கொட இடையே குறைந்த வலு மின் பரிமாற்ற வழிகள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதன் மூலம் இலங்கையின் மின் விநியோகத் திறனை வலுப்படுத்துவது, மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவது, மற்றும் மின் பரிமாற்ற இழப்பைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 11 ஜப்பானிய கடன் திட்டங்கள் கடந்த ஜூலை மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், முடிக்கப்பட்டு இலங்கைக்கு கையளிக்கப்படும் முதல் திட்டம் இது என்பதால் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்நத நிகழ்வில், உரையாற்றிய ஜப்பானிய தூதுவர் இசொமாட்டா, கடந்த பத்தாண்டுகளாக இலங்கை மின்சாரத் துறைக்கு ஜப்பான் வழங்கிய உதவிகளை நினைவுகூர்ந்தார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களான குறைந்த மின்வலு இழப்பு, அதிக திறன் மற்றும் நீண்ட தூர மின் பரிமாற்றம் குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் மின் பரிமாற்ற இழப்பைக் குறைப்பதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்க உதவும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6-இன் கீழ் இருதரப்பு ஒத்துழைப்பான கூட்டு வரவு பொறிமுறை (JCM) மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில் ஜப்பான் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றும், இலங்கையில் நிறைவடைந்த அல்லது நடைபெற்று வரும் மூன்று சூரிய சக்தி மின்திட்டங்கள் இதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மிகவும் முக்கியமானது என வலியுறுத்திய தூதுவர், ஊழலை ஒழிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் தெளிவான தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கைகளை உருவாக்குவது ஆகியவை முதலீடுகளை ஈர்ப்பதற்கு அவசியமானவை என்றும் தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி இங்கு உரையாற்றுகையில், இந்தத் திட்டம் இலங்கையின் மின் விநியோக அமைப்பின் ஒரு முக்கியமான பகுதி என்றும், இது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் அதிக திறனை உறுதி செய்யும். கடந்த காலத்தில் ஏற்பட்ட மின்தடைகளை இது தடுக்க உதவும். மேலும், ஜப்பானிய மக்களின் நீண்டகால நட்பு மற்றும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். எதிர்காலத் திட்டங்களில் மேலும் பல ஜப்பானிய முதலீடுகளை இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.