Home Blog Page 25

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் நினைவேந்தல்!

1 22 செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் நினைவேந்தல்!

1996 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்காவின் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைத்து வருகிறது.

krishanthi செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் நினைவேந்தல்!

நிகழ்ச்சி நிரல்:

காலை 9.00 – நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம்

காலை 9.30 – நினைவுப் பகிர்வு

காலை 10.00 – “வாசலிலே கிருசாந்தி” கவிதைத் தொகுப்பு வெளியீடு

காலை 10.30 – ஆவண காட்சிப்படுத்தல்

மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றார்கள்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவிலும் விடுதலை நீர் சேகரிப்பு

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வேலைத்திட்டத்தில் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டது. மேலும் இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது. அதனடிப்படையில் காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றுள்ளது.

செம்மணியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நாளையுடன் நிறைவு

மனித பேரவலத்தின் சாட்சியங்களாக, சர்வதேசத்தின் பார்வையை ஈர்த்துள்ள யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நாளையுடன் (06) நிறைவடையவுள்ளன.

மனித புதைகுழி அகழ்விற்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 45 நாட்கள் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையுவுள்ள நிலையில், இன்றும் (05) மனித என்புகூடுகளைத் தேடி அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், சித்துப்பாத்தி வளாகத்தில் ஜி.பி.ஆர் ஸ்கேனர் ஊடாக அடையாப்படுத்தப்பட்ட பகுதிகளில், அகழ்வுகளை மேற்கொள்வதற்கு மேலும் 08 வாரங்கள் கால அவகாசம் தேவை என முன்னதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், குறித்த அகழ்வை மேற்கொள்வதற்கான பாதீட்டை சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பாதீடு ஓரிரு தினங்களில் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்படும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்று (05) மேலும் 5 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதன்படி இதுவரை மொத்தமாத 240 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேநேரம், செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் (04) பின்னிப்பிணைந்த நிலையில் 8 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (05) முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னாரில் காற்றாலை, கனிம மணல் அகழ்வுக்கு எதிராக தொடரும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனியமணல் அகழ்வு என்பவற்றிற்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை (05)  34ஆவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் குறித்த தொடர்போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

குறித்த 34 ஆவதுநாள் போராட்டத்தினை தோட்டவெளி, ஜோசெப்வாஸ் கிராமமக்கள் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் மீதான விசாரணைகளை நிறைவு செய்ய 25 உப குழுக்கள்..!

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது.

காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைய, இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட 75 தகுதியான நபர்களைக் கொண்ட 25 உப குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா

இலங்கையில்  வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலான விசேட செயற்திட்டமொன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதுமான முறையில் தீர்வுகாணும் நோக்கில் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (ஐ.ஓ.எம்.) அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் விசேட செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

அத்தோடு இச்செயற்திட்டத்தின்கீழ் அரச கட்டமைப்புக்கள், பாதுகாப்புத்தரப்பினர், சிவில் சமூக அமைப்புக்கள், படையினர் வசமுள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் உள்வாங்கப்படுவர் எனவும் தெரியவருகிறது.

மேலும் இச்செயற்திட்டத்தின் ஊடாக வட, கிழக்கில் காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல்,  படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், எல்லைகளை உரியவாறு மீள்நிர்ணயிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ல – வெல்லவாய வீதியில் பேருந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பஸ் 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் எதிரே வந்த ஜீப்புடன் மோதியதுடன், வீதி பாதுகாப்பு வேலியையும் இடித்துச் சென்றுள்ளது.

விபத்தில் சிக்கிய பஸ் தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர்.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், பஸ் விபத்து நடந்த இடத்தில் இருந்த மோசமான நிலைமைகள் காரணமாக, அந்தக் குழுவை மீட்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!

பல அரசியல்வாதிகளுக்கு எதிராக 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கையூட்டல்கள் தொடர்பில் மொத்தம் 3,937 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் 341 முறைப்பாடுகள் மீளவும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் செல்லுபடியான முறைப்பாடுகளில் 2,682 முறைப்பாடுகள், விசாரணைக் குழுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

288 முறைப்பாடுகள் முறையான விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மொத்தம் 1,011 முறைப்பாடுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.  489 முறைப்பாடுகள் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் 275 முறைப்பாடுகள் விசாரணைக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  ஆணைக்குழுவின் கூற்றுப்படி இன்னும் 1,154 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட உள்ளன.

செம்மணியில் பின்னிப்பிணைந்த நிலையில் என்புக்கூடுகள் அடையாளம்!

சர்வதேச சமூகத்தை நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், நாளுக்கு நாள் மனித புதைகுழி விவகாரங்களும் தீவிரமடைகின்றன.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து தொடர்ந்தும் என்புகள் வெளிப்பட்ட வண்ணமே உள்ளன.

இதன்படி, செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 43ஆவது நாள் அகழ்வு பணி இன்று (04) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, 04 என்புக்கூடுகள் வெளிப்பட்டன. இன்றைய தினம் சுமார் 8 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், இதுவரை மொத்தமாக 235 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில், 224 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி காவல் நிலையத்தில் முறைபாடு

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்குமாறு ஊர்காவற்றுறை  காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலர் இருவேறு முறைப்பாடுகளை இன்று (04) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.
35 வருடங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இராணுவத்தால் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும், இதன்போது 80இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2025 09 04 at 18.15.06 2824977f மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி காவல் நிலையத்தில் முறைபாடு

கொல்லப்பட்டவர்களில் 45க்கும் அதிகமான சடலங்கள் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன.  அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் சடலங்கள் இருக்கின்றன. குறித்த கிணற்றை அகழ்ந்து சடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பாக கடந்த மாதம் 20ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.