Home Blog Page 2439

சபாநாயகர் கரு ஜயசூரியாவை சீனத் தூதுவர் சந்தித்தார்

சபாநாயகர் கரு ஜயசூரியாவை சிறீலங்காவிற்கான சீனத் தூதுவர் செங்சு யூவான் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நிலைமைகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம், அதிகாரிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து சீனத் தூதுவர், சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.

சீனா முகங்கொடுத்திருக்கும் சவாலைச் சமாளிக்க இந்நேரத்தில் நாடாளுமன்றம் சீனாவுடன் உறுதுணையாக நிற்கும் என்ற உறுதிமொழியை சபாநாயகர் சீனத் தூதுவருக்கு வழங்கினார்.

இதேவேளை, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினார், 563 பேர் உயிரிழந்தும், 28,256பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் எதிரொலி: சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை நிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து இலங்கைக்கு சுற்றுலாக் குழுக்களை அனுப்புவதை சீனா நிறுத்தியுள்ளது. சீனத் தூதரகத்தின் அதிகாரிகள் இலங்கை குடிவரவு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது இதனை உறுதிப்படுத்தினர்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டுக்குச் சுற்றுலாக் குழுக்களை அனுப்புவதை தாம் நிறுத்தியுள்ளனர் என்று சீன அதிகாரிகள் தங்களுக்குத்தெரிவித்தனர் எனக் குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீனச் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பாகுபாடு காட்டப்படுவதற்குக் காரணம் பயங்கரவாத வைரஸ்தான். சில ஹோட்டல்களும் வணிக நிறுவனங்களும் தங்கள் நாட்டினரைத் திருப்பி விடுகின்றன என்று சீன அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இதுபோன்ற அச்சங்கள் தேவையற்றவை என்று அவர்கள் குடிவரவு அதிகாரிகளுக்கு உறுதியளித்திருந்தனர்.

கூட்டணி பொதுச் செயலாளர் நியமனத்தில் சர்ச்சை? திங்களன்று ஐ.தே.க. கூடுகின்றது

ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமைவரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் நேற்று செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என mறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அது பிற்போடப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கான பொதுச் செயலாளரை நியமிப்பது, புதிய கூட்டணியின் சின்னம், பெயர் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி எம்.பியொருவர் தெரிவித்தார்.

புதிய அரசியல் கூட்டணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் அண்மையில் தீர்மானம் எடுத்திருந்தனர்.

இதன்பிரகாரம் ரஞ்சித் மத்தும பண்டாரவை பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பெயரிட்டார். இந்த முடிவுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக்குழு நேற்றுமுன்தினம் அனுமதி வழங்கியது.

பொதுச்செயலாளரைப் பெயரிடுவதற்கான அதிகாரம் சஜித்துக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவரின் முடிவுக்கு கட்சியின் மத்திய குழுவின் அனுமதி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் இவ்விவகாரம் பற்றி மேலும் ஆராயும் நோக்கில் ரணில் தரப்பால் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிய அரசியல் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவிக்கு நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படவேண்டும் என்பதே ரணில் தரப்பின் கோரிக்கையாக இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விக்கி தலைமையில் உருவாகின்றது புதிய கூட்டணி: ஞாயிறன்று ஒப்பந்தம் கைச்சாத்து

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர் கைச்சாத்திடவுள்ளனர்.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர். எல்.எவ், சிறிகாந்தா – சிவாஜி தரப்பின் தமிழ்த் தேசியக்கட்சி, அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன முதலில் கூட்டமைப்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது என்றும் பின்னர் பொதுஅமைப்புகளை இணைத்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி தொடர்பான புதிய யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியை பதிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு, விக்னேஸ்வரன் அணியை உள்ளடக்குவதற்காக தனது கட்சிக்கு “தமி ழர் ஐக்கிய முன்னணி’ என்ற பெயரை பரிந்துரைந்துள்ளபோதும், அதைத் தேர்தல்கள் திணைக்களம் நிராகரித்திருந்தது. இந்த நிலையில், புதிய பெயரை பரிந்துரைக்கும்படி தேர்தல்கள் திணைக்களம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்ற பெயரை அக்கட்சி பரிந்துரைத்துள்ளது. அதை ஏற்பதற்குக் கொள்கையளவில் தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது சுயகட்சியான “தமிழ் மக்கள் கூட்டணி’யைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் தரப்பு ஈடுபட்டுள்ளது. இதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்தித்துப் பல ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது.

இந்தியாவுக்கு இன்று பயணமாகின்றார் மஹிந்த: முக்கிய தலைவர்களுடன் பேசுவார்

சிறீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இந்தியா செல்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனப் பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் பிரதமர் செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை: கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அழுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அளவுக்கதிகமாகப் பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, பகிடிவதைக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்திலும் இருந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன என அறியவருகிறது.

அண்மையில், கிளிநொச்சியில் பகிடிவதை காரணமாக பல்கலைக் கழக மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்ட போதே இந்த விடயம் அறியக் கிடைத்தது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடிவதை இடம்பெறுகின்றமை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பலர் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதையடுத்து, இது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்கலைக் கழகநிர்வாகம் பகிடிவதைக்கு எதிராகக் கடும் நிலைப்பாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையைப் பெற்றோர் மத்தியில் ஊட்டும் வகையிலும் யாழ். பல்கலைக் கழகத் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமியின் அறிவுறுத்தல்களுக்கமைய விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் பற்றி பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், சிரேஷ்ட மாணவ ஆலோசகர்கள், நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக பகிடிவதை: வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசாரணை

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார்.

இது குறித்த நிலைமைகளை ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அடுத்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வரவுள்ள அதிகாரிகள் குழுவினருடன், வடக்கு மாகாண ஆளுநரும் இணைந்து கொள்ளவுள்ளார்.

சிறீலங்கா காவல்துறை அதிகாரி மரணம் தொடர்பில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது தொடர்பில் முஸ்லிம் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை வவுணதீவு மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள பகுதியில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் த.சிவராஜா (55வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வவுணதீவு மூன்றாம் கட்டையில் உள்ள தனது காணியை பார்வையிடச்சென்றவரே இவ்வாறு அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

IMG 20200206 WA0003 சிறீலங்கா காவல்துறை அதிகாரி மரணம் தொடர்பில் ஒருவர் கைதுஇது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இது தொடர்பில் ஆயித்தியமலையை சேர்ந்த முகமட் றஸ்மி என்பவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முஸ்லிம் இளைஞர்கள் ஆயித்தியமலையில் தமிழ் பெண் ஒருவரை மணமுடித்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தமிழக முதல்வருடன் சீமான் சந்திப்பு;கோரிக்கைகள் கையளிப்பு

தாய்த் தமிழகத்தை நம்பி தஞ்சம் புகுந்திருக்கும் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுத்தர மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம்களை மூடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களின் நல்வாழ்வினையும், வாழ்வாதாரத் தினையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி செய்திக் குறிப்பில் முழுவிபரமும் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.,

இன்று 06-02-2020 வியாழக்கிழமை பிற்பகல் 01:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்கண்ட கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளார்.

இச்சந்திப்பின் போது,  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலைக்கோட்டுதயம், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இராஜேந்திரன், இராவணன், அன்புத்தென்னரசன், மருத்துவர் சிவக்குமார், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறைக்கெதிரான தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, மாணவர்களின் நலனுக்காக அரசின் முடிவை மீளாய்வு செய்து, அத்தேர்வுமுறையை ரத்து செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்ப்பேரரசன் அருண்மொழிச்சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழர்களின் கலைநுட்பத்தை உலகுக்குப் பறைசாற்றி வரும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்திட நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அதற்கு உயர்நீதிமன்றத்தின் வழியாக ஒப்புதல் அளித்து, தமிழிலும் குடமுழுக்குச் செய்ய வழிவகைச் செய்து, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லாமல் விழாவினை வெகுசிறப்பாக நடத்தி முடித்தமைக்காக தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் தலை நிலமான குறிஞ்சி நிலத்தின் தலைவனும், தமிழர் இறைவனுமான தமிழ்ப்பெரும் மூதாதை முப்பாட்டன் முருகனைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை (பிப்ரவரி 08, தை 20) அரசுப் பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என உலகமெங்கும் பரவி வாழுகின்ற ஒட்டுமொத்தத் தமிழர்களும் முன்வைத்திருக்கிற கோரிக்கையை ஏற்று அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறோம்.

முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டப்போராட்டம் நடத்தி உறுதியாக நின்றிட்ட எழுவர் விடுதலைக்குத் தமிழகச் சட்டமன்றத்தில் 161வது சட்டப்பிரிவின்படி, ஒருமித்த தீர்மானம் இயற்றி, பின்னர் அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநருக்கு அனுப்பி ஓராண்டைக் கடந்தும் அதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. எனவே தமிழக அரசு, தமிழக ஆளுநருக்கு உரிய அழுத்தம் தந்து உடனடியாக எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்தி, உலகத்தமிழர்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக கோருகிறோம்.

இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் ஹைட்ரோ-கார்பன் எடுத்தல், மீத்தேன் எடுத்தல், ஒ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய்களைப் பதித்தல் போன்ற நாசகாரத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்து, அக்கொடியத் திட்டங்களைக் கைவிட வேண்டும் எனவும், அப்போராட்டக்களத்தில் பங்காற்றிய மண்ணுரிமைப் போராளிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ‘சோழ நாடு சோறுடைத்து’ என்ற மிகையில்லாப் புகழுரைக்கு இலக்கணமாய்த் திகழும், உலகின் மிக நீண்ட சமவெளி பகுதியைக் கொண்ட, தமிழகத்தின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகத்தின்

நெற்களஞ்சியமாம்’ காவிரிப்படுகையினைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.உலகிலேயே மூத்த மொழியான தமிழ்மொழிக்கு, தமிழகக் கோயில்களில் முழங்க இருந்துவரும் தடையை நீக்கி, தமிழகக் கோயில்களின் வழிபாட்டு மொழியாகத் தமிழையே முதன்மைத்துவம் பெறச் செய்ய வேண்டும் எனவும், ‘இந்துசமய அறநிலையத்துறை‘ என்பதனை ‘தமிழ்ச் சமய அறநிலையத்துறை’’ எனப் பெயர் மாற்றி அறிவிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கோருகிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேராக விளங்கும் மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினை அடியோடு தகர்த்து, இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவினையும், அதன் நீட்சியாக உள்ள தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் தமிழக அரசு நிராகரிக்கக் கொள்கை முடிவெடுத்து, தமிழகச் சட்டமன்றத்தில் அதற்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தாய்த் தமிழகத்தை நம்பி தஞ்சம் புகுந்திருக்கும் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுத்தர மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம்களை மூடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களின் நல்வாழ்வினையும், வாழ்வாதாரத்தினையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் சீமான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

சாதனையாளர் கௌரவிப்பு விழா

வவுனியா வடக்கு வலயப்பாடசாலைகளை சேர்ந்த அதிபர் ஆசிரியர்களிற்கான கௌரவிப்பு விழா நிகழ்வு நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் இன்று இடம்பெற்றது.

வலயகல்வி பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அஞ்சலிதேவி சாந்தசீலன் கலந்துகொண்டார்.

இதன்போது கடந்த 2018/2019 ஆம் ஆண்டுகளில் வடக்கு வலயத்திற்குட்பட்ட பல பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆரம்பகல்வி மாணவர்களின் கல்விசெயற்பாட்டில் சாதனைகளை நிலைநாட்டிய அதிபர் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கவைக்கபட்டது.02 சாதனையாளர் கௌரவிப்பு விழா

3 சாதனையாளர் கௌரவிப்பு விழா

4 சாதனையாளர் கௌரவிப்பு விழா

5 சாதனையாளர் கௌரவிப்பு விழா

6 சாதனையாளர் கௌரவிப்பு விழா

7 சாதனையாளர் கௌரவிப்பு விழா

8 சாதனையாளர் கௌரவிப்பு விழா

a சாதனையாளர் கௌரவிப்பு விழா

நிகழ்வில் ஆரம்பகல்வி பிரதிகல்வி பணிப்பாளர்அ.சற்குணராசா, இலங்கை திருச்சபை பாடசாலை அதிபர் இ.நவரட்ணம், நெடுங்கேணி மகாவித்தியாலய அதிபர் செ.பவேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.