விக்கி தலைமையில் உருவாகின்றது புதிய கூட்டணி: ஞாயிறன்று ஒப்பந்தம் கைச்சாத்து

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர் கைச்சாத்திடவுள்ளனர்.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர். எல்.எவ், சிறிகாந்தா – சிவாஜி தரப்பின் தமிழ்த் தேசியக்கட்சி, அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன முதலில் கூட்டமைப்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது என்றும் பின்னர் பொதுஅமைப்புகளை இணைத்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி தொடர்பான புதிய யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியை பதிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு, விக்னேஸ்வரன் அணியை உள்ளடக்குவதற்காக தனது கட்சிக்கு “தமி ழர் ஐக்கிய முன்னணி’ என்ற பெயரை பரிந்துரைந்துள்ளபோதும், அதைத் தேர்தல்கள் திணைக்களம் நிராகரித்திருந்தது. இந்த நிலையில், புதிய பெயரை பரிந்துரைக்கும்படி தேர்தல்கள் திணைக்களம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்ற பெயரை அக்கட்சி பரிந்துரைத்துள்ளது. அதை ஏற்பதற்குக் கொள்கையளவில் தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது சுயகட்சியான “தமிழ் மக்கள் கூட்டணி’யைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் தரப்பு ஈடுபட்டுள்ளது. இதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்தித்துப் பல ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது.