Home Blog Page 2425

சவேந்திர சில்வா மீதான தடைக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்: கிரியெல்ல

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயணத் தடைக்கான பொறுப்பை இலங்கை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியயல்ல தெரிவித்தார்.

மேலும், அரசின் இயலாமையின் வெளிப்பாடாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவத்தினர் இந்த நாட்டுக்காகச் செய்த சேவையை வார்த்தைகளால் கூறமுடியாது. அவர்கள் தங்களின் உயிர்களையும் தியாகம் செய்து செய்த இந்த மகத்தான சேவைக் காரணத்தினால்தான், நாம் இன்று சுதந்திரமாக இருக்கிறோம். இதற்காக நாம் காலம் முழுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

நல்லாட்சி அரசு கடந்த நான்கரை வருடங்களாக ஆட்சியில் இருந்தது. இந்தக் காலத்தில், சவேந்திர சில்வா உள்ளிட்ட எவருக்கும் பயணத்தடைகள் வரவில்லை. இந்த நிலையில், இந்த அரசின் பலவீனம் காரணமாகவே சவேந்திர சில்வாவுக்கு இந்தப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு என்ற ரீதியில் இலங்கை அரசுதான் சர்வதேசத்திற்கு இதுதொடர்பில் விளக்கமளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்து இந்தப் பிரச்சினை ஏற்படாமல் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கானப் பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

மற்றொரு சீன நாட்டவருக்கும் கொரோனா வைரஸ்?

மாத்தறையில் அம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை அமைப்புப் பணியில் ஈடுபடும் சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சீன நாட்டவர் சூரியவெவ நவதகஸ் வெவ பகுதியில் சேவை செய்யும் போது திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தச் சீன நாட்டவரின் நிலைமை தொடர்பில் கண்கானிப்பதற்காக அவரைக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

நீராவியடி ஆலய வழக்கு; ஞானசாரதேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறிப் பெளத்த பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர், முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஏ.ச்.எம், நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபயசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதிகள் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நீதியரசர்கஉத்தரவிட்டுள்ளனர்.

சவேந்திர சில்வா மீதான தடைக்கு “இதுதான்” காரணம்: உதய கம்மன்பில சொல்கின்றார்

போரை நிறைவுக்குக் கொண்டு வந்து அமெரிக்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியமை தான் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா செய்த தவறாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு யஹல உருமய தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தருஸ்மன் அறிக்கையிலும் எந்த வொரு சாட்சியும் இல்லாத நிலையிலேயே, இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத் தடையை விதித்துள்ளது. ஆனால், அமெரிக்காவுக்குச் செல்வதற்கான எந்தவொரு எண்ணமும் தனக்கு இருந்ததில்லை என இராணுவத் தளபதி அதற்குத் தக்க பதிலடியை வழங்கியுள்ளார்.

எனினும், இலங்கை இராணுவத்தளபதி எந்த நீதிமன்றினால், யுத்தக் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என நான் சம்பந்தப்பட்ட தரப்பிடம் கேட்க விரும்புகிறேன். சவேந்திர சில்வாவுக்கு மட்டும் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அவர் மட்டுமே செய்த யுத்தக் குற்றச்சாட்டு என்ன என்றும் அமெரிக்கா எமக்கு பதிலளித்தே ஆகவேண்டும்.

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர அமெரிக்காவினாலேயே முடியாமல் போனது. இப்படியான பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்தொழித்து, அமெரிக்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியமைதான் சவேந்திர சில்வா செய்த பாரிய குற்றமாகுமாகும். இதுமட்டும்தான் அமெரிக்கா அவர் மீது கோபம் கொள்ள ஒரே ஒரு காரணமாக இருக்கிறது” என்றார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் இணையாமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தான் இணைவதை இந்தியா விரும்பவில்லை என்பதாலேயே தான் அக்கட்சியில் இணையவில்லை  என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தான் இணைவதை இந்தியா விரும்பவில்லை என்றும், இந்த விடயம் தொடர்பாக தனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் என்னும் ஒட்டுக்குழு உறுப்பினராகவே விக்னேஸ்வரன் செயற்பட்டார்.

மக்கள் நலன் கருதி அவர் செயற்படவில்லை என்றும், தங்கள் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாக்குகளை உடைக்கும் விதமாகவும், மக்களைக் குழப்பும் விதமாகவுமே அவர் செயற்பட்டு வருகின்றார் என்றும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட அரச அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் பதவியேற்றார்

யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று பதவியேற்று, கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் யாழ். அரச அதிபராக நியமிக்கப்பட முன்னர் மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராகப் பதவி வகித்துள்ளார்.

மேலும் உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும், கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை யாழ். மாவட்ட அரச அதிபராக பதவி வகித்த நாகலிங்கம் வேதநாயகன், பதவி விலகியதை அடுத்தே கணபதிப்பிள்ளை மகேசன் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

நாகலிங்கம் வேதநாயகன் பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 மாதங்கள் இருக்கையில், அவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் முக்கிய கூட்டம் பரிணமித்துள்ளது: சவேந்திரவின் தடை குறித்து விக்கி

தொடர்ந்து வந்த மூன்று இலங்கை அரசாங்கங்கள் பத்து வருடங்களுக்கு மேலாக குறித்த குற்றங்களை விசாரிப்பதைத் தட்டிக் கழித்து வந்ததில் இப்பொழுதாவது சட்டத்தின் அதிகாரம் கட்டாயமாக நிலைநிறுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் ஒரு முக்கிய கூட்டம் தற்பொது பரிணமித்துள்ளது” என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த போதே விக்கினேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

பதில் – இலங்கைத் தமிழர் சார்பாக நான் என் கருத்தைத் தெரிவிக்கின்றேன். சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள். அமெரிக்க அரசின் செயலாளர் மைக்; பொம்பியோவின் தீர்மானமாக போதிய நம்பத்தகு சாட்சியங்களின் அடிப்படையில் கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஆணையிடும் பொறுப்பின் அடிப்படையில் சில்வா ஈடுபட்டிருந்தார் என்று கண்டு சில்வாவை மதிப்புக்குரியவரற்ற ஒருவராக அடையாளம் கண்டுள்ளதை நாம் மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம்.

2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சில்வா சட்டத்திற்குப் புறம்பான சாகடித்தல்களை நடத்துமாறு ஆணையிட்டார் என்பதற்கு ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை சனல் 4 ஆவணப்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி மூலம் தரப்பட்ட அதன் அறிக்கையில், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அனுப்பிய ஆணையை சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது படையணி அலுவலர்களுக்கு மறு ஒலிபரப்பு செய்த போது பின்வரும் சில்வாவின் கட்டளையும் உள்ளடக்கப்பட்டுள்ளது- “செய்யக் கூடியதைச் செய்க! எவ்வாறாறெனினும் செய்க!….. (ஆனால்) முடிக்க வேண்டிய முறையில் அதை முடிவுக்குக் கொண்டு வரவும்!” சில்வாவின் இந்தக் கட்டளையானது தமிழ் மக்களின் பாரிய எண்ணிக்கையிலான படுகொலைகளுக்கு இடமளித்தது. அது அப்பாவி பொது மக்களையும் சரணடைந்த போராளிகளையும் (கெட்ட பெயரெடுத்த வெள்ளைக்கொடி நிகழ்வு) உள்ளடக்கியது.

சில்வாக்கெதிரான அமெரிக்காவின் பயணத்தடை மற்றைய நாடுகளும் பின்பற்றக் கூடிய ஒரு காரியமாக அமைகின்றது. இலங்கையில் படையணியினரால் ஆற்றப்பட்ட போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக சர்வதேச நாடுகள் வழக்குத் தொடர வேண்டிய அத்தியாவசிய கடப்பாட்டினை இந்தக் காரியம் கோடிட்டுக் காட்டுகிறது.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் தொடர் தீர்மானங்கள் பலவற்றை ஸ்ரீ லங்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்த மறுத்துவந்துள்ளது. அந்தத் தீர்மானங்கள் கலப்பு முறையான நீதிமன்றங்களை உருவாக்கி போர்க்குற்றவாளிகளை விசாரித்து தீர்ப்பு வழங்க வலியுறுத்தி வந்துள்ளன. சில்வாவை ஒரு துணிச்சலான வீரன் என்று பூச்சடிக்கப் பார்ப்போர், அப்பாவிப் பொது மக்களுக்கு வேண்டுமென்றே பொய்யாகப் பயங்கரவாதிகள் பட்டம் சூட்டிக் கொன்று தீர்த்தமை துணிச்சல் என்ற வார்த்தைக்குள்ளும் வீரத்தினுள்ளும் எவ்விதத்திலேனும் அடங்காதென்பதை உணர வேண்டும்.

துல்லியமான குற்றரீதியான பொறுப்புகளை சுமப்பவர்கள் என்று தெளிவாகக் காணப்படும் படையணியினர் யாவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது அவ்வாறு விசாரிக்க வல்ல நியாயாதிக்கத்தினைக் கொண்ட மன்றமொன்றினால் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்.

ஐ.நா. பட்டயத்தின் அத்தியாயத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் உலகளாவிய நியாயாதிக்கக் கோட்பாட்டின் கீழ் மற்றும் றோம் நியதிச்சட்ட வரைவில் கையெழுத்திடாத நாடுகளின் குடிமக்கள் சம்பந்தமாக குறித்த நியதிச்சட்ட ஏற்பாடுகளை அவர்கள் மீது நடைமுறைப்படுத்த கையாள வேண்டிய நடைபடிமுறை போன்றவற்றின் கீழ் சர்வதேச சமூகம் வழக்குத் தொடர இருக்கும் அதிகாரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து வந்த மூன்று இலங்கை அரசாங்கங்கள் பத்து வருடங்களுக்கு மேலாக குறித்த குற்றங்களை விசாரிப்பதைத் தட்டிக் கழித்து வந்ததில் இப்பொழுதாவது சட்டத்தின் அதிகாரம் கட்டாயமாக நிலைநிறுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் ஒரு முக்கிய கூட்டம் தற்பொது பரிணமித்துள்ளது. “கள களதே பள பளவே” என்பது ஒரு சிங்களப் பழமொழி. முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும்” என்பது அதன் அர்த்தம்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்க முடியாது: சம்பந்தன்

“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கமுடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.

அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேராவை இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போதே சம்பந்தன் இதனை வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உ ருவாக்கம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். ஆனால் தற்போதைய அரசாங்கம் வேறுவிதமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் பெருன்பான்மை மக்கள் அதிகாரபரவலாக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும் அத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் எனவும் உண்மைக்கு புறம்பாக அறிக்கைகள் வெளியிடுவதனையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். அவை அனைத்தும் பதியப்பட்டவையாக உள்ளன எனவே இத்தகைய நிலையில் சர்வதேச சமூகம் வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த வாக்குறுதிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை எனவும் தற்போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது என்பதனையும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கமுடியாது என்பதனையும் இரா சம்பந்தன் வலியுறுத்தினார்கள்.

உலகின் பலவேறு பகுதிகளில் உள்ளவாறு ஒரு அதிகாரபரவலாக்கத்தின் மூலமான அரசியல் தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கிறவம் என் வலியுறுத்திய இரா சம்பந்தன், இலங்கை எனது நாடு இங்கே சம உரிமையுள்ள பிரஜையாக நான் மதிக்கப்படவேண்டும். அண்மையில் இலங்கை பிரதமருடனான ஊடக சந்திப்பில் இந்திய பிரமர் இலங்கை மக்கள் நீதியுடனும் சமத்துவத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருந்தார் என்பதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நியாயமுள்ள அரசியல் தீர்வொன்றினை அடைய முடியாதே போனால் அது பாரிய பின்விளைவுகளை கொண்டுவரும் என தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள், தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்கள தலைவர்கள் மதிக்காதன் விளைவே விடுதலைப்புலிகளின் உருவாக்கத்திற்கு காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருது தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், 2012ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியம் மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் அமுலாக்கத்தின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார். நிலையான அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றினை நிலைநாட்ட வேண்டுமெனில் பிரேரணையில் உள்ள விடயங்கள் அமுலாக்கப்படவேண்டும் எனவும் திரு சுமந்திரன் அவர்கள் வலியுறுத்தினார். இதற்கப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படுவதன் அவசியத்தினை விளக்கிய சுமந்திரன், தம் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நஷ்ட ஈட்டிற்கும் எம்மக்கள் அணுமதிக்கப்போவதில்லை என தெரிவித்த சுமந்திரன், அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் இருந்திருப்பின் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்ற உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

உண்மையை கண்டறிந்து நஷ்ட ஈடு வழங்குவதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலம் மற்றும் நஷ்ட ஈட்டு அலுவலகம் என்பன சேர்ந்து இயங்க வேண்டும் என தாம் எதிர்பார்த்ததாகவும் அது தற்போது நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் எம்மால் இயலுமான அனைத்தையும் நாம் செய்து விட்டோம் இனிமேல் இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவனத்தை சர்வதசேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என இரா சம்பந்தன் தெரிவித்தார்.

பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் முகமாக புதிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு தேவை என்பதனை சுட்டி காட்டினார். மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஒரு விசேட வேலைத்திட்டம் தேவை என்பதனையும் சுட்டிக்காட்டிய எம். ஏ சுமந்திரன் அவர்கள் மீன்பிடித்துறை , விவசாயம், பண்ணனை வளர்ப்பு போன்ற துறைகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவைசியத்தினையும் சுட்டிக்காட்டிய அவர் அவ்வாறு செய்யப்படுகின்ற பொழுது உச்ச பயன்பாட்டினை அடைய முடியும் என்பதனையும் எடுத்துக்கூறினார்.

சர்வதேச சமூகத்தின் குரல் இலங்கை விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேட்ட வேண்டும் எனவும் தமிழ் மக்களிற்கான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் பணியில் சர்வதேசத்தின் பங்களிப்பு அத்தியாவசியமானது எனவும் இரா சம்பந்தன் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த குழுத்தலைவர் இலங்கை அரசாங்கமானது தனக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என தெரிவித்தார்.

சாய்ந்தமருதும்,நுவரெலியாவும் இந்த நொடியில் என் மனதில்-மனோ கணேசன் 

இன்று சாய்ந்தமருது நகரசபை என்ற உள்ளூராட்சி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மருதூர் மக்கள் இந்த நிகழ்வை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு, இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இம்மக்களது சந்தோஷத்தை கண்டு நானும் சந்தோஷமடைகிறேன்.

இந்த நேரத்தில் ஒன்று சொல்ல வேண்டும். எமது ஆட்சியின் போது, நுவரெலிய மாவட்டத்தின், நுவரேலிய-மஸ்கெலிய தொகுதியின், அம்பகமுவ, நுவரேலிய பிரதேச சபைகளை, பிரித்து ஒவ்வொன்றிலும் தலா, மும்மூன்று பிரதேச சபைகள் என்ற உள்ளூராட்சி மன்றங்களை அமைத்து, மொத்தம் ஆறு புதிய பிரதேச சபைகளை நாம் உருவாக்கி தந்தோம்.

இன்றுள்ள, நோர்வூட், மஸ்கெலிய, அம்பகமுவை, கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரேலிய பிரதேச சபைகள் இவ்விதமாக நாம் அமைத்தவைதாம்.

ஏற்கனவே இருந்த அம்பகமுவ, நுவரேலிய பிரதேச சபைகளின், ஒவ்வொரு பிரதேசத்திலும், சுமார் 125 ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு சுமார் 100 கிலோ மீற்றர் பயணம் செய்ய வேண்டி இருந்தது.

உண்மையில் இலங்கையில் மிக, மிக பெரிதாக இருந்து, வேறு எந்த ஒரு சபையையும் விட கட்டாயமாக முன்னுரிமை கொடுத்து பிரித்து வெவ்வேறு சபைகளாக அமைக்கப்பட வேண்டிய சபைகளாக, அம்பகமுவ, நுவரேலிய பிரதேச சபைகள்தான் இருந்தன.

ஆனால், 1987ம் ஆண்டு முதல், சுமார் 30 ஆண்டுகளாக செயற்பட்ட இந்த சபைகளை பிரித்து புதிய சபைகளை அமைக்க எவராலும் முடியவில்லை. எவருக்கும் செய்து முடிக்கும் அக்கறை இருக்கவில்லை. ஆளுமை இருக்கவில்லை. முப்பது வருடத்தில் மாறி மாறி வந்த ஒவ்வொரு ஆட்சியிலும் பங்காளிகளாக இருந்த கட்சியினருக்கு இதுபற்றிய உத்வேகம் இருக்கவில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் இதை எப்படி செய்து முடித்தோம்?

இதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தங்க தட்டில் வைத்து எமக்கு தரவில்லை. இது தொடர்பில் பலமுறை அமைச்சரவையில் பேசி, குரல் எழுப்பி, பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வந்து, இதை பேசுபொருள் ஆக்கிய பின் கடைசியாக ஜனாதிபதி மைத்திரியின் வீட்டில், புதிய உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் அமைச்சர்களின் கூட்டம் நிகழ்ந்தது. இதற்கு நான் ஒரு ஐந்து நிமிடம் தாமதமாகவே போனேன்.

அதற்குள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த “புதிய நுவரேலியா மாவட்ட பிரதேச சபைகளை தரமுடியாது” என்ற நிலைப்பாட்டை பேசி முடித்து வைத்திருந்தார். அவரது பிரச்சினை அவருக்கு…..சாய்ந்தமருது நகரசபையை பெற்று தருவேன் என, அந்த ஊருக்கு சென்று வாக்குறுதி அளித்த காரணத்தால், நுவரேலியா மாவட்ட பிரதேச சபைகளை இப்போது தந்தால், அந்த சாய்ந்தமருது பிரச்சினை மேலெழும். எனவே அதை காரணம் காட்டி இதை தராமல் இருக்க அவர் தந்திரமாக முயன்றார்.

நான் கூட்டத்துக்கு தாமதமாக சென்று அமர்ந்த போது, எனக்கு முன் அங்கு சென்று இருந்த அமைச்சர் திகாம்பரம், பிரதமர் ரணிலின் இந்த நிலைப்பாட்டை என்னிடம் வந்து இரகசியமாக சொன்னார். “சரி, அப்படியா, பார்ப்போம்” என நான் சற்று அமைதியாக இருந்து விட்டு, சாந்தமாக சிங்களத்தில் பேச ஆரம்பித்தேன்.

“ஜனாதிபதி அவர்களே, இலங்கையில், எந்த ஒரு புது பிரதேச சபை அமைக்க முன், நுவரேலியா மாவட்டத்தில், இந்த புதிய பிரதேச சபைகளை அமைத்தே ஆக வேண்டும். இந்நாட்டின் வேறு மாவட்டங்களில், பதினையாயிரம் பேருக்கு கூட ஒரு பிரதேச சபை இருக்கும் போது, நுவரேலியாவில் ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை என இரண்டு பிரதேச சபைகள் இருப்பது பெரும் அநீதி. எப்போதோ இது நடந்து இருக்க வேண்டும். நடக்க வில்லை. இத்தனை நாள் இந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் தூங்கி கொண்டு இருந்தார்கள். நாம் அப்படி இருக்க முடியாது. இதை உடன் முடித்து தாருங்கள்” என்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால பதில் அளிக்கும் முன், மேஜையின் மறுபுறம் எனக்கு முன் அமர்ந்து இருந்த பிரதமர் ரணில் இடை மறித்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

அவர் என் முகத்தை பார்க்காமல் பேசினாலும் என்னை விளித்துதான் பேசுகிறார் என எனக்கு தெரியும். ஏனெனில், என்னிடம் பிரதமர் ரணில் எப்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார்.

“கிழக்கு மாகாணத்தில், கல்முனையில், சாய்ந்தமருதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. நான் அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளேன். இப்போது இதை தந்தால், அங்கே பிரச்சினை வரும். ஆகவே எல்லாவற்றையும் எதிர்காலத்தில் ஒன்றாக செய்வோம்” என்றார்.

எனக்கு இப்போது கோபம் வந்தது. ஆங்கிலத்திலும், அதை மொழி மாற்றி சிங்களத்திலும் சத்தமாக “கத்த” ஆரம்பித்தேன்.

“சாய்ந்தமருது மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தால், அதை உடன் நிறைவேற்றுங்கள். ஏன் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? அதன் காரணம் உங்களுக்கு இரண்டு மனது. சாய்ந்தமருது நகரசபை “வேண்டும்” என்பவர்களையும், “வேண்டாம்” என்பவர்களையும் நீங்கள் திருப்திபடுத்த பார்க்கிறீர்கள்” என்றேன்.

அப்போது அங்கு இருந்த எனது நண்பர் அப்போதைய நமது அரசிலும், இப்போதைய அரசிலும் அமைச்சராக இருக்கின்ற சுசில் பிரேமஜயந்த, இடைமறித்து, “அமைச்சர் மனோவின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு ஒன்று என இரண்டு பிரதேச சபைகள் நுவரெலியாவில் இருப்பது எனக்கு மனோ சொல்லும்வரை தெரியாது. அது அநீதி. அதை நிச்சயம் செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.

அவரையும் இடைமறித்து பிரதமர் ரணில் ஏதோ சொல்ல முயல, அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை.

“ஜனாதிபதி அவர்களே, பிரதமர் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற சொல்லுங்கள். ஆனால், அதை காட்டி இதற்கு தடை போடுவதை ஏற்க முடியாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. உண்மையில் அதைவிட, இதுதான் மிக அவசர பிரச்சினை. ஏனெனில் இங்கே ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு என இருக்கும் இரண்டு பிரதேச சபைகளை பற்றிதான் நான் பேசுகிறேன். இவற்றை உடன் பிரித்து நியாயத்தை வழங்குங்கள்” என்றேன்.

மீண்டும் பிரதமர் ரணில் ஏதோ சொல்ல முயல, எனக்கு, இத்தகைய சந்தர்ப்பங்களில் வரும், அந்த கடும் கோபம் வந்தது.

“அப்படியானால், உங்களுக்கு முடிந்ததை நீங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் முடிந்ததை நான் வெளியில் போய் செய்கிறேன்” என்று சத்தமாக சிங்களத்தில் கத்தி விட்டு, நான் அமர்ந்து இருந்த நாற்காலியை காலால் எட்டி உதைத்து விட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறினேன்.

ஜனாதிபதி ஏதோ சொல்லி என்னை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், நான் அதை கவனத்தில் எடுக்கும் மனநிலையில் இருக்கவில்லை.

வாசல் கதவுக்கு சென்று திரும்பி பார்த்து, என்னுடன் வெளியேற ஆரம்பித்த அமைச்சர் திகாம்பரத்தை, என்னுடன் வெளியே வர வேண்டாம். அங்கேயே இருந்து பேசுங்கள் என சைகை காட்டி விட்டு வந்து விட்டேன்.

நான் சண்டையிட்டு வெளியேறிய பின் அந்த பிரச்சினையின் அடிப்படை அந்த அறையில் மாறி விட்டது. அதுதான் எனக்கு வேண்டும். பின் நமது கூட்டணியின் பிரதி தலைவர் அமைச்சர் திகாம்பரம், நான் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்து பேசியுள்ளார்.

அதையடுத்து எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, நோர்வூட், மஸ்கெலிய, அம்பகமுவை, கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரேலிய என்ற புதிய ஆறு பிரதேச சபைகளை அமைக்கும் அறிவிப்பை அரசாங்கம் சில வாரங்களில் வெளியிட்டது.

இதில் சோகம் என்னவென்றால், இன்று ஒரேயொரு உள்ளூராட்சி மன்றம் அமைக்கப்பட்டதை ஆரவாரமாக அனுபவித்து, சாய்ந்த மருதூர் முஸ்லிம் சகோதர மக்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், ஆறு புதிய உள்ளூராட்சி மன்றங்களை அமைத்து கொடுத்தும்கூட அதை இந்தளவு ஆரவாரமாக அனுபவித்து நுவரேலியா மாவட்ட மலையக தமிழ் மக்கள் கொண்டாடவில்லை.

வடக்கு கிழக்கில், தமிழ் மக்களுக்கு எப்படி மாகாண சபைகள் அதிகார பகிர்வை குறைந்த பட்சமாக கொண்டு வருகின்றனவோ, அதேபோல் மலையக தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வை பிரதேச சபைகளே கொண்டு வருகின்றன. இந்த அரசியல் வெற்றி, பாமர மலையக மக்களுக்கு இன்னமும் புரியவில்லை.

ஒருசில புத்தி ஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புரிந்தாலும், அரசியல் காழ்ப்பு காரணமாக அதை கொண்டாட அவர்களுக்கு மனசில்லை.

ஆனால், என்றாவது ஒருநாள் -அன்று நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்- இதை வரலாறு கொண்டாடும்! பதிவு செய்யும்!! இன்றைய குழந்தைகள் வளர்ந்து அறிவுடன் ஆளாகும் போது இதை அறிந்து கொண்டாடுவார்கள்

இலக்கு-இதழ்-65-பெப்ரவரி16-2020

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு-இதழ்-65-பெப்ரவரி16-2020