சவேந்திர சில்வா மீதான தடைக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்: கிரியெல்ல

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயணத் தடைக்கான பொறுப்பை இலங்கை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியயல்ல தெரிவித்தார்.

மேலும், அரசின் இயலாமையின் வெளிப்பாடாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவத்தினர் இந்த நாட்டுக்காகச் செய்த சேவையை வார்த்தைகளால் கூறமுடியாது. அவர்கள் தங்களின் உயிர்களையும் தியாகம் செய்து செய்த இந்த மகத்தான சேவைக் காரணத்தினால்தான், நாம் இன்று சுதந்திரமாக இருக்கிறோம். இதற்காக நாம் காலம் முழுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

நல்லாட்சி அரசு கடந்த நான்கரை வருடங்களாக ஆட்சியில் இருந்தது. இந்தக் காலத்தில், சவேந்திர சில்வா உள்ளிட்ட எவருக்கும் பயணத்தடைகள் வரவில்லை. இந்த நிலையில், இந்த அரசின் பலவீனம் காரணமாகவே சவேந்திர சில்வாவுக்கு இந்தப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு என்ற ரீதியில் இலங்கை அரசுதான் சர்வதேசத்திற்கு இதுதொடர்பில் விளக்கமளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்து இந்தப் பிரச்சினை ஏற்படாமல் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கானப் பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.