Home Blog Page 2405

இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் மீண்டும் ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து செயற்படும் களத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் பௌத்த பேரினவாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் இருந்து வெளியேறியுள்ளது.இதைவிட இலங்கையின் சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவம் நேரடியாக களம் இறக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரத்தை கோட்டபாய அரசாங்கம் இராணுவத்திற்கு சட்ட ரீதியாக வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் போக்குவரத்து பொலீஸார் முதல் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் வரை அனைத்து நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.Media genocide இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் செயற்பட்ட ஆயுதக் குழுக்கள், அதாவது இன்று வரை இராணுவ ஒட்டுக் குழுக்களாக செயற்பட்டு வந்து, இலங்கை அரசிடம் சம்பளம் பெற்று வந்த குழுக்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன. அவர்களது முதலாவது இலக்கு ஊடகவியலாளர்களே.
அதுவும் தமிழர்களின் உரிமைப் போராட்டம், அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள், மண்பறிப்பு, அதிகார துஸ்ப்பிரயோகம், ஊழல் நடவடிக்கைகள், ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்த மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் இன்று அரச மற்றும் ஆயுதக் குழுக்களினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் .

அத்துடன் இவ்வூடகவியலாளர்கள், ஊடக சுதந்திரம் மற்றும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், காணாமல் போன ஊடகவியலாளர்களுக்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்துவது தொடர்பிலும் அவர்கள் அச்சுறுத்தல்களை எதிர் நோக்க வேண்டியவர்களாக உள்ளனர். கடந்த காலங்களில் மறைமுகமாக செயற்பட்டு வந்த இந்த குழுக்கள் தற்போது நேரடியாக களத்தில் இறங்கி செயற்பட ஆரம்பித்துள்ளன.

சில ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக பொலீஸ் விசாரணை மற்றும் புலனாய்வுத் துறையின் விசாரணைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு எதிராக பயங்கரவாத பிரிவு மற்றும் சில புலனாய்வு அதிகாரிகள் ஊடாக பல பொய்யான தகவல்களை உள்ளடக்கிய கோவைகள் பல தடவைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிலர் கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.625.500.560.350.160.300.053.800.900.160.90 இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

அதுமட்டுமின்றி அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் பின்தொடரப்பட்டதுடன், ஊடகவியலாளர்களின் விபரங்களை சில புலனாய்வு அதிகாரிகள் மறைமுகமாகவும் சில அரச அதிகாரிகள் ஊடாகவும் திரட்டி வருகின்றனர் .

அத்துடன் சில ஊடகவியலாளர்கள் புலிகளுடன் தொடர்பை வைத்துள்ளார்கள் என்று கூறி அவர்களது வங்கி கணக்கு உட்பட வாழ்வாதாரம் வரை அலசி ஆராய்ந்து கொழும்பிற்கு தகவல்களை அனுப்பி இருந்தனர்.இதன் தொடர்ச்சியாகவே அண்மையில் மட்டு ஊடக அமையத்திற்குள் சில ஊடகவியலாளர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்தன.

ஆனால் இது குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளாத பாதுகாப்பு தரப்பு இதனை எடுத்த எடுப்பிலேயே வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று சிலரூடாக பொய்ப் பரப்புரைகளை பரப்பி வந்துடன், அச்சுறுத்தல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவே இல்லை.
சம்பவத்தை நீர்த்துப்போகச் செய்தல் அல்லது திசை திருப்ப செய்தல் இதை தற்போது இலங்கையில் ஒரு உத்தியாகவே சில குழுக்களை வைத்து அரசாங்கம் கையாண்டு வருகின்றது.

பயங்கரவாத விசாரணைக்கு சென்று வந்தால் கூட அதனை வெளிநாடு போவதற்கு பயங்கரவாத விசாரணைக்கு சென்று வந்துள்ளார்கள் என்று கூறும் அளவுக்கு நிலமை மோசமாக உள்ளது. அதனை நம்பும் ஒரு கூட்டமும் உண்டு.இதைவிட இது போன்ற சம்பவங்களினால் இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படும் என்பதற்காகவும் அவ்வாறு ஏற்படாது இருப்பதற்காக இது போன்ற சம்பவங்களை மூடி மறைத்து பூசி மெழுகும் தரப்புக்களும் உண்டு.thumb large poli6987 copy இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

இதனால் உண்மையாக பாதிக்கப்படும், உயிர் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை முடக்க வேண்டிய தேவை சில குழுக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தக் குழுக்களில் ஊழல் செய்த உயர் அரச அதிகாரிகள் முதல் காணி மோசடி செய்பவர்கள், முன்னாள் ஆயுத குழுக்கள், சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இயங்கும் சில அரச புலனாய்வாளர்கள், சில வெளிநாட்டு உளவு முகவர்கள் என பலரும் உள்ளனர்.

இவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி முடக்கி அவர்களை ஊடக செயற்பாடுகளில் இருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.DSCN0182 இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

அதற்காக பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றனர். கடந்த காலங்களில் மறைமுகமாக செயற்பட்டு வந்த இந்த நபர்கள் தற்போது நேரடியாக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

சில ஊடகவியலாளர்கள் மீது பல விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் ஊடாக அச்சுறுத்தியும் அதனால் குறித்த ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை முடக்க முடியவில்லை என்பதற்காக தற்போது மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வீசி குடும்ப அங்கத்தவர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி குடும்ப உறுப்பினர்கள் ஊடாக குறித்த ஊடகவியலாளர்களை முடக்கும் வகையில் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்ற வாரம் கூட ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரை விசாரணை செய்ய வேண்டும் என்று தேடியுள்ளனர். இவ்வாறு புலனாய்வுத்துறை அதிகாரிகளை பல தடவைகள் ஏவிவிட்டும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்றனர்.

ஏற்கனவே ஊடகவியலாளர் நடேசன், ஊடகப் பணியாளர்கள் கண்ணமுத்து அரசகுமார் மற்றும் கிருஷ்ணபிள்ளை யோகாகுமார் இங்கு படுகொலை செய்யப்பட்டனர். அதேவகையில் எதிர்வரும் காலத்தில் இந்த கொலைக் குழுக்களால் இங்கு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

28 ஆயிரம் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை அனுப்பும் நடவடிக்கை இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது.

அதற்கமைய இதுவரையில், 70 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பட்டுள்ளதுடன், இதில் 42 ஆயிரம் விண்ணப்பபடிவங்கள் தகுதி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, தகுதியற்றவர்களின் விண்ணப்பபடிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

நியமனம் வழங்கப்பட்டு மூன்று தினங்களுக்குள் பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு தகவல் வழங்க வேண்டும் என்பதுடன், 7 நாட்களில் பயிற்சியில் முன்னிலையாகவில்லை எனின் நியமனம் இரத்து செய்யப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசனத்துக்காகவோ, சுயலாபங்களுக்காகவோ கட்சியைவிட்டு வெளியேறவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

எங்களுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது சுயலாபங்களுக்காகவோ நாங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுமந்திரன் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. ஒரு விடயத்தை நான் மிகவும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலபேர் போட்டியிட்டிருந்தார்கள். அதில் சில பேர் வெற்றி பெற்றிருந்தார்கள். வட மாகாணசபைத் தேர்தலில் நான்கு கட்சிகள் மிக முக்கியமாக போட்டியிட்டு இருந்தன.

ஆகவே அந்த அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஆக, அந்த வகையில் நாங்கள் ஒரு அமைச்சர் பதவியை கேட்பது என்பது தவறானதல்ல . நாங்கள் கேட்டது அரசியல் விஞ்ஞானத் துறையில் ஒரு டாக்டர் பட்டம் பெற்று விரிவுரையாளராக இருந்த சர்வேஸ்வரனுக்கு ஒரு கல்வி அமைச்சர் பதவியை. அரசியல் துறையில் பல்வேறு அனுபவங்களை கொண்ட சர்வேஸ்வரனுக்கு ஒரு அமைச்சர் பதவியைக் கேட்பது என்பது தவறான விடயம் அல்ல.

ஆகவே நாங்கள் முழு தகுதியும் உடைய ஒருவருக்கு அந்தப் பதவியை கேட்டிருந்தோம். நிராகரிக்கப்பட்டது என்பது ஒரு தவறான விடயம் என்பது தான் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகவே அதனை ஒரு மெல்லினப்படுத்தி ஒரு சகோதரருக்காக அமைச்சுப்பதவி கேட்கப்பட்ட விடயம், முன்னரும்ம் சொல்லப்பட்டது தற்பொழுது தேர்தலை மையப்படுத்தி இவ்வாறான பொய்யான பரப்புரைகளை சுமந்திரன் பரப்பி வருகின்றார்.

ஆகவே நான்கு கட்சிகளுக்குமாக ஒவ்வொரு அமைச்சர் பதவி என்பதும் ஒதுக்கப்பட்டது, ஆகவே அந்த அமைச்சர் பதவிகளை நான்கு கட்சிகளும் ஒன்றாக பேசி எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அது அவ்வாறு இல்லாமல், அன்று அரசியலுக்கு புதிதாக இருந்த விக்னேஸ்வரன் மீது குற்றச்சாட்டுகளை முன் நிறுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியினுடைய சில விடையங்கள் சுமந்திரனின் கையை முன்னோக்கி எடுத்து செல்லப்பட்டது என்பது முக்கியம். இன்று அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றவாறு, விக்னேஸ்வரன் மீது பொறுப்புகளை கூறி தப்பிக்க பார்ப்பது என்பது, ஏற்புடைய ஒரு விடயம் என்பது உண்மைக்கு நிகரானது எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இரண்டாவது விடயம் நாடாளுமன்றத்தில் உள்ள தேசியப்பட்டியலை நாங்கள் கேட்டதாகவும் அது கொடுக்காத காரணத்தினால் வெளியேறியதாகவும், கூறுகின்ற விடயம் மோசமான ஒரு பிழையான செய்தி என்பதையும் நான் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். 2015ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு கட்சிகளும் ஒன்றாக இணைந்து போட்டிருந்தது. அதில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.

நான்கு கட்சிகள் ஒன்றாக போட்டியிட்டு அதன் காரணமாகவே அந்த வாக்குகள் கணிசமான அளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அது தமிழரசுக்கட்சிகுரிய வாக்குகள் அல்ல. ஈபி ஆர் எல் எஃப் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் தமிழீழ விடுதலை இயக்கம் கட்சிக்கு கிடைத்த வாக்குகள், புளட் கட்சிக்கு கிடைத்த வாக்குகள், ஆகவே எங்களுடைய கூட்டு முயற்சியின் காரணமாக தான் சில லட்சம் வாக்குகள் அப்பொழுது எங்களுக்கு கிடைக்கப் பெற்றிருந்தன.

அப்பொழுது எங்களுடைய கூட்டு முயற்சியால் தான் அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அந்த அடிப்படையில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள், எங்களுக்கு கிடைத்த பொழுது அந்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒன்று தமிழரசுக் கட்சிக்கும், மற்றைய ஆசனத்தை மூன்று கட்சிகளுக்கும் ஒரு கால வரையறையை வகுத்து செயற்படுத்தி எங்களுக்கும் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்தக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா, நான் போன்றோர் கலந்து கொண்டிருந்தோம் நாங்கள் கூட்டாக போட்டியிட்டு அதன் காரணமாக அந்த தேசியப்பட்டியல் ஆசனத்தில் ஒன்றை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை.

தற்பொழுது சுமந்திரன் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி பொய்யான கருத்துக்களை மேடைகளில் பேசி வருகின்றார். சில சட்டத்தரணிகள் வழக்குகளுக்காக பொய் பேசுவார்கள். அதில் சுமந்திரன் இன்னும் நன்றாக பொய் பேசக்கூடியவர்.

எனவே கிளிக்க படவேண்டியது எங்களது முகத்திரை அல்ல சுமந்திரன் போன்றவர்களின் முகத்திரையே எதிர்வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தினை அவர்களுக்கு புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.ம

சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஐ.நா தீர்மானத்தில் இருந்து தாம் விலகுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலேயே சிறீலங்கா தனது முடிவை தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசின் தலைவர் கோத்தபாயா ராஜபக்சா உட்பட பெருமளவான படைத் தளபதிகளும், படையினரும் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களே.

எனவே ஐக்கிய நாடுகள் சபை ஊடாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் தொடருமாக இருந்தால் சிறீலங்கா அரசு மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்ல வேண்டும் அல்லது போர்க்குற்ற விசாரணைகளை சந்திக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான முன்னைய அரசு மேற்குலகம் சார்பான போக்கை கொண்டிருந்தாலும், சிறீலங்காவில் ஏற்படும் அரசியல் மாற்றம் தமது வியூகங்களில் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கணித்த அமெரிக்க அவர்களின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானம் 30/1 ஜ கொண்டு வந்திருந்தது. அதன் பின்னர் தனது நடவடிக்கையை முன்னெடுப்பதில் அமெரிக்கா பின்வாங்கியது போல நடித்தாலும், தனக்கு சார்பான நாடுகளான பிரித்தானியா, மசடோனியா, மொன்ரோநிக்ரோ, ஜெர்மனி மற்றும் கனடா ஊடாக இந்த தீர்மானத்தை பலப்படுத்தியிருந்தது.savendra சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஒருபுறம் தீமானம் கொண்டுவரப்பட்டபோதும், மறுபுறம் மிலேனியம் சலஞ் என்ற படைத்துறை உடன்பாட்டை சிறீலங்கா அரசின் முன்வைத்திருந்தது. இந்த உடன்பாடு தொடர்பில் ரணில் அரசு மென்போக்கையே கடைப்பிடித்திருந்தது. ஆனால் உடன்பாட்டின் மூலம் திருமலை தொடக்கம் கொழும்பு வரையிலான 7 மாவட்டங்கள் அமெரிக்கா படையினர் வசம் செல்லும் என்பதை அறிந்த இந்தியா விழித்துக் கொண்டது.

சிறீலங்காவில் ஒரு ஆட்சிமாற்றத்தை இந்தியா கொண்டுவந்து. அமெரிக்காவின் உடன்பாட்டை முறியடிக்க இந்திய வகுத்த வியூகம் தான் கோத்தபாயாவின் அரசியல் வெற்றி.தேர்தலுக்கு முன்னர் தனது உடன்பாட்டை நிறைவு செய்ய அமெரிக்கா முனைந்தபோதும், பௌத்த துறவிகளை ஏவிவிட்ட எதிர்த்தரப்பு அதனை முறியடித்திருந்தது

தனது திட்டம் தோல்வியடையும் எனக் கணிப்பிட்ட அமெரிக்கா தனது இரண்டாவது திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதுவே மனித உரிமைகள் அமைப்பில் தற்போது எதிரொலிக்கின்றது.

சிறீலங்கா அரசு தீhமானத்தில் இருந்து வெளியேறியதை ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நேரிடையாக விமர்சித்துள்ளார், இணை அனுசரணை நாடுகள் அதற்கு எதிராக கொதித்து எழுந்துள்ளன. சிறீலங்கா வெளியேறினாலும் தாம் அதில் இருந்து வெளியேறப்போவதில்லை என மிரட்டியுள்ளன.

அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் தற்போது தீவிரமாக செயற்படுகின்றன. சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது அனைத்துலக மன்னிப்புச் சபை.

படையினருக்கு வழங்கப்படும் இராஜதந்திர பதவிகள் மூலம் அவர்களுக்கு போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து விதிவிலக்கு பெறமுடியும் என நம்கின்றது சிறீலங்கா அரசு எனவே தான் பல படையினருக்கு பொது அதிகாரம் வழங்கப்படுகின்றது. ஆனால் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவீந்திர சில்வா மீது அமெரிக்கா கொண்டுவந்த பயணத்தடை, சிறீலங்கா படை அதிகாரிகளின் உளவியலை சிதைத்துள்ளதாக தெரிவிக்கின்றார் கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரி ஒருவர்.UNHRC சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா மீது பொருளாதாரத் தடை கொண்டுவரப்படலாம் என சிறீலங்கா அரசு அச்சம் அடைகின்றது. அதன் வெளிப்பாடே தம்மீது கொண்டுவரப்படும் பொருளாதாரத் தடைக்கு எதிராக தமது நட்பு நாடுகளான சீனா மற்றும், ரஸ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என சிறீலங்காவின் அமைச்சர் கேகலியா ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது, ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் சீனா தலைமையில் ஆபிரிக்க, ஆசிய நாடுகளையும், இந்தியா தலைமையில் ஆசிய நாடுகளையும் மற்றும் அரபு நாடுகளையும் ஒருங்கிணைத்து அதனை முறியடிக்கலாம் என நம்புகின்றது சிறீலங்கா அரசு.

அதேசமயம் இந்த வாரம் அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் உடன்பாட்டை சிறீலங்கா அமைச்சரவை நிராகரித்துள்ளது. இது அமெரிக்காவின் திட்டத்திற்கு விழுந்த பலத்த அடியாகும். ஆனால் தாம் சிறீலங்கா அரசின் முடிவுக்கு காத்திருப்பதாக அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

தமது உடன்பாடு 480 மில்லியன் டொலர்களை கொண்டது எனவும், அதனால் 11 மில்லியன் சிறீலங்கா மக்கள் பயனடைவார்கள் எனவும், சிறீலங்கா மக்களின் காணிகள் அவர்களுக்கு சொந்தமாக வழங்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிறீலங்காவின் பொருளாதாரமும், பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. சிறீலங்காவுக்கு வழங்கப்படும் நிதி தொடர்பில் பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என அனைத்துலக நாணய நிதியத்தின் தொடர்பாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார். அவர்கள் தமது நிதி வழங்கல் தொடர்பில் புதிய நிபந்தனைகளை விதிப்பதற்கே காத்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாம் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சிறீலங்காவின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 2015 ஆம் பெறப்பட்ட கடன்களின் விதிவிலக்கு காலம் 2025 ஆம் ஆண்டு நிறைவடைவதால் சிறீலங்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு 2 றில்லியன் ரூபாய்களாக இருந்த கடன் தொகை 2005 -2010 களில் ஏற்பட்ட போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அது 7 றில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது மகிந்தா அரசு 5 றில்லியன்களை கடனாக பெற்றுள்ளது.sl military சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எனினும் அதன் பின்னர் வந்த அரசு எந்த அபிவிருத்தியும் செய்யாத போதும், கடன்சுமை அதிகரித்து 13 றில்லியன்களாக தற்போது உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் ஏப்பிரலில் இடம்பெற்ற தாக்குதல் சிறீலங்காவின் பொருளதாரத்தை மேலும் சிதைத்துள்ளது, அதாவது இந்த தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார இழப்பு இரண்டு மிலேனியம் சலஞ் உடன்பாட்டு நிதிக்கு இணையானது.

ஒருபுறம் பொருளாதார அழுத்தம், மறுபுறம் மேற்குலகத்தின் அரசியல் அழுத்தம் சிறீலங்கா இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பது ஒருபுறம் இருக்க இந்த நெருக்கடிகளை ஏனைய இனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த என்ன நகர்வுகளை மேற்கொள்ளப்போகின்றன என்பது தான் தற்போது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோட்டா ஆட்சியிலும் ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்கிறது

இந்த அரசாங்கத்திலும், ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்வதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகத்தில், இன்று (02) நடைபெற்ற பொது அமைப்புகளுக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், யுத்த காலத்தில், 35க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செயயப்பட்டிருக்கிறார்களெனவும் அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லையெனவும் சாடினார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக எழுதுவதற்கும் பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்ட போதிலும், ஊடகவியாலாளர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து கொண்டே தான் இருப்பதாக, சிவசக்தி எம்.பி கூறினார்.

பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 மாணவர்களுக்கும் 16 ஆம் வரை விளக்கமறியலில்

பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 பேரையும் மார்ச் 16 ஆம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் குறித்த மாணவர்கள் 22 பேரும் நேற்று (01) கைது செய்யப்பட்டிருந்தனர்.

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நீதிமன்ற உத்தரை மீறி செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை முதல் இந்த சத்தியகிரக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டுமெனில் விக்னேஸ்வரனை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன்

ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டுமெனில் விக்னேஸ்வரனை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“நாட்டின் ஜனநாயகம் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இருந்து தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் நாங்கள் சேர்ந்து செயற்பட்டு வந்தோம். அப்படியானவர்கள் உடன் சேர்ந்து இயங்கி தான் தென்னிலங்கையின் நிலவரத்தை மாற்றக் கூடியதாக இருந்தது.

நாட்டினுடைய ஜனநாயகம் இல்லாமல் போனால் தமிழர்களின் உரிமையை பெறுவது கூட முடியாமல் போய்விடும்.

ஜனாதிபதி தேர்தலின் முன்னர் ஜயம்பதி விக்ரமரத்ன சந்திரிகா அம்மையாருடன் பேசிவிட்டு என்னை சந்தித்தார். அப்பொழுது சம்பந்தன் நாட்டில் இருக்கவில்லை.

மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கலாமா என்பது பற்றி எமதும், ஜேவிபியினதும் அபிப்ராயத்தை அறியும்படி சந்திரிக்கா கூறியிருந்த அடிப்படையில், என்னிடம் வினவியபோது கட்சியிடன் கேட்காமலேயே அதற்கு ஆம் என நான் கூறுவேன் என கூறினேன். மைத்திரிபால சிறிசேன மிகவும் முற்போக்கு சிந்தனை உடையவர்.

மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்த போது முதலாவது மனுவினை நாங்கள் தாக்கல் செய்தோம். அப்போது ஜனநாயகத்தை காப்பாற்றியதில் முன்னிலையில் நின்றவர்கள் நாங்கள். ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்காக செய்யவில்லை.

இப்பொழுதும் அந்த ஜனநாயகத்திற்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. அதை பாதுகாப்பது நமது கடமை தமிழர்களின் உரிமைப் பிரச்சனையெல்லாம் இதற்கு பின்னர்தான்.

ஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டுமெனில் விக்னேஸ்வரனை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்.

சர்வதேச விசாரணை முடிந்து விட்டது. பொலிசார் விசாரணை நடத்தும்போது, அது யாருக்கும் தெரியாது. அதுபோல இந்த சர்வதேச விசாரணையும் இரகசியமாக நடந்து முடிந்து விட்டது” என்றார்.

கொரோனா வைரஸ் – அமெரிக்காவில் இரண்டாவது மரணம்

சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் எங்கும் பரவிவருகின்றது. இந்த நிலையில் இதன் தாக்கத்திற்கு அமெரிக்காவில் இருவர் பலியாகியுள்ளதாக அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 48 மணிநேரத்திற்குள் இருவர் இறந்துள்ளதுடன், கலிபோர்னியாவில் 5 பேர் தொற்றுதலுக்கு உள்ளாகி உள்ளனர். 70 வயதான ஆண் ஒருவரே வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வைத்தியசாலை பணியாளர்கள் என்பதால் அவர்கள் அணியும் பாதுகாப்பு அங்கிகளில் குறைபாடுகள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பாதுகாப்பு அங்கிகள் தேவையில்லை என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகின்றது. எனினும் மக்களின் தேவையை நிறைவுசெய்யும் அளவுக்கு தம்மிடம் பாதுகாப்பு அங்கிகள் இல்லை என அமெரிக்க நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் 3,000 பேர் பலியாகியுள்ளதுடன், 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரானில் 50 பேரும் இந்தாலியில் 30 பேரும் பலியாகியுள்ளனர்.

எனினும் வருடம்தோறும் பரவிவரும் வைரஸ் பருவக்காச்சலுடன் ஒப்பிடும் போது இந்த வைரசின் தாக்கம் குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது. வருடம் தோறும் பரவிவரும் பருவக் காச்சலினால் 400,000 பேர் மரணமடைந்து வருகின்றனர். அதனுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரசின் தாக்கம் 1 விகிதமாகும்.

சிறீலங்கா வெளியேறினாலும் ஐ.நா தீர்மானம் நடைமுறையில் இருக்கும் – மங்களா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானங்களில் இருந்து சிறீலங்கா வெளியேறினாலும் அது நடைமுறையில் இருக்கும். தீர்மானம் இல்லாது போகாது என சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்களா சமரவீரா தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தின் இறுதி வடிவம் தொடர்பில் நான் சிறீலங்காவின் அன்றைய அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனாவுடன் விரிவாக ஆராய்ந்திருந்தேன். அப்போது நாம் இருவரும் நியூயோர்க்கில் உள்ள ஒரே விடுதியில் தான் தங்கியிருந்தோம்.

அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கொழும்பில் அமெரிக்காவின் தூதுவர் மற்றும் பிரித்தானியாவின் தூதுவர் ஆகியோருடன் இருந்தார். நாம் பிரதமருடன் தீர்மானம் தொடர்பில் பேசும்போது அவர்களும் கூட இருந்தனர்.

அதன் பின்னரே மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்தோம். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் சிறீலங்கா நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

30/1 மற்றும் அதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான 34/1 மற்றும் 40/1 ஆகியவற்றில் இருந்து சிறீலங்கா வெளியேறினாலும் அது நடைமுறையில் இருக்கும். தீர்மானம் இல்லாது போகாது.

சிறீலங்கா அரசு ஒத்துழைக்காது விட்டாலும், மனித உரிமைகள் ஆணைக்குழு சிறீலங்கா தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பிக்கும். எனவே சிறீலங்காவின் ஒத்துழைப்புக்கள் இன்றி உடன்பாடு செயற்படும்.

தனிநபர்கள் மீதான தடைகள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது. சிறீலங்கா இராணுவத்தளபதி மீது அமெரிக்கா பயணத்தடையை கொண்டுவந்துள்ளது. இந்த தடைகள் மேலும் அதிகரித்தால் சிறீலங்காவின் பொருளாதாரம் அதிக பாதிப்புக்களை சந்திக்கும். இது சிறீலங்கா மக்களை அதிகம் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளர்.

பாராளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும்

பாராளுமன்றம் இன்று (02) இரவு கலைக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

அதன்படி நேற்று (01) நள்ளிரவு பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்த நிலையில் ஜனாதிபதியால் எந்த வேளையிலும் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலை அடுத்து அந்த வருடத்தின் செப்டெம்பர் முதலாம் திகதி 8 ஆவது பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

அதேபோல் பாராளுமன்றம் இன்று கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள திகதியும் அறிவிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 5 தொடக்கம் 7 வாரங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதோடு அதற்கமைய இந்தமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அல்லது மே மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.