சிறீலங்கா வெளியேறினாலும் ஐ.நா தீர்மானம் நடைமுறையில் இருக்கும் – மங்களா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானங்களில் இருந்து சிறீலங்கா வெளியேறினாலும் அது நடைமுறையில் இருக்கும். தீர்மானம் இல்லாது போகாது என சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்களா சமரவீரா தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தின் இறுதி வடிவம் தொடர்பில் நான் சிறீலங்காவின் அன்றைய அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனாவுடன் விரிவாக ஆராய்ந்திருந்தேன். அப்போது நாம் இருவரும் நியூயோர்க்கில் உள்ள ஒரே விடுதியில் தான் தங்கியிருந்தோம்.

அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கொழும்பில் அமெரிக்காவின் தூதுவர் மற்றும் பிரித்தானியாவின் தூதுவர் ஆகியோருடன் இருந்தார். நாம் பிரதமருடன் தீர்மானம் தொடர்பில் பேசும்போது அவர்களும் கூட இருந்தனர்.

அதன் பின்னரே மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்தோம். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் சிறீலங்கா நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

30/1 மற்றும் அதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான 34/1 மற்றும் 40/1 ஆகியவற்றில் இருந்து சிறீலங்கா வெளியேறினாலும் அது நடைமுறையில் இருக்கும். தீர்மானம் இல்லாது போகாது.

சிறீலங்கா அரசு ஒத்துழைக்காது விட்டாலும், மனித உரிமைகள் ஆணைக்குழு சிறீலங்கா தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பிக்கும். எனவே சிறீலங்காவின் ஒத்துழைப்புக்கள் இன்றி உடன்பாடு செயற்படும்.

தனிநபர்கள் மீதான தடைகள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது. சிறீலங்கா இராணுவத்தளபதி மீது அமெரிக்கா பயணத்தடையை கொண்டுவந்துள்ளது. இந்த தடைகள் மேலும் அதிகரித்தால் சிறீலங்காவின் பொருளாதாரம் அதிக பாதிப்புக்களை சந்திக்கும். இது சிறீலங்கா மக்களை அதிகம் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளர்.