மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் விவகாரத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்தும் அவரைத் தேடி வருகின்றனர்.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட 10 சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்(06) மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றில் புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்றைய தினம் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர். அதற்கமைவாக ரவி கருணாநாயக்கவை கைது செய்ய அவரின் பத்தரமுல்ல பகுதியிலுள்ள அவரின் வீட்டிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 45 நிமிடங்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இருந்த போதும் அவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரை கைது செய்ய நியமிக்கப்பட்டுள்ள இரு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் தங்களின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு ஆணையாறர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களைக் கருத்திற் கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பாக இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆபத்தானது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
‘தேரர்களாகிய நாங்கள் துறவறம் செல்லும் போது எங்களின் முடி மட்டும்தான் வெட்டப்படுமே ஒழிய, எங்களின் உரிமைகள் வெட்டப்படுவது கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் தேரர்களின் அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாம் அரசியலுக்கு வரவேண்டுமா – இல்லையா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மகாநாயக்க தேரர்கள்கூட இதுதொடர்பாக எமக்கு கூறத்தேவையில்லை.
இன்று இதுதொடர்பாக சமூகத்தில் பிழையானதொரு புரிதல் இருக்கிறது. இது பிழையானது என்றுதான் நாம் கூறவேண்டும். முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக என்னை விட அதிகமாக பேசிய ஒருவரை யாராலும் காண்பிக்க முடியுமா? இல்லை.
எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் எமது செயற்பாடுகளை நாம் தொடர்ச்சியாக மேற்கொள்வோம். முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வழங்கிய எமக்கு எதிராக கடந்த காலங்களில் சட்டம் செயற்பட்டது.
ஆனால், தீவிரவாதத்திற்கு துணை செய்தவர்கள், கொலைக்காரர்களுக்கு எதிராக எந்தவொரு செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை. சரியாக இருப்பின், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்து, இரகசிய இடத்தில் வைக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் வெளியில் சுதந்திரமாக இருப்பார்களாயின், அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள்’ என்றார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக நிற்க மகளிர் அணி சார்பாக விண்ணப்பித்த இருவரை நிராகரித்து விட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மாலை கூடிய கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்காக கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் மிதிலா சிறிபத்மநாதன், எஸ்.விமலேஸ்வரி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். எனினும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழு அவர்களது விண்ணப்பங்களை
நிராகரித்து மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் துணைவி- யார் சசிகலா ரவிராஜ் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள்
உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் ஆகியோரைக் களமிறக்கத் தீர்மானித்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மகளிர் தினநிகழ்வையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாகக் கூடிய கட்சியின் மகளிர் அணியைச்சேர்ந்த ஒரு பகுதியினர், மனித
உரிமைகள் செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கத் திட்ட மிட்டுள்ளதைக் கடுமையாக எதிர்த்தனர்.
இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தி நிறுவனம் ஒன்று பின்வருமாறு தகவல் வெளியிட்டது:-
இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் இண்டு கொழும்பு பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் கூட்டாக கட்சித் தலைமையைச் சந்தித்துத் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தனர்.
ஞாயிறு பகல் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து அவர்கள் தமது அதிருப்தியை தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ அறிமுகமற்ற அம்பிகா போன்றவர்களை எதற்காக வேட்பாளராக்க வேண்டும், பெண் வேட்பாளர்கள் இருவரும் இதுவரை கட்சி அங்கத்துவத்தையே பெற்
றிருக்கவில்லை, தமிழ் மக்களின் போராட்டங்களில் எதில் அம்பிகா பங்கேற்றார் என காரசாரமான பல கேள்விகளை இதன்போது அவர்கள் எழுப்பினர்.
இதன்போது, அங்கு அசெளகரியமான சூழல் ஏற்பட்டது. பின்னர், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவைச் சந்தித்து தமது அதிருப்தியை அவர்கள் தெரிவித்தனர். அத்துடன், எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் நடந்த அசெளகரியமான சூழல் குறித்தும் முறையிட்டனர்.
நிலைமையை சமாளித்த மாவை சேனாதிராசா, மகளிர் அணியினரிடம் மனவருத்தத்தை பதிவுசெய்தார். அத்துடன், வேட்பாளர் தெரிவு இறுதியாகவில்லை,
எதிர்வரும் 12 ஆம் திகதி அவர்களது கோரிக்கையை மீளவும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்’ இப்படி அந்தச் செய்தியில் தெரிவிக்கபட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கும் பொறுப்பு கூறலை நிலைநாட்டுவதற்கும் தமது சொத்துக்கள் விவரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பெரன்சி
இன்டர்நௌல் ஸ்ரீலங்கா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தாம் ஊழலுக்கு எதிரான அர்ப்பணிப்புள்ளவர் என்பதையும் மிக வெளிப்படைத் தன்மையுடையவர், பொறுப்புக் கூறுபவர்
என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது
சொத்து விவரங்களை பொது வெளியில் தெரியப்படுத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இந் நிறுவனம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை
விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறீலங்கா உயர் அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா அரசு சுயாதீன அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுவருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் அமைச்சர் நைஜெல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு சிறீலங்காவுக்கு எதிரான தடைகள் தொடர்பில் ஆராயவுள்ளது.
எதிர்வரும் மாதம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது சட்டமூலம் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த அமைப்பு தனது பணிகளை ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சியின் நிழல் அமைச்சர் அப்சல் கான் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகள், பொறுப்புக்கூறல், நீதி விசாரணை போன்றவற்றை மேற்கொள்வதில் பிரித்தானியா அரசு தொடர்ந்து ஆர்வமாகவே உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்கள் அனைத்துக்கும் பிரித்தானியா அரசு தனது ஆதரவுகளை வழங்கிவந்துள்ளது. போரின் போது எல்லா தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வது அவசியமானது என பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.
சவீந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததற்கு எதிராக ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா தூதரகம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கொழும்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. சில்வா போர்க்குற்றங்களை மேற்கொண்டவர் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 25 ஆம் நாள் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனாவை பிரித்தானியாவின் தென் ஆசியா விவகாரங்களுக்கான அமைச்சர் ஜெனீவாவில் சந்தித்தபோது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி விசாரணைகள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களை சிறீலங்கா நிறைவேற்ற வேண்டும் என பிரித்தானியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது.
முதலாளித்துவத்தின் சுரண்டல்களை கடுமையாக விமர்சித்தே ஆரம்பித்த பெண்ணிய இயக்கம் முதலாளித்துவத்திற்கும் அதன் தற்கால வடிவமான நவதாராளவாதத்திற்கும் ஆதரவான சில சிந்தனைகளை இன்று உருவாக்கி கொடுத்திருக்கிறது.
ஒரு பெண்ணியவாதியாக நான் பெண்களின் விடுதலைக்கு போராடும்போது, ஒரு சிறப்பான உலகத்திற்காக சமத்துவமான, நீதியான, சுதந்திரமான உலகத்திற்காக போராடுகிறேன் என்றே நம்பினேன். ஆனால் பெண்ணியவாதிகளால் உருவாக்கப்பட்ட கருத்துக்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட தேவைகளுக்கு உதவுகிறது என்ற கவலை இப்போது எனக்கு வருகிறது. அன்று நாம் பாலியல் அடக்குமுறைகளுக்கு எதிராக உருவாக்கிய விமர்சனங்கள் இன்று புதிய வடிவிலான சுரண்டல்களுகளை நியாயப்படுத்துவதற்கு கையாளப்படுகின்றன.
கொடுமை என்னவென்றால், பெண்களின் விடுதலை இயக்கம் இன்று நவதாராளவாதத்தின் சுதந்திர-வர்த்தக சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிக்கி ஒரு ஆபத்தான கூட்டாக கைகோர்த்து இயங்குகிறது. இதனாலேயே, அன்று ஒரு முற்றிலும் மாறுபட்ட உலக பார்வையை கொண்டிருந்த பெண்ணிய இயக்கம், இன்று தனிநபர் நன்மைகளை முன்னிறுத்துகிறது.
தொழில்சார் முன்னேற்றத்தை (careerism) முன்னிறுத்தும் சமூகத்தை அன்று விமர்சித்த பெண்ணியவாதிகள், இன்று பெண்களை தொழிலில் முன்னேறும்படி அறிவுரை கொடுக்கிறார்கள். அன்று சமூக கூட்டொருமையை மேலாக கருதிய இயக்கம் இன்று பெண் தொழிலதிபர்களை கொண்டாடுகிறது. அன்று மற்றவர்களின் நலத்தில் கரிசனை கொள்வதை மேன்மையாக கருதிய பார்வை இன்று தனிநபர் முன்னேற்றத்தையும் தனிநபர் திறமையையும் கொண்டாடுகிறது.
பெண்ணிய கருத்துக்களின் இம்மாற்றங்களின் பின்னால் முதலாளித்துவம் செயற்படுவதில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் இருக்கின்றன. இரண்டாம் உலக போருக்கு பின்னரான அரசினால் நெறிப்படுத்தப்பட்ட முதலாளித்துவம் மறைந்து இன்று அது புதிய வடிவத்தை எடுத்திருக்கிறது. இது அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே, உலமயமாக்கல் சூழலில் வடிவெடுத்திருக்கும் நவதாராளவாதம். இரண்டாம் அலை பெண்ணியம் என்று அழைக்கப்படும் 60களில் தோன்றிய பெண்ணியம் முதலாளித்துவத்தின் முதலாவது வடிவத்தை, அதாவது அரச முதலாளித்துவத்தை, விமர்சித்து வளர்ந்தது. ஆனால் இன்று அது முதலாளித்துவத்தின இரண்டாவது வடிவத்திற்கு, நவதாராளவாத்திற்கு, அடிமையாகி விட்டது.
காலம் கொடுத்த அனுபவத்திலிருந்து இன்று பின்னோக்கி பார்க்கும்போது எமக்கு ஒன்று தெளிவாகிறது. அன்றைய பெண்ணிய விடுதலை கருத்துக்கள் இரண்டு வித்தியாசமான எதிர்காலத்தை நோக்கிய பாதையை எமக்கு கொடுத்தது.
ஒரு பாதையில், பெண் விடுதலையுடன் மக்கள் பங்கொடுக்கும் சனநாயகமும் சமூக கூட்டொருமையும் கைகோர்த்து வரும். இரண்டாவது பாதை தாராளவாதத்தின் ஒரு புதிய வடிவத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிநபர் சுதந்திரமும், திறமைக்கான முன்னேற்றமும் என்ற வாக்குறுதிகளை கொண்டுவரும். இவ்விதத்தில் அன்றைய பெண்ணியம் உறுதியான ஒரு எதிர்காலத்தை காட்டவில்லை.
இரண்டு விதமான வரலாற்று சமூகத்திற்கும் ஒத்துப்போன இப்பெண்ணியவாதம் இன்று ஒன்றிற்கு அடிமையாகி விட்டது. எமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் எம்மை மீறி இது நடக்கவில்லை. மாறாக நவதாராளவாதத்தின் கவர்ச்சியால் நாமே இதற்கு ஆதரவாக மூன்று கருத்துக்களை கொடுத்துள்ளோம்.எமது முதலாவது வாதம், கணவர் உழைக்க மனைவி வீட்டை பராமரப்பது என்பதை பற்றிய எமது விமர்சனமே.
அரச முதலாளித்துவத்தின் அடிப்படையே இதுதான். பெண்ணியவாதிகள் இதை விமர்சித்தது இன்று “நெகிழ்வான முதலாளித்துவத்தை” நியாயப்படுத்த உதவுகிறது. இந்த முதலாளித்தும் இன்று பெண்களின் ஊதிய உழைப்பில், முக்கியமாக குறைந்த ஊதியம் பெறும் பெண்களின் உழைப்பில், அதிகம் தங்கி வளர்ந்திருக்கிறது.
இவ்வேலையை இளம் பெண்கள் மட்டுமல்ல, திருமணமான பெண்களும், தாய்மார்களும் கூட செய்கிறார்கள். இது எல்லா இனப் பெண்களுக்கும் பொருந்தும். உலகெங்கும் பெண்கள் ஊதிய தொழில்களில் பெருந்தொகையாக வந்து சேர்ந்த போது, அரச முதலாளித்துவத்தின் கணவர் மட்டும் ஈட்டும் குடும்ப வருமானம் என்ற கருத்துக்கு பதிலாக இருவரும் வருமானம் ஈட்டுவது என்ற ஒரு புதிய கருத்து, அன்று பெண்ணியவாதிகளால் முன்னிறுத்தப்பட்ட கருத்து, வளர்ந்திருக்கிறது.
இப்புதிய கருத்தின் பின்னால், ஊதியம் குறைக்கப்பட்டதும், தொழிலின் உறுதியற்ற தன்மையும், வாழ்க்கைத்தரம் குறைந்ததும், தொழில் நேரம் அதிகரித்ததும், வறுமை, முக்கியமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் வறுமை, மோசமானதும் மறைந்து கிடக்கிறது. இதையே நவதாராளவாதிகள் பெண்கள் மேம்பாடு என்று முன்னிறுத்துகிறார்கள்.
குடும்ப ஊதியத்தை பற்றிய பெண்ணியவாதிகளின் விமர்சனத்தை காட்டி, முதலாளித்துவத்தின் இலாபத்தை பெருக்க பெண்கள் மேம்பாடு என்ற கனவை கையாழுகிறார்கள் நவதாராளவாதிகள். இதை நாம் உடைக்க வேண்டும். ஊதியத்திற்கான தொழிலை மையப்படுத்துவதை தவிர்த்து, மற்றவர்களை பராமரிக்கும் வேலை உட்பட, ஊதியமற்ற தொழிலை உயர்வானதாக்கும் கருத்துக்காக நாம் போராட வேண்டும்.
நவதாராளவாதம் கையிலெடுத்த எமது இரண்டாவது வாதம் இதுதான். வருமானத்தை மையப்படுத்திய ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து அதை நிவர்த்தி செய்ய முயன்ற அரச முதலாளித்துவத்தை பற்றி நாம் சரியாகவே அன்று விமர்சித்தோம். வருமானத்திற்கும் அப்பால் பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள், குடும்ப வன்முறைகள் போன்றவற்றை அரச முதலாளித்துவம் கணக்கெடுக்கவில்லை என்று நாம் விமர்சித்தோம்.
வருமானத்தை மட்டுமே மையப்படுத்திய அரசியலை நிராகரித்து, பாலியலை மையப்படுத்திய படிநிலைகளுக்கும் சவால் விட்டு பெண்ணியவாதிகள் அரசியலை விரிவுபடுத்தினார்கள். நீதி என்பது வருமானம் பாலியல் கலாச்சாரம் என்ற இரண்டு தளத்திலும் இருக்க வேண்டும் என்று விரிவுபட்டிருப்பதற்கு பதிலாக, பாலியல் கலாச்சாரத்தில் மட்டுமே சமத்துவம் என்று மாற்றி விட்டது நவதாராளவாதம்.
நவதாராளவாதிகள் பொருளாதார சமத்துவத்தை பற்றிய வாதத்தை மறைப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இது இப்போ உதவுகிறது. இதையும் இன்று பெண்ணியவாதிகள் மாற்றி பொருளாதார சமத்துவத்தை பாலியல் சமத்துவத்துடன் ஒருங்கிணைத்து முன்னிறுத்த வேண்டியுள்ளது.
இறுதியாக, பெண்ணியம் நவதாராளவாதத்திற்கு மூன்றாவது கருத்து ஒன்றையும் கொடுத்திருக்கிறது. அரச முதலாளித்துவம் தேவையானோருக்கு கொடுக்கும் உதவிகள் பெண்களுக்கும் சமத்துவமாக கொடுக்கவில்லை என்று பெண்ணியவாதிகள் அன்று சரியாகவே வாதிட்டார்கள். இன்று இதே வாதத்தை நவதாராளவாதம் “அரச உதவிகளுக்கு” எதிரான கருத்தாக கையிலெடுத்திருக்கிறது. இதுமட்டுமல்ல, அரசார்பற்ற அமைப்புக்களையும் தனதாக்கிவிட்டது நவதாராளவாதம்.
உலகின் வறுமையான பகுதிகளில் வாழும் பெண்களுக்கு அரசசார்பற்ற அமைப்புக்கள் கொடுக்கும் சிறிய கடனுதவி திட்டம், பெண்கள் நலனை மேம்படுத்தும் என்றும், அரச உதவித்தொகையைவிட இது சிறப்பானது என்றும், இது அரச உதவித்தொகை கொடுப்பதில் காணப்படும் பெண்கள் அடிமைப்படுத்தலுக்கு எதிரான பெண்ணியவாத திட்டம் என்றும் போற்றப்படுகிறது. இதன் பின்னால் உள்ள ஒரு உண்மை மறைக்கப்படுகிறது.
சிறுகடனுதவிகள் பெருமளவு வளரந்த அதே காலத்தில், வறுமையை நீக்க அரசுகள் முன்னெடுத்த பெரிய திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டன. சிறுகடனுதவிகள் இத்தகைய திட்டங்களுக்கு மாற்றாக இருக்க முடியாது. இங்கும் பெண்ணியவாதத்தின் கருத்து நவதாராளவாதிகளின் கையில் சிக்கிவிட்டது. அரசு மக்களை சமத்துவமாக நடத்துவதற்காக முன்வைக்கப்பட்ட விமர்சனம் அரசையே விலத்தி வர்த்தகத்தை முன்னிறுத்துவதற்கு கையாளப்படுகிறது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பலமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கி நாட்டைக்க் கட்டியயழுப்புவதற்குக் கொள்கையை வகுக்கத் தயாராகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த பலமான எதிர்க்கட்சியாக தம்மை உருவாக்க மக்களின் ஆதரவைக் கேட்டு நிற்பதாகவும் அவர் கூறினார். தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
இம்முறை தேர்தலில் சகல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியிடும். இந்தத் தேர்தலில் எமக்கு இலக்கும் நோக்கமும் உள்ளது. இந்த ஆட்சியும் இதற்கு முன்னர் முன்னெடுத்த ஆட்சியும் தம்மால் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலின்போதும் இதற்கு முன்னரும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்தனர். எனினும் இந்தக் காலத்தில் நாட்டின் பொருளாதாரக் கொள்கையும், மக்களின் சமூகத் தன்மைக்கும் அமைய இனியும் இந்த ஆட்சியாளர்களுடன் முன்னோக்கிச் செல்லமுடியாது என்பது தெரிந்துவிட்டது.
ஆகவே, இந்த நாட்டின் ஆரோக்கியமான சமூக மொன்றையும், பலமான பொருளாதாரக் கொள்கையையும் புதிய சமூகக் கட்டமைப்பு ஒன்றினையும் உருவாக்குவது குறித்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்க நாம் தயாராக உள்ளோம்.
அதேபோல், நாடாளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி ஒன்று அவசியமாகின்றது. அதற்கான பலமான
அணியயான்றை எமக்கு வழங்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்” என்றார்.
அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய வளாகத்தில் பிரமாண்ட பௌத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பௌத்த விகாரை மற்றும் அதனோடு இணைந்த புத்தர் சிலைகள் என்பன நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது
இப் பௌத்த விகாரை திறப்பு விழாவில் தென் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் வட மாகாணத்தின் பல்வேறு விகாரைகளது பௌத்த துறவிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மாகாண ஆளுநர்கள் எந்தவொரு தேர்தல் பிரசாரங்களிலும் பங்கேற்கக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்
ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக மூன்று ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஒருவர் தமது பதவியில் இருந்து விலகுமாறு கோரப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
ஆளுநர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித உரிமைகளும் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே மஹிந்த தேசப்பிரிய இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்