சிறீலங்காவுக்கு எதிராக தடைகளை ஏற்படுத்த மனித உரிமை அமைப்பு ஒன்றை அமைக்கின்றது பிரித்தானியா

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறீலங்கா உயர் அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா அரசு சுயாதீன அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுவருவதாக பிரித்தானியாவின்  வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் அமைச்சர் நைஜெல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு சிறீலங்காவுக்கு எதிரான தடைகள் தொடர்பில் ஆராயவுள்ளது.
எதிர்வரும் மாதம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது சட்டமூலம் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த அமைப்பு தனது பணிகளை ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சியின் நிழல் அமைச்சர் அப்சல் கான் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகள், பொறுப்புக்கூறல், நீதி விசாரணை போன்றவற்றை மேற்கொள்வதில் பிரித்தானியா அரசு தொடர்ந்து ஆர்வமாகவே உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்கள் அனைத்துக்கும் பிரித்தானியா அரசு தனது ஆதரவுகளை வழங்கிவந்துள்ளது. போரின் போது எல்லா தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வது அவசியமானது என பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.
சவீந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததற்கு எதிராக ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா தூதரகம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கொழும்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. சில்வா போர்க்குற்றங்களை மேற்கொண்டவர் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 25 ஆம் நாள் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனாவை பிரித்தானியாவின் தென் ஆசியா விவகாரங்களுக்கான அமைச்சர் ஜெனீவாவில் சந்தித்தபோது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி விசாரணைகள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களை சிறீலங்கா நிறைவேற்ற வேண்டும் என பிரித்தானியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது.

Attachments area