Home Blog Page 2395

கதிரை மீதான காதலே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்

கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

மாற்றுத்தலைமை என இன்று பலர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகளை உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காகவும் கட்சிகளை உருவாக்கவில்லை. அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள். இன்று எம் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதேசவாரியாக மக்களுக்கு விளக்கத்தினை வழங்க தயாராகவே இருக்கின்றேன்.

யாரையும் பெயர் குறிப்பிட நான் விரும்பாவிட்டாலும். யாராவது இவ்வாறு தெரிவித்தனர் என்றால் அவர்களைப் பற்றி கூற நானும் தயாராக இருக்கின்றேன். அவர்களைப் பற்றி முழு விபரமும் என்னிடம் இருக்கின்றது. யார் யார் எவருடன் தொடர்பினை வைத்திருந்தனர் யாருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டார்கள் என்ற முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது. இதேவேளை தமிழர்களின் நிரந்தரமான தீர்வுக்கு அரசியல் அமைப்பு மாற்றம் என்பது அவசியமானதாகும்.

அதன் மூலம் தான் தமிழர்கள் முன் உள்ள பிரச்சனைகளுக்கு 80 வீதமான தீர்வு கிடைக்கும். வடக்கு கிழக்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக இருந்தது. ஆனால் இன்று தமிழர்களது இனவிகிதாசாரத்தினை குறைக்கும் அளவிற்கு சிங்கள குடியேற்றங்கள் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அவர்கள் கையாளும் தந்திரம் மகாவலி திட்டமாகும்.

DSC 0348 6 கதிரை மீதான காதலே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்

DSC 0334 6 கதிரை மீதான காதலே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்

இந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி 100 வீதம் சரியாக செயற்பட்டது என்று நான் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கின்றது. தமிழ் இனத்தின் அடையாளத்திற்காக கொள்கை ரீதியாக தனித்துவமாக பயணிக்கின்றோம்.

மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நாங்கள் சிந்தித்து கட்சியாக எடுத்திருக்கின்றோம். இதனால் விலைபேச முடியாத சக்தியாக இருக்கின்றோம் என்பதனை தெரிவிக்கின்றேன். கூட்டமைப்பின் வேட்பாளர்களை பலப்படுத்துவதனால் எமக்கு எதிராக உள்ள சர்வதேச விடயங்களானாலும் சரி, சிங்கள குடியேற்றமானாலும் அபிவிருத்தி விடயங்களிலும் கையாளக்கூடிய நிலை ஏற்படும்.

எனவே எம்மில் பலரது கருத்துக்கள் மக்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அது அவர்களது தனிப்பட்ட கருத்துக்களேயாகும். அது கூட்டமைப்பின் கருத்துக்கள் இல்லை என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன். அவர்களின் கருத்துக்களை வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஒதுக்கிவிடகூடாது என தெரிவித்தார்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற -18 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று வந்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று (09) அதிகாலை 3.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக பேருந்து பாதையை விட்டு மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 55 பேரில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருப்பனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மியான்மார் இனஅழிப்பு அரசுக்கு ஆதரவு – சூகிக்கு வழங்கப்பட்ட விருதை பறித்தது லண்டன் நகரசபை

மியான்மார் நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆங் சான் சூகி தனது நாட்டின் ரோகிங்கியா முஸ்லீம் மக்கள் மீதான இன அழிப்பை கண்டிக்கத் தவறியதுடன், அரசுக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட விருதை இரத்துச் செய்வதாக பிரித்தானியாவின் லண்டன் நகரசபை தெரிவித்துள்ளது.

அண்மையில் கேக்கில் இடம் பெற்ற இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளின் போதும் சூகி அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதுடன், அரசுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டதாக அவருக்கு வழங்கப்பட்ட கௌரவ விருதை பறிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுச்சபை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் சூகி அரச குழு ஒன்றை வழிநடத்தியிருந்தார்.

மியான்மார் அரசுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்ததாலும், சுதந்திர விண்ணப்ப குழுவின் கடிதங்களுக்கு அவர் பதில் அளிக்காததாலும் 2017ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட விருதை இரத்துச் செய்வதாக சுதந்திர பயன்பாடுகள் குழுவின் (City of London Corporation’s Freedom Applications Committee) தலைவர் டேவிட் வூட்டன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்காக அவர் பல ஆண்டுகள் மேற்கொண்ட அகிம்சை வழியிலான போராட்டத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அகிம்சை போராட்டத்திற்காக அவருக்கு 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா மக்கள் கட்டாருக்கு செல்ல தடை

வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளையும் பாதித்து வருவதால் சிறீலங்கா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டாருக்குள் நுளைவதை கட்டார் அரசு தடை செய்துள்ளது.

இன்று (9) திங்கட்கிழமையில் இருந்து சீனா, சிறீலங்கா, ஈரான், ஈராக், லெபனான், இந்தியா, எகிப்து, பங்களாதேசம், சிரியா, தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், தென்கெரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டாருக்குள் நுளைவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தாலியில் இருந்து கட்டாருக்கு வரும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. கட்டாரில் இதுவரை 15 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக களமிறங்கியது ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு

இந்தியா அண்மையில் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றத்தை அணுகியதால் இந்தியா பதற்றமடைந்துள்ளது.

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இந்திய குடிமகன் ஒருவர் தொடுத்த வழக்கில் மூன்றாம் தரப்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளதால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மிச்செல் பசெலற் உயர் நீதிமன்றத்திற்கு தனது பதிலை அனுப்பியிருந்தார்.

ஆனால் குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியாவின் உள்வி வகாரம் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ரவீஸ்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை(03) தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு இறைமையுள்ள நாடு, இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டது. உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் தொகையில் 15 விகித்தை கொண்ட மூஸ்லீம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் சீனாவிடம் இருந்து பில்லியன் டொலர்கள் கடன்

சீனாவிடம் இருந்து 1.3 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு சிறீலங்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 1 தொடக்கம் 2 பில்லியன் டொலர்கள் கடனாக கோரப்பட்டதாகவும், ஆனால் 1.3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சீனா சம்மதித்துள்ளதாகவும் சிறீலங்கா மத்திய வங்கியின் பிரதித் தலைவர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நிதி உதவி சிறீலங்காவின் பொருளாதார நெருக்கடியை குறைக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் சிறீலங்கா அரசு வங்கிகளிடம் இருந்து 120 பில்லியன் ரூபாய்களை கடனாக பெற்றிருந்தது.

இதனிடையே, அமெரிக்காவின் மிலேனியம் சலஞ்ச் உடன்பாட்டின் 480 மில்லியன் டொலர்களை புறக்கணித்துள்ள சிறீலங்கா, மீண்டும் சீனாவிடம் கடன் பெற்றுள்ளது.

தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு..!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தேவையான நிதியை அரசாங்கம் விடுவித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக 700 கோடி ரூபா தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக அதிகாரிகளை தெரிவு செய்யும் பணி நிறைவு பெற்றிருப்பதுடன், அனுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக் கடமைகள் குறித்து அவருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார். இதனிடையே தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. விண்ணப்பங்களை 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

ஸ்ரீலங்காவில் தொடரும் மோசமாக காலநிலை

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து முஸ்லிம்களுக்கான அலகொன்றை வழங்குவதில் எந்த தவறும் இருக்காது .

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து முஸ்லிம்களுக்கான அலகொன்றை வழங்குவதில் எந்த தவறும் இருக்காது என வடக்கின் முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி, கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு மக்களுடன் இடம் பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வட கிழக்கு மக்களிடையே அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களை சமாந்திரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எமது குறிக்கோள். அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஸ்டி ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதற்குக் காரணம் உண்டு.

பலர் கிழக்கைப் பற்றிப்பேசி அங்கு சிங்கள, முஸ்லிம் பெரும்பான்மையினர் மத்தியில் எவ்வாறு வடகிழக்கு இணைப்பை உறுதிப்படுத்தப் போகின்றீர்கள் என்று கேட்கின்றார்கள். அதனால் வட கிழக்கு இணைப்பை விட்டுவிடக் கோருகின்றார்கள். முஸ்லிம் மக்கள் தமிழ் பேசுகின்றவர்கள். வட கிழக்கு தமிழ் பேசும் பிராந்தியங்கள் கிழக்கிலும் தமிழ்மொழி பேசுவோரே பெரும்பான்மையினர்.

வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானதாகும். கடந்த 1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெற்றது. 18 வருட காலமாக வடக்கும் கிழக்கும் இணைந்தே செயற்பட்டன.

ஆகவே வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என தெரிவிப்பது தவறானதாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பேசக்கூடியவர்களே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

ஆகவே குறித்த மாகாணங்களை இணைத்து முஸ்லிம்களுக்கான அலகொன்றை வழங்குவதில் எந்த தவறும் இருக்காது. ஆகவே வலுப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

எமது ஏற்றுமதிகளைகூட்டி இறக்குமதிகளைக் குறைக்கப் பாடுபட வேண்டும். எந்தவொரு அவசரகால நிலைமையிலும் நாங்கள் எங்களைப் பாதுகாப்பான நிலையில் வைத்துக்கொள்ள சேர்ந்து ஆவன செய்ய வேண்டும். வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் கூடக்கூடும். அவர்கள் பிழைகள் செய்தால் அவர்களை அடையாளம் காட்டக்கூடியதாக நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொருளாதார ரீதியாக எம் மக்கள் தன்நிறைவு அடைய நாங்கள் எமது கடல் கடந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளோம். எமக்கென ஒரு நம்பிக்கைப்பொறுப்பை எமது கட்சி தொடங்கியுள்ளது. வெளிநாட்டு உள்நாட்டுப் பணங்கள் யாவும் நம்பிக்கைப் பொறுப்பால் ஏற்கப்பட்டு உரியவாறான செயற்றிட்டங்களை வட கிழக்கு மாகாணங்களில் இப்போது செய்து கொண்டு வருகின்றோம்.

இரணைதீவில் கடலட்டை வளர்க்குந் திட்டம் தற்போது மிக வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றது. கனடாவில் கிடைத்த பணத்தை வைத்து அதை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

அடுத்து மட்டக்களப்பில் இரு செயற்றிட்டங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. உங்கள் மக்களுக்கு, முக்கியமாக போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவர்கள் சேர்ந்து தம்மை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்தவும் தன்னிறைவை ஏய்தவும் அதற்கேற்ற செயற்றிட்டங்களை எமக்கு அடையாளப்படுத்தினால் அவற்றை நாம் பரிசீலித்துப் பார்த்து உரிய உதவிகள் செய்யக் காத்து நிற்கின்றோம்” என்றார்.

கோர விபத்து! பலர் பலி..

ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹேர பகுதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த வான் மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.