Home Blog Page 2389

வவுனியாவில் இ.போ.ச தனியார் பேரூந்து விபத்தில் 10 பேர் காயம்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை தனியார் மற்றும் இ.போ.ச பேரூந்துடன் இடம்பெற்ற விபத்தில் 10பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியாவிலிருந்து செட்டிகுளத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ.ச பேரூந்துடன் கொழும்பிலிருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து நேரியகுளம் சந்தி பகுதியில் காலை 8மணியளவில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் இ.போ.ச பேரூந்து வீதியை விட்டு தடம் புரண்டுள்ளதுடன் பேரூந்தில் பயணித்த சாரதி, நடத்துனர், தனியார் பேருந்தின் நடத்துனர் உட்பட 10பேர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த நான்குபேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தனியார் பேரூந்து அதிகவேகமாக பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் தெய்வாதினமாக எவருக்கும் உரிராபத்துக்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மக்கள் நடமாடும் நடைபாதை வியாபாரம் செய்ய நகரசபையினால் மீண்டும் தடை

வவுனியா இலுப்பையடி பகுதியில் நடைபாதையில் இன்று வியாபாரம் மேற்கொண்ட சிலர் நகரசபையினால் மீண்டும் அகற்றப்பட்டு அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

வவுனியா இலுப்பையடி பகுதியில் கடந்த வருடம் டிப்பர் வானகம் மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதையும் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் காரணமாக நெரிசல்கள், விபத்துக்கள் இடம்பெறுதை சுட்டிக்காட்டி அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத்தடை செய்யுமாறு நகர வட்டார நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கத்தினால் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன்மொழியப்பட்டதையடுத்து சபையின் அனுமதியுடன் அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு நகரசபை தலைவர் இராசலிங்கம் கௌதமனினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு சிலர் முற்பட்டபோது நகர வட்டார உறுப்பினர் ரி.கே.இராசலிங்கத்தின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து நகரசபை தலைவரின் கவனத்திற்கு நகரசபை உறுப்பினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து நகரசபை தலைவர் நகரசபை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உடனடியாக அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள மீளத்தடை செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு வியாபாரம் நடவடிக்கை மேற்கொண்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் பொலிஸாருடன் இணைந்து நகரசபையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா ஒமந்தை கமநல சேவை திணைக்களத்தில் மாபெரும் நடமாடும் சேவை

வவுனியா ஒமந்தை கமநல சேவை திணைக்களத்தில் மாபெரும் நடமாடும் சேவை இன்று காலை 09.00 மணி தொடக்கம் 04.00 மணிவரை நடைபெற்று வருகின்றது.

ஒமந்தை பிரதேச விவசாயிகளின் விவசாய நடவடிக்கை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் நோக்கில் நடாத்தப்படும் இவ் நடமாடும் சேவை வவுனியா கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதன் போது விவசாயிகளின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சனைகள், காப்புறுதி தொடர்பான பிரச்சனைகள், குளங்கள் தொடர்பான பிரச்சனைகளிற்கான உரிய தீர்வுகளை கமநல உதவி ஆணையாளரினால் வழங்கப்பட்டிருந்தது.

இவ்நடமாடும் சேவையில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கலைச்செல்வன், கமநல அபிவிருத்தி குழு தலைவர் சின்னராசா மற்றும் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC01000 வவுனியா ஒமந்தை கமநல சேவை திணைக்களத்தில் மாபெரும் நடமாடும் சேவை

ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தடை – அமெரிக்கா அறிவிப்பு

கோவிட்-19 வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை அதிகம் பாதித்துவருவதால் ஐரோப்பியா நாடுகளுக்கான பயணத்தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

எனினும் இந்த பயணத்தடையில் பிரித்தானியாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறும் அமெரிக்கா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நேற்று (11) அமெரிக்காவில் இடம்பெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின் பின்னரே அமெரிக்க அதிபர் டொனால்ட் றம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிகமாக மக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அமெரிக்க மக்களை தான் கேட்டுக்கொள்வதாகவும், அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதார வளம் கொண்ட நாடு எனவே நாம் இந்த வைரஸ் கிருமியை எதிர்த்து போரிடுவது கடினமல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தனியான ஒரு தேசம் என்பதை முரசறைவோம் 

இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம், நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை, எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை´ என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

படையினரிடம் தங்கள் உறவுகளை ஒப்படைத்த அவர்களது சொந்தங்கள் கண்ணீரும் கம்பலையுமாக அவர்களைத்தேடி அலைந்து கொண்டிருக்கும் போது அவர்களைப் பொய்யர்கள் என்று கூறுவதுபோல அனைவரையும் விடுவித்து விட்டோம் என்று பிரதமர் அப்பட்டமாகப் பொய்யுரைத்துள்ளார்.

இதற்குஅவரின் முகவர்களாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரையும் விடுவித்து விட்டோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பொ.ஐங்கரநேசன் அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியக்கோரி அவர்களது சொந்தங்கள் பலவருடங்களாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை ஏளனம் செய்வது போலப் பிரதமரின் கூற்று அமைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேரினவாதத்தை மூலதனமாகக் கொண்டு மக்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றியைப் பெற்ற ராஜபக்ஷ சகோதரர்கள் தற்போது தமிழ் மக்களின் எந்த ஒரு கோரிக்கையையேனும் கண்டு கொள்ளாமல் இலங்கையை பௌத்த சிங்கள நாடாகக் கட்டியமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இன்னொருபுறம், அவர்களது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், அவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்குக்கேட்டு வலம்வரத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தென் இலங்கையின் அரசியல் கள நிலைமைகளை அறியாது எமது தமிழ்த் தலைமைகள் எடுத்த நிலைப்பாட்டால் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியாகப் பேரம்பேசும் சக்தியும் இல்லாமற்போனது.

ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையைச் சிங்கள மக்கள் தங்களை ஒரு தனியான தேசமாகச் சிந்தித்து முடிவெடுத்தது போன்று தமிழ் மக்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியோ, பகீஸ்கரித்தோ தங்களைத் தனியான ஒரு தேசமாக நிரூபித்திருக்கமுடியும்.

எமது தலைவர்களால் தவறவிடப்பட்ட அந்த வாய்ப்பை எமது மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

சரணடைந்தவர்கள் எல்லோரையும் விடுதலை செய்துவிட்டோம், காணாமற் போனவர்கள் என்று இங்கு எவரும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்த பின்பும், அதைப்பற்றி எதுவுமே பேசாமல் வாக்குக் கேட்டுவரும் தென் இலங்கைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பேரினவாதக் கட்சிகளுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்க்கட்சிகளுக்கும் வாக்குகள் எதனையும் வழங்காது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் நாங்கள் தனியான ஒரு தேசம் என்பதை முரசறைவோம்.

மட்டக்களப்பில் இன்று கடையடைப்பு

அந்நிய நாட்டு பிரஜைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பிதத்தினை அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கோறனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்படுகின்றது.

புhடசாலைகள் இயங்குகின்றபோதிலும் மாணவர்களின் வரவு குறைவான நிலையிலேயே இருப்பதை காணமுடிகின்றது.அரச அலுவலகங்கள் இயங்குகின்ற நிலையிலும் மக்களின் வரவு குறைவாக காணப்படுவதன் காரணமாக அரச அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெறுகின்றபோதிலும் உள்ளுர் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.IMG 6672 மட்டக்களப்பில் இன்று கடையடைப்பு

இத்தாலி,ஈரான்,கொரிய நாட்டில் இருந்துவரும் பயணிகள் மட்டக்களப்பு கம்பசிற்கு கொண்டுவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு அவர்களில் கொறனா அறிகுறிகள் தென்படுவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டு பிரஜைகளை கொரனாவில் இருந்து பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.ஆனால் வெளிநாட்டவர்களை அழைத்துவந்து பராமரிக்கவேண்டிய தேவை எமக்கு இல்லை.IMG 6634 மட்டக்களப்பில் இன்று கடையடைப்பு

இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொறனா தொற்று ஏற்பட்டால் இந்த மாவட்டம் தனிப்படுத்தப்படும் நிலையேற்படும்.இந்த அனர்த்ததில் இருந்து எமது மாவட்டத்தினை பாதுகாக்க வீட்டுக்குள் முடக்கி வீதிகளை வெறிச்சோடச்செய்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் என தமிழ் உணர்வாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.

தொழில் வாய்ப்பு அற்ற பட்டதாரிகான நியமன பெயர்ப் பட்டியல் வெளியீடு .

தொழில் வாய்ப்பு அற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்று 3 நாட்களுக்குள் இவர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவிற்கு சமூகமளிக்க வேண்டும் என்று நியமனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டடிருந்த போதிலும் நியமனக்கடிதம் கிடைக்கப்பெறாதோர் இது தொடர்பில் எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்திக்கொள்ளத்தேவையில்லை.

கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்கு பயிற்சிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் இது தற்பொழுது நடைமுறையில் இல்லை. தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய பொது தேர்தல் நிறைவடைந்து 5 நாட்களுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வன்னியில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவுகள் முடிவிற்கு வந்தது!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்னர்.

அந்த வகையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழரசு கட்சியில் சார்ல்ஸ் நிர்மலநாதன், சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி ஸ்ரீகந்தராசா, பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழீழ விடுதலை இயக்கத்தில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், செந்தில்நாதன் மயூரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தையா சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவதாக அறியமுடிகிறது.

டெலோவில் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளர் இதுவரை தேர்வுசெய்யபடாத நிலையில் முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனை வேட்பாளராக நியமிக்க கட்சியின் தலைமை குழு தீர்மானித்துள்ளதுடன் அதனை மயூரன் ஏற்றுகொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

வவுனியா பாவக்குளத்தில் சிறுமி மீது பாலியல் வல்லுறவு பாடசாலையொன்றின் அதிபர் மீது சந்தேகம்

வவுனியா பாவக்குளம் படிவம் 2 இல் சிறுமியொருவரை பாடசாலையொன்றின் அதிபர் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

செட்டிகுளம் படிவம் 2 வசிப்பவரும் காக்கையன்குளத்தில் பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றும் நபரொருவர் அதே கிராமத்தில் வசிக்கும் தாய் தந்தையை பிரிந்து வாழும் 16 வயதுடைய சிறுமியை தனது வீட்டில் தங்க வைத்துள்ளர். இந்நிலையில் சிறுமி மீது அதிபரினால் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக அயலவர்களினால் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள் குழு குறித்த கிராமத்திற்கு சென்று சிறுமியுடன் கலந்துரையாடிதன் அடிப்படையில் சிறுமி 15 வயதில் இருந்து உடல் ரீதியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் குழு செட்டிகுளம் பொலிஸாரின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் சிறுமியை ஒப்படைத்துள்ளனர்.

இதன் பிரகாரம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் தமது தரப்பு வாக்குமூலத்தினை பொலிஸாருக்கு வழங்கியதையடுத்து சிறுமியிடம் செட்டிகுளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரான அதிபரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா முகாமுக்கு எதிராக மட்டக்களப்பில் கடையடைப்பு! இன்று நடத்துவதற்கு ஏற்பாடு

கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டக்களப்பு – புணானையில் அமைந்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் தங்கவைக்கப்பட்டு, 14 நாள்களுக்குக் கண்காணிக்க அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு
மாவட்டம் இன்று முழுமையாக முடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையயான்றை வெளியிட்டுள்ள தமிழ் உணர்வாளர் கள் அமைப்பின் தலைவர் க.மோகன் –

எமது நாட்டுப் பிரஜைகள் எவரேனும் பாதிக்கப்பட்டால், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு, எம் எல்லோருக்கும் இருக்கின்றபோதிலும், தொற்று வேகமாக பரவிவரும் நாடுகளிலிருந்து வருபவர்களை, இங்கு அனுமதிக்க முடியாது.

மட்டக்களப்பு மாவட்டம், சகல வழிகளிலும் பின்தள்ளப்பட்டுள்ள நிலையில்,
ஒருவருக்கேனும் நோய்த் தொற்று ஏற்பட்டால், மாவட்டம் முழுவதும் தனிமைப் படுத்தப்பட்டுவிடும். இதனால், அரசின் இந்த முடிவை எதிர்த்து இன்று மாவட்டம் முடக்கப்படும்.

மாவட்டத்தைச் சேர்ந்த எல்லோரும் இன்று வீட்டுக்குள் முடங்கி, தங்களது
எதிர்ப்பை வெளிக்காட்டுவதுடன் உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட
மக்கள் நலன்பெறவேண்டி இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும் – என்றார்.