Home Blog Page 2382

மத விழிபாட்டுத் தளங்களில் நிகழ்வுகளை தவிர்க்குமாறு வேண்டுகோள்

கொரோனா வைரஸ் (COVID 19 ) ஒழிப்பு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகளை, விழாக்களை, வைபவங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கை சைவ ஆலயங்களின் நிர்வாகங்கள், தேவாலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களிடம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிற்கு கொரோனா பரிசோதனைக்காக 70 பேர்

கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக மேலும் 70 பேர் வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமிற்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் கடந்த (13.06.2020) அன்று மாலை வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு, பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று (16.03.2020) மதியம் 3.30 மணி அளவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 70 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 2 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு 70 பேர் வவுனியா, பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23 வது பற்றாலியன் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த குறித்த நபர்களை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அத்துரலிய ரத்ன தேரர்

பொதுஜன பெரமுன கட்சி தனக்கு ஆசனம் வழங்கவில்லை என்பதனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் தனித்துப் போட்டியிடப் போவதாக அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

இதற்கமைவாக அபே ஜனபல பக்ஷய என்னும் கட்சியின் சார்பாக தான் தனித்து போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார்.

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பினர் தோல்வி கண்டால், அது தமிழினத்தின் தோல்வி செந்தில்நாதன் மயூரன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் தோல்வி அடையுமாக இருந்தால், அது ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான படுதோல்வி என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக நாடாளுமன்றத் தேர்தலை நான் சந்திக்கின்றேன். இதுவரை காலமும் ஏனைய வேட்பாளர்களுக்காக உங்களுடைய பிரதேசங்களில் வாக்குகளை சேகரிக்க வந்த நான், இன்று முதல் தடவையாக எனக்கு உங்களுடைய வாக்குகளை பெறுவதற்காக உங்கள் முன் நிற்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் கூட்டமைப்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பல விமர்சனங்கள் இருக்கின்றது. அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இருக்கின்ற விமர்சனங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் கருத்துக்கள் தான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலமிழக்க செய்வதாக அமைகின்றன.

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிக்கொண்டு, அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கான வாய்ப்பினை நீங்கள் வழங்கா விட்டால், இனிவரும் காலங்களில் இளைஞர்கள் ஒரு தேர்தலை அல்லது ஒரு அரசியலை சந்திக்கப் பயப்படுவார்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கு நீங்கள் ஒரு வாய்ப்பினை அளிக்கின்ற சந்தர்பபத்திலே உங்களுடைய வாக்குகளுக்கு நம்பிக்கை இல்லாதவனாக நான் மாறுகின்ற சந்தர்ப்பம் ஏற்படுமானால், அந்த கதிரையை அலங்கரிக்க மாட்டேன் என நான் உங்களுக்கு சத்தியம் செய்கின்றேன். உங்களை வைத்து அரசியல் செய்த காலம் போய் இளைஞர்கள் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம்.

கடந்த காலங்களிலே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் காரணமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமிழந்து சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு அவர்களே பதில் கூற வேண்டும். இருபத்தியிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக மாறியுள்ளோம்.

நீங்கள் எங்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பு. உங்களுக்கான சரியான அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். எங்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக சுயேட்சை கட்சிகள் களம் இறக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் நோக்கங்கள் சிங்கள தேசிய கட்சிகள் ஊடாக எங்களின் வன்னி மாவட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என்பது தான்.

ஒவ்வொரு கட்சிகளும் அரசியல் நோக்கத்துடன் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் எங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை தொடக்கம் அடிப்படைப் பிரச்சினை வரை பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் தோல்வி அடயுமாக இருந்தால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான இழப்பல்ல. ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான படுதோல்வி என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் .

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் வேட்பு மனுபத்திரத்தில் கையொப்பம் இட்டார்.

வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொது செயலாளருமாகிய சிவசக்தி ஆனந்தன் இன்றைய தினம் வேட்பு மனு பத்திரத்தில் கையொப்பம் இட்டார்.

இந் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,தியாகராஜா,இந்திரராசா மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களான அருந்தவராஜா,மதிகரன்,பரமேஸ்வரன்,சஜீ ஆகியோரும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

02 1 வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் .

தனியார் கல்வி நிலையம் முற்றுகை;வழக்கும் பதிவுசெய்யப்பட்டது

மட்டக்களப்பு மாநகர சபையின் தீர்மானத்தினை மீறி வகுப்புகளை நடாத்திய மட்டக்களப்பின் பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், கல்வி அமைச்சானது மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பாடாசாலைகளை மூடி இந்நோய்த் தொற்று ஏற்படாமால் தடுக்க மாணவர்களுக்கு விடுமுறையளித்துள்ளது.

இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் நோக்கோடும், மாநகருக்குள் வதியும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்தப்பட வேண்டும் எனும் தீர்மானத்தினை மாநகர சபையானது நிறைவேற்றியதுடன்ää அதற்குரிய அறிவிப்புகளும் விடுக்கப்படிருந்தன.

இந்நிலையில் மேற்படித் தீர்மானத்தினை மீறி மட்டக்களப்பு அரசடிப் பகுதியில் வகுப்புகளை நடாத்திகொண்டிருந்த பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினை மட்டக்களப்பு பொலிஸார், சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் முற்றுகையிட்டதுடன் வழக்குத் தாக்கலும் செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு நோய்த் தொற்றினை பரப்பக்கூடிய வகையில் செயற்பட்டமை மற்றும் அரச சட்டதிட்டங்களை மீறி நடந்து கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுத் தேர்தலின்போது உயிராபத்துகள் ஏற்பட்டால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொள்ளாது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் உயிராபத்துகள் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தற்பேதைய அரசாங்கம் உள்ளிட்ட சகல அரசில் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான செயற்முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து இதுவரை எவரும் ஆழ்ந்து சிந்திக்கவில்லை என கூறிய அவர், அரசியல்வாதிகளை விடவும் நாட்டு மக்கள் அதன் பாரதூரதன்மையை அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் இது குறித்து உறுதியான தீர்மானம் ஒன்று எட்டப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஏதேனும் உயிராபத்துகள் ஏற்படுமாயின் அதற்கான அனைத்து பொறுப்புகளையும் அரசியவாதிகள் ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.

அனைவருக்கும் தேர்தல் ஒன்றின் தேவை உள்ளதாக தெரிவித்த அவர் உயிராபத்துகள் ஏற்பட்டால் பொது மக்கள் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் எனவும் கூறினார்.

யாழ் விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் சேவைகள் இடம்பெறும்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக கூறப்பட்டபோதும் உள்ளூர் விமான சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) வழமைபோன்று விமானம் காலை 7.30 மணிக்கு இரத்மலானையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இதன்பின்னர் மீண்டும் காலை 9.20 மணிக்கு பயணிகளுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவரை கொரோனா பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் அதிரடி நடவடிக்கை

வவுனியா- இரேசேந்திரகுளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தை, கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய பரிசோதனைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘வவுனியா- இராசேந்திரகுளத்திலுள்ள வீடொன்றில்,  வெளிநாட்டிலிருந்து  வருகை தந்தவர்கள் தங்கியிருப்பதாக, பொலிஸாருக்கு பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த இடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த  விசாரணையின் பின்னர், அந்த குடும்பத்தினருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

பெல்ஜியத்தில் இருந்து நேற்றையதினம் இலங்கை வருகைதந்த கணவனும் கடந்தமாத இறுதியில் வருகை தந்திருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுமே கொரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுத்தேர்தலினை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை!

நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இவ் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்படுகின்றது.

நாட்டிலே தற்போது நிலவுகின்ற COVID 19 வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக அரசாங்கம் தகுந்த உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுக்க வேண்டும்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.

இவ்விடயத்தில் முற்றுமுழுதாக எமது பங்களிப்பினை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

மக்களுடைய பாதுகாப்பிற்கு அதியுச்ச கரிசனை வழங்கப்பட வேண்டும் என்பதாலும் இவ் அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்த முடியாத காரணத்தாலும் ஏப்ரல் 25ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை பிற்போடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.