ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்கப்பட்டிருந்த காலப் பகுதியில் அரசாங்கத்தின் உத்தரவை மீறி புத்தளத்திலிருந்து கடல் மார்க்கமாக மன்னார் செல்ல முயற்சித்த 20 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும், மூன்று குழந்தைகளும் அடங்குவதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
குறித்த காலப் பகுதியில் எந்தவொரு நபரும் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த காலப் பகுதியில் ஊடக சேவை மற்றும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோர் மாத்திரம் வெளியில் செல்ல அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் உத்தரவை மீறி வெளியில் நடமாடுவோரை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை நேற்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை வழிமறித்துள்ளனர். பொலிஸாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தித் தப்பிச் சென்றனர்.
அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸ் குழுவினர் அந்த இருவரையும் துரத்திச் சென்று பூங்கா வீதியில் வைத்து மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறிப் பயணித்தமை போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்த இருவரையும் பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாகத் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“நாட்டில் உருவாகியுள்ள நிலமைகளுக்கு மத்தியில் மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியைப் பேணுமாறு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பேணுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பேருந்து மற்றும் ரயில் சேவை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பேணுவதற்காக பஸ்களிலும் ரயில்களிலும் பயணிகள் பயணம் செய்வதற்கான எண்ணிக்கையில் அரைவாசி எண்ணிக்கையானோர் மட்டுமே பயணிக்க முடியும்.
அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் ஏனைய பொருள்களை சதொச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு போதுமானளவு அரசு விநியோகித்துள்ளது. மக்கள் அசெளகரியத்திற்குள்ளாகாத வகையில் அவற்றை விநியோகிக்குமாறு அந்த விற்பனைநிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றுள்ளது.
கொரொனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முழு நாட்டையும் முடக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கும் அரசாங்கம், மேலும் தீவிர நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக அவரசகாலச் சட்டத்தைப் பிறபபிப்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றது என ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
அரசாங்க உயர் வட்டாரலிகள் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பிப்பதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து இன்று காலையில் தீவிர மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்ததாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்புலத்தில், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவரசகால விதிகளைப் பிறப்பிப்பதில் உள்ள விளைவுகள் குறித்து சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்புத் தரப்போடு அரசு உயர் மட்டம் இன்று காலை தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள் களமிறங்கியுள்ளார்கள்.
தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா நோய் தொடர்பான பயிற்சிப்பட்டறையைத் தொடர்ந்து அவர்கள் இந்த விழிப்புணர்வுச் செயல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சமுகத்திலுள்ள தன்னெழுச்சி மிக்க இளைஞர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் காலை 11 மணி அளவில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ந.சத்தியமூர்த்தி மற்றும் வைத்திய கலாநிதிகளின் தலைமையில் கொரோனா நோய் தொடர்பான ஒரு பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையின் ஊடாக பல்வேறு கருத்துக்களை வைத்தியர்கள் கூறியிருந்தார்கள். அதிலும் குறிப்பாக சமுக வலைத்தளங்களினால் பரப்பப்படும் சில தவறான தகவல்களின் ஊடாக இளைஞர்கள் மத்தியில் இந் நோய் தொடர்பில் ஓர் அச்ச உணர்வு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் பொதுமக்கள் வீணான அச்ச உணர்வை தவிர்த்து நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருந்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் வைத்தியர்களோஅல்லது சுகாதார ஊழியர்களோ கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தமக்கு மேலதிகமாக தன்னார்வ தொண்டர்களின் உதவி தேவைப்படின் அவர்களது செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு நிச்சயம் தாம் தயாராக இருப்பதாகவும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்
கரோனா வைரஸ் குறித்து சீனா மறைத்ததால் உலகமே மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இதுவரை 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனாவுக்கு வெளியே பலியானவர்கள் ஆவர்.
இந்த வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக மனிதர்களிடையே கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”அபாயகரமான கரோனா வைரஸ் குறித்து சீனா தெரிவிக்கவில்லை. கரோனா குறித்து சில மாதங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சீனாவில் எந்தப் பகுதியில் நோய்த் தொற்று தொடங்கியதோ, அங்கேயே கட்டுப்படுத்தி இருக்க முடியும். அவர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லததால், உலகமே மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு ஏற்கெனவே இதுகுறித்துத் தெரிந்திருந்தால், ஓரிடத்தில் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். இப்போது அனைத்து நாடுகளும் இதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இது மிகவும் மோசமான ஒன்று” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கரோனாவை சீன வைரஸ் என்று ட்ரம்ப் கூறியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இவர்களின் கருணை மனுக்களையும் குடியரசுத்தலைவர் நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 20) காலை 5.30 மணிக்கு திகார் சிறையில் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகு இது குறித்து பேசிய நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, ”கடைசியாக அவர்கள் தூக்கிலடப்பட்டனர். இன்று தான் எங்களுக்கு நீதி கிடைத்தது. இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு இன்றைய நாள் சமர்ப்பிக்கப்படுகிறது. நீதித்துறைக்கு, அரசுக்கும் அந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீதிக்கு கிடைத்த வெற்றி இது” என்று கூறினார்.
இந்நிலையில், “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது” என்று நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2012-ம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.
2012 டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.
2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
2017 மே: தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதார தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்துங்கள் என புதிய அரச பொது ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அச்சங்கத்தின் செயலாளர் இராமன் சித்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவி;த அவர்,
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு முகமாக உலக சுகாதார அமைப்பு மற்றும் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் அறிவுரைகளை பின்னபற்றுமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றோம். எனவே இவ்வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்கும் முகமாக சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதோடு எங்களது பகுதிகளுக்கு புதிய நபர்களின் வருகையையும் அரசிடம் தெரிவிக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. மேலும் எங்களது கைகளை சுத்தமாக கழுவ வேண்டியதுடன், மற்றொருவருடன் உரையாடும் போது குறிப்பிட்ட தூரத்திலிருந்து உரையாட வேண்டும்.
வடபகுதியில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு தொழிலாளர்களும் தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கமையாற்ற வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு என்பது எங்களுடைய அத்தியாவசிய கடமையாக உள்ளது. எனவே இக்கடமையில் ஈடுபடும் நாங்கள் எங்களை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. எங்களது தேவைகளை பூரத்தி செய்யும் முகமாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களில் உள்ள அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளதுடன், அரசும் எங்களுக்கான நன்மைகளை செய்து வருகின்றது.
கொரோனா வைரஸ் தீவிரமடைந்து பலர் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவையுள்ள திணைக்களங்களின் சேவை முடங்கியிருக்கின்ற வகையிலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் செயற்படும் படி கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அத்தியாவசிய சேவையை செய்கின்ற உள்ளூராட்சி ஊழியர்களும் மனிதர்கள்என்பதை கருத்திற்கொண்டு அரச அதிகாரிகள் அவர்களையும் மனித நேயத்துடன் உற்று நோக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு இவ் கொரோனா வைரஸ் தாக்காத படியாக கவனம் செலுத்த வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மனிதர்களுடன் அதிகம் பழக வேண்டிய தேவையிருப்பதுடன் அவர்கள் தொட்ட பொருட்களை தொடவேண்டிய தேவையும் உள்ளது.
இத்தொற்று நோயில் இருந்து தடுக்கும் முகமாக திணைக்களங்களில் கைவிரல் அடையாளம் இடும் செயற்பாடு இடம்பெறுகின்றது. இதன் மூலமாக கைவிரல்களில் இருந்து கிருமி தொற்று ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது. எனவே திணைக்களங்களில் பேணப்படும் கைவிரல் அடையாளங்களை தற்காலிகமாக நீக்குமாறும், அவ் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும்; வடமாகாண ஊழியரகள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம். மேலும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் கோட்டாபய அரசு பெரும்பாண்மையை பெற்றால் தமிழர்களிற்கு பாதகமான சட்டங்கள் உருவாகும் முன்னாள் மாகாண அமைச்சரும், தற்போதைய தமிழரசுகட்சியின் வேட்பாளருமான ப.
சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டசெயலகத்தில் நேற்றயதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இருந்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக 53 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்
வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. இது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடு. தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழ் கட்சிகள் வெற்றிபெறாமல் தேசிய கட்சிகள் ்அல்லது அவர்களிற்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளின் வெற்றிக்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு சதி நடவடிக்கையாகவே இதனை பார்க்க முடியும். அதனை எமது மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். எனவே தமிழ் கூட்டமைப்பிற்கு வாக்களித்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
தற்போதைய அரசாங்கம் பெரும்பாண்மையை பெற்று அதனூடாக காட்டு ஆட்சி ஒன்றை நடாத்துவதற்கும் அவர்கள் நினைத்த சட்டங்களை உருவாக்கி தமக்கு பாதகமான சட்டங்களை இல்லாதொழிப்பதற்கும் அல்லது தமிழ் மக்களிற்கு சாதகமான சட்டங்களை மாற்றி பாதகமான சட்டங்களை உருவாக்குவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவதற்கு பல்வேறு வேலைதிட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எனவே தேசிய கட்சிகளிற்கோ அல்லது தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சுயேட்சை குழுக்களிற்கோ வாக்களிக்காமல் அவர்களிற்கு தகுந்த பாடத்தை மக்கள் கொடுக்கவேண்டும். கூட்டமைப்பை பலப்படுத்துவதூடாக வன்னி தொகுதியினுடைய மூன்று மாவட்டங்களும் பேரினவாதிகளிற்கு இரையாகமல் இருப்பதற்கு மக்கள் உழைக்கவேண்டிய தேவை இருக்கிறது.
நாம் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடுவோமாக இருந்தால் அம்பாறை மற்றும் திருகோணமலையை போல ஒரு ஆசனத்தை தக்கவைப்பதற்கு ஓடித்திரிய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே மக்கள் அவதானமாக செயற்படவேண்டும். கோட்டாவின் அரசு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெறுவதற்கு ஒரு வாக்கினை கூட எமது மக்கள் வழங்க கூடாது. என்றார்.
இந்து ஆலயங்களில் திருவிழாக்களையும் மகோட்சவங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.
இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் நிர்வாகத்தினரால் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு வவுனியா ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டில் பேசுபொருளாகவும் அச்சுறுத்தல் விடுக்கும் விடயமாகவும் கருதப்படும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய வவுனியாவில் இருக்கும் இந்து ஆலயங்களில் இடம்பெறும் நித்திய நைமித்திய பூஜை நிகழ்வுகளின் போது மக்கள் கூடுவதைத் தவிர்த்து ஆலயக் கடமைகளை நிறைவேற்றவேண்டுமென அனைத்து இந்து ஆலயங்களின் பரிபாலன சபையினருக்கும் பக்தர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் நோக்குடனேயே குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இந்துக்களின் கடமையாக இருக்கும் நித்திய நைமித்திய பூஜைகளை சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் திருவிழாக்கள்இ மகோட்சவங்களை தற்காலிகமாக தவிர்க்குமாறும் தெரிவித்தனர்.
குறித்த தகவலை அனைத்து ஆலயங்களின் நிர்வாகத்தினரையும் தமது அலுயத்தின் ஒலிபெருக்கி மூலமாக பரிமாறுவதுடன் கொரனா பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வ அனைவருக்கும் பரிமாறும் இதன்போது தெரிவித்திருந்தனர்.