Home Blog Page 2371

வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முழுமையாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கொரனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்குசட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதேவளை வவுனியா பொலிசாரால் 8 பேர் கைதுசெய்யபட்டுள்ளதுடன் அவர்களில் 6 பேர் போக்குவரத்து விதி மீறல் குற்றங்களிற்காகவும் இருவர் அவசியமின்றி வீதிகளில் திரிந்தமைக்காவும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை ஆதரவற்ற பிச்சைகாரர்கள் செல்ல வழியில்லாமல்வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் உணவின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.வவுனியாவில் வேலைநிமித்தம் வருகைதந்த சிலர் தமது சொந்த ஊர்களிற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இன்றி வீதிகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அவர்களிற்கு வீதிளில் நடமாடுவதற்கான தற்காலிக அனுமதிபத்திரம் பொலிசாரால் வழங்கப்பட்டுள்ளது.

DSC02194 வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

DSC02207 வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

DSC02233 வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

DSC02241 1 வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

தீவிரமடையும் கொரோனா வைரஸ் – ஆபத்தான நிலையில் இருவர்

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றிரவு மேலும் 2 கொரோனா நோயாளர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட இரண்டு நோயாளர்களின் நிலைமை தீவிரமாக உள்ளதாகவும், குறித்த இருவரும் நிமோனியா நிலைமைக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடன் அதிகமானோர் அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 88ஆகும் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 48 மணிநேரத்தில் புதிய கொரோனா நோயாளிகள் இல்லை

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடம் சீனாவின் உகான் நகராகும். சீனாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளான மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த நகரை உள்ளடக்கிய ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தற்போது சீன அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் பலனாக இந்த நகரில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி தொடர்ந்து 2 வது நாளாக புதிதாக யாரும் இந்த தொற்றுக்கு ஆளாகவில்லை. எனினும் உகானைச் சேர்ந்த 50,005 பேர் தொடர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உகான் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சீனாவிலும் 2 நாட்களாக புதிய நோயாளிகள் யாரும் இல்லை என அரசு அறிவித்து உள்ளது. அங்கு மேலும் 3 பேர் இந்த நோய்க்கு உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த 3,248 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்படி உள்நாட்டு மக்கள் யாரும் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருபவர்கள் வைரஸ் தொற்றுடன் வரும் விவகாரம் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. அப்படி வந்தவர்களில் 39 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் வைரஸ் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 228 ஆக அதிகரித்து உள்ளது.

பொருட்களை பதுக்கிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை. முறைப்பாடுகள் இருப்பின் முறையிடவும்.

கடந்த 3 தினங்களில் தகரத்தில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன், பருப்பு போன்றவற்றை கூடிய விலையில் விற்பனை செய்த 6 வியாபார நிலையங்களுக்கு எதிராகவும் பொருட்களை பதுக்கிய வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் பாவனையாளர்களின் நலன் கருதி மாவட்டத்தின் பல பாகங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

குறிப்பாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை கண்காணிப்பதுடன் கூடிய விலையில் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

கடந்த 3 தினங்களில் பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன் போன்றவற்றை கூடிய விலையில் விற்பனை செய்த 6 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
பொருட்களை பதுக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகிறது. அத்தகைய இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை வர்த்தகர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை தவிர்த்து பொதுமக்களின் நலன் கருதி மனிதநேயத்துடன் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வர்த்தகர்களை கேட்டுக் கொள்வதுடன் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் 024 – 22 28 932 என்ற அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அவசர இலக்கமான 1977 என்ற இலக்கத்திற்கோ தகவலை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக மேலும் தெரிவித்தார்.

கொரனா சந்தேகத்தில் அரச அலுவலர் அனுமதி!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் கொரனாவைரஸ் தாக்கியுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வ்வுனியா செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த நபர் வெளிநாட்டில் வசிப்போருடன் தொடர்புகளை பேணியதன் காரணத்தினால் சந்தேகத்தின் அடிப்படையில் இன்றுகாலை அம்புலன்ஸ் வாகனம் மூலம் வவுனியா பொது வைத்தியசாலையின் தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் இரத்த மாதிரிகளை பெற்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்களிற்காக அனுப்பிவைத்துள்ளனர்.

கொரோனாவால் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம், நெடுஞ்சாலைகள் மூடல்

இலங்கையில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், அரசாங்கம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதனால் அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று(20) மாலை 6 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6மணிவரை இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் சகல அதிவேக நெடுஞ்சாலைகள் இன்று 4 மணியுடன் மூடப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் இன்று 6மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுமென பொலிசார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஞாயிறு அன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(22) அன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கை அமுல்ப்படுத்தும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று(19) இரவு 8மணிக்கு காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி அவர்கள், எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொண்டார். சுயஊரடங்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுய ஊரடங்கு நடக்கும் போது வீடுகளில் மட்டுமல்லாமல் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடவசதியும் வழங்கும்படி மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிகழ்வில் சென்னையில் கோயம்பேடு வணிக வளாகம் உட்பட வணிகர் சங்கங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து செயற்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வை அனைத்து மாநில ஆளுநர்களும் வரவேற்றுள்ளதுடன், தங்களின் ஒத்துழைப்பையும் வழங்கக் காத்திருப்பதாக அறிவித்துள்ளனர்

வடமராட்சி கிழக்கில் கடற்படை தேடுதல்

வடமராட்சி கிழக்குக் கடற்பகுதியில் நேற்றுக் காலை முதல் கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்தக் கடற்பகுதி ஊடாக அடையாளம் தெரியாத சிலர் படகுகள் மூலம் நாட்டுக்குள் வந்துள்ளனர் எனத் தெரிவித்து இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதி மீனவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மீனவர்களின் அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எனினும், சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.

புத்தளத்திலிருந்து கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முற்பட்ட 3 பெண்கள் உட்பட 20 பேர் கைது

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்கப்பட்டிருந்த காலப் பகுதியில் அரசாங்கத்தின் உத்தரவை மீறி புத்தளத்திலிருந்து கடல் மார்க்கமாக மன்னார் செல்ல முயற்சித்த 20 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும், மூன்று குழந்தைகளும் அடங்குவதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த காலப் பகுதியில் எந்தவொரு நபரும் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த காலப் பகுதியில் ஊடக சேவை மற்றும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோர் மாத்திரம் வெளியில் செல்ல அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் உத்தரவை மீறி வெளியில் நடமாடுவோரை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கை மீறிய இருவர் வவுனியாவில் கைது

வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை நேற்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை வழிமறித்துள்ளனர். பொலிஸாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தித் தப்பிச் சென்றனர்.

அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸ் குழுவினர் அந்த இருவரையும் துரத்திச் சென்று பூங்கா வீதியில் வைத்து மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறிப் பயணித்தமை போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்த இருவரையும் பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.