முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
கரு ஜயசூரிய உட்பட ஆறு முக்கிய அரசியல்வாதிகள் அரசியலிலிருந்து ஓய்வு?
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. அத்துடன் அவர்கள் கட்சிகளின் தேசிய பட்டியலிலும் இடம்பறவில்லை. முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, சாகல ரத்னாயக்க, நிசாந்த முத்துயஹட்டிகம,மயந்த திஸநாயக்க, வசந்த சேனநாயக்க மற்றும் எஸ்.பி நாவின்ன ஆகியோரே அவர்களாவர்.
ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபட்டதனால் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய முடிவெடுத்துள்ளார். அதேபோன்று சாகல ரத்னாயக்க போட்டியிடுவதற்கு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மயந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவுசெய்துள்ளார்.
இதேவேளை நிசாந்த முத்துயஹட்டிகமவிற்கு பொது ஜன பெரமுனவிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை.இவர் காலி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எதிர்பாரத்திருந்தார். தேர்தல் ஆணையகத்தின் தகவல்களின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்து 3652 வேட பாளர்களும் சுயேச்சைக்குழுக்களில் இருந்து 3800 வேட்பாளர்களும் என மொத்தம் 7452 பேர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அதாவது 924 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 352 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும் 572 பேர் சுயேச்சைக்குழுக்களில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன், மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது.
சட்டத்தை மீறிய 1589 பேர் கைது.
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,589 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள் உட்பட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் நேற்று இரவு 10 மணி ஆன காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் போதகரைச் சந்தித்தவர்களாம்: நானாட்டானில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன
மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் குறித்த 11 குடும்பங்களும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படு கின்றது.
சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த போதகர் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மத போதனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அந்தப் போதகர் மீண்டும் சுவிஸ் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற நிலையில் அந்தப் போதகருக்கு “கொரோனா’ நோய்த் தொற்று உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இருந்தும் பலர் அந்த கூட் டத்திற்கு சென்றுள்ளார்கள் என்று சுகாதார துறையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட மடுக்கரை மற்றும் அச்சங்குளம் கிராமங்களில் 5 குடும்பங்களும், மடுப்பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டன.
அதனையடுத்து அவர்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர். இந்த 11 குடும்பங்களும் அவர்களுடைய வீடுகளிலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் அந்த கூட்டத்தில் தாம் கலந்து கொள்ள வில்லை எனத் தெரிவித்துள்ளனர். எனினும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்படி 11 குடும்பத்தினரும் அவர்களுடைய வீடுகளில் தனிமை படுத்திவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களுக்கான மருத்துவம், சுகாதாரம், உலர் உணவு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொடர்பாக வடமாகாணத்திற்கு ஒரு செயலணி வேண்டும் என்கிறார் சிவமோகன்
வடமாகாணத்திற்கு கொரோனா தொற்று தொடர்பாக ஒரு செயலணி வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தொரிவித்தார்.
இன்று வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள், பேருந்துகளில் பல முகாம்களிற்கு கொண்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது ஒரு நல்ல விடயம். இவ்வாறு பேருந்துகளில் சந்தேகத்திற்கு உரியவர்களை ஏற்றிச்செல்லும் போது முறையாக அழைத்து செல்ல வேண்டும்.
இன்றைய தினம் பேருந்துகளில் அழைத்து சென்ற போது பேருந்துகளின் ஜன்னல்கள் திறந்த நிலையில் சென்றதுடன் சரியான பாதுகாப்பு முறையில் செல்லவில்லை. எனவே இவர்கள் இந்த ஜன்னலின் ஊடாக துப்பினாலோ, வாந்தி எடுத்தாலோ அவை கூட எமது பிரதேசங்களில் அநாவசிய தொற்றுக்களை ஏற்படுத்தலாம். இப்படியான விடயங்கள் எமது வடமாகாணத்தை பாதிக்கும். இவ்வாறு கொரோனா தொற்று என சந்தேகத்தில் கொண்டு வருபவர்கள் யார் எங்கிருந்து வருகின்றார்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், என்பவற்றை சுகாதார திணைக்களங்கள் அறிந்து கொள்ளாமலே இருக்கின்றது.
அனைத்து விடயங்களையும் இராணுவமே பார்க்கின்றது. இது ஒரு தவறான விடயம். இங்கு சுகாதார திணைக்களம் இருக்கின்றது,சுகாதார அமைச்சு இருக்கின்றது. ஒரு சுகாதார அமைச்சு தேசிய செயலணி ஊடாக நடைமுறைப்படுத்தும் விடயங்கள் அனைத்தும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவிடத்து மக்களிடத்தே பாரிய ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்.
தேசிய ரீதியில் செயலணி ஒன்று இருந்தாலும் மாகாண ரீதியில் செயலணி ஒன்று உருவாக்கப்படாமல் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஒரு கூட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றார். அங்கு சகல சுகாதார திணைக்களத்தை சேர்ந்தவர்களை அழைத்திருந்தார். இருந்தபோதும் அக்கூட்டத்தில் இராணுவத்தினரை காணவில்லை.
இதேபோன்று மீண்டும் இராணுவத்தினர் ஒரு கூட்டத்தை கூட்டுவார்கள். அரசியல் கட்சிக்காரர்கள் ஒரு கூட்டத்தை கூட்டுவார்கள். இது ஒரு அரசியல் சம்மந்தமான விடயமாக மாறிவிடும். இது ஒரு நோய் சம்மந்தப்பட்ட விடயம் மக்கள் சம்மந்தப்பட்ட விடயம் எனவே பொதுவான ஒரு செயலணி வடமாகாணத்திற்கு என்று உருவாக்கப்படாதவிடத்து வடமாகாணம் ஒரு பாரிய பாதிப்பை சந்திக்குமா என்ற சந்தேகம் எழுகின்றது.
எனவே என்னுடைய வேண்டுகோள் தேசிய செயலணியின் ஆலோசனையின் கீழ் வடமாகாணத்திற்கான செயலணி உருவாக்கப்பட வேண்டும். இச்செயலணியில் அரசாங்க அதிபர்கள், சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் அனைவரும் உள்ளடக்கப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதற்கு ஊடகவியலாளர்களை அழைத்து சந்தேகங்கள் எதுவும் இருந்தால், அதனை தெளிவுபடுத்தினால் குழப்பநிலை ஏற்படாது. இதன் மூலம் வடமாகாணத்தில் நோயை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க போகின்றோம். எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்க போகின்றோம் அதற்கான தீர்வு என்ன.
என்னென்ன பிழையான விடயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதனை எவ்வாறு தீர்க்கப்போகின்றோம் என்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
வடமாகாணத்தில் ஒரு நோயாளியும் இல்லாத நிலையில் ஒரு நோயாளி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தோடு 130 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும் எமக்கொரு சவாலாக அமைகின்றது.
வரும் முன் காப்போம் என்ற திட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்காதவிடத்து தேசிய தொற்று நோயியல் பிரிவில் எமது நோயாளிகளை உள்வாங்கப்பட முடியாத நிலை ஏற்படும் இடத்து எமது நோயாளிகளை பாதுகாப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்ற கோள்வி எழுகின்றது. எனவே மூடு மந்திரம் இல்லாமல் இந்த அரசு வெளிப்படையாக செயற்பட வேண்டும்
ஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிஇரவு பகலாக கடமையில் ஈடுபடும் வவுனியா சுகாதார பரிசோதகர்கள்
எ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.
யாழில் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இனம்காணப்பட்ட நிலையில் வடமாகாணத்திற்கான ஊரடங்கு காலம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பின்னர் ஓமந்தை, மற்றும் கனகராயன்குளம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், எ9 வீதி மூடப்பட்டுள்ளது. பொலிசாரின் தற்காலிக அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மாத்திரம் குறித்த வீதியால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதுடன் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இராணுவ சோதனை நிலையங்களால் சூழப்பட்டது முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு செல்லும் வழிகள் அனைத்திலும் பொலிஸ் மற்றும் இராணுவ சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரந்தன் ஊடாக முல்லைத்தீவு செல்லும் வழியில் தேராவில் பகுதியில் ஒரு சோதனை நிலையமும், திம்புலி சந்தி பகுதியில் மற்றொரு சோதனை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வீதி வழியாக செல்லும் வீதியில் ஒரு சோதனை நிலையமும், மன்னாகண்டல் பகுதியிலும், மாங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியிலும், முள்ளியவளை – முல்லைத்தீவு வீதியிலும், வட்டுவாகல் – முள்ளிவாய்க்கால், நாயாறு வீதிகளிலும் படையினர் மற்றும் பொலிஸ் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு படையினர் வீதியால் செல்பவர்களை பதிவு செய்தே செல்ல அனுமதித்து வருகின்றார்கள்.
தமிழீழத்தில் பிரித்தானிய தலையீடு -அம்பலப்படுத்தும் ஃபில் மில்லரின் நூல் “கீனி மீனி”-ந.மாலதி
காலனியத்தின் முடிவுக்கு பின், கைவிட்டுப்போன காலனிகளில் தனது நலன்களை பாதுகாப்பதற்கு பிரித்தானிய அரசுக்கு உறுதுணையாகவிருந்த பிரித்தானியாவின் கூலிப்படைகளின் கதையே இந்நூலின் மையப்புள்ளி. இரகசியமாக பாதுகாக்கப்பட்ட கீனிமீனி என்னும் கூலிப்படை கம்பனியின் வளர்ச்சியையும் அதன் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
80களில் தமிழர் பிரதேசங்களில் குண்டுகள் போடுவதற்கு சிறிலங்கா அரசுக்கு உதவிய வெள்ளைக்கார கூலிப்படையை “மோசாட்டு” என்று ஈழத்தமிழர் அன்று அழைத்தார்கள். இதற்கு பின்னால் இஸ்ரேயில் இருப்பதாக எண்ணியே ஈழத்தமிழர்கள் இவர்களை இப்படி அழைத்தார்கள். ஃபில் மில்லரின் நூல் இந்த வெள்ளைகார கூலிப்படைக்கு பின்னால் பிரித்தானிய அரசு இயங்கியதை வெளிக்கொண்டு வருகிறது.
இரகசிய ஆவணங்களாக பாதுகாக்கப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் பொதுவெளியில் விடப்பட்ட பிரித்தானிய அரச ஆவணங்களையும், தகவல் சுதந்திரத்தின் அடிப்படையில் பெறப்பட்ட ஆவணங்களையும், சம்பந்தப் பட்டவர்களின் பின்னணிகளை தேடி அவர்களுக்கிடையில் நிலவிய உறவுகளை கண்டிறிந்தும், இவற்றையெல்லாம் சல்லடை போட்டு தேவையானவற்றை பிரித்தெடுத்து தொகுத்து நான்கு ஐந்து தசாப்தங்களுக்கு முன் இடம்பெற்றவைகளை ஒரு சுவராசியமாக கதை போல எழுதியிருக்கிறார் ஃபில் மில்லர்.
இதற்கான அவரின் திறமையும் பொறுமையும் பிரமிப்பை தருகிறது.பித்தானியாவின்
விமானப்படையின் SAS (Special Air Service) பிரிவில் வேலை செய்து இளைப்பாறியவர்களும், தேவைப்பட்டால் அழைக்கப்படலாம் (reserve) என்ற தகுதியில் அதில் இருந்தவர்களுமே கீனிமீனி கூலிப்படையில் இருந்தார்கள். பிரித்தானிய அரசின் சில திணைக்களங்களுக்கும் இவர்களுக்கும் இருந்த தொடர்புகளை நூலில் மில்லர் காட்டுகிறார்.
பிரித்தானிய அரசு முந்தைய அதன் காலனிகளில் வெளிப்படையாக செய்ய முடியாதவற்றை கீனிமீனி போன்ற கூலிப்படைகள் செய்ததால் இக்கூலிப்படைகளின் வேலைகளுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்று காட்டுவது – அதாவது ”deniability” என்ற சொல் மீண்டும் மீண்டும் வருகிறது.
ஓமானிலிருந்து சிறிலங்கா வரையும் மேலும் எல்சல்வடோரிலிருந்து ஆர்ஜன்டீனா வரையும் கீனிமீனி-SAS கூட்டணியில் இருந்தோர் செய்த வேலைகளை சங்கிலியாக இந்நூல் கோர்க்கிறது.
பிரமந்தனாறு கிராமத்தில் 1984இல் இடம்பெற்ற தமிழர் படுகொலை ஒன்றின் அறிக்கையில் ஒரு சாட்சி சிங்கள இராணுவத்துடன் ஹெலிகொப்டரில் வந்திறங்கிய ஒரு வெள்ளையரைப்பற்றி பேசுகிறது. இப்படுகொலையின் விபரிப்புடன் ஃபில் மில்லரின் நூல் ஆரம்பிக்கிறது.
ஓமானின் சுல்தானை அகற்றி பதிலாக அவருடைய மகனை அதிகாரத்தில் அமர்த்தியது இந்த பிரித்தானிய SAS பிரிவின் கைங்கரியமே. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக அங்கு டூஃவார் என்ற இடத்தில் 70களில் கிளம்பிய மாக்சிச போராட்டத்தையும் இவர்களே அழித்தார்கள்.
“வளர்ச்சி திட்டங்கள்” என்ற போர்வையில் போராட்டக்காரர்களை பிரித்து துரோகிகளாக மாறியவர்களை கொண்டே போராட்டத்தை அழித்தார்கள். துரோகிகளாக மாறியவர்களுக்கு மதத்தை காட்டி அவர்களுக்கு ஒரு புதிய குறிக்கோளை கொடுத்து அவர்களின் துரோகத்தை நியாயப்படுத்த உதவினார்கள். பிரித்தாளும் இத்தந்திரம் காலம்காலமாக கையாளப்பட்டிருக்கிறது.
லத்தீன் அமெரிக்காவில் இங்கா மக்களை பிரித்து இஸ்பானியர்கள் அவர்களை அழித்ததும் இப்படியே. இன்றும் இத்தந்திரம் வேலை செய்கிறது.
பக்கம் 40 இலிருந்து ஓமானில் டூஃவார் போராட்டக்காரர்களுக்கு எதிராக SAS இனது ஒரு நடவடிக்கை விபரிக்கப்படுகிறது. இதில் SASகாரர்களே வெற்றி பெற்றார்கள். இவ்வெற்றியை மாபெரும் வெற்றியாக கொண்டாடி பல SAS அனுபவப்பதிவுகளும் சினிமாக்களும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வெற்றியின் வேறொரு பக்கத்தை டூஃவார் உள்ளுர்வாசிகளிடமிருந்து அறிந்து மில்லர் பதிவு செய்கிறார். வரலாற்றை வெற்றி பெற்றவர்களே நிர்ணயிக்கிறார்கள் என்பதை காட்டும் சிறப்பான உதாரணம் இது.
தொடர்ந்து பிரித்தானியா ஆக்கிரமித்துள்ள அயர்லாந்து பகுதிக்கு SAS போகிறது. அங்கிருந்து சட்டவிரோதமாக எல்லை கடந்து சுதந்திர அயர்லாந்துக்கு போகிறார்கள். அங்கு ஒரு IRA போராளியை அவர் திருமணம் செய்யவிருந்த பெண்ணின் வீட்டிலிருந்து கடத்துகிறார்கள். அவரை கடத்திச் சென்ற சில நிமிடங்களில் வீட்டிலிருந்தோர் சத்தத்தை கேட்கிறார்கள்.
இவ்விடயம் பொதுவெளிக்கு வந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, SASகாரர் வரைபடத்தை தவறாக படித்ததாலேயே எல்லையை கடந்தார்கள் என்று பிரித்தானிய அரசு விளக்கம் கொடுத்தது. IRA போராளியை சுட்டதற்கும் அவர் SASகாரரை தாக்கினார் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது!!! அதிகாரத்திலுள்ளவர்கள் வாயில் பொய்களும் உண்மையாகும். SASகாரர்கள் வாய்கள் போலவே சிறிலங்கா இராணுவத்தினர் வாயிலும் பொய்கள் உண்மையாகும்.
இக்காலகட்டத்தில், IRA நெதர்லாண்டில் பணியாற்றிக்கொண்டிருந்த பிரித்தானிய தூதுவரை கொலை செய்கிறது. இப்போது பிரித்தானியா வெளிநாடுகளில் பணியாற்றும் தனது தூதுவர்களை பாதுகாக்க தனியார்பாதுகாப்பு வளங்கும் கம்பனிகளை அமர்த்துகிறது.
இதற்கு முன்னாள் SASகாரர்களை கொண்ட KMS கம்பனியே பிரித்தானியாவின் தெரிவாக இருக்கிறது. ஐரோப்பாவில் மட்டுமல்ல இராணுவ ஆட்சிக்கு எதிராக மாக்சிச புரட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த ஆர்ஜன்டீனாவிலும் தூதுவர்களின் மெய்பாதுகாவலர்களாக KMS கம்பனியே அமர்த்தப்படுகிறது.
ஐ-அமெரிக்காவின் ஆதரவுடன் ஒரு நிலபிரபுத்துவ ஆட்சி நடந்து கொண்டிருந்த மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரிலும் பிரித்தானிய தூதுவரை பாதுகாக்க KMS கம்பனியே அமர்த்தப்பட்டது. மில்லரின் நூல் அம்பலப்படுத்தும் நடைமுறை ஒன்று இவற்றிலிருந்து தோற்றம் பெறுகிறதல்லவா?
1980களில் லண்டன் ஈரான் தூதரகத்தில் மேற்குநாட்டு இராசதந்திரிகள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தபோது SAS படையினரால் விடுவிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.இது முடிந்து சில வாரங்களில் ஒரு SAS அணி இலங்கையில் வந்திறங்கியது. இரானிய நடவடிக்கையில் பங்கெடுத்த ஒருவரும் அதில் இருந்தார். நோக்கம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவத்திற்கு இரகசிய பயிற்சி கொடுப்பதே.
இக்காலத்தில் சிறிலங்கா சனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தனா இருந்தார்.ஒரு ஆங்கில செவிலித்தாயால் வளர்க்கப்பட்ட ஜயவார்தனா பிரித்தானியாவை பெருமையாக பார்த்தார் என்பதை மில்லர் எடுத்துக்காட்டுகிறார்.
ஜயவர்தனா காலத்தில் பிரித்தானிய தூதுவராக இருந்த ஒருவர் பிற்காலத்தில் மில்லருக்கு சொன்னதை ஜயவர்தனாவின் பிரித்தானிய அடிமை மனநிலைக்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார், “ அவருக்கு ஒரு கனவு இருந்தது. ஒரு அழகிய பொன் வண்டியில் எலிசபெத் அரசிக்கு முன்னால் இருந்து நகர்வலம் வந்து பின்னர் ஒரு பெரிய விருந்து உபசாரத்தில் கலந்து கொள்வதை தனது வாழ்வில் நடக்க கூடிய அதி உன்னதமான ஒரு செயலாக அவர் எண்ணினார்”.
எனது சந்ததி ஈழத்தமிழருக்கு சிறிலங்கா சனாதிபதியின் இம்மாதிரியான கனவு நம்பவே முடியாத ஒன்றாகும். ஈழத்தமிழருக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயுள்ள அதிகார தூரத்தையே இது தெளிவாக காட்டுகிறது.
டூஃவார் போராட்டக்காரர்கள் எதிர்த்த ஓமானின் சுல்தான், ஆர்ஜன்டீன போராட்டக்காரர்கள் எதிர்த்த ஐ-அமெரிக்க ஆதரவுடன் இயங்கிய ஆர்ஜன்டீனாவின் இராணுவ அரசு, எல்சல்வடோர் போராட்டக்காரர்கள் எதிர்த்த ஊழல் மலிந்த எல்சல்வடோரின் நிலபிரபுத்துவ அரசு, ஈழத்தமிழ் போராட்டக்காரர்கள் எதிர்த்த பிரித்தானிய மோகம் கொண்ட சிங்கள அரசு யாவும் அக்காலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரித்தானியா அரசின் ஆதரவை SAS-KMS கூட்டணி ஊடாக பெற்றிருக்கின்றன.
இப்போராட்டகாரர்களை ஆதரித்த அந்தந்த பிரதேச மக்களில் சிறிது வித்தியாசம் இருந்துள்ளதாக தெரிகிறது. ஈழத்தமிழ் மக்களை தவிர்த்த ஏனைய மக்களுக்கு இந்த பிரித்தானிய ஆதரவு பங்களிப்பு புரிந்திருக்கிறது. ஈழத்தமிழருக்கு இன்றுவரை அது புரியவில்லையே என்பது சிந்திக்க வேண்டிது.
SAS-KMS கூட்டு 80களில் சிறிலங்கா படைகளுக்கு பயிற்சிகள் கொடுத்த விபரங்களை இந்நூல் ஆழமாக விபரிக்கிறது. சிறிலங்கா காவல்துறையின் பகுதியாக STF விசேட பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. இதே STF உடனடியாக ஊர்காவற்படையை உருவாக்கி அதில் கிழக்கு இஸ்லாமியர்களை இணைத்தது. இதே இஸ்லாமிய ஊர்காவற்படைகளை கொண்டு கிழக்கு தமிழர் படுகொலைகள் STF நடத்தியது.
இவையாவும் பிரித்தானிய அரசுக்கு தெரிந்தே நடத்தப்பட்டன. இவையாவும் மில்லரின் நூலில் விபரமாக விளக்கப்படுகிறது. இதே பிரித்தானிய அரசு அக்காலத்தில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நிலவிய கூட்டொருமை பற்றி கவலை கொண்டிருந்ததையும் இந்நூல் வெளிக்கொண்டு வருகிறது. இவ்வாறு வெளியார் சக்திகளால் தமக்குள் உருவாக்கப்பட்ட பிளவுகளின் குறுகிய கால வரலாற்றை கிழக்கு தமிழரும் இஸ்லாமியர்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள்.
இந்நூல் பற்றி மில்லர் ஊடகத்துக்கு கொடுத்த ஒரு நேர்காணலில், அகதி தஞ்சம் கோரும் ஈழத்தமிழர்களை சிறிலங்காவுக்கு மீளவும் அனுப்புவது பற்றி தனக்கிருந்த அனுபவங்களை பற்றி சொல்லியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தம். 30 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பிரித்தானிய இரகசிய ஆவணங்கள் கொடுத்த விழிப்புணர்வு பற்றி இங்கு அவர் பேசுகிறார்.
“பிரித்தானிய உள்விவகார அமைச்சு ஈழத்தமிழர்களை மீளவும் திருப்பி அனுப்புவது பாதுகாப்பானது என்கிறது, மீளத்திருப்பி அனுப்பப்பட்ட ஈழத்தமிழர்கள் அங்கு இறங்கியதும் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற அறிக்கைகளும் வருகின்றன.
இது என்னை சிந்திக்க தூண்டியது. மனித உரிமைகள் பற்றி கரிசனை கொள்வதாக சொல்லும் பிரித்தானிய அரசு எதற்காக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் படுவதற்காக இவர்களை திரும்ப அனுப்புகிறது?….
70களிலும் 80களிலும் இந்திய இராணுவம் தமிழீழத்திற்கு வருவதற்கு முந்திய காலத்தை [வெளிவந்த இரகசிய ஆவணங்கள் மூலம்] புரிந்து கொண்டால், பின்னர் நடந்தவற்றைம் இறுதியில் நடந்ததையும், இப்போது நடப்பதையும் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் சர்வதேச சக்திகள் வெளிப்படையாக பேசுவதற்கும் தமக்குள்ளே தங்கள் சொந்த நலன்கள் பற்றி பேசுவதற்கும் உள்ள முரண்களையும் அவர்கள் எதற்கு முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதையும் அப்போதுதான் அறிந்து கொள்ளலாம்.”
உலகில் பலரும் இவ்வாறான ஒரு விழிப்புணர்வுக்கு வந்து விட்டால்..
Keenie Meenie: The British Mercenaries Who Got Away With War Crimes, Pluto Press, 2020