Home Blog Page 2344

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் .

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள், அமைச்சரிடம் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – உலகில் 74,782 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 74,782 பேர் பலியாகியுள்ளதுடன், 1,347,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 286,453 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

இந்தாலி – 16,523

ஸ்பெயின் – 13,341

அமெரிக்கா – 10,943

பிரான்ஸ் – 8,911

பிரித்தானியா – 5,373

ஈரான் – 3,739

சீனா – 3,331

நெதர்லாந்து – 1,867

ஜேர்மனி – 1,810

பெல்ஜியம் – 1,632

சுவிற்சலாந்து – 765

இலங்கையில் 14 இடங்கள் முற்றாக முடக்கம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் அபாயத்தால் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை – போரத்தொட்டை பகுதியும், ஜா – எலவில் இரு பகுதிகளும், யாழ். மாவட்டத்தில் அரியாலை – தாவடி பகுதியும், களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம மற்றும் பேருவளை பகுதிகளும், கண்டி மாவட்டத்தில் அக்குரணை பகுதியும், புத்தளம் மாவட்டத்தில் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியவின் ஒரு பகுதியும், கொழும்பு மாவட்டத்தில் கிராண்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானை – அர் ஜனமாவத்தை ஆகிய பகுதிகளும், குருநாகல் மாவட்டத்தில் கட்டுபொத்தை – கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியும், மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ மற்றும் கொஹூகொட பகுதிகளும் இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 74 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏழு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் ஆவா குழு உறுப்பினர்கள் கைது.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகம் சேர்ச் லேனில் நேற்று மாலை இடம்பெற்றது.

ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவரது நண்பர்களால் இணைந்து மல்லாகத்தில் உள்ள வீடொன்றில் இன்று நடத்தப்பட்டது. அதுதொடர்பில் தகவல் கிடைத்து அந்த வீட்டை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.

அதன்போதே 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வினோதன் உள்ளிட்ட கொண்டாட்டத்தில் பங்கேற்ற பலர் இராணுவத்தினரின் வருகையறிந்து அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், ஊரடங்கு வேளையில் பொலிஸ் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார, சமூக பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக 66 மில்லியன் ரூபா நிதி

கடந்த இரண்டு தினங்களில் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு 66 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் 314 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட பராமரிப்பு நிதி 380 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தமது ஏப்ரல் மாத கொடுப்பனவை வழங்கியுள்ளதோடு அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவும் நேற்று இரவு வழங்கியுள்ளார்.

இது தவிர தனியார் மற்றும் சில அரச அமைப்புகள் ஊடாக கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்த நிதி வழங்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்கான நிவாரண தொகையை 3 நாட்களில் வழங்க தீர்மானம்

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை 8,9 மற்றும் 10ஆம் திகதிகளில் வழங்கி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நகராட்சி ஆணையாளர் சம்பிகா ரோஷினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ச் மாதத்திற்கான நிவாரண தொகையை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 – பிரித்தானியா பிரதமர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் (55) உடல் நிலை மோசமடைந்துள்ளதால் அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரித்தானியா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியில் உள்ள சென் தோமஸ் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைதியசாலைக்கு அதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இடத்திற்கு தற்காலிகமாக வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு பிரதமரின் மனைவியான கேரி சைn-மான்ட்ஸ்யும் உட்பட்டுள்ளார். அவர் கர்ப்பமாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா பிரதமர் குணமடைய வேண்டும் என பிரித்தானியா அரசியல்வாதிகளும், உலக அரசியல் தலைவர்களும் தமது செய்திகளை பிரித்தானியா அரசுக்கு தெரிவித்துவருகின்றனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் செல்வம் அடைக்கலநாதன்

கொரோனா அச்சுறுத்தலினால் சிறு குற்றத்திற்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று(06) ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தத்தின் காரணமாக உடலில் செல் துகள்களை சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். அவர்களுடன் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல் கைதிகளும் உள்ளனர்.

தற்போது இவர்கள் மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அதேவேளை குறித்த அரசியல் கைதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்“ என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலேயே அதிக கொரோனா நோயாளிகள்

கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்கள் அதிகமாக உள்ள மாவட்டமாக கொழும்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி கொழும்பில் 42 பேரும், புத்தளத்தில் 27பேரும், களுத்துறையில் 25பேரும், கம்பகாவில் 11பேரும், யாழ்ப்பாணத்தில் 7பேரும், கண்டியில் 6பேரும், இரத்தினபுரியில் 3பேரும் குருநாகலில் 2பேரும், காலி, கேகாலை, மட்டக்களப்பு மற்றும் பதுளை, மாத்தறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் 35 பேரும் அடங்குவதாகவும் இதில் 3பேர் வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா நோய்க்கு எதிரான முன்முயற்சிகளை ஆதரிப்பீர்!

மனிதகுலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இன்று வந்துள்ள கொரோனா கொவிட்-19 வைரஸ் தொற்று, பல இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடத்தில் தொற்றியுள்ளதோடு, பல ஆயிரம் பேர்களின் உயிர்களை பறித்து வரும் நிலையில், இப்பெரும் நோய்தொற்றுக்கு எதிராக முன்முனைப்புக்களில் ஆதரிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த துயரக் கணக்குகள் ஒவ்வொன்றும் நாள்தோறும் ஏறிச்செல்லும் நிலையில், சில காலமாகப் அனைத்துலக சமூகத்திடையேயான உறவுகளில் காணப்படாத நாடுகளைக் கடந்த தோழமை பெரமளவு முக்கியத்துவம் உடையதாகிறது. ஒவ்வொரு அரசுகளுக்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளினால் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் மூடப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்றைய நெருக்கடியை வெல்லப் பன்னாட்டு சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.

எப்படியானாலும், தனிமனிதர்கள் என்ற அளவில் தோழமையின் ஆற்றலைக் காண முடிகிறது. சமூக விலகல் நம்மை உடலளவில் பிரித்து வைத்திருந்தாலும் உலகெங்கும் மக்கள் தோழமையுடன் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். முதலில் கொரோனாவை எதிர்நிற்கும் சுகாதாரத்துறைப் பணியாளர்களும் மற்ற அனைவரும் இந்த அனைத்துலக நெருக்கடியின் முனையில் முகம்கொடுத்து முன்நிற்கின்றார்கள்.

இந்த உணர்வின் பாற்பட்டுத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொரோனாவின் புதிவித நோய்க்கிருமிக்கு எதிரான போரில் உலகெங்கும் இருக்கும் சுகாதாரதுறை பணியாளர்களுக்கு முழு ஆதரவினையும் தோழமையினையும் வழங்குகின்றது. உலகெங்கும் பணியாற்றி வரும் சுகாதாரதுறை பணியாளர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நெஞ்சம்நிறைந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறது. பிறர் உயிர்காக்கத் தம்முயிர் கருதாமல் உழைத்திடும் இவர்கள் ஆகச் சிறந்த மானிடத்துக்கும் மனிதநேய இலட்சியங்களுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆவர்.

பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் பிற தெற்காசிய நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு நிதியம் தோற்றுவிக்க இந்திய அரசு எடுத்துள்ள முன்முயற்சியையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. உயிர்களைக் காக்கவும் இப்பிராந்திய மக்களை இன்னுங்கூட நெருக்கமாக ஒன்றுசேர்ப்பதற்கும் இது அருமையானதொரு மனிதநேய சமிக்ஞை ஆகும்.

இந்தப் பின்னணியில் கொவிட்-19 பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும் முறியடிக்கவுமான முயற்சிகளில் முழுமையாகப் பங்கேற்கும்படி உலகப்பரப்பெங்கும் வாழும் தமிழர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது. கொவிட்-19க்கு எதிரான போர்முனைகளில் மேற்கொள்ளபப்டும் முயற்சிகளுக்குத் தனித்தனியாகவோ கூட்டாகவோ நிதிசேர்த்தும், தன்னார்வத் தொண்டர்கள் திரட்டியும் துணைபுரிந்து வரும் பற்பல தமிழர்களையும், தமிழர் அமைப்புக்களையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துகின்றது.

இந்த நெருக்கடி ஏழை எளிய மக்கள் மீது கூடுதலான தீவிளைவேற்படுத்தி வருகிறது என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட விரும்புகிறது. ஆகவே அரசுகள் தம் மக்களிடையே திடீர் வேலையின்மை அல்லது வருமான இழப்பால் கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் போன்ற பொருளியலாக மிகவும் நலிந்த பிரிவினரின் நலனை உறுதி செய்ய உடனடி நடைபடிகள் எடுக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது. குடிபெயர்ந்தோரும், வீடற்றோரும், முன்கூட்டியே உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலைமைகளுடன் இருப்போரும் கூட தனிக் கவனத்துக்குரியோரே, அவசரமாக!

இந்தக் கட்டத்தில் முழு அடைப்புகள், ஐயத்துக்குரிய அல்லது உறுதி செய்யப்பட்ட கொவிட்-19 நோயாளர்களைத் தனிமைப்படுத்தி வைத்தல் போன்ற நோயடக்கும் வழிமுறைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பொதுவான ஆதரவு வழங்கிய போதிலும், அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் கண்ணியத்தையும் மதிக்கும் படியான வழிமுறைகளைக் கண்டிப்பாகச் செயலாக்கும் படியும் அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது. மேலும், மதம், மரபினம், இனக்குழு, பாலினம், குடிவரவுத் தகுநிலை, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட மக்கள்பிரிவுகளை அரசுகள் முனைந்து பாதுகாக்கும் படியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.

உலகம் இன்று சந்திப்பது போன்ற ஒரு நெருக்கடி மானிடத்தில் உன்னதமானவற்றை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் அச்சத்தினாலோ கவலையினாலோ அதிகாரத்தினாலோ அரசியல் உள்நோக்கங்களினாலோ விருப்புவெறுப்பினாலோ சிலரிடத்தில் படுமோசமானவற்றையும் வெளிப்படச் செய்யக் கூடும்.
மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுவோரை அரசுகள் பொறுப்புக்கூறும் படிச் செய்யத்தான் வேண்டும். கொவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவது அவசரத்திலும் அவசரமான ஒன்று என்னும் போதே, அதனைச் சாக்கிட்டுத் தண்டனையச்சமின்றிக் குற்றம் புரிய அனுமதிக்க முடியாது.

விரிந்து அகன்ற, ஜனநாயகப்புறம்பான அதிகாரங்கள் பெறவும் தனிமையுரிமை, கருத்துரிமை போன்ற அடிப்ப்டை உரிமைகளை மீறவும் சில அரசுகள் பெருந்தொற்று நோயைப் பயன்படுத்திக் கொள்வதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவனப்படுத்துகிறது, கண்டிக்கிறது. குறிப்பாக சிறிலங்காவில் இடைக்காலக் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் சி.டி. விக்ரமரத்னா அரசின் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் காவல்துறைக்கும் அறிவுறுத்தியிருப்பது என்னவென்றால் சமூக ஊடகங்களில் அரசு அதிகாரிகளைக் குறைகூறும் ஆட்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால் அது அரசாங்கத்தின் கடமைகளுக்கு இடையூறு செய்வதாம்!

இந்த வகையில், சில அரசுகள் கட்டி வைத்துள்ள தணிக்கைக் கொள்கைகளை மதியாமல் கடமையின் தேவையையும் கடந்து உயிரைப் பொருட்படுத்தாமல் உலகெங்கும் செயல்பட்டுள்ள சுகாதாரத்துறைப் பணியாளர்களை அறிந்தேற்று அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நன்றி தெரிவிக்க விரும்புகிறது. பெருந்தொற்று நோய்க்கான நாட்டின் மறுவினைகள் பற்றிய பொய்க் கதைகளை மறுத்து ஊடகங்களிடம் பேசுவது உயிருக்கு ஆபத்தானது அல்லது சிறைக்குள் தள்ளக்கூடியது என்று தெரிந்தே இப்படிச் செய்திருப்பது வீரச் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். தகவலுக்கான அடிப்படை உரிமையையும் தெரிந்து கொள்ளும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவ அறம் காக்க ஹிப்போக்கிரட்டிஸ் எழுதிய உறுதிமொழியில் இல்லை என்றாலும், நல்வாழ்வுப் பணியாளர்கள் பலரும் தம்மைத்தாமே இந்த உரிமைகளின் காவலர்களாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்தப் பெருந்தொற்று நோய் வாழ்க்கைத் துறைகள் பலவற்றிலும் மாற்றங்களைத் தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னராக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தபடப்ட மர்சல் உதவித்திட்டம் உலக ஒழுங்கில் மாற்றங்களை கொண்டுவந்தது போலவே, (செப்ரெம்பர் இரட்டைக் கோபுரத்தாக்குதல்) 9-11 பன்னாட்டு உறவுகளையும் பன்னாட்டுச் சட்டத்தையும் என்றென்றைக்குமாக மாற்றி விட்டது போலவே, கொரோனாவுக்கு முன் வாழ்க்கை, கொரோனாவுக்குப் பின் வாழ்க்கை என்று காலத்தைப் பிரிக்கும் நாள் வரும். நெருக்கடிநிலைகளில் அரசுகள் எடுத்துக் கொண்ட விரிந்தன்ற அதிகாரங்களை இந்த மாற்றத்தைப் பயன்படுத்தி கெட்டியாகப் பிடித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாது என்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். எடுத்துக்காட்டாக இணைய வழித் தொடர்பாடல் வாழ்க்கையில் முதன்மை இடம் பெறும் என்பதால் இணைய சுதந்திரத்தைப் பாதுகாத்தாக வேண்டும்.

இன்று பற்பலருக்கும் இடையே நாம் காணும் தோழமை நீடித்து நிலைக்கும் மாற்றங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.