அகதிகளை வேறு நாட்டுக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா திட்டம்
திருகோணமலை முத்து நகரில் சூரிய சக்தி மின் திட்டத்தால் சூறையாடப்படும் விவசாய நிலம் – பா. அரியநேத்திரன்
தாயக மக்களின் விருப்பங்கள் தற்போது நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவிப்பு
வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் விருப்பத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த போதும், அவர்களின் விருப்பங்கள் தற்போது நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச நெருக்கடிகள் சபையின் இலங்கைக்கான ஆலோசகர் எலன் கீனன் (Alan Keenan) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்த போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
இந்த வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. ஆனால், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையில், மக்களிடையே தற்போது ஏமாற்றம் அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மனித புதைக்குழிகள் உள்ளமை தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன.
எனினும், வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி இதுவரையிலும் நிலைநாட்டப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கான நீதி இதுவரையிலும் பெற்றுத்தரப்படவிவல்லை.
அத்துடன், வடக்கு கிழக்கில் உள்ள காணிகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்தல், இதுவரையிலும் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. எனினும், இதுவரையிலும் அவர்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளதாக சர்வதேச நெருக்கடிகள் சபையின் இலங்கைக்கான ஆலோசகர் எலன் கீனன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சிகள் தொடர்கின்றன…
நாட்டின் தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டுக்கு நல்லது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம், காலம் பார்த்து அறிவிப்பார்.
ஆனால், இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதுவரை இடம்பெறவில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கூட்டு எதிர்க் கட்சிகளின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் அதில் கலந்துகொண்டு, கூட்டாக செயற்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவை இந்த மாதம் 20ஆம் அல்லது 21ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மீண்டும் சந்திப்பது குறித்து ஆராய்வு
கிருசாந்தி படுகொலை வழக்கின் மரண தண்டனைக் கைதியாக உள்ள சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மீண்டும் சந்திப்பது குறித்து கலந்துரையாடப்படுகிறது.
ஏற்கனவே அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் அவரை சந்திப்பதற்கான தேவைகள் குறித்து ஆராயப்படுவதாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினர் பல்வேறு விடயங்களை கேட்டறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், குறித்த சாட்சியங்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதா? அல்லது அவரை மீண்டும் சந்திப்பதா? என்பது குறித்து கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், அவரை மீண்டும் சந்திப்பதற்கான எவ்வித இறுதி தீர்வும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலத்தின் தலைவல் மகேஸ் கட்டுலந்த கூறியுள்ளார்.
பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்
காசா பகுதியில் பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில், இந்த போர் முடிவுக்கு வருவதை அனைவரும் விரும்புவதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, தனது நிபந்தனைகளை ஹமாஸும் ஏற்க வேண்டும் என்றும், ஏற்றுக்கொள்ளாததன் விளைவுகள் குறித்து ஹமாஸுக்கு முன்பே எச்சரித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கை தனது கடைசி எச்சரிக்கை என்றும், எதிர்காலத்தில் இனி எந்த எச்சரிக்கைகளையும் வெளியிட மாட்டேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடுத்தது. சுமார் 21 மாதங்களாக நீடித்துள்ள போரில் காசா பகுதியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளை இலக்காக வைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மக்கள் அடர்த்தியான பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் செயல்படுகின்றனர் எனவும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மூதூரில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்
மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (8) காலை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வருகின்ற தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைகளில் சகல வேலைகளையும் தாம் செய்து வருகின்றோம். கடந்த அரசாங்கம் எமக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்குவதாக தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் நியமனம் வழங்கவில்லை. அதனையே இந்த அரசாங்கமும் செய்கிறது. எனவே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் தங்களுக்கு இந்த அரசாங்கம் ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
செம்மணி மனிதப்படுகொலை விவகாரம்:சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதம்
செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்தார்.. அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
அக்கடிதத்தில் 7 ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து சோமரத்ன ராஜபக்ஷ மேலும் பல வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ மீண்டும் தனது மனைவியின் ஊடாக கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரத்தில் தனது வகிபாகம், தான் உள்ளடங்கலாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய 5 இராணுவத்தினரும் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டமை, இவ்விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வகிபாகம் என்பன உள்ளடங்கலாக சோமரத்ன ராஜபக்ஷவினால் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலும், முன்னைய வெளிப்படுத்தல்களிலும் குறிப்பிட்டிருந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி 1996 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்பெற்ற செம்மணி மனிதப்படுகொலை, வடக்கில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரை அவற்றை செயற்படுத்திய சகல அதிகாரிகளினதும் பெயர் விபரங்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளக்கூடியவகையில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும், சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் சட்டத்தின்முன் நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.