Home Blog Page 22

இந்திய மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில்  திங்கட்கிழமை மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளியும்  கலந்து  கொண்டார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் முல்லைத்தீவுக்கு மே மாதம் வருகை தந்திருந்தபோது பருத்தித்துறை துறைமுகம் இந்திய நிதியுதவியில் அபிவிருத்தி செய்யப்படும் என்று உறுதியளித்ததை ஆளுநர் நினைவுகூர்ந்தார்.

மேலும், பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் தெரிவித்ததுடன் ,  இந்தத் திட்டமுன்னெடுப்புக்கான மாகாணத்தின் ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தின் இயக்குநர் தமது தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பான விடயங்களை முன்வைத்ததுடன் கடந்த காலங்களில் இந்தத் திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட வடிவமைப்பு அதிலிருந்து தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

இதேவேளை, இலங்கை மீன்பிடி அமைச்சிலிருந்து இந்தத் திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கரிசனை தொடர்பிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்தினார்.

மேலும் திட்டத்துடன் தொடர்புடைய திணைக்களங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டிய அனுமதிகள் தொடர்பாகவும், கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுமதிகளை புதிப்பித்துக் கொள்வது தொடர்பாகவும் அவர் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

பருத்தித்துறை துறைமுகத்தை இந்தக் குழுவினர் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடற்றொழில் அமைச்சரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பருத்தித்துறை துறைமுகத்துடன் தொடர்புடைய சமூக அமைப்புக்களின் கருத்துக்களை உள்வாங்கி எதிர்கால திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், இந்தியத் தூதுக் குழுவினர், கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

நேபாள பிரதமர் இராஜினாமா!

நாட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் கொந்தளிப்பை தொடர்ந்து நேபாள அரசின் பிரதமர் கே.பி.ஷர்மா சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார்.

சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பெரும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுவரை ஆர்ப்பாட்டக்காரர்களில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பிரதமரைச் சந்தித்தார் உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம்

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, செப்டம்பர் 8 அன்று பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திற்கும் விளையாட்டுத் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை கேப்டன் ஹுசைன் அல் முசல்லம் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதுள்ள விளையாட்டுச் சட்டம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதின் அவசியத்தையும், தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவையையும் எடுத்துரைத்தார்.

அப்போது, பாடசாலை மாணவர்களிடமும் சமூகத்திலும் விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நன்னடத்தையும் ஆரோக்கியமும் வளரும் என்று பிரதமர் கூறினார். அத்தோடு, விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், குறிப்பாகப் பெண்களின் பங்கேற்பில் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் அரசாங்கம் முன்னுரிமை அளித்து முதலீடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நீர்வழி விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில், தேசிய ஒலிம்பிக் குழுவின் (NOC) தலைவர் சுரேஷ் சுப்ரமணியமும் கலந்துகொண்டார்.

நேபாளத்தின் பிரதமரை இராஜினாமா செய்யக் கோரி போராட்டம்!

நேபாளத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.

அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இராஜினாமா செய்யும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் கூறி வருகின்றனர். ஜெனரல்-இசட் நடத்திய சமூக ஊடக ஆதரவு போராட்டம் தற்போது ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பெரிய காரணமாக மாறியுள்ளது.

பிரதமர் கே.பி. சர்மா ஒலி சமூக ஊடகங்கள் மீதான தடையை திரும்பப் பெற்றுள்ள நிலையில், பரவலான ஊழல் காரணமாக போராட்டக்காரர்கள் தற்போது அவரது இராஜினாமாவைக் கோருகின்றனர். குறிப்பாக, பல்வேறு அமைச்சர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அமைச்சர்களின் குடும்பங்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதேவேளையில், சாதாரண நேபாள குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தக்கூட போராடுகிறார்கள் என இளைஞர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடல் நீர் உட்புகுவதால் உவர் நிலமாகும் வயல் நிலங்கள்!

கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள வயல் நிலங்கள் உவர்நிலமாக மாறுவதால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மண்டைக்கல்லாறு உவர்நீர்த் தடுப்பணை இல்லாததால், கடல் நீர் வயல் நிலங்களுக்குள் உட்புகுகின்றது. வயல் நிலங்கள் உவர் நிலமாக மாறுவதால் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளைக் கைவிட்டுள்ளனர். இப்போது வயல் நிலங்களில் உப்பு விளைந்து காணப்படுகின்றது. அந்தப் பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் இந்த நிலைமையால் பெரும் பாதிப்புளை எதிர்கொண்டுள்ளனர்.

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில், வாழ்வாதாரத் தேவைகளுக்காக இப்போது உப்பு அறுவடையில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் உவர்நீர்த் தடுப்பணை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் காணொலி பரவியதால் மனமுடைந்த நபர் தற்கொலை!

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி  பேருந்தில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.

இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

பின்னர், கிராம மக்களால் கொத்மலை  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், முரளி   பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த முரளி, தவறான முடிவெடுத்து தனது உரை மாய்த்துள்ளார்.

முரளி, புசல்லாவை ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் வசித்துவந்தவர். அவரது பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது ஒரே சகோதரி வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து கொத்மலை கவல்துறை நிலைய பொறுப்பதிகாரி வஜிரா ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபையில் அறிவிப்பு !

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்தை ( சிறப்புரிமை) நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல,சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, இச்சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு உறுப்புரையுடனும் முரண்படவில்லை என்றும் பாரளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் அங்கீகரிக்கப்படலாம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

மேலும், அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையில் கூறப்பட்ட கட்டாய விதிகளை பின்பற்றி, நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை தொடர்புபடுத்த மனுதாரர் தவறியதால், இந்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண் SC/SD/29/2025இனை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலின் போரில் இங்கிலாந்தின் பங்கு –  ஜெர்மி கோர்பின் தலைமையிலான விசாரணை

முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோபின் தொகுத்து வழங் கும் காசா மீதான இஸ்ரேலின் போரில் இங்கிலாந்தின் பங்கை ஆராயும் நிகழ்வு லண்டனில் கடந்த வாரம் ஆரம்பித்து தொடர்ந்து நடை பெற்று வருகின்றது..
“பாலஸ்தீன மக்களின் துன் பம் நீண்ட காலமாகவே தொடர் கிறது, ஆனால் அக்டோபர் 2023 முதல் இடம்பெற்றுவரும் தாக்கு தல்களில் அங்கு  63,000 பேர் இறந்துள்ளனர், மேலும் குழந்தை கள் பட்டினியால் இறப்பதை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பி வருகிறோம்,” என்று கோர்பின் “தி காசா தீர்ப்பாயம்” நிகழ்ச்சியில் தனது தொடக்க உரை யில் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர் களாக எங்கள் வேலை மற்றும் குடிமக்களாக எங்கள் அரசாங்க வேலை என்பது, என்ன நடக்கிறது என்பதற்கு எங்களை பொறுப்பேற்க வைப்பது,” என்று கோர்பின் கூறினார், தற்போது ஒரு புதிய இடதுசாரிக் கட்சியைத் தொடங்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக அவர் உள்ளார்.
இதனிடையே, லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் சட்டப் பேராசிரியரும், பிரிட்டிஷ் மத்திய கிழக்கு ஆய்வுகளுக்கான சங்கத்தின் துணைத் தலைவருமான நீவ் கார்டன், முறைசாரா காசா தீர்ப்பாயத்தில் முதன்முதலில் பேசியவர்களில் ஒருவர்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கான தனது உந்துதல் அவரது வளர்ப்பிலும், யூத மதத்தில் தனது குழந்தைப்பருவ மதபோதனைகளிலிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடங்களிலும் வேரூன் றியுள்ளது, நீதி என்பது ஒரு மையக்கருப் பொரு ளாக இருந்தது, நியாயமான வழி முறைகள் மூலம்  என்று கோர்டன் தெரிவித்துள் ளார்.
“இந்த தீர்ப்பாயத்தின் முக்கியப் பாத்தி ரங்களில் ஒன்று … திறந்த கண்களால் யதார்த் தத்தைப் பார்ப்பதும், நீதியைப் பின்தொடர்வதில் உண்மையைப் பேசுவதும் ஆகும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
அதேசமயம் 2023 அக்டோபரில் இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் குறைந் தது 370 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்து ள்ளனர், இதில் 131 குழந்தைகள்  என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மட்டுமே பொறுப்புக்கூறலுக்கு இலங்கை உறுதி

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.

அந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் பதில் வழங்கிய வௌிவிவகார அமைச்சர், உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறல் செயல்முறைக்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, தொடர்ந்தும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே புதிய அரசாங்கத்தினால் தற்போது ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை அங்கீகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் பொறுப்புக்கூறல் வழிமுறைகள் உட்பட நிர்வாகத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் வௌிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இன்று பிற்பகல், மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை சமர்ப்பித்தார்.

இலங்கை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நீதி வழங்குவதற்கும், சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதற்கும், பாகுபாடு மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை ஒழிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகள் இறுதியாகவும் உறுதியான முடிவுகளைத் தர வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தினார்.

உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை தெளிவாக ஒப்புக்கொள்ளவும், அரசின் பொறுப்பையும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அரச சாரா ஆயுதக் குழுக்களின் பொறுப்பை அங்கீகரிக்கவும் அந்த அறிக்கை ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான வழக்குகளை கையாள சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையிலான, ஒரு சுயாதீனமான விசேட குழு மூலம் அர்ப்பணிப்புள்ள நீதித்துறை பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்தல் மற்றும் நீண்டகாலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவித்தல் ஆகியவை அந்த பரிந்துரைகளில் அடங்குகின்றன.

சர்வதேச மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்ற விரிவான பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு மற்றும் பரந்த அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நிறுவன மாற்றங்களையும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததுடன், அதிகாரிகள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமான நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்தகால மீறல் வழக்குகளைக் கையாள பிரத்யேக நீதிப்பொறிமுறையை நிறுவுங்கள் – வோல்கர் டேர்க் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் தற்போது தகுந்த வாய்ப்பு கிட்டியிருப்பதாக பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.

அதன்படி கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு தற்போது வரலாற்று முக்கியத்தும் மிக்க வகையில் வாய்ப்பு கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கான சந்தர்ப்பம் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அத்தோடு அண்மையில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது முன்னெப்போதுமில்லாத வகையில் சீரான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததாகவும், அவ்வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் அளித்து அவை உரியவாறு நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோன்று எதிர்வருங்காலங்களில் நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட வோல்கர் டேர்க், இலங்கைக்கான விஜயத்தின்போது கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்தையும், அத்துமீறல்களையும் அனுபவித்துவருவதாகவும், செம்மணி மனிதப்புதைகுழியைப் பார்வையிடச்சென்றபோது அங்கிருந்தவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் துன்பத்தைத் தன்னிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தெற்கைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்காக நீண்டகாலமாகக் காத்திருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், எனவே தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நீதி வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அடுத்ததாக கடந்த காலங்களில் அரசு, பாதுகாப்புப்படையினர் மற்றும் ஆயுதக்குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தரப்பினரால் மீறல்கள், வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர், நினைவுகூரல்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்பட்டிருப்பது சாதகமான விடயம் எனக் குறிப்பிட்டதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவசியமான சட்ட மறுசீரமைப்புக்க்ள மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

குறிப்பாக சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அச்செயன்முறையில் சிவில் சமூகம் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீனமான விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் உடன் இடைநிறுத்தப்படவேண்டும். நிகழ்நிலைக்காப்புச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்ட வரைவு மற்றும் தனிநபர் தரவுப்பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. அவை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைக்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதுடன் தனியாருக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவேண்டும். மலையகத் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்’ என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை தொடர்பில் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பில் 105,000 ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும், சர்வதேச நியாயாதிக்கத்தின் ஊடாக இவற்றைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு உறுப்புநாடுகள் முன்வரவேண்டும் எனவும் அழைப்புவிடுத்த உயர்ஸ்தானிகர், மனிதப்புதைகுழிகளின் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.