Home Blog Page 19

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்படுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் நவம்பர் 08ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதியின் வரவுசெலவுத்திட்ட மீதான உரை நவம்பர் மாதம் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் இளைஞர்கள் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை: தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை

நேபாளத்தில் வெடித்த கலவரத்தைப்போன்று. இலங்கையிலும் அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- நேபாளத்தில் இலங்கையில் அரகலயவின்போது நடைபெற்ற சம்பவங்களே முதலில் காண்பிக்கப்படுகின்றன. ஜனாதிபதி மாளிகை கையகப்படுத்தப்பட்டமை, அங்கு அரங்கேற்றப்பட்ட சம்பவங்கள். நீச்சல் தடாகத்தில் குளித்தமை. ஜனாதிபதியின் கட்டிலில் படுத்தமை போன்ற நாட்டை நாசமாக்கிய காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. என்றாவது ஒருநாள் மக்கள் அதற்கு எதிராகத் திரும்பி, உங்களைத் (தேசிய மக்கள் சக்தியினரை ) தாக்குவார்கள். அந்தக் காலம் வரும்போது உங்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களைத் தான் முதலில் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். எமக்குப் பிரச்சினை இல்லை. நாம் எதற்கும் தயார். இன்று இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். பட்டதாரிகளுக்கும் வேலை இல்லை. எனவே அவர்கள் கிளர்ந்தெழுவார்கள். அதற்குரிய நாள் தொலைவில் இல்லை – என்றார்.

உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை முன்னேற்றம்!

சர்வதேச அளவில், நாடுகளின் ஜனநாயக நிலையை மதிப்பிடும் 2025 உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை 15 இடங்கள் முன்னேறி உள்ளது.

இது இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

இந்த முன்னேற்றத்திற்கு, அரசின் நிர்வாகத் திறனில் ஏற்பட்ட மேம்பாடுகள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், மற்றும் மக்களின் உரிமைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் போன்ற காரணிகள் பங்களித்துள்ளன.

இந்த முன்னேற்றம், இலங்கை சர்வதேச அரங்கில் தனது நற்பெயரை மீட்டெடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகக் குறியீடு என்பது, ஒரு நாட்டின் தேர்தல் செயல்முறைகள், சிவில் உரிமைகள், அரசியல் பங்கேற்பு, அரசாங்கத்தின் செயல்பாடு, மற்றும் அரசியல் கலாச்சாரம் போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் ஒரு அளவுகோலாகும்.

இந்த முன்னேற்றம், இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு நம்பிக்கையான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சீனத் தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று வெள்ளிக்கிழமை (12)  இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் சந்தித்துள்ளார்.

நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங்  சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டார் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை…

கட்டாரில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கவலை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

கட்டாரில் சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கவும், பிராந்திய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வழிவகுக்கும். சமீபத்திய தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுவதிலும், நிதானத்தைக் கடைப்பிடிப்பதிலும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது.

மஹிந்த, சீன தூதுவர் இடையில் சந்திப்பு…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து வியாழக்கிழமை (11) வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்ல முன்னர் இலங்கைக்கான சீன தூதுவர் அங்கு சென்று அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘விஜேராமவிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து நான் புறப்படுவதற்கு முன்னர், இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வருகைக்கு நான் நன்றி தெரிவிப்பதுடன், எமது நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட உறவு ரீதியான நீடித்த நட்புறவை நான் அன்புடன் நினைவுகூருகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை இன்று முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் பலரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்திப்பதற்கு விஜேராம இல்லத்துக்குச் சென்றிருந்தனர். ஆதரவாளர்களின் கோஷங்களுக்கு மத்தியில் அவர் அங்கிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணி வேலைதிட்ட வழக்கு – காணி அமைச்சருக்கும் சுற்றாடல் அமைச்சருக்கும் அழைப்பு

நாட்டின் நிலங்களை நிர்வகிக்க தேசிய திட்டத்தை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு காணி அமைச்சர், சுற்றாடல் அமைச்சர் மற்றும் பல தரப்பினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் அடங்கிய ஆயம் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவீந்திரன் தாபரே, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து, நாட்டில் நில முகாமைத்துவத்துக்கான தேசிய திட்டம் இல்லாததால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

விவசாய நடவடிக்கைகள், காடுகள், சதுப்பு நிலங்கள், குடியிருப்புகள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலங்கள் மற்றும் அவற்றின் எல்லைகள் முறையாக அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படாததால் நாட்டில் பல சுற்றுச்சூழல் மற்றும் பிற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் உள்ள நிலங்களிலிருந்து முறையான நன்மைகளைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.

ஒரு தீவு நாடான இலங்கை, தனக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவது அவசியம் என்றும், முறையான நில முகாமைத்துவ திட்டம் இல்லாததால், சரியான உற்பத்தி இலக்குகளை அடைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சட்டத்தரணி மன்றுரைத்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொண்ட நீதியரசர்கள் ஆயம், இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள காணி அமைச்சர், சுற்றாடல் அமைச்சர் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

வவுனியா நகரப்பகுதியில் பௌத்த துறவிக்கு சிலை அமைக்க இடம் வழங்க கோரிக்கை

மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் காண்டீபன் தலைமையில் இன்று (11) இடம்பெற்ற போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சபையின் உறுப்பினர் மொஹமட் முனவ்வர், வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றைஅமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியிருந்தார்.

அந்த பகுதியில் பள்ளிவாசல் இருப்பதால் அதனை அமைப்பதற்கு அந்த இடம் பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார். இதன்போது எழுந்த துணை முதல்வர் கார்த்தீபன் அந்த பகுதியில் மரணித்த ஊடகவியலாளர்களிற்கான ஒரு பொது நினைவுத்தூபியினை நிறுவுவதற்கான அனுமதியை ஏற்கனவே தான் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது எழுந்த மற்றொரு உறுப்பினரான லலித் ஜெயசேகர அண்மையில் மரணித்த பௌத்தபிக்கு ஒருவருக்கு சிலை அமைப்பதற்கு வவுனியா நகரில் இடம் ஒன்றை வழங்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் காண்டீபன் சிலைகள் அமைப்பது தொடர்பாக முழுமையான தீர்மானத்திற்கூடாகவே செல்ல முடியும். சபை அங்கீகரித்து ஆளுனர் வரையில் அந்த விடயம் செல்லவேண்டும் என்று சுட்டிக்காட்டினார். எழுத்தில் மாத்திரம் கோரிக்கைகளை தருவதால் பயன் இல்லை. எனவே சமூகங்களிற்கிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறிய மஹிந்தவும் மைத்திரியும்…

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறினர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நேற்று (10) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதற்கு அமைய இந்த செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து இன்று (11) வெளியேறினார்.  இதன்போது அவரின் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். பின்னர் அவர் தங்காலையில் உள்ள அவரின் இல்லத்துக்கு சென்றதுடன் அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நாள் முதல் குறித்த விடயம் முக்கிய பேசுபொருளாக உள்ளது.
இதேவேளை, தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியேறியுள்ளார்.

குறித்த இல்லம் கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ மாவத்தையில் அமைந்துள்ளது.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளக பொறிமுறையில் பொறுப்புக்கூறலுக்கு தயார் : விஜித ஹேரத்,வோல்கர் டர்க்கரிடம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் செயல்முறையில் ஈடுபட அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கருடனான  (Volker turk) சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் ஆகியோருக்கிடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் விரிவாக விளக்கியதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.