Home Blog Page 18

Ilakku Weekly ePaper 356 | இலக்கு-இதழ்-356 | சனி, 13 செப்டம்பர் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 356 | இலக்கு-இதழ்-356 | சனி, 13 செப்டம்பர் 2025

Ilakku Weekly ePaper 356

Ilakku Weekly ePaper 356 | இலக்கு-இதழ்-356 | சனி, 13 செப்டம்பர் 2025

Ilakku Weekly ePaper 356 | இலக்கு-இதழ்-356 | சனி, 13 செப்டம்பர் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழர் இறைமையையும் மனித உரிமைகளையும் தொடர்ச்சியாகப் பேணவல்ல செயலணி காலத்தின் தேவையாகிறது| ஆசிரியர் தலையங்கம்
  • ஏமாற்றத்தின் தொடர்கதை | விதுரன்
  • மட்டக்களப்பு மேய்ச்சல்தரை அபகரிப்பு சிங்கள மக்கள் பிரதிநிதித்துவத்துக்கான ஆரம்பப்புள்ளி.! | பா. அரியநேத்திரன்
  • தமிழ்த் தேசியச் சிந்தனை நீக்கம் செய்ய முனையும் அநுரகுமர அரசு | திரு. அருட்பணி ஜெகதாஸ்
  • புதிய அரசிலும் தொடரும் நில அபகரிப்பு | கிண்ணியான்
  • கட்டமைப்புத் தேசியவாதமும் தமிழீழத் தேசிய ஒருமைப்பாடும் | மு. திருநாவுக்கரசு
  • மாற்றமின்றி தொடரும் மலையக கல்வி | மருதன் ராம்
  • தென்னாசியாவில் தொடர்ந்து வீழ்த்தப்படும் அரசுகள் | வேல்ஸில் இருந்து அருஸ்
  • இஸ்ரேல், டோஹாவில் தாக்குதலை முன்னெடுத்திருக்கும் பின்புலத்தில், நடுவராகப் பணிபுரிய ரஷ்யா முன்வருமா?(பகுதி 1) | தமிழில்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

 

பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு: ஐ.நாவின் தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவு

பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு நாடுகளுக்கான தீர்வு குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரித்து ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இலங்கை வரவேற்றுள்ளது.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முயற்சிக்கு தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்சுக்கு இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது. ஐ.நா. சாசனம் மற்றும் தொடர்புடைய தீர்மானங்களுக்கு இணங்க பலஸ்தீன மக்களின் அரச உரிமைக்கான தனது ஆதரவை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களைத் தாக்க சதி : இலங்கையிலுள்ள பாகிஸ்தான் அதிகாரிக்கு இந்திய நீதிமன்றம் அழைப்பாணை !

இந்தியாவின் சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரமைப்பு (NIA) சிறப்பு நீதிமன்ற அழைப்பாணையொன்றை இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடமைபுரியும் அதிகாரியொருவருக்கு அனுப்பியுள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும்  பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றைத் தாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டே குறித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தற்போது இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த அதிகாரி, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிகாரி அமீர் சுபைர் சித்திக் (Amir Zubair Siddiqui) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் என்றும் தற்போது கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் விசா ஆலோசகராகப் பணிபுரிகிறார் என்றும்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் இந்தியாவிற்குள் சதி வேலைகளைச் செய்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த முகமது சாகிர் ஹுசைன் (Mohammed Sakir Hussain) என்ற நபரை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் உயர் தரமான கள்ள நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை Q பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு ( CID ) இந்த வழக்கை முதலில் பதிவு செய்தது. பின்னர், இது தேசிய புலனாய்வு முகவரமைப்பின் ஹைதராபாத் கிளைக்கு மாற்றப்பட்டது.

அமீர் சுபைர் சித்திக் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ், குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போரைத் தொடுப்பது, போலியான அல்லது கள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முகமது சாகிர் ஹுசைன் ஏற்கனவே தண்டனை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில், சித்திக் மீது தேசிய புலனாய்வு முகவரமைப்பு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது, அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 நன்றி : The New Indian Express

நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு

நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு  செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார்.

இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார்.

ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று இரவு 11.00 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியிருந்த வேளையில், சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்தது.

இதனால் பெரும் கொந்தளிப்புக்கு ஆளான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய ‘ஜென் சி’ தலைமுறையினர் கத்மண்டுவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராடினர்.

இதில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் போராட்டமும், வன்முறையும் நாடு முழுவதும் தீவிரமடைந்ததால், பிரதமர் சர்மா ஒலி 9ஆம் திகதி பதவி விலகினார்.

உடனடியாக நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை இராணுவம் கையில் எடுத்தது. அதன்பின்னர் வன்முறை ஓய்ந்து நாடு முழுவதும் படிப்படியாக அமைதியும், இயல்பு நிலையும் திரும்புகிறது.

பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின.

இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இடைக்கால அரசின் பிரதமராக நேபாள உயர் நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி, காத்மண்டு மேயர் பலேந்திர ஷா உள்பட 4 பேர் பெயர்களை பரிந்துரைத்தனர்.

இதில் சுசீலா கார்கிக்கு அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் போராட்டக்காரர்களின் ஆதரவும் இருந்ததால் அவர் இடைக்கால பிரதமராக நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இரவு நடந்த நிகழ்ச்சியில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் மூலம் அந்நாட்டின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக நாட்டின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-ம் ஆண்டு நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசராக பதவியேற்ற அவர், 11 மாதங்கள் அந்த பொறுப்பில் இருந்தார்.

அப்போது ஊழலுக்கு எதிராக அவர் காட்டிய கடுமையே, ஜென் சி தலைமுறையினரின் பிரதமர் தேர்வுக்கு காரணமாக இருந்துள்ளது.

இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு!

கொழும்பில் உள்ள இந்திய  தூதுவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (11)  இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர்.

அதன்போது செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை 60 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தமிழர்களின் அபிலாசைகளான  அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, நீதி, கௌரவம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாக ரெலோ தலைவர் தெரிவித்தார்.

அரசியல் யாப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலே விரைந்து மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியமை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் மாகாண சபை தேர்தலை நடாத்த வழிவகுக்கும் எனவும் உயர்ஸ்தானிகரிடம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபாய்களை வழங்கி அப்பிரதேச மக்களின் நீண்ட கால சுகாதாரத் தேவையை நிறைவு செய்ய இந்தியா முன்வந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை காங்கேசன்துறை  துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து என்பவற்றில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் இருப்பதாகவும் விரைந்து அதை நிறைவேறுவதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கப்படுதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதும் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதும் சமாந்தரமாக செயல்படுத்தப்படுவது அவசியம் எனவும் அதில் இந்தியா அக்கறையோடு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் இந்தியா இதய சுத்தியோடும் உறுதியோடும் பயணிப்பதற்கு தமிழ் மக்கள் சார்பில் தாம் நன்றி கூறுவதாக ரெலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம்

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர்.

மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10)  ஆரம்பித்தனர்.

அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை 6 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியை வந்தடைந்தனர்.

இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் நகரில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

பின்னர் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குறித்த குழுவினர் நடை பயணமாக வருகை தந்து காற்றாலைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வினியோகித்தனர்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுப்பு

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (12) முன்னெடுக்கப்பட்டன.

ஏறாவூர்ப்பற்று செங்கலடி – பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்றைய தினம் அங்கு வாழைச்சேனை, கிரான், வாகரை, செங்கலடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 35 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகை தந்த 33 பேரிடம் விசாரணைகள் இடம்பெற்றன.

காணமல்போன ஆட்களின் உறவினர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை காணாமல்போன ஆட்கள் பற்றிய கொழும்பு பிராந்திய அலுவலகத்தில் இருந்து வருகை தந்த வடிவேல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தம்பிஐயா யோகராஜா ஆகியோர் தலைமையிலான அலுவலக உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் இன்றைய தினம் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் காற்றலைத் திட்டத்துக்கு ஜனாதிபதி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்படும் விடயம் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஒரு மாத காலக்கெடு இன்றுடன் (12) நிறைவடைகின்றது.

இந்தநிலையில், ஜனாதிபதியின் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் காற்றாலை, கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்று 41ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கு இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மன்னார் மக்களின் இருப்பிடங்களையும் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று 41ஆவது நாளை கடந்து செல்கின்றது.
ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்து தங்களின் போராட்டத்தின் பலனாக நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து கனிம மணல் அகழ்வும் முன்னெடுக்கப்படக்கூடாது. இதுவரை அரச தரப்பில் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இது, நாட்டுக்கான போராட்டம். நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்கான போராட்டம் என்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை  12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது அதன் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார். சிறைக்கைதி ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் செலவழிக்கப்படுகின்றது.

இவ்வாறு போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படுபவர்கள் சிறைசாலைகளில் தடுத்துவைப்பதற்கு பதிலாக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும்  ஜகத் வீரசிங்க பரிந்துரைத்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படுவதால் சிறைச்சாலைகளிலுள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

அயல் நாடுகளுடன் உறவுகளைக் கட்டமைப்பதில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது – சந்தோஷ் ஜா

இந்தியா தனது அயல் நாடுகளுடன் உறவுகளைக் கட்டமைப்பதில் ஒரு முன்மாதிரியாக உள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை – இந்தியா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் கௌரவமளிக்கும் வகையில் ஒரு வரவேற்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய போதே உயர்ஸ்தானிகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட்டில் இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்க குழுவினர், சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இந்தியாவிற்கு வெற்றிகரமாக மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னணியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

உயர்ஸ்தானிகர் தனது உரையில், இந்தியாவையும் இலங்கையையும் பிணைத்துள்ள ஆழமான, நாகரீகமான மற்றும் மக்கள் சார்ந்த உறவுகளை வலியுறுத்தினார். கடந்த ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தை நினைவு கூர்ந்த அவர், இருதரப்பு உறவுகளில் இது ஒரு திருப்புமுனை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வலுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், திறன் மேம்பாடு, சுகாதாரம், ரயில்வே மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பிரத்தியேக வளர்ச்சி உதவி உள்ளிட்ட இந்த சுற்றுப்பயணத்தின் குறிப்பிடத்தக்க பயன்களாகும் என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

பெரிய நாடுகளுக்கும் சிறிய நாடுகளுக்கும் இடையிலான சமமற்ற கூட்டாண்மைகளுக்கு மத்தியில், இந்தியா தனது அயல் நாடுகளுடன் உறவுகளைக் கட்டமைப்பதில் ஒரு முன்மாதிரியாக உள்ளது என்பதை உயர் ஸ்தானிகர் எடுத்துரைத்தார்.

இந்தியா -இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது பரந்த சந்தைகளை, இலங்கையிடம் இருந்து பெறுவதை விடவும் அதிகமான அணுகலை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஒரு வளரும் நாடாக இருந்தபோதிலும், 2022-இல் சவாலான காலகட்டங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கணிசமான மற்றும் நிபந்தனையற்ற உதவிகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இந்தியாவின் வலுவான பொருளாதார மறுமலர்ச்சியை வலியுறுத்திய உயர் ஸ்தானிகர், தற்போது இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகவும், உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாகவும் உள்ளது என்றார்.

அமைதியைப் பேணுவதிலும், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், ஒரு விதிகள் அடிப்படையிலான பிராந்திய ஒழுங்கை மேம்படுத்துவதிலும் இந்தியாவும் இலங்கையும் இயற்கையான பங்காளிகள் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற நட்புறவு சங்கம் தொடர்ந்து ஒரு ஆற்றல்மிக்க தளமாக இருந்து, உரையாடலை வளர்த்து, பரஸ்பர நலன்களை மேம்படுத்தி, ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராயும் என்று உயர் ஸ்தானிகர் நம்பிக்கை தெரிவித்தார்.

23 உறுப்பினர்கள் கொண்ட நட்புறவு சங்க குழுவினரை வழி நடத்திய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, டில்லியில் அக்குழுவினர் மேற்கொண்ட பல்வேறு சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்டார்.

பொது சுகாதாரம், மலிவான மருந்துகள், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் புத்தாக்கம் பற்றிய நுண்ணறிவுமிக்க விவாதங்களும் அதில் அடங்கும். முன்னணி சுகாதார நிறுவனங்கள் மற்றும் வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப்களுக்கும் குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.

இந்தியாவின் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் சட்டமியற்றும் நடைமுறைகளைப் பற்றிய அனுபவம் மதிப்புமிக்க கற்றலை வழங்கியதாகவும், மேலும் இந்த விஜயம் இந்தியாவில் தற்போது நடந்து வரும் குறிப்பிடத்தக்க பொருளாதார மாற்றத்தை நேரடியாக அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை-இந்தியா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு, பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், பரஸ்பர மரியாதை மற்றும் பிராந்திய அமைதி மற்றும் செழிப்புக்கான ஒரு பொதுவான பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ள