Home Blog Page 1722

ஆயுதம் தேடிய படையினர் அகழ்ந்தெடுத்தவை

மாத்தளன் பகுதியில் தனியார் காணி ஒன்றில் வீடு ஒன்றிற்குள் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து சிறிலங்கா படையினரால் அகழ்வு நடவடிக்கையொன்று இன்று(02.07.2020) இடம்பெற்றது.

இதன்போது விடுதலைப்புலிகளின் இலச்சினைகள் பதிக்கப்பட்ட துணிகள்,தமிழீழ வரைபட வரைபடம், தமிழீழ வைப்பகத்தின் சேமிப்பு கணக்கு புத்தகங்கள், ஒளிப்படங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக சிறிலங்கா படைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மியான்மார் நிலச்சரிவில் 50 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

மியான்மார் நாட்டில் சுரங்கத் தொழிலாளர் 50பேர் நிலச்சரிவில் அகப்பட்டு பலியாகியுள்ளனர்.

மியான்மார் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் பணிபுரிந்த 50 தொழிலாளர்களே மேற்படி அனர்த்ததத்தில் பலியாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் விலையுயர்ந்த மரகதக் கற்களை எடுக்கும் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணிற்கு அடியில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

2036 வரை ரஷ்ய அதிபராக புட்டின்

தற்போது ரஷ்ய அதிபராக பதவி வகித்து வரும் விளாடிமிர் புட்டின், 2036ஆம் ஆண்டு வரை தனது பதவியில் தொடரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அரசியல் சாசனப்படி ஒருவர் இரண்டு தடவைகளே அதிபர் பதவியை வகிக்க முடியும். இதற்கமைவாக 2012ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராகப் பதவியேற்ற விளாடிமிர் புட்டின், 6 ஆண்டுகளை நிறைவு செய்து, தற்போது இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகின்றார்.

அவரின் பதவிக் காலம் 2024ஆம் ஆண்டுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் தனது பதவிக் காலத்தை 12 ஆண்டுகள் நீடித்து 2036 ஆம் ஆண்டுவரை பதவி வகிக்கக்கூடியவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளார்.

இதன் ஊடாக அவர் இருமுறை அதிபராக பதவி வகிக்க முடியும். இந்தச் சட்டத் திருத்தத்திற்கு மக்களின் ஆதரவை கோரி நடைபெற்ற வாக்கெடுப்பில் 87 வதவீத வாக்குகளில் 77 சதவீதமானோர் புட்டினுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் அவர் 2036ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க முடியும்.

போட்ஸ்வானாவில் 2 மாதங்களில் 350 யானைகள் மர்ம மரணம்

தெற்கு ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350இற்கு மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

இது தொடர்பாக பிரிட்டனில் இயங்கும் நஷனல் பார்க் ரெஸ்யும் விலங்குகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ள தகவலில்,

கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல் விமானம் மூலம் உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் பறந்து கண்காணித்த போது, 3 மணி நேரத்தில் 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர்.  பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் 350 யானைகளின் உடல்களை பார்த்துள்ளனர். இந்த விடயம் குறித்து அந்நாட்டிற்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர். ஆனால் அந்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறந்த யானைகளின் உடல்களில் தந்தங்கள் காணப்படவில்லை. எனவே யானைகளின் உயிரிழப்பிற்கு வேட்டையாடப்படுவது தான் காரணம் என போட்ஸ்வான அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், வேட்டையாடப்படும் போது மற்ற உயிரினங்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்துள்ளன.  கடந்த ஆண்டு அந்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. இப்போதும் அதுபோன்ற ஏதாவது நோய்த் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என விலங்குகள் தொண்டு நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவில் நடக்கின்றன. இதனால் யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதாவது தாக்கியிருக்கக்கூடும் எனவும், இது மனிதர்களுக்கும் பரவும் எனவும் குறிப்பாக நீர், மண் வழியாக பரவ வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.

இது மனிதர்களு்கான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றும், எனவே இது குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டு.கல்குடா பௌத்த பாடசாலை;ஆளுநர்,படையினர் ஆசிர்வாதத்துடன் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் கல்குடா வலைவாடி பிரதேசத்தில் ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலையை நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா ஜகம்பத் திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் 23 படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயரதன, அகில இலங்கை புத்ததாசன சபை தவிசாளர் ஜகத் சுமத்திபால, பௌத்த பிக்குகள் , இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு 15 பௌத்த பிக்குகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் சாதாரண தர பரீட்சை வரை ஐந்து வருட பாலி மொழி, சமஸ்கிரதம், தமிழ், ஆங்கிலம் என்ப கற்பிக்கப்படும். அத்தோடு புணாணை, புன்னக்குடா, வலைவாடி பகுதியில் இருந்து 17 பேர் பௌத்த மத கல்வி கற்பதற்கு இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

கிழக்கில் அண்மைக்காலமாக மிக வேகமாக இட ம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்களின் ஒரு பகுதியாகவே இதனை பார்க்கமுடிகிறது என்கின்றனர் நோக்கர்கள்.

கடந்த ஐந்து வருடங்களில் ஐதேக, கூட்டமைப்புக் கூட்டு சாதித்தது என்ன? மஹிந்த

கடந்த ஐந்து வருடமாக நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டு அரசாங்கத்தில் எமது அரசாங்கம் முன்னெடுத்த எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாமல் போயுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று குற்றம்சாட்டினார்.

அலரிமாளிகையில் நேற்று தேசிய ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து உரையாடிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தென்னிலங்கை போன்று வடக்கையும் கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.  ஆனால் நாம் எடுத்த நடவடிக்கைகள் எதனையும் கடந்த 5 வருடத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியவில்லை.

அவர்கள் எமது அபிவிருத்தித் திட்டங்களை விமர்சித்து கொண்டிருந்தார்களே தவிர எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் சில ஊடகங்கள் அவர்களை ஆதரித்துக் கொண்டிருந்தது. அரசியல்வாதிகள் விடும் தவறுகளை தட்டிக் கேட்பவராக ஊடகங்கள் செயல்பட வேண்டுமே தவிர தேவையற்ற விதத்தில் அரசாங்கத்திற்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு ஊதுகுழலாக செயற்படக் கூடாது.

தெற்கு தொடர்பான செய்திகள் வடக்கிலும் வடக்கு தொடர்பான செய்திகள் தெற்கிலும் எழுதப்படுகின்ற போதிலும் அவை முழுமையாக இரு பகுதி மக்களையும் சென்றடைவதில்லை. எனவே இதுபற்றி கலந்துரையாடி இரு பகுதி மக்களும் புரிந்துணர்வுடன் செயற்பட கூடிய வகையில் ஊடகங்கள் தமது செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 

ஆயுதம் தாங்கிய இளைஞரின் படம் முகநூலில் ; பதிவேற்றிய இளைஞர் ரி.ஐ.டி. விசாரணையில்

ஆயுதம் தாங்கிய ஒளிபடம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில், பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இளைஞரிடம் மூன்று மணி நேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைக்கு சென்று வந்த இளைஞரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது;

வவுனியாவிலுள்ள அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணித்தலைவரின் ஆயுதம் தாக்கிய புகைப்படம் ஒன்றினை எனது முகநூலில் அண்மையில் பதிவேற்றம் செய்திருந்தேன். அதற்காகவே, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் என்னை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று முன் தினம் செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் தொடங்கி பிற்பகல் 12 வரை என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் புகைப்படம் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளிவந்தமை தொடர்பாகவும் இந்த விடயத்துடன் தொடர்புடையவரின் விவரங்களும் விசாரணைகளின்போது மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்பட்டன” என்றார்.

தமிழரசுக் கட்சியின் சகல பதவிகளிலும் இருந்து நீக்கப்பட்டார் விமலேஸ்வரி; துரைராஜசிங்கம் அதிரடி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசிங்கம் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின் போது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இது கட்சியின் ஒழுக்கக் கோவை அ(1), ஆ(5) அகிய பிரிவுகளின் அடிப்படையில் அவருக்கான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கட்சியின் அனைத்து பதவிகள் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கி.துரைராசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவருக்கு 2020.07.01 திகதியிட்டு கடிதம் பதவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டள்ளதுடன், அக்கடிதம் உடன் அவரைச் சேரும் விதமாக வாட்சப் மூலமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கி.துரைராசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

75 வாக்குகளை அளித்தாராம் ; சிறிதரனுக்கு எதிராக தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு

75 வாக்குகளை ஒரே நாளில் கள்ளமாக அளித்தேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துப்பட்டுள்ளது.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் என்பவராலே இந்த முறைப்பாடு நேற்றுப் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னார் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாம் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 வாக்குகளை ஒரே நாளில் அளித்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியிருந்தார்.

அது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று யாழ். மாவட்டத் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டு செய்யப்பட்டதற்கான அத்தாட்சியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் முறைப்பாடு தொடர்பில் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.

22 தமிழ் இளைஞர் ரி.ஐ.டி.யால் கைது; உறுதிப்படுத்தினார் பொலிஸ் பேச்சாளர்

புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலத்துக்குள் சத்தம் சந்தடியில்லாமல் ரி.ஐ.டி யால் 22 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்தக் கைதுகளைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதி செய்தார்.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்படவில்லை எனவும், வெவ்வேறு குற்றவியல் குழுக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இதேவேளை, இவ்விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை அலரிமாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தார். அவரிடமும் இந்தக் கைது நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த அவர், அண்மையில் வடக்கு மாகாணத்தில் சில இராணுவ முகாம்களுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகச் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் எனத் தமக்கு தகவல் கிடைத்ததாகக் கூறினார்.