Home Blog Page 17

நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.

இந்த குழுவில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் பிரதி அமைச்சர் உட்பட நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா சென்று, இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர் நாடு திரும்பியுள்ளது. ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஒரு உறுதியான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் அதே வேளையில், இலங்கை அரசு உள்நாட்டு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைத் தவிர்க்க முயல்கிறது.

இந்த முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது.

ஏமாற்றத்தின் தொடர்கதை – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8ம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் நடைபெறுகின்றது.
இந்நிலையில், 60ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளிலேயே இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான தனது அலு வலகத்தினால் தயாரிக்கப்பட்ட எழுத்து மூல அறிக் கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.
அவரது உரையின் சாரம்சமும், அறிக்கை யின் உள்ளடக்கமும் இலங்கையின் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த விவகாரங்களில் மனித உரிமைகள் பேரவையின் வகிபாகம் தொடர் பிலான எதிர்பார்ப்புகளில்மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற் படுத்தியுள்ளது.
ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது உரையில், கடந்த கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதுதான் நல்லிணக் கத்திற்கான ஒரேவழி என்று தெளிவாக வலியுறுத் தியுள்ளார். ஆனால், தற்போதைய அநுர அரசாங்கம், வழமைபோல, உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கப்போவதாகக் கூறி, சர்வதேச தலையீடுகளை நிராகரிக்கும் போக்கையே வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலைப்பாடு, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தினருக்கு மிகுந்த மனவேதனையையும், ஏமாற்றத்தையும் நிறைவாக அளித்துள்ளது.
இலங்கையில் போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக் களுக்கு நீதி கிடைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஒவ்வொரு முறை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை அரசாங்கம் புதிய புதிய வாக்கு றுதிகளை ‘காலங்கடத்தும்’ அல்லது ‘ஏமாற்றும்’ நோக்கங் களுடன் வாக்குறுதிகளை அளிக்கிறது.
அந்த வகையில் இம்முறை, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டில் ஒரு ‘புதிய அரசியல் கலாசாரம்’ உருவாகி வருவதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த வாக்குறுதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எவ்வித நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை.
ஏனென்றால், இதற்கு முன்னர் ஆட்சியில் அமர்ந்திருந்த அனைத்து அரசாங்கங்களும் இதே போன்ற வாக்குறுதிகளை அளித்துவிட்டு அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த மனித உரிமைகள் பேரவையையும் ஏமாற்றியும் இருந்தன. அதிலும் 2015ஆம் ஆண்டு, மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கம் என்று அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தரப்பின் ஆதரவினையும் பெற்றுக்கொண்ட அரசாங்கம் கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கு இணை அனுசரணை வழங்கியது.
நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை அமுல்படுத்தப்போவதாகவும் அறிவித்தது. ஆனால் அதே அரசாங்கம் அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தது. இந்தச் செயற்பாடொன்றே இலங்கையின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வளவு உறுதியற்றவர்கள் என்பதை உறுதியாக வெளிப்படுத்துவதற்கான சான்றாகும்.
அவ்வாறான நிலையில் தான் தற் போதைய அநுர அரசாங்கமும் நல்லாட்சி அர சாங்கத்தின் அதே தந்திரோபாயத்தையே பயன் படுத்தி வருகின்றார்கள் என்பது மிகத் தெளி வாக புலனாகியிருக்கின்றது. இந்நிலையில் தற் போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியதன் அவசியம் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் காணப்படப்போவதில்லை.
அதேநேரம் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அலுவ லக அறிக்கையில், இலங்கை அரசாங்கம் அளித்த முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருகின்றன. குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு வதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அது இன்னமும் நீக்கப்படவில்லை. மாறாக, அதற்குப் பதிலாக ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இது, ஒரு சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக, அதே அடக்குமுறைக்கான இன்னொரு சட்டத்தை மாற்றிவைப்பதாகும்.
மேலும், மனித உரிமைச் செயற்பாட்டாளர் கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட் டோர் மீதான கண்காணிப்பும் அச்சுறுத்தல்களும் தொடர்வதாகவும், வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் நீடிப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் பார்க்கின்றபோது, அநுர அரசாங்கத்தின் இந்தப்போக்கு, அதன் நல்லி ணக்க உரைகளுக்கு முற்றிலும் முரணானவை. உண்மையாகவே நல்லிணக்கத்தை விரும்பும் ஒரு அரசாங்கமாக இருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளையும், அச்சமற்ற வாழ்க் கையையும் உறுதி செய்ய வேண்டியது ஆகக் குறைந்த கடப்பாடாகும். ஆனால், இலங்கையில் அதற்கு நேர்மாறான நிலைமையே காணப்படுகிறது. செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் போனோர் போன்ற மிக முக்கியமான விவகாரங்கள் குறித்து உயர்தானிகருக்கு பதிலளித்து உரையாற்றிய வெளி விவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் உரையில் எந்தவிதமான உறுதியான தகவல்களும் இல்லை.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொறி முறையைக் கொண்டுவரப்போவதாகக் கூறியதை, ஐ.நா. உறுப்பு நாடுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டன. ஆனால், அந்தப் பொறிமுறை என்ன, அது எப்போது அமைக்கப்படும், என்ன காலக் கெடுவுக்குள் அது நீதியை வழங்கும் போன்ற எந்தக் கேள்விகளையும் அவை எழுப்பவில்லை.
உறுப்புநாடுகளின் இந்தப்போக்கானது, சர்வதேச சமூகம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் மீண்டும் ஒருமுறை தவறிழைக்கப்போகின்றது என்பதை தெளிவாக உணர்த்துவதாக இருக்கின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் சமூகங்கள், உள் நாட்டுப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக் கின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச நீதிமன்றம் போன்ற வெளியகப் பொறிமுறைகளின் மூலமே நீதியைப் பெற முடியும் என்பதில் அவர்கள் உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கின்றார்கள்.
உள்நாட்டில் காணப்பட்ட கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, இது ஒரு நியாயமான நிலைப்பாடாகும். போரின் போது இடம்பெற்ற இனவழிப்பு, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரிய மீறல்களுக்கு இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் ஒரு நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையால் நீதி வழங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினால் சிறுகுழந்தையும் சிந்திக்கும்.
ஏனென்றால் ஆட்சிப்பீடங்களில் இருந்த எந்த இலங்கை அரசாங்கங்களும் இந்த விடயத்தில் இதயசுத்தியோடு நடந்து கொண்டிருக்கவில்லை.  காலத்துக்குக் காலம் தனது வாக்குறுதிகளை மாற்றிக்கொண்டுள்ளன.
ஒரு அரசாங்கம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உறுதியளித்தால், அடுத்த அர சாங்கம் அதை நிராகரிக்கிறது. இந்தச் சுழற்சி தொடர்கிறது. இந்நிலைமை தொடர்ந்தும் நீடித் தால் நீதியைக் கோரும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்னும் சொற்ப காலத்தில் உயிரோடு இருக்க மாட்டார்கள். ஆகவே நீதிக்கோரிக்கை மெல்லச்சாகும் என்பது அரசாங்கங்களின் வியூக மாக இருக்கலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இந்த விவகாரத்தில் ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுக்காவிட்டால், இலங்கை ஆட்சியாளர்கள் இதேதந்திரத்தை அடுத்தடுத்த தசாப்தங்களுக் கும் பயன்படுத்துவார்கள் என்பதை மறுதலிக்க முடியாது.
அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரப்பகிர்வுடனான சுயநிர்ணய அரசியல் உரிமைகளைக் கோரிவருகின்றார்கள்.
இந்த விடயம் பற்றி ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அலுவலக அறிக்கையோ உயர்ஸ்தானிகரோ வாய்திறக்கவே இல்லை. அவ்வாறாக இருந்தால் குறித்த கோரிக்கையை சர்வதேச சமூகம் எவ்வாறு பார்க்கின்றது என்ற கேள்வி இங்கே எழுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் ‘இலங்கையர் தினம்’ இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக ளுக்கு தீர்வை அளிக்கும் என்று கருதுகின்றதா?என்ற கேள்வியை இங்கே இயல்பாக எழுப்பு வதற்கும் வித்திட்டிருக்கின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கும், சர்வதேச சமூகமும் ஒரு விடயத்தினை புரிந்து கொள்வது சாலச்சிறந்தது. அதாவது, பாதிக்கப்பட்ட மக்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அபிலாசைகள் நிறைவேற்றப்படாத வரை, இலங்கையில் நிரந்தரமான நல்லிணக்கம், அமைதியும் ஏற்படப்போவதில்லை.
இந்தச் சூழலில் பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ எனும்  கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணை எப்படியிருக்கப்போகின்றது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் : சுரேஸ் வலியுறுத்தல்

பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர யுத்த குற்றங்களில் ஈடுபட்டாரா? என்பதை அறிவதற்கு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலே உண்மைகள் வெளிவரும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை. போரின் போது நிகழக்கூடாத சில விடயங்கள் நடந்திருக்கலாம்” என பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள் இலங்கையில் நடக்கவில்லை என கூறுவது ஒரு அப்பட்டமான பொய். செம்மணிப் புதைகுழி விவகாரம் என்பதுவே ஒரு யுத்தக் குற்றமாகும்.

அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதுவே ஒரு யுத்த குற்றம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதுபோல வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

யுத்தத்தினுடைய இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயம் எனக் கூறிவிட்டு மக்களை அந்த பாதுகாப்பு இடத்திற்கு செல்லுங்கள் என கூறிவிட்டு அங்கு மோட்டார் குண்டு மூலம் தாக்கியும், வேறு பல்வேறு விதமான முறைகளில் தாக்கியும் அந்த மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இது சர்வதேச ரீதியாக எல்லோரும் ஏற்றுக் கொண்ட விடயம். அதுவே மிகவும் பாரதூரமான ஒரு யுத்த குற்றம் என்று அவர் தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் அருண ஜயசேகர முதலில் இராணுவத்தில் இருந்ததனால் அவர் யுத்த குற்றம் இடம்பெறவில்லை என்றுதான் கூறுவார். அவரைப் பொறுத்தவரை அவர் இராணுவத்தை பாதுகாக்க வேண்டும், முப்படையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே உள்ளார்.

அவர் ஏற்கனவே இராணுவத்தில் இருந்ததனால் அவருக்கும் இப்படியான தொடர்புகள் இருக்குமோ இல்லையோ எமக்கு தெரியாது. ஆகவே அது குறித்து அவரிடம் முழுமையான விசாரணை செய்தால்தான் உண்மை வெளிப்படும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

யுத்தக்குற்றம் புரிந்தவர்களே அந்த விசாரணையை செய்யக்கூடாது. அப்படி அவர்களே அந்த விசாரணையை செய்தால் நிச்சயமாக மக்களுக்கு நீதி கிட்டாது என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவில் மூன்றாவது நாடும் வீழ்த்தப்பட்டது…

இந்த வார தொடக்கத்தில் சிறிய இமயமலை தேசமான நேபாளத்தை  ‘ஜெனரல்-இசட்’ போராட்டங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை(11) நேபாளம் நாடு தழுவிய ஊரட ங்கு உத்தரவின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.  தலைநகர் காத் மாண்டுவில், போராட்டக்காரர் கள் கட்டிடங்களுக்கு தீ வைத்த தால் அங்கு ஏற்பட்ட அமைதியின் மையைத் தடுக்க இராணுவம் நாட்டை தனது பொறுப்பில் எடுத்ததுடன்,  மக்களை வீட்டி லேயே இருக்குமாறு இராணுவம் உத்தரவிட்டிருந்தது.
அதேசமயம், வன்முறை போராட்டங்களின் போது நேபாளத் தின் 77 மாவட்டங்களிலும் உள்ள சிறைகளில் இருந்து குறைந்தது 13,000 கைதிகள் தப்பியேபடியுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
அதேசமயம் போராட்டக் காரர்களின் பிரதிநிதிகள் காத் மாண்டுவில் உள்ள இராணுவ தலை மையகத்தில் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து ஒரு இடைக்காலத் தலைவரைப் பற்றி விவாதித் ததுடன், அவர்களில் சிலர் பிரபல முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நியமிக்க வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (8) சமூக ஊடகங்கள் மீதான அரசின் குறுகிய கால  தடையால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களின் அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற் கொண்டிருந்தனர், அவர்களை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பின்னர் போராட்டங்கள் தீவிரமடைந்து அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்ப மாகியிருந்தன. வன்முறையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 25 ஐ எட்டியுள்ளது என்றும், 633 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அங்கு இடம்பெற்ற போராட்டங்களின் போது மிகவும் பழமைவாய்ந்த அரண்மனை மற்றும் நாடாளுமன்ற கட்டிடம் என்பன உட்பட பெருமளவான அரசுச் சொத்துக்கள் அழிக்கப் பட்டுள்ளன. போராட்டக்காரர்களின் இந்த நடவடிக்கையால் 5 பில்லியன் டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல் கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பிரதமர் உட்பட பெருமளவான அரசியல் வாதிகள் சிறப்பு படை உலங்குவார்திகள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப் பட்டுள்ளனர்.

பழைய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் பரிசீலனை

பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது. எனினும், புதிய எல்லை நிர்ணய செயல்முறையானது, சிக்கலானது மற்றும் நீண்டது என்பதால், அடுத்த தேர்தலை, 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ் நடத்த ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாமதமின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்த திட்டத்தை அரசாங்கம் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது, இந்திய பிரதிநிதி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஒட்டுமொத்த ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்குள் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை ஆதரிப்பதே இந்தியாவின் அணுகுமுறையாக இருந்து வருகிறது.

இலங்கை அரசியலமைப்பை முழுமையாகவும் திறம்படவும் செயல்படுத்தவும், மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்தவும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கும் இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுப்பதாகவும் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் அனுபமா சிங் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை – கட்டார் எச்சரிக்கை

கத்தாரில் ஹமாஸ் அமைப் பினரின் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் மேற் கொண்ட தாக்குதல் அரச பயங்கர வாதம், எனவே இஸ் ரேலியஆக்கிரமிப்புக்கு “கூட்டு பதில்” இருக்க வேண்டும் என்று கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அமெரிக்க செய்தி நிறுவனமான CNN இற்கு தெரிவித்துள்ளார்.
“பிராந்தியத்திலிருந்து ஒரு பதில் வரும். இந்த பதில் தற்போது பிராந்தியத்தில் உள்ள மற்ற கூட் டாளிகளுடன் ஆலோசனை மற்றும் விவாதத்தில் உள்ளது” என்று ஷேக் முகமது கூறினார்.
“இந்த வன்முறைகளை தொடர்வதிலிரு ந்து இஸ்ரேலைத் தடுக்கும் அர்த்தமுள்ள  நட வடிக்கை ஒன்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு கத்தார் மக்கள் விரும்புவது  பிராந்தியத்திலிருந்து வரும் கூட்டான பதிலையே – மேலும் பல்வேறு வளைகுடா நாடுகள் கத்தாரின் பதிலையே எதிரொலிப்பதால், ஒரு கூட்டு பதில் நடவடிக்கை சாத்தியமானதே.
இந்த தாக்குதலுக்கு பின்னர் குவைத் பட்டத்து இளவரசர், ஜோர்டான் பட்டத்து இளவரசர் மற்றும் எமிராட்டி ஜனாதிபதி அனைவரும் கத்தாருக்குச் சென்றுள்ளனர். சவுதி பட்டத்து இளவரசரும் அங்கு சென்றதும் கூட்டு பதில் நடைவடிக்கை தொடர்பாக ஆராயப் படவுள்ளது.
தோஹாவில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் மூத்த தலைவர்கள் யாரும் கொல்லப்பட்டவில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளபோதும், அதன் 5 உறுப்பினர்கள் உட்பட 6 பேர் இந்த தாக்குதலில் கொல்லப் பட்டிருந்தனர். 10 இற்கு மேற்பட்ட இஸ்ரேலிய விமானங்கள் கடந்த செவ் வாய்க் கிழமை(8) 14 குண்டுகளை ஹமாஸ் அமைப்பினரின் பேச்சு வார்த்தைக் குழுவினர் இருந்த கட்டி டம் மீது வீசியிருந்தன.

கூட்டு எதிரணியாக மாகாண சபை தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தப்படும்: திஸ்ஸ அத்தநாயக்க

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலைக் கண்டு அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது? இத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்துக்குள்ள உண்மையான மக்கள் ஆணை என்ன என்பது வெளிப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியை சந்தித்த போதே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஊடகப் பிரசாரங்கள் மூலம் முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கிறது.
தேசிய மக்கள் கட்சி ஆட்சியேற்று ஓராண்டு நிறைவடைகிறது.  தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் அரசாங்கம் எதனை நடைமுறைப்படுத்தியுள்ளது? வாக்குறுதிகளை ஒருபுறம் வைத்து விட்டு ஊடக பிரசாரங்களை முன்னெடுப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அரசியல் பழிவாங்கல்களுக்கும் உட்படுத்துகிறது.
அரசாங்கம் மாத்திரமின்றி பாராளுமன்றத்திலும் சபாநாயகரது நடத்தைகளிலும் பிரச்சினையுள்ளது. பாராளுமன்றத்தில் சபாநாயகர் என்பவர் சகல கட்சிகளுக்கும் பொதுவானவர்.

அவரால் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதைய சபாநாயகரின் நடத்தையை அவதானிக்கும் போது பாராளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா? என்பதே சந்தேகத்துக்கிடமாகவுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் விடயத்திலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் தாமதப்படுத்தாது வெகு விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சித்தால் அது தவறாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டியவையாகும்.
எனவே ஆளுனர்களால் அவற்றை தொடர்ந்தும் ஆட்சி செய்ய அனுமதிக்க முடியாது. அவசர நிலைமைகளில் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் வருடக் கணக்கில் ஆளுனர் ஆட்சிக்கு இடமளிப்பது தவறாகும்.
எனவே மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலைக் கண்டு எதற்காக அஞ்சுகின்றனர்? இத்தேர்தல் நடத்தப்பட்டால்அரசாங்கத்துக்குள் உண்மையான மக்கள் ஆணை வெளிப்படும். அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை உலுக்கும் அரசியல் படுகொலைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நீண்டகால ஆதரவாளரான கன்சர்வேடிவ் வர்ணனையாளர் சார்லி கிர்க்(31), கடந்த புதன்கிழமை(10) உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத் தில் உரை நிகழ்த்திக் கொண் டிருந்தபோது படுகொலை செய் யப்பட்டார். வலதுசாரி ஆர்வலரான அவரது கழுத்தில் சுடப்பட்டு, சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தேக நபரின் அடையாளம் அல்லது சாத்தியமான நோக்கம் குறித்த விவரங்கள் எதுவும் வெளி யிடப்படவில்லை.
அரசியல் ரீதியான வன் முறை மற்றும் உயர்மட்ட கொலை முயற்சிகளின் ஆபத்தை அமெரிக்கா சந்தித்து வருகிறது. அமெரிக்கா நெருக்கடியான அரசியல் வன்முறை சுழற்சியில் நுழைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், பல உயர் மட்ட படுகொலை முயற்சிகள் நாட்டையே உலுக்கியுள்ளன.
ஜூலை 13, 2024 அன்று, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பென்சில் வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியின் போது கொலை முயற்சியில் இருந்து மயிரி ழையில் தப்பினார். தாக்குதல் நடத்திய 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், மேற்கொண்ட தாக்குதலில், ட்ரம்ப்  காதில் காயமடைந்தார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, செப்டம் பர் 15 அன்று, புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் கோல்ஃப் கிளப்பிற்கு வெளியே, அதிக ஆயுதம் ஏந்திய உக்ரைன் ஆதரவு நபர் கைது செய்யப்பட்டிருந்தார், ட்ரம்ப் இரண்டாவது கொலை முயற்சிக்கு இலக்காகியதாகக் கூறப் படுகிறது.
மினசோட்டா ஜனநாயகக் கட்சித் தலை வர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் ஜூன் 14, 2025 அன்று அவர்களது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே இரவு இடம்பெற்ற தாக்குதலில் மாநில செனட்டர் ஜான் ஹாஃப்மேன் மற்றும் அவரது மனைவி காயமடைந்து உயிர் பிழைத்தனர்.
சந்தேக நபர், இராணுவ அனுபவமும், தனியார் ஒப்பந்தக்காரராக கடந்த காலமும் கொண்ட 57 வயதான வான்ஸ் லூதர் போல்டர். அவர் தான் இந்த அரசியல் படுகொலையைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாகவும், மேலும் 70 இலக்குகளின் பட்டியலை வைத்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
டிசம்பர் 18, 2024 அன்று, வலதுசாரி செல் வாக்கு மிக்க நிக் ஃபியூன்டெஸ், இல்லினாய்ஸின் பெர்வினில் உள்ள தனது வீட்டில் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கி, மற்றும் தீக்குளிக்கும் சாதனங்களுடன் ஒருவர் வந்ததாகக் தெரிவித்திருந்தார். பின்னர் அவர் பிறகு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இலங்கை தொடர்பான புதிய வரைவு ஒன்று ஐ.நா.வில் சமர்ப்பிக்க தீர்மானம்

இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவு தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு, இலங்கை தொடர்பான மையக்குழுவின் உறுப்பு நாடுகளான பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவை வழங்கவுள்ளன.
இதன்படி இலங்கைக்கான பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசமும் நீடிக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம், இலங்கையில் மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு, சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகள் உட்பட, தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், சான்று சேகரிக்கும் பொறிமுறையாகவும் அது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த புதிய தீர்மானம், இலங்கை அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்கிறது. நாட்டில் பல தசாப்தங்களாக நிலவும் பிளவுபடுத்தும் இனவெறி அரசியல் மற்றும் இன மோதல்களின் விளைவாக ஏற்பட்ட தீங்குகள் மற்றும் துன்பங்களை ஒப்புக்கொள்வதையும் இந்த தீர்மானம் ஏற்கிறது.

அதேநேரத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியதன் அவசரத் தேவையையும், அது வலியுறுத்துகிறது. இலங்கையில் பல மனித புதைகுழி தளங்களை அடையாளம் காண்பது குறித்தும், போதுமான வளங்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

அதேநேரம் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் சுயாதீனமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் இந்தத் தீர்மானம் கோருகிறது. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப அகழ்வுகளை நடத்துவதற்கு போதுமான நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களை உறுதி செய்வதற்கு சர்வதேச ஆதரவை முன்கூட்டியே பெறவும் இது வழிவகுக்கிறது.

அத்துடன், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து, வழக்குத் தொடரும்போது திறன்களை வலுப்படுத்த சர்வதேச உதவியை நாடவும் இந்த தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

ஒரு சுயாதீனமான பொது வழக்கு தொடுநர் அமைப்பை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, இந்த தீர்மானம் பாராட்டி ஒப்புக்கொள்கிறது. அதே நேரத்தில் இது முற்றிலும் சுயாதீனமாகவும், பயனுள்ளதாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது,
அத்துடன், ஏற்கனவே பல தசாப்தங்களில் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில், ஒரு சுயாதீனமான சிறப்பு ஆலோசகரைக் கொண்ட ஒரு நீதித்துறை பொறிமுறையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க, இலங்கை அரசாங்கத்தை இந்த தீர்மானம் ஊக்குவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் இறைமையையும் மனித உரிமைகளையும் தொடர்ச்சியாகப் பேணவல்ல செயலணி காலத்தின் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 356

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 20வது ஆண்டில் அதன் அறுபதாவது அமர்வு சிறிலங்காவின் ஈழத்தமிழன அழிப்பு-துடைப்பு-பண்பாட்டு இனஅழிப்பு என்பவற்றுக்கான தண்டனைநீதி, பரிகாரநீதி என்பவற்றை சிறிலங்காவின் நீதிவழமைக்குள்ளேயே  உள்ளகப்பொறிமுறைக்குள் நடைமுறைப்படுத்த சிறிலங்காவின் இன்றைய அரசாங்கத்துக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்து அனைத்துலக நிதியும் மதிப்பும்  அதற்கு அளிக்கும் செயற்திட்டத்தையே முதன்மைப்படுத்தியுள்ளது.
ஆனால் சிறிலங்காவின் நீதிவழமை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை இல்லாத அரசியலமைப்பை எழுதப்பட்ட அரசியலமைப்பாகக் கொண்டது. 1972 மே மாதம் 22 முதல் இன்று வரை அரைநூற்றாண்டுக்கு மேலாக 53 ஆண்டுகள் இந்த பக்கச் சார்பான நீதிவழமையே செயற்பட்டு வருகிறது என்பது உலகறிந்த உண்மை. இதனால் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் 1948 முதல் இனஅழிப்பை முன்னெடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதப் பெரும்பான்மையினரின் படைபலம் வழியாக தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக் கூடிய அச்சத்துடன் பாராளுமன்றக் கொடுங்கோன்மை வழியாக அடக்கப்படும் ஒடுக்கப்படும் அரசற்ற தேசமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவே ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கான மூலகாரணம்.
ஆனால் இந்த அணுகுமுறையில் மனித உரிமைகள் பேரவை ஈழத்தமிழர் மனித உரிமைகள் பிரச்சினைகளை அணுகாது சிறிலங்கா என்னும் அரசினை பொறுப்புக்கூற வைப்பதன் மூலம் அதன் இறைமையை அதனால் ஆட்சிப்படுத்தப்படுபவர்களுடன் இணக்கப்படுத்தி அது வலுவான அரசாக செயற்பட வைப்பதற்கான அனைத்து நெறிப்படுத்தல்களையும் மனித உரிமைகள் பேரவையின் 2025ம் ஆண்டுக்கான சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த அறிக்கை செய்துள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் அவர்கள் உலக இனமாக வாழும் அனைத்து நாடுகளிலும் ஈழத்தமிழர்  மனித உரிமைகளைத் தொடர்ச்சியாகப் பேணவல்ல செயலணிகளை அமைத்து உறுதியுடன் சனநாயக வழிகளில் போராடுவதன் மூலமே தங்களின் இறைமையைப் பேண வேண்டிய காலத்தின் தேவை உள்ளவர்களாக இன்று உள்ளனர். இது மனித உரிமைப்போராட்டம் அரசியலுக்கு கட்சிகளுக்கு அமைப்புக்களுக்கு அப்பாற்பட்ட மக்களின் போராட்டம்.
இதற்கு அனைத்துலக இன்றைய உலக அரசியல் முறைமைகள் அனைத்துலக நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக மாற்றங்களின் நோக்குகள் போக்குகள் குறித்த தெளிவான சிந்தனைகளை வழங்கவல்ல சிந்தனைச் செயலணிகள் முதற் தேவை.
அடுத்து இந்த இன்றைய சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக எதார்த்தங்களில் எவ்வாறு ஈழத்தமிழர்கள் தங்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக வலுக்களை வளர்க்க வல்ல அறிவார்ந்த அணுகுமுறைகள் உடன் செயல்பட வல்ல செயலணிகளை அமைத்தல் அவசியம்
இவை இரண்டும் நிபுணத்துவமும் அனுபவமும் மிக்கவர்களின் வழியாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் தொழிலாளர்கள் மக்களின் நாளாந்த வாழ்வுக்குப் பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்குபவர்கள் மக்கள் பணி நாட்டுப்பணி செய்யும் ஆன்மிகவாதிகள் சிந்தனைவாதிகள் அனைவரும் உள்ளடக்கப்பட வேண்டும். இதனையே சிவில் சமூகங்களின் இணைப்பு என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு உழைப்பாளரதும் தேவைகள் பயிற்சிகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டாலே அவற்றைத் தீர்த்து வைப்பதன் மூலம் ஒருங்கமைந்த சமுகத்தைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு மண்ணின் வளங்களின் பாதை வரைபு மிக முக்கியமானது. ஊரின் தன்மை தெரிந்தவர்களும் அவற்றை வலுப்படுத்தக் கூடிய பல்கலைக்கழக அறிவாற்றலுள்ளவர்களும் இணைந்து இந்த ஈழத்தமிழர் தாயகத்தின் உட்கட்டுமானங்களையும் ஈழத்தமிழர்களின் ஆற்றல்களின் இருப்புக்களையும் இனங்கண்டு இதனைச் செய்தாலே அதனை உலகச் சந்தை பயன்படுத்துவதற்கான தூண்டல்களை ஏற்படுத்த இயலும்.
இத்துடன் இளையவர்கள் இன்று உள்ள அவர்களின் உளநிலைக்கு எற்ப இந்தச் செயலணிகளில் தங்களின் கருத்துக்களை எண்ணங்களைச் செயலாக்க வல்ல செயற்திட்டங்களை அமைக்கும் ஆற்றல் ஒவ்வொரு செயலணிக்கும் அளிக்கப்பட வேண்டும்.
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லையென்ற அனுபவத்தின் அடிப்படையில் பெண்கள் தங்களின் வாழ்வியல் வளர்ச்சிக்கான சுதந்திரமான தீர்மானங்களை எடுக்க வல்லவர்களாக உறுதிப்படுத்தக்கூடிய வகையில் இந்தச் செயலணிகள் செம்மைப்படுத்தப்படல் அவசியம்.
இவற்றைச் செய்வதற்கான அறிவியல் தொழில்நுட்ப தளங்களை இணைத்தல் என்பது இன்றைய செயற்கை நுண்ணறிவுக்காலத்தின் கடமையாக அமைகிறது. இதற்கு அனைத்துலக அறிவுலகின் இணைப்பு என்பது உலகத் தமிழர்களால் பயிற்சிகள் முயற்சிகள் வழி செய்யப்பட வேண்டியதாகிறது.
இவற்றை எல்லாம் செயற்படுத்துவதற்கு நிதி முகாமைத்துவம் அடித்தளமாகவுள்ளது. ஒரு அரசாக இல்லாத நிலையில் மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களை நடாத்துவதற்குச் சமூக மூலதனமே துணையாக அமையும். இதனை முறைமையான வங்கி அமைப்பின் மூலமே நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்.
இந்த எண்ணங்களையும் நாளாந்த வாழ்வையும் மக்களையும் இணைப்பதற்குப் பலம் வாய்ந்த ஊடகக்கட்டமைப்பு காலத்தின் தேவையாகிறது.
இவ்விடத்தில் இன்று சிறிலங்காவில் உள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரங்களை தமதாக்கும் போக்குகளும் படைபலம் கொண்டு ஆளும் நோக்குகளும் இவற்றுக்கு இடங்கொடாது என்பது வெளிப்படையான உண்மை.
அப்படியானால் எப்படி இவற்றைச் செய்வது என்பதற்கு இலங்கைத் தீவில் உள்ள மக்களுக்கு ஈழத்தமிழர்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக வாழ்வின் உண்மையான வளர்ச்சிகள் பாதிக்கப்படும் பொழுது அவர்களின் தளர்ச்சிகளும் வீழச்சிகளும்; இணைந்தே ஏற்படும் என்கின்ற உண்மை தெளிவாக்கப்படல் வேண்டும். உரையாடல்கள் மூலமே இதனை முன்னெடுக்க முடியும்.
தப்பிப்பிழைக்கும் பொறிமுறைக்குள் சிறிலங்காவிடமே நாளாந்த வாழ்வின் இருப்புக்கான தேவைகளைப் பெற வேண்டிய நிலையில் ஈழத்தமிழர்கள் வாழ்வதால் ஈழத்தமிழர்களைத் தனது குடிகளென அவர்களின் வரிப்பணத்தையும் ஆற்றல்களையும் அறிவையும் தனது நிதியாக்கத்திற்கும் வளர்ச்சிகளுக்கும் பயன்படுத்தி வரும் சிறிலங்கா அரசாங்கத்துடனும் மக்களின் பாதுகாப்பு தேவைகள் வளர்ச்சிகள் குறித்து பேச வேண்டிய நிலையுள்ளது. இதனை அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்கக் கூடிய செயலணிகளும் இன்றைய தேவையாக உள்ளன என்பது நடைமுறை எதார்த்தமாக உள்ளது.
அவ்வாறே இந்தியத்துணைக்கண்டத்தின் பிரிக்க இயலாத நிலப்பரப்பாகவும் இந்துமாக்கடலின் முக்கிய கரையோர நாடாகவும் உள்ள ஈழத்தமிழரின் தாயகத்தின் இருப்புநிலை பிராந்திய மேலாண்மைகளதும் அனைத்துலக வல்லாண்மைகளின் இலக்காக ஈழத்தமிழர் தாயகத்தை அமைக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த உலக சத்திகளுடனான ராஜதந்திர அணுகுமுறையும் மண்ணினதும் மக்களினதும் விருப்பின் அடிப்படையில் அது அமைவதும் அவசியமாகிறது. இன்று இவ்விடயத்தில் ஈழத்தமிழர்களின் இயலாமை இந்த வல்லாண்மைகள் மேலாண்மைகளின் அக்கறைக்குரிய அரசாக சிறிலங்காவை முன்னிறுத்தி வருகிறது.
மிகப்பரந்த அளவிலும் மிக வலிமையானதாகவும் செயலணிகள் பல தேவைகளுக்கு ஏற்பக்கட்டமைக்கப்பட்டு அவை எல்லாவற்றிலும் மனித உரிமைகள் என்னும் அனைத்துலகத்தாலும் பேணப்பட வேண்டிய உரிமைகள் எந்த அளவுக்குப் பேணப்படுகிறது என்ற மதிப்பாய்வுகள் தெளிவாக்கப்படும் பொழுது அது இயல்பாகவே மனித உரிமைகள் செயலணிகள் தோற்றம் பெறவும் வலுப்பெறவும் உதவும் என்பது இலக்கின் எண்ணம்.
எவ்வளவு செயற்பாடுகள் விரிந்து கிடக்கின்றன. ஆனால் எப்படி நடைமுறையில் விதண்டா வாதங்களும் வெட்டிப் பேச்சுகளும் பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வளர்த்து வரும் இனமாக ஈழத்தமிழினம் உள்ளது என்பதை எண்ணிப்பார்த்து. நாம் நேருக்கு நேர் உரையாடி உறவாடுவோம். அதன்வழி ஒரு தலைமை ஒரு நோக்கு ஒரு போக்கு என்பதை உறுதியாக்குவோம். இது இயலாதென்பதில்லை. சிந்தித்தால் எந்த செயலையும் வெற்றியானதாக மாற்றும் ஆற்றல் கொண்டவன் மனிதன். இந்த உண்மையின் அடிப்படையில் கருத்தியல் மாற்றத்துக்கு முயன்றால் வெற்றி ஈட்ட முடியும் என்பதே இலக்கின் உறுதியான எண்ணம்.
இன்று மாறிவரும் உலக சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக சூழ்நிலைகள் ஈழத்தமிழரின் ஒருமைப்பாட்டுடன் கூடிய முயற்சியால் அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை மீளுறுதி செய்யக்கூடிய சந்தர்ப்பங்களை நிறையக் கொண்டுள்ளன. செயலணிகளை அமைப்போம். அதனை ஆளணிகளால் பலப்படுத்தி  உழைப்போம் நிச்சயம் வெற்றி நமதாகும் என்பது இலக்கின் உறுதியான எண்ணம்.

Tamil News