Home Blog Page 134

இலங்கையில் இருந்து 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக  தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா (12), அலிஷா (4), அமிரா (4) ஆகிய 5 பேர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் இன்று (ஜூன் 9) அதிகாலை  சென்றடைந்துள்ளனர்.

இந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், முகம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர், 5 இலங்கை தமிழர்களும் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு  சென்ற அகதிகளின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது.

சிஐடியில் ஆஜராகவுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தரமற்ற  தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.

யாழ். மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சிசபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்றும் அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். காங்கேசன்துறையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘தற்போது பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் தீர்மானம் மிக்க சக்தியாக தேசிய மக்கள் சக்தி உள்ளது’.

‘ஆட்சியமைப்பது தொடர்பில் பல்வேறு தரப்புகள் எங்களோடு உரையாடுகின்றார்கள்’. ‘இதுவரைகாலமும் எங்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு தூற்றியவர்கள் இன்று எங்களைக் காதலுடன் பார்க்கின்றார்கள்’ என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

‘யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உருவாக்கப்படவுள்ள எந்தவொரு உள்ளூராட்சி சபை நிர்வாகங்களுக்கும் இடையூறாக நாங்கள் இருக்கமாட்டோம்’. ‘கடந்த காலங்களில் எங்களைத் தூற்றி இனவாத ரீதியாக தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்ட எந்தவொரு அணியுடனும் சேரப்போவதில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார்.

‘யாழ். மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்’ என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவிற்கு பல்வேறு கோரிக்கைகள்!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவிற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் சமர்ப்பிப்புகளை அனுப்பியுள்ளனர்.

இதன்மூலம் தற்போதுள்ள ‘கொடூரமான’ பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். சிறை கைதிகளிடமிருந்தும் பல சமர்ப்பிப்புகள் பெறப்பட்டதாக நீதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அடுத்த கட்ட சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்தல் உட்பட இந்த பணிகளை நிறைவு செய்ய இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகலாம். அதே நேரம் பதிய சட்டத்துக்கு சில வரையறை காணப்பட வேண்டும், கடந்த காலங்களை போன்று அமைதி போராட்டங்களை கட்டுப்படுத்த அந்த சட்டத்துக்கு இடமளிக்க கூடாது போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டம் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்று சில தரப்பு வலியுறுத்தியுள்ளது.எனினும் மாற்றீடாக வேறு சட்டம் கொண்டு வரப்பட கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது.

இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மாற்று சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் மோசடி : சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பணியிடை நீக்கம்

சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய இன்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி மோசடிக்காக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்தமை தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் மோசடியாக ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்தமை தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அநுராதபுரம் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதி மே 12 ஆம் திகதி வெசாக் நாளில் விடுவிக்கப்பட்டதாக அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் எழுத்துப்பூர்வ அறிக்கையில் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

பிரதிவாதியை விடுவிப்பதற்கான முடிவு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த விடயத்தை தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
மேலும் இந்த பொது மன்னிப்பு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்றும், பொதுவாக கைதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தது.

இருப்பினும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதற்கு நேர்மாறான அறிக்கையை வெளியிட்டது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட பொது மன்னிப்புக்கு தகுதியான கைதிகளின் பட்டியலில் 388 பெயர்கள் இருந்தன என்றும், அனுராதபுரம் சிறைச்சாலையில் நடந்த நிதி மோசடி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்படவில்லை என்றும் கூறியது.

பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது,
இதன் விளைவாக, அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.
மேலும், சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்களை வழங்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இரண்டு முறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.

இதற்கிடையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் நேற்று ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி பல கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காஸாவுக்கு கிரேற்றா தண்பேக் உணவுப் பொருள் ஏற்றி சென்ற படகை இஸ்ரேல் திருப்பியனுப்பியதாக தகவல்

காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகில் இஸ்ரேல் படைகள் ஏறியதாகவும் கப்பலை திருப்பியுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்  மேட்லீன் படகின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஃப்ரீடம் ஃப்லோடில்லா கோயலிஷன் (எஃப்.எஃப்.சி) குழு தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

உயிர்க் கவசம் அணிந்தபடியுள்ள தன்னார்வலர்கள் கைகளை உயர்த்திய நிலையில் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் அது சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை. “தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி வந்ததால்” படகை வழிமாறிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது. காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுக்க இந்த முற்றுகை அவசியம் என இஸ்ரேல் தெரிவிக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சிசிலியில் இருந்து புறப்பட்ட படகு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ள எஃப்.எஃப்.சி, “இஸ்ரேல் தாக்குதலுக்கான சாத்தியத்திற்கும் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தது.

எகிப்து கரையில் இருந்து கிளம்பிய அந்தப் படகில் காலநிலை செயற்பாட்டாளர்  கிரேற்றா தண்பேக் உள்ளார். படகு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேலின் முற்றுகையை மீறும் எந்த முயற்சிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்திருந்தார்.

“மேடலெய்ன் படகு காஸா கரையைச் சேராமல் தடுக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஐடிஎஃப்-ற்கு (இஸ்ரேலியப் பாதுகாப்பு படை) உத்தரவிட்டுள்ளேன்” என ஞாயிறு அன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2007-ல் இருந்து அமலில் உள்ள இஸ்ரேலின் முற்றுகையின் நோக்கம் ஹமாஸிற்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுப்பதே என கட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடல் முற்றுகை என்பது சட்டவிரோதமானது என எஃப்.எஃப்.சி வாதிடுகிறது. கட்ஸின் கருத்து, பொதுமக்களுக்கு எதிராக சட்டவிரோதமாக படைகளைப் பயன்படுத்துவதற்கான இஸ்ரேலின் அச்சுறுத்தல் மற்றும் அதனை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என எஃப்.எஃப்.சி கூறுகிறது.

“எங்களை மிரட்ட முடியாது. உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது” என எஃப்.எஃப்.சியின் ஊடக அலுவலர் ஹே ஷா வியா தெரிவித்துள்ளார்.

“மேட்லீன் பொதுமக்கள் பயணிக்கும் படகு, ஆயுதம் ஏந்தாமல் உலகம் முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைச் சுமந்து கொண்டு சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காஸாவை சென்றடையும் எங்களின் முயற்சியைத் தடுக்க இஸ்ரேலுக்கு எந்த அதிகாரமும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேட்லீன் படகு அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதில் பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெய்ன், சுவீடன் மற்றும் துருக்கியின் குடிமக்கள் உள்ளனர்.

2010-ல், காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி கப்பலான மாவி மர்மராவில் பயணித்த 10 பேரையும் இஸ்ரேல் வீரர்கள் கொன்றனர்.

மூன்று மாத தரை வழி முற்றுகைக்குப் பிறகு இஸ்ரேல் குறிப்பிட்ட அளவிலான நிவாரணங்களை மட்டும் தற்போது காஸாவிற்குள் அனுமதித்து வருகிறது. அதனையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கிறது. இதற்கு நிவாரணக் குழுக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாலத்தீனர்களுக்கு வாழ்வா, சாவா என்கிற வாய்ப்பு மட்டுமே வழங்கப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார். “ஒன்று பட்டினியால் சாகுங்கள் அல்லது கிடைக்கின்ற சொற்ப உணவைப் பெற முயற்சித்து கொல்லப்படுங்கள் என்கிற இரு கடுமையான வாய்ப்புகள் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது” என்றார் வோல்கர் துர்க்.

2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய எல்லை கடந்த தாக்குதலில் 1,200 கொல்லப்பட்டும் 251 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதன் பிறகு காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடங்கி தற்போது 20 மாதங்கள் ஆகிவிட்டது.

தற்போது வரை காஸாவில் 54,880 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

“கிரேற்றா மற்றும் மற்றவர்கள் விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே இதனை நடத்துகின்றனர். அவர்கள் ஒரு லாரிக்கும் குறைவான நிவாரணப் பொருட்களையே எடுத்து வந்தனர், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இஸ்ரேலில் இருந்து காஸாவிற்கு 1,200  வாகனங்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளன.

இதனுடன் கூடுதலாக காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு 11 மில்லியன் சாப்பாடு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது” என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திங்கள் காலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், “காஸா பகுதிக்கு நிவாரணங்களை வழங்க பல வழிகள் உள்ளன. அதில் இன்ஸ்டாகிராம் செல்ஃபிக்கள் அடங்காது” என்றும் அது தெரிவித்துள்ளது.

நன்றி -பிபிசி தமிழ்

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி எதிர்வரும் 26 ஆரம்பம்!

யாழ்ப்பாணம்- அரியாலை செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகளின் பரீட்சார்த்த அகழ்வுப் பணி நேற்றுமுன்தினத்துடன் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி நடவடிக்கைகளில் 19 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அடுத்தக்கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

இது உள்நாட்டுப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான நீண்டகாலமாக தாமதமாகி வந்த உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் குறிப்பிடத்தக்க விடயமாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா;

யாழ். அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சார்த்த அகழ்விலிருந்து 19 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக்கூடுகளும் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார். இந்த மனிதப்புதைகுழி பரீட்சாத்த அகழ்வு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த பரீட்சாத்த அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அகழ்வுப்பணியை மேலும் 45 நாட்களுக்கு நீடித்து, நீதிவான் ஆ.ஆனந்தராஜாவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

45 நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீடு சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், யாழ். நீதிவான் நீதிமன்ற நீதபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிக்காக உத்தேச திகதியாக ஜூன் 26 ஆம் திகதியை நீதிவான் அனுமதித்துள்ளார்.

குறித்த, உத்தேச திகதிக்குள்ளாக சமர்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி உத்தேச திகதியில் இடம்பெறும் எனறார்.

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம்: இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிப்பு

யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு  நேற்று (8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசிய அவர் ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை. சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம்.

1956ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும்தான். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன்.

மக்கள் தவறாக முடிவெடுப்பதில். என்பிபி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு. அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம்.

ஒரு குறிப்பிட்ட சபையில், தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை. இதனை நாங்கள் 2018ம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறோம்.

சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம்தள்ளவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம்.

எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை.

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தய் கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு, அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால், 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தீயை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை.

தமிழா மக்களை, தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விக்கிறோம் எனத் தெரிவித்தார்.

சித்தர்களின் புனித பூமியில் குப்பை கொட்டாதே – யாழில் போராட்டம்

”இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என, காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக் கொழுத்தபடுவதால் சூழல் மாசடைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், சித்தர்கள் பலர் வாழ்ந்து சமாதியடைந்த இடமாகவும், சமாதி கோவில், ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைக்கால் சிவன் கோவில் ஆகியவை அமைந்துள்ள புண்ணிய பூமியில் கழிவுகள் கொட்டப்பட்டு, சேகரிக்கப்படும் இடமாக காணப்படுவதால், குறித்த கழிவகற்றல் நிலையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், இது வரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் ஏ.எஸ்.கே பண்டார அம்பாறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.