Home Blog Page 132

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தங்கள் செய்யவில்லை : சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தங்கள் செய்திருக்கிறது எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(10) நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், ‘நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாக வழங்குவோம்’. ‘ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்’. ‘மட்டக்களப்பில் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி ஏதோவொரு வகையாக ஆட்சியதிகாரத்தை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது’.

இதிலே தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒன்பது பிரதேச சபைகளிலே நாங்கள் தவிசாளர் ஒருவரை, மேயர் ஒருவரை, உதவி தவிசாளர் ஒருவரை, பிரதி மேயர் ஒருவரை எங்கள் கட்சியின் சார்பில் முன்மொழிய இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘எங்களுடைய அரசியல் குழுக் கூட்டத்திலே நாங்கள் எடுத்த தீர்மானம் தமிழ் பேசும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தவிசாளர் பதவிகளை எடுப்பதற்கான வேலைகளை பார்க்க வேண்டும் என்பதாகும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கின்றோம்’ என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல்!

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தினருக்கும் இடையே நேற்றைய தினம் (09) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தங்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையே ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.
இதன்படி, யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் தெரிவின் போது, ஏற்கனவே இணங்கிய அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயற்படுமாயின், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் மாநகரசபையின் முதல்வர் தெரிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
‘அன்றைய தினம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் உள்ளோம்’.
இதன்படி, எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய செயற்படாவிட்டால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான சகல இணக்கப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வட, கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை

வட, கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வட, கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும் இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தில் இவற்றையெல்லாம் விடுத்து இன்னும் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும் தான்தோன்றித்தனமான பொறுப்பற்ற அரசியல் அதிகார வீச்சுக்களும் சிறுபான்மை இன மக்களை நோக்கி அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி காணி நிர்ணய உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருந்த அரசு வர்த்தமானியானது தமிழ் மக்களினுடைய காணிகளை அபகரிக்கின்ற நோக்கமாக கொண்டது என்று பல தரப்புக்களும் அச்சம் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்தனர்.

இன்னும் இன மத சமூக நல்லிணக்கத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் செயற்பாடான தனியார் காணிகளில் அத்துமீறி செயற்பட்டு அவற்றை பௌத்தவிகாரைகளின் கட்டுமானங்கள் மற்றும் புராதன தொல்பொருள் இடங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் வெளிப்படையாக மத வேறுபாட்டையும் பிரிவினைவாத மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது.

இதை வடமாகாண நீதி சமாதான நல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிறது.
அத்துமீறி அடுத்தவர் காணிகளுக்குள் கட்டப்படுகின்ற மத ஸ்தலங்களில் ஆன்மீகத்தை தேடுவது அர்த்தமற்றதும் அநியாயமானதுமாகும். இதனை அவ்வாறான இடங்களுக்கு செல்லும் பக்தர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரித்து அவர்களுக்குரிய காணிகளை மீள ஒப்படைக்க முயற்சிப்பதும் உங்களுடைய கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம் என்று வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் (FDMD) கீதா கோபிநாத் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாற்றும் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.

இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடாத்தும் ‘இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்’ என்ற தலைப்பில் 16 ஆம் திகதி நடைபெற உள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில்  காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும்,குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நில பரப்பிலும்  கனிய   மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும்,குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள் ,மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள்  இணைந்து நாளைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு பேரணியானது, காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும். அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்படும். எனவே குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள்,வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

‘தண்பேக் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ : அமெரிக்க அதிபர் ஆலோசனை

இஸ்ரேல் இராணுவத்தால் கடத்தப்பட்டதாக கிரேற்றா தண்பேக் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘தண்பேக் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார்.

காசாவை நோக்கி நிவாரண கப்பலில் சென்ற தனது குழுவினருடன் கடத்தப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் கிரேற்றா தண்பேக் நேற்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனை இஸ்ரேல் உடனடியாக மறுத்தது.

நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. அது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய கிரேற்றா தண்பேக், “இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில் தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டுள்ளோம். என்னையும் மற்றவர்களையும் விரைவில் விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் கிரேற்றா தண்பேக்கின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “கிரேற்றா தண்பேக் தற்போது இஸ்ரேல் வழியாக பாதுகாப்பாக சென்று கொண்டிருக்கிறார்” என்று கூறியது. மேட்லீன் கப்பலில் குழந்தைகளுக்கான பால்பவுடர், மாவு, அரிசி, டயப்பர்கள், பெண்கள் சுகாதாரப் பொருட்கள் மற்றும் பல வகையான பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

இந்த நிலையில் கிரேற்றா தண்பேக் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர் ஒரு விசித்திரமான நபர். அவர் ஒரு இளம், கோபக்காரர். அது உண்மையான கோபமா என்று எனக்குத் தெரியவில்லை; நம்புவது கடினம். அவர் நிச்சயமாக வித்தியாசமானவர். அவர் கோப மேலாண்மை வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுதான் அவருக்கு எனது முதன்மை பரிந்துரை. கிரேற்றா தண்பேக்கை  கடத்தாமலேயே இஸ்ரேல் போதுமான சிக்கல்களைக் எதிர்கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்

முகக் கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது அல்லது பல நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது முகக்கவசங்களை அணியுமாறு மக்களை வலியுறுத்தியது.

மருத்துவர் சமில் விஜேசிங்க, ஊடக சந்திப்பில் உரையாற்றுகையில்,

வழக்கமான கை கழுவுதல் மற்றும் நல்ல சுவாச சுகாதாரத்தைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை COVID-19 சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அண்டை நாடான இந்தியாவில் சமீபத்தில் கொவிட்-19 வழக்குகளின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மருத்துவர் விஜேசிங்க குறிப்பிட்டார், இது அங்குள்ள சுகாதார அதிகாரிகளை PCR சோதனை நடவடிக்கைகளை செய்யத் தூண்டியுள்ளது. தற்போது உள்ளூரில் பெரிய தொற்றுநோய்க்கான குறிப்பிடத்தக்க ஆபத்து எதுவும் இல்லை என்று அவர் உறுதியளித்தாலும், விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது, ​​எந்த ஆபத்தான சூழ்நிலையும் இல்லை, ஆனால் தடுப்பு நடவடிக்கைகள் எப்போதும் அறிவுறுத்தப்படுகின்றன, என்றும்

கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்கள் சுவாச நோய்த்தொற்றுகளால் ஏற்படும் சிக்கல்களுக்கு ஆளாவதில் அதிக வாய்ப்பு உள்ளவர்கள்.

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கும் சரியான நேரத்தில் புதுப்பிப்புகளை வழங்குவதற்கும் GMOA தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம் : கலகமடக்கும் காவல்துறை குவிப்பு!

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று செவ்வாய்க்கிழமை (10) போராட்டம் நடைபெற்று வருகிறது.

திஸ்ஸ விகாரையில் இன்று (10) நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் நீர்த்தரைப் பிரயோக இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராகவே குறித்த கட்டளை பெறப்பட்டுள்ளது.

பொசன் தினம்: இனவாதத்தைத் தூண்ட முயற்சி-காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு கருத்து

பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம் என காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக மேலும் விரிவுபடுத்தப்பட்ட ஆலயம் குறித்த விபரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றோம். இன்று பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம்.

தையிட்டியில் வசிக்கும் மக்களிற்கு அந்த ஆலயம் குறித்தோ தேசம் குறித்தோ எந்த பிரச்சினையுமில்லை. தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரம் அவர்கள் கோருகின்றனர்.

காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து எழவுள்ள குரோதகருத்துக்களையும், புரிந்துணர்வின்மையையும் தவிர்த்துவிட்டு, இந்த பிரச்சினையின் உண்மையான தன்மையை மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள்.

சட்டவிரோதமாக கட்டப்பட்டு விஸ்தரிக்கப்பட்டு காணி உரித்துக்கள் உள்ள மக்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட ஆலயம் குறித்து தையிட்டியில் காணப்படும் உண்மையான பிரச்சினையை நீங்கள் அறிவீர்கள் என நான் நாங்கள் கருதுகின்றோம்.

பொசன் தினத்தன்று சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனப்பதற்றத்தை தூண்ட முயல்வதாக அறிகின்றோம்.

பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி-03 (இறுதிப் பகுதி) – தமிழில்: ஜெயந்திரன்

பேச்சுச் சுதந்திரம் அவசியம் என்பதற்கு நாம் முன்வைக்கின்ற மூன்றாவது வாதம் என்னவென்றால், நாம் விரும்பும் கலை மற்றும் திரைப்பட இலக்கியங்களை நாம் வாசிக்க, பார்க்க, கேட்க எமக்கிருக்கும் சுதந்திரமாகும். 1970 இன் நடுப்பகுதியில் உயர்தரப் பாடசாலையில் நான் கல்விகற்றுக்கொண்டிருந்த பொழுது, ஒரு நாள் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த பொழுது, டி.எச்.லோறன்ஸ் (D.H. Lawrence) என்ற எழுத்தாளரின் ‘Sons and Lovers’ என்ற புத்தகத்தைக் கையில் வைத்திருந்தேன். எனது தந்தை என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, நான் இளைஞனாக இருந்த பொழுது உந்தப் புத்தகத்தை வாசிக்க எங்களுக்கு அனுமதி இருக்கவில்லை என்றார்.
அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அந்தக் காலத்தில் அப்புத்தகம் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அக்காலத்தில் இரகசியமாக அந்தப் புத்தகத்தின் சில பகுதிகளைப் பெறக்கூடியதாக விருந்தது. புத்தகத்தின் முக்கிய பகுதிகள் அகற்றப் பட்டிருந்தன. பின்னர் நீதிமன்றம் அவ்வாறான புத்தகங்களை வாசிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் 50 களுக்கும் 60 களுக்கும் முன்னர், கூட்டாட்சி அரசின் ஆயப்பகுதியினர் தங்களது துறைமுகங்களுக்கு யாராவது டி.எச்.லோறன்சின் நாவலைக் கொண்டு வந்தால் அதனைப் பறிமுதல் செய்தார்கள். உயர்ந்த வகையைச் சேர்ந்த புத்தகம் எது என்று ஒரு ஆயப்பகுதி அதிகாரியைக் கேட்ட பொழுது அவர் “ ஒருவர் எனக்குத் தெரியாமல் கடத்த முயலும் ஒரு கூடாத புத்தகம்” என்று பதிலளித்திருந்தார். உயர்ந்த எழுத்தாளர்கள் என்று யாரெல்லாம் கணிக்கப்பட்டார்களோ அவர்களது புத்தகங்கள் அனைத்துமே தடைசெய்யப்பட்டிருந்தன. ஹெமிங்வே (Hemingway), ஜொய்ஸ் (Joyce), வோக்னர் (Faulkner) , லோறன்ஸ் போன்ற உன்னத எழுத் தாளர்களின் ஆக்கங்கள் அனைத்துமே தடை செய்யப்பட்டிருந்தன.
திரைப்படத்துறையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! இலத்திரனியல் வகையைச் சார்ந்தபொழுதுபோக்குகள் வரத் தொடங்கியதன் பின்னர் nickelodeons போன்ற படங்கள் வந்தன. ஆரம்பத்தில் மௌனப் படங்களும் பின்னர் பேசும் படங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. திரையில் எதனைக் காட்டமுடியும் என்பது தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் சட்டங்களை அறிமுகப்படுத்தின. உண்மையில் இந்தச் சட்டங்களை வாசித்தால் முசுப்பாத்தியாகத் தான் இருக்கும். இந்தச் சட்டம் மேரிலாண்ட் மாநிலத்தால் இயற்றப்பட்டது: சிலேடை நகைச்சுவை விடயங்கள், இரகசியக் காதல் அல்லது காதல் உணர்வுகளை வெளிப் படுத்தும் காட்சிகள் போன்றவற்றைத் திரையில் காட்ட முடியாது என்றது அந்தச் சட்டம். விபச் சாரத்தில் வாழும் ஆண்கள், பெண்கள். மதுவைக் குடிக்கும் மற்றும் சூதாட்டக் காட்சிகள், அல்லது தாய்மை தொடர்பான காட்சிகள் இவ்வாறான காட்சிகளைத் திரையில் காட்ட அந்தச் சட்டம் அனுமதிக்கவில்லை.
மேலும் இனவெறுப்பைத் தூண்டக்கூடிய தலைப்புகள், தொழிலாளர் மற்றும் முதலாளிகள் இடையே எதிர்ப்புணர்வுள்ள உறவுகள் போன்றவை அந்தச் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டிருந்தன. உண்மையில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய எல்லாமே தடைசெய்யப்பட்டது. பாலியல், வன்முறை, அரசியல் எல்லாமே தடைசெய்யப்பட்டிருந்தது. ஒரு முறை ஒரு திரைப்படத்தில் குழந்தைக்கு பாலூட்டும் காட்சி தணிக்கைசெய்யப்பட்டது. ஒரு முறை மெம்பிஸ் (Memphis) நகரத்தில், வெள்ளை, கறுப்பு ஆகிய இரு இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்கும்  ஒரு வகுப்பை ஒரு திரைப்படம் காட்டிய பொழுது, அங்குள்ள தணிக்கைக் குழு அந்தக்காட்சிக்குத் தடைவிதித்தது, அதாவது தெற்கிலுள்ள மக்களின் உணர்வுகளை அது பாதிக்கும் என்ற காரணம் சொல்லப்பட்டது. உண்மையில் அது தெற்கிலுள்ள வெள்ளை இனத்தைச் சேர்ந்த மக்களையே குறித்தது. அது உண்மையா? ஆம் அது உண்மை தான்! அர்த்தமுள்ள எந்த விடயமும் மற்றவர்களைப் பாதிக்கும். ஒரு விடயம் பார்ப்பவர்களைப் பாதிக்காது விட்டால் அது அர்த்தமற்றது என்பது தான் பொருள்.
பேச்சு சுதந்திரம் தொடர்பாக நாங்கள் இறுதியாக முன்வைக்கும் வாதம் என்னவென்றால், பாடசாலையில் நாங்கள் கதைக்க விரும்பும் விடயங்களைச் சுதந்திரமாகக் கதைக்கக்கூடியதாக இருப்பதற்குப் பேச்சுச் சுதந்திரம் தான் அடித்தளம். அமெரிக்காவின் வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும் போது, நீண்டகாலமாக அந்தச் சுதந்திரம் பாடசாலைகளில் இருக்கவில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் சுதந்திரமாகப் பேசும் உரிமை முன்னர் இருக்கவில்லை. இனத்துவ நீதிப் போராட்டங்கள் தொடங்கியதன் பின்னர் தான் அவ்வாறான உரிமைகள் வழங்கப்பட்டன. 1960 களின் தொடக்கத்தில், “ஒருவர், ஒரு வாக்கு”  (One man one vote) என்ற சுலோகம் பொறித்த பட்டனை அணிந்து மாணவர்கள் பாடசாலை சென்றனர். அது உண்மையில் குடியுரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு அமைப்பினால் முன்வைக்கப்பட்டது. அந்தச் சுலோகத்தை அணிந்து பாடசாலை சென்ற மாணவர்கள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ‘இவ்வாறான செயற்பாடுகள் கற்றல் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்காத பட்சத்தில் அவை அனுமதிக் கப்படலாம்’ என்று பின்னர் நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது. மேரி பெத் ரிங்கரின் (Mary Beth Tinker) வழக்குக்கு அது தான் அடித்தளமாக அமைந்தது. மேரி பெத் குடும்பம் கூட குடியுரிமை இயக்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் தான். அவளது தந்தை ஒரு குடியுரிமைப் போராளியாக இருந்தார். இரு இனங்களையும் சேர்ந்தவர்களை அனுமதிக்கக்கூடிய நீச்சல் தடாகத்துக்காகப் போராடியதற்காக, ஒரு போதகரான அவர் தனது ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். கடைசியாக மேரி பெத் ரிங்கர் தான் சொல்ல விரும்பிய விடயத்தைச் சொல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அந்த முடிவு வர ஓரிரு ஆண்டுகள் தேவைப்பட்டன. பாடசாலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் தாம் பேச விரும்பிய விடயங்களைப் பேச முடியாத ஒரு காலத்திலேயே அவர்கள் வாழ்ந்தார்கள்.
விமர்சனம்மிக்க இனத்துவ கோட்பாடு (critical race theory)  தொடர்பாக ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கோட்பாடு சொல்வது என்னவென்றால் இனவேற்றுமை என்பது மேற்குலகின் ஒழுங்கமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. ‘இந்தக் கோட்பாட்டுக்கு பாடசாலைகளில் தடைவிதிக்க வேண்டும்’ என்ற குரல்கள் அண்மைக்காலமாக எழுந்துகொண்டிருக்கின்றன. ஆட் ஸ்பீகல்மானின் மேஉஸ் (Art Spigelman – Maus) என்ற நூலைப் பாருங்கள். ரோணி மொறிசன் (Toni Morrison) எழுதிய பிலவட் (Beloved) என்ற நூலைப் பாருங்கள். இவ்வாறான விடயங்கள் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்ற காரணத்தையே இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். இந்த எண்ணங்கள், இந்தப் படங்கள் எமக்குத் தீங்கு விளைவிக்கும். இது தான் அவர்கள் சொல்கின்ற காரணம். இவற்றை நாங்கள் பார்க்கக்கூடாது. இளையோர் இவற்றைப் பார்க்க நாங்கள் அனுமதிக்க முடியாது. நான் குறிப்பிட்ட தணிக்கை முயற்சிகளில் அதிகமானவை குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை. ஆனால் இரண்டு கட்சிகளிலும் இவ்வாறான மனப்பாங்கை நிச்சயம் காணலாம்.
மாக் ற்வெய்ன் (Mark Twain) எழுதிய ஹக் வின் (Huck Finn) என்ற புத்தகமும் To Kill a Mockingbird என்ற  Harper Lee இன் புத்தகமும் அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் தடைசெய்யப்பட்ட இரண்டு புத்தகங்கள். இந்தத் தடைகள் இடதுசாரிகளிடமிருந்து தான் வந்தன. அவர்கள் சொல்லும் காரணம் ஒன்றே தான். இந்தப் புத்தகங்களில் உள்ள சொற்களும் படங்களும் வார்த்தைப் பிரயோகங்களும் எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அவை வெறுப்புக்குரியவை. அவற்றை நாங்கள் வாசிக்க முடியாது. அவை எங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த முதல் அவற்றைத் தூக்கி எறியுங்கள். உண்மையில் பேச்சு நோவை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோம்ஸ் ஏன் அதனைத் தடைசெய்ய விழைந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் பேசும் விடயத்துக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டுமே ஒழிய ஒருவரது பேச்சை நாம் தடைசெய்யக்கூடாது.
இனத்துவேசமான ஒருவரது பேச்சை விமர்சிப்பது கூட ஒருவகை பேச்சுச் சுதந்திரம் தான். ஆனால் ஒருவர் பேசுவதற்கான சுதந்திரத்தைப் பறிப்பதிலிருந்து அது வித்தியாசமானது. அது நல்ல விடயம் அல்ல. உண்மையில் சனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கு அது கேடு விளைவிக்கிறது. எங்களை நாங்களே ஆளலாம் என்ற விடயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்குமாயின், எல்லோரும் பேசுவதற்கு நாங்கள் அனுமதிக்க வேண்டும். எல்லோரையும் பேச அனுமதிப்பதன் ஊடாகத் தான், நீதியான ஒரு சமூகத்தை நாங்கள் கட்டியெழுப்ப முடியும். ஒருவர் தனது கருத்தைச் சொல்லும் உரிமை எப்போது பறிக்கப்படுகின்றதோ, அப்போது சுதந்திரம் அர்த்தமற்றதாகி விடுகிறது என்று பிறெடெறிக் டக்ளஸ் (Frederick Douglas) ஒருமுறை கூறினார்.
டக்ளஸ் அடிமைத் தளையினின்று விடுதலை பெற்ற ஒருவர். பல அமெரிக்கர்கள் அறிந்திராத கொடுமைகளை தனது அடிமை வாழ்க்கையில் அனுபவித்தவர். ஆனால் எமது சமூகத்தின் அநீதிகளை நாம் நீக்க வேண்டுமாயின், எமக்குள்ள பேச்சுச் சுதந்திரத்தை நாம் ஒருபோதுமே இழந்துவிட முடியாது. நீதிக்காக உரத்துக் குரல்கொடுத்த தைரியம் மிக்க ஆண்களையும் பெண்களையும் நாம் மறந்துவிட முடியாது. பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நாங்கள் எல்லோ ருமே குரல் கொடுக்க வேண்டும். எம்மைச் சுற்றி
யிருக்கும் அநீதிகளிலிருந்து எம்மை நாம் விடுவிக்க வேண்டுமாயின் பேச்சுச் சுதந்திரத்தை என்ன விலை கொடுத்தும் நாம் காப்பாற்றியாக வேண்டும். வாழ்க பேச்சுச்சுதந்திரம். மிக்க நன்றி
நன்றி: TED Talks