Home Blog Page 131

செம்மணிப் புதைகுழி அகழ்வுகளை சர்வதேச தரநிலையோடு நடத்துக: சர்வதேச மன்னிப்புச் சபை

யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான விசாரணையின் வெளிப்படைத்தன்மையை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பில் மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

யாழ்ப்பாணம், சித்துப்பாத்தியில் உள்ள இரண்டாவது செம்மணி மனித புதைகுழி என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வுகளில் இதுவரை 19 மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்தது என்று தெரிவிக்கப்படும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான நீண்டகாலமாக தாமதமாகிவரும் உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விசாரணையை வழிநடத்தும் நீதித்துறை மருத்துவ அதிகாரி 45 நாள் நீடிப்புக் கோரியுள்ளார் என்றும், அடுத்த கட்டத்துக்கான செலவு மதிப்பீட்டை சமர்ப்பிக்க நீதிமன்றத்தால் உத்தர விடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் செயற்கைக்கோள்படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான அருகிலுள்ள பகுதிகள் ட்ரோன்மூலம் படம்பிடிக்கப்பட்டன. அந்தக் காட்சிகள்பகுப்பாய்வுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய அகழ்வாராய்ச்சியின் அடுத்த கட்டம் ஜூன் 26 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப அகழ்வாராய்ச்சி நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

போதுமான வளங்களை ஒதுக்குதல், குடும்பங்கள் மற்றும் ஊடகங்களுக்கான அணுகலுடன் வெளிப்படைத்தன்மையைப் பராமரித்தல் மற்றும் தளத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல் போன்றவற்றை முன்வைத்து வெளிப்படைத்தன்மையை முன்வைக்கவேண்டும் – என்றுள்ளது.

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு மையங்களுக்கு பாதுகாப்பு

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்காக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட யூத வழிபாட்டு மையங்கள் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து யூத வழிபாட்டு மையங்களுக்கும் 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு தனிப்பட்ட ரீதியில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – (பகுதி-01) ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி

உலகில் உள்ள அனைவரும் உயிருக்கு அடுத்ததாக மதிக்கும் விடயமாக ‘காணி’ காணப்படுகிறது. ‘காணி’ என்பது பெறுமதி மிக்க சொத்தாகும். அவ்வாறே ‘காணி’ என்பது நாளாந்தம் பெறுமதி அதிகரித்துச் செல்லும் சொத்தாகும்.
அவ்வாறிருக்கையில் வடக்கு, கிழக்கில் ‘காணி’ என்பது இனமொன்றின் இருப்பு சார்ந்த விடயமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக, தமிழ் மக்களுக்கு இனம்சார்ந்த எதிர்கால இருப்பை உறுதி செய்வதற்கான அடிப்படையாக காணப்படுகிறது.
ஏனென்றால், வடக்கு, கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரச கட்ட மைப்புக்களான படைகள், தொல்பொருளியல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா, பௌத்த தேரர்கள், மகாவலி அதிகாரசபை உள்ளிட்டவை ‘திட்டமிட்டு’ ஆக்கிர மித்துள்ளன. அடுத்துவரும் காலப்பகுதியில் ஆக்கிரமிப் பதற்கான காரணகரியங்களும் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பின் அடிப்படை, தமிழர்களின் தாயக கோட்டை நீர்த்துப் போகச் செய்வதும், குடிப்
பரம்பலை மாற்றி ‘பூர்வீக குடிகள்’ என்ற அடையாளத்தையும் அங்கீகாரத்தினை இழச் செய்வதுமாகும்.
இதற்கான ‘கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்’ 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க தலைமையில் கிழக்கு மாகாணத்தில் விவசாயி களை குடியேற்றுதல் என்ற பெயரால் முன்னோடி செயற்பாடாக முன்னெடுக்கப்பட்ட ‘கல்லோயா’ திட்டத்திலிருந்து ஆரம்பமாகியது. தற்போது வரையில் அது தொடர்கதையாகவே உள்ளது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கடந்த 16ஆண்டுகளில் தமிழர்களின் நிலமீட்புக்
கான போராட்டங்கள் முழு வீச்சுடன் முன்னெடுக்கப்படுகின்றன. ஏனென்றால் ஆக்கிரமிப்புக் களும், திட்டமிட்ட சுவீகரிப்புக்களும் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
அவ்வாறான நிலையில், தான் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான ‘தோழமை’ அரசாங்கம் ‘காணிகள்’ என்ற தலைப்பில் வர்த்தமானி அறிவித்த லொன்றைப் பிரசுரித்துள்ளது.
அந்த அறிவித்தலில் ‘காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவுக்கு அமை வாக மார்ச் 28ஆம் திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பட்டியலிடப்பட்டுள்ள காணிகள் குறித்த உரித்துக்கள் உறுதி செய்யப்படாதவிடத்து கட்டளைச்சட்டத்தின் (5)1இற்கு அமைவாக அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அவைபற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும்’; என்று குறித்து ரைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், யாழ்.மாவட்டத்தில் 3,669ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,703ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில்  515ஏக்கர் காணிகளும் மற்றும்  மன்னார் மாவட்டத்தில்  54ஏக்கர்  காணிகளுமாக 5,941ஏக்கர் தனியார் காணிகளை குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்குள் உறுதிப்பத்திரத்துடன் உறு திப்படுத்தாவிடின் அவை அரசுடமையாக்கப்படும் நெருக்கடியானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது.
போரின் பின்னரான சூழலில் வடக்கிலும், கிழக்கிலும் காணி உரித்துக்களை உறுதி செய்தல், உரித்துடைய காணிகளுக்கு உரிமை கோருதல், அழிந்து போன ஆவணங்களை மீளப்பெறல்;, அக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுத்தல், உட்பட பல்வேறு பிணக்குகள் காணப்படுகின்றன.
அவைகுறித்த அரசாங்கத்தால் எந்தவொரு கவனமும் செலுத்தப்படவில்லை. காணிக்கச் சேரிகள் நடத்தப்படவில்லை. மாறாக திடீரென்று வர்த்தமானி அறிவித்தலில் ‘அடையாளப் படுத்தப்பட்ட’ இடங்களை மட்டும் மையப்படுத்தி காணி உரித்துக்களை உறுதி செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கியிருப்பதானது நிச்சயமாக ‘திரைமறைவு நிகழ்ச்சி நிரலைக் கொண்டது’ என்பதை உறுதி செய்கிறது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பு சம்பந்தமாக வட,கிழக்கில் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் அரசாங்
கத்தினை வர்த்தமானி அறிவித்தலை இலத்திரனி யல் பதிவிலிருந்து நீக்குவதற்கும் பேச்சுக்களை நடத்துவதற்குமானதொரு தவிர்க்கமுடியாத சூழலை உருவாக்கியிருந்தது.
அந்தவகையில் நேற்று முன்தினம் பாராளுமன்ற குழு அறையில் வட,கிழக்கு பிரதி நிதிகளுக்கும் பிரதமர் ஹரிணி, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் லால்காந்த தலைமை யிலான குழுவினருக்கும் இடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை. எனினும் இந்தச் சந்திப்பில் அமைச்சர் லால்காந்த அமைச்சு மட்டத்தில் ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறியிருக்கின்றார். பிரதி அமைச்சர் அருண் காணிப் பிரச்சினைகள் இருப்பதாக ஏற்றுக்கொள்கின்றார். பிரதமர் ஹரிணிக்கு விடய தானமே புதிராகத்தான் இருந்திருகிறது. ஆனால் அரசாங்கம் நிலைமைகளை உணர்ந்து வர்த்தமானியை மீளப்பெறுவதற்கு தயாரில்லை. வெறுமனே அமைச்சின் சுற்று நிருபங்களாலும், வாய்மூல வாக்குறுதிகளாலும் நிலைமையைச் சமாளிப்பதற்கே முயற்சிக்கின் றமை வெளிப்படையாக தெரிகிறது.
ஆகவே, ‘காணிகள்’ பற்றி வர்த்தமானி அறிவித்தல் குறித்து தொடர்ச்சியாக பேச்சுக்களை நடத்துவதும், ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறுவதும் காலத்தைக் கடத்தும் செயல். சூட்சுமமாக மூன்று மாதங்களை நகர்த்தி வர்த்தமானியை நடை முறைப்படுத்துவதற்கான முனைப்பாகவே இருகி றது.
அந்தவகையில் ‘காணிகள்’ வர்த்தமா னியை மீளப்பெறுவதற்கான வர்த்தமானி மீள் அறிவித்தல் செய்யப்பட வேண்டும். அது தான் இந்த விடயத்தில் முன்னுள்ள ஒரே தீர்வாகும். அந்த தீர்வை நோக்கியதாகவே மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடுகள் இருக்க வேண்டும். இந்த விடயத்தில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிப் பதற்கு முடியாது.
ஏனென்றால் காணிகளின் உரித்தை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஆக்கிரமிப்பின் புதியதொரு வடிவம். முன்னரே கூறியிருப்பது போன்று தமிழினத்தின் இருப்பு சார்ந்த விடயம். ஆகவே விட்டுக்கொடுப்புக்களுக்கு எள்ளளவும் இடமில்லை. வர்த்தமானியை மீளப்பெறச் செய்வதே ஒட்டுமொத்த தரப்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் காணி நிர்ணய திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, காணி ஆணையாளர் நாயக திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம், நில அளவையாளர்கள் திணைக்களம் உள்ளிட்டவை காணி விடயங்களை கையாள்வதற்கான பிரதான கட்டமைப்புக்களாக உள்ளன.
இவற்றுடன் பிரதேச செயலகம், மகாவலி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கும் காணி விடயங்களை கையாள்வதற்கான உரித்து காணப்படுகின்றது. குறிப்பாக இக்கட்டமைப்புக்கள் அனைத்துக்கும் மக்களுக் காக காணிகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரத்தையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன.
அதற்காக, காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம், அரச காணி கட்டளைச் சட்டம், காணிச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுச் சபை சட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை சட்டம், நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டம், மாகாண காணி நியதிச் சட்டம் ஆகியன காணப்படுகின்றன.
அதேநேரம், வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்களம், காணி விடுப்பு அளித்தல் திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், ரயில்வே திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், நெடுஞ்சாலைகள் திணைக்களம், முப்படைகள், இலங்கை துறைமுக அதிகார சபை இலங்கை முதலீட்டுச் சபை ஆகியனவும் காணிகளுக்கான உரித்துக்களை கொண்டிருக்கின்றன.
எவ்வாறாக இருந்தாலும் மேற்படி அனைத்துக்  கட்டமைப்புகளுக்கு உரித்துடைய காணிகளின் அளவுகள் தனித்தனியாக எவ்வளவு என்பதற்கான சரியான விடைகள் இதுவரையில் இல்லை. அதுமட்டுமன்றி, பகிர்ந்தளிக்கக்கூடிய, பகிர்ந்தளிக்க முடியாத அரச காணிகளின் அளவுகள் என்ன? தனியார் காணிகளின் அளவுகள் என்ன? ஆகிய கேள்விகளும் பதில்கள் அற்றவையாக மட்டுமல்ல, விடையில்லா விடுகதைகளாகவே நீடிக்கின்றன.
முக்கால் நூற்றாண்டு காலமாக செயற்படும் மேற்படி கட்டமைப்புகளிடத்தில் கள ஆய்வுகள் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட முழுமையான தரவுத்தளம் தற்போது வரையில் காணப்படவில்லை. காணிகளைக் கையாளும் கட்டமைப்புக்களிடத்தில் காணப்படும் மிகப்பெ ரும் தேக்கநிலை இதுவாகும்.
விசேடமாக போருக்குப் பின்னரான சூழலில் காணிப்பிணக்குகள் நீடிப்பதற்கு குறித்த தேக்க நிலைமையே அடிப்படைக் காரணமாக அமைகின்றது. ஆனால் அதுபற்றிய கரிசனைகளை அரசாங்கம் கொண்டிருப்பதாக தெரியவில்லை.
வடக்கில், யாழ்ப்பாணம் 2,53,283ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்டிருப்பதோடு கிளி நொச்சி 3,16,047.8ஏக்கர் நிலப்பரப்பினையும், முல்லைத்தீவு  6,65,454.79ஏக்கர் நிலப்பரப்பினையும் மன்னார் 4,93,222.3ஏக்கர் நிலப்பரப்பினையும் வவுனியா 4.67,276.3ஏக்கர் நிலப்பரப்பினையும் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் யாழில் 206,574குடும்பங்க ளும் கிளிநொச்சியில் 49,427குடும்பங்களும் வவுனியாவில் 59,030குடும்பங்களும் முல்லைத்தீ வில் 47,455குடும்பங்களும் மன்னாரில் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன.  இந்தக் குடும்பங்களின் வாழிடமும், வாழ்வாதாரத்துக்கான வழிகளும் மேற்படி நிலங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
தொடரும்…..

இந்திய தூதுவர் தமிழ் முற்போக்கு கூட்டணி இடையில் சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரே இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்திருந்தனர்.

இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்மக்களின் நலன்புரிக்கான அபிவிருத்தி திட்டங்கள் உட்பட இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் பல்வேறு இருதரப்பு முன்னெடுப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் கடந்த 6ஆம் திகதி  பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ்  இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பதவியணித் தலைமையதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த ஹெட்டியாராச்சி இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் ஏழு தசாப்தத்திற்கு மேலாகக் காணப்படும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்தார். இலங்கையின் 9வது பெரிய ஏற்றுமதி சந்தையாக கனடா விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சபாநாயகர், பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாட்டு சட்டமன்றங்களுக்கும் இடையில் முக்கிய பாலமாகச் செயற்படும் என்றார். இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து கனடா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மதிப்புக்களின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ள இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் அமைச்சர் அநுர கருணாதிலக உரையாற்றுகையில், இரு பாராளுமன்றங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக நட்புறவு சங்கத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையே ஏற்கனவே வலுவான உறவுகளை ஆழப்படுத்த அர்த்தமுள்ள உறவுகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் நன்றியுரையாற்றிய நட்புறவு சங்கத்தின் சமிந்த ஹெட்டயாராச்சி,  கனடாவின் நீடித்த நட்புக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டத்திற்கு முன்னர் சபாநாயகருக்கும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் சட்டவாக்க செயற்பாடுகள் குறித்து மகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் தெளிவுபடுத்தல்களை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஆய்வு மையமொன்றை விரைவில் அமைக்க இருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார். அத்துடன், ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியா நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் எடுத்துக் கூறினார்.

தையிட்டி திஸ்ஸவிகாரையை புலம்பெயர் தமிழர்களே எதிர்க்கின்றனர் : சிங்கள அமைப்பு கருத்து

தையிட்டி திஸ்ஸ விகாரையை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள் எதிர்க்கவில்லை. புலம்பெயர் தமிழர்களே எதிர்க்கின்றனர் என்று சிங்கள அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டின் பின்னர் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகாக வசிக்கும் தமிழர்களும், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்களும் விகாரையை எதிர்க்கவில்லை. ஆனால், புலம்பெயர் தமிழர்களே விகாரைக்குக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றனர். தங்களின் சுயலாபத்துக்காக விகாரையை அடிப்படையாக வைத்து திட்டமிட்டுப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர் என்றனர்.

கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிபந்தனைகள் கடுமையாக்க நடவடிக்கை!

ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிப்பதில் அண்மையில் கண்டறியப்பட்ட முறைகேடுகளைக் கருத்திற் கொண்டு இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளதாகவும்

தேசிய சுதந்திர தினம், விசாக பூரணை மற்றும் கிறிஸ்மஸ் போன்ற நிகழ்வுகளின் போது, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றமை வழமையாகும்.

இதற்காக, சிறை அதிகாரிகளால் விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோலை நீதி அமைச்சு உருவாக்குகிறது.

எனினும், எதிர்காலத்தில் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய அளவுகோல்களை உருவாக்க ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் மனிதப் புதைகுழியின் உண்மைகளை கண்டறிய அரசு ஒத்துழைக்க வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்து

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர்   எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன. முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன.

ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழகப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது.

அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார்.

யாழ். மாநகர சபையின் மேயராக விவேகானந்தராஜா மதிவதனி பரிந்துரை – சி.வீ.கே.சிவஞானம்

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை மேஜர் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா  மதிவதனியின் பெயரும் யாழ் மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.

யாழ் மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரவை ஜேர்மனி வலியுறுத்த வேண்டும்!

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஜேர்மனி வலியுறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளைய தினம் (11) உத்தியோகபூர்வ விஜயமாக ஜேர்மனி செல்லவுள்ள நிலையில், ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ் அறிக்கையொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

30 வருட யுத்தத்தின்போது, கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பரவலான துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளன. அத்துடன், யுத்தத்தின் இறுதி கட்டங்களில் அரச படைகள் பொதுமக்களைத் தாக்கியதுடன், சிலரை வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கியுள்ளன.
போருக்கு பின்னர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலின் அவசியத்தை எடுத்துக்காட்டும் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், சாட்சிய சேகரிப்பு செயல்முறையையும் நிறுவியுள்ளது.

எனினும், அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தினது இதுவரையான செயற்பாடுகளை பொறுத்தவரையில் அதன் முந்தைய அரசாங்கங்களிடமிருந்து வேறுபட்டதாக தெரியவில்லை. இதன்படி, போர்க்குற்றங்களில் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாதுகாத்து, பேரவையின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.

இந்த அரசாங்கம் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணவில்லை, கடந்த கால அட்டூழியங்களுக்கு நீதி வழங்குவதில் பின்நிற்கிறது. அதேநேரம், அனுரகுமார திசாநாயக்க 2017ஆம் ஆண்டு முதல், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுதியளித்தார்.
எனினும், தற்போது அவரது அரசாங்கம் அதே சட்டத்தை பயன்படுத்திவருகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் ஜேர்மனி முன்னர் முன்னணி நாடாக இருந்தது, எனினும், 2022ஆம் ஆண்டில் அந்தப் பங்கிலிருந்து விலகியது. பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஆதாரங்களைச் சேகரிப்பதை உறுதி செய்யவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தீர்மானம் புதுப்பிக்கப்படுவது மிக அவசியமாகும்.

எனவே, பெர்லினுக்கு வருகைதரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் சீர்திருத்தங்களுக்கான அவரது உறுதிமொழிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற ஜேர்மனி ஜனாதிபதி, வலியுறுத்த வேண்டும். எனவே, அதற்காக தற்போது கிடைக்கும் இந்த வாய்ப்பினை ஜேர்மனி ஜனாதிபதி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ் தெரிவித்துள்ளார்.