Home Blog Page 122

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் – ரவிகரன் எம்.பி

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இறுதிக்கட்டயுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்தவிடயத்தில் கடந்த அரசாங்கங்களைப்போலவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழி அகழ்வுப் பணிகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென இவ்வுயரிய சபையிலே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 19 முழுமையான மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தப் புதைகுழியினை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு அகழ்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் புதைகுழியினை அகழ்வு செய்து உரியவகையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைமைகள் கண்டறியப்படவேண்டுமெனவும், இந்த விட யத்தில் அரசாங்கமானது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும்போது சிறுவர்கள், பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

இதனைவிட அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகளில் ஆடைகள் அணிந்திருந்தமைக்கான சான்றிதழ்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இந்த சடலங்கள் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திட்டமிட்ட வகையில் படுகொலைகள் செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது.

மேலும் செம்மணிப் பகுதியில் புதைகுழிகள் உள்ள விடயம் கடந்த 1999ஆம்ஆண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களுக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இதில் பிரதான சந்தேகநபரான இராணுவ லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் 600பேர்வரையில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரமானது அன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. செம்மணியில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, செம்மணி புதைகுழி தோண்டும் நடவடிக்கை அன்று இடம்பெற்றிருந்தது. லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன அடையாளம் காட்டிய சிலபகுதிகள் அந்தவேளையில் அகழப்பட்டன. அதில் 25 எலும்புக் கூடுகள் வரையில் மீட்கப்பட்டிருந்தன.

அதன்பின்னர் இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது செம்மணி பகுதியில் அகழ்வு இடம்பெற்றதையடுத்து மீண்டும் புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கொடூர யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர், தொண்ணூறாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர், ஒன்பதாயிரம் சிறுவர்கள் அனாதரவாக்கப்பட்டனர். இவ்வாறு பேரிழப்புகளை தமிழ்மக்கள் சந்தித்திருந்தனர்.

யுத்தகாலத்தில் இராணுவத்தரப்பினரால் பலவேறு பகுதிகளில் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்து தற்போது 16வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல இடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இதுவரை 13 இடங்களில் புதைகுழிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் பலஇடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன.

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2013ஆம் ஆண்டு புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதைகுழி அவ்வப்போது அகழப்பட்டதுடன் 2018ஆம் ஆண்டுவரை இந்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன.

இங்குமீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னர் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப் பட்டிருந்தது. இதன் உண்மைதன்மை என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பின்னர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதேபோன்று மன்னார் நகரிலுள்ள ச.தொ.ச கட்டடத்துக்கு அருகில் 2018ஆம் ஆண்டு அகழ்வுப்பணி இடம்பெற்றபோது அங்கும்மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன் இந்தவிவகாரம் தற்போதும் நீதிமன்றத்தில் உள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்பகுதியில் அகழ்வுப்பணி இடம்பெற்றபோது 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு இடங்களிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்ற போது மனிதப் புதைகுழிகள் தென்படுகின்றமை வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் வழமையானவிடயமாக மாறிவிட்டது.

யுத்தகாலத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருந்தனர். அந்த புதைகுழிகளே தற்போது வெளிப்பட்டுவருகின்றன.

செம்மணிப் பகுதியில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதைகுழி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும். அகழ்வுப்பணிகள் உரியவகையில் மேற்கொள்ளப்பட்டு எந்தக்காலப்பகுதியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன, இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்ற விடயங்கள் கண்டறியப்படவேண்டும்.

இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளனர். படையினரிடம் சரணடைந்தவர்கள், படையினர்களிடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், படைத்தரப்பினரால் கடத்தப்பபட்டவர்கள் எனப் பலரும் காணாமல் போகச்செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்னநடந்தது என்றவிடயம் இதுவரை மர்மமாகவே உள்ளது.

இவ்வாறு காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் காணப்படுகின்றது.

இதேபோன்றே இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் திறந்த நிலப்பரப்பில் இவர்கள்மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபோது தாக்குதல்களில் பெருமளவானோர் பலியாகியிருந்தனர். இவ்வாறு பலியானவர்கள் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டிருந்தனர்.

செம்மணியில் இளைஞர், யுவதிகள் கொன்று புதைக்கப்பட்டமை, கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் இறுதியிலேயே தெரியவந்தது. ஆனாலும், அந்த புதைகுழிகள் தொடர்பில் அன்றைய காலப்பகுதியில் உரியவிசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை.

அந்தப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கவில்லை. அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அன்று கிருஷாந்தி குமாரசாமியின் கொலைவழக்கின் பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன தகவலை வெளிப்படுத்தி யிருக்காவிடின் செம்மணி புதைகுழி விவகாரம் வெளிவந்திருக்கமாட்டாது.

இந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தகவல்கள் வெளிப் படுத்தப்பட்ட போதும் உரியவகையில் புதைகுழிகள் அகழப்படாமையினால்தான் தற்போது செம்மணியில் மீண்டும் புதைகுழி அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்தப் புதைகுழிகள் தொடர்பில் உரியவிசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தற்போது செம்மணியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் பெருமளவானோர் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் 19எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, இந்த புதைகுழி அகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். அகழ்வுச்செயற்பாட்டை நிறுத்தாது இதனை முழுமைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இன்னமும் உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அந்த விடயத்தில் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்பட்டு வருகின்றது. இந்த புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் – என்றார்.

எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படாது – மக்கள் அச்சமடையத் தேவையில்லை

இலங்கையில்  எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஈரான், இஸ்ரேல் யுத்தம் காரணமாக எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட போவதாக செய்திகள் வெளியாகுவது குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. அதனால் மக்கள் பீதியடைந்து எரிபொருளை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எரிபொருள் விநியோகத்தை சீராக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் – ஈரான் போர்: தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும் அழைப்பை வெளியிட்டார்.

ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில், ‘நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எவ்வளவு அவமானம், எவ்வளவு மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். பதற்றங்கள் அதிகரிக்கும்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தெஹ்ரானின் மையப்பகுதியிலிருந்து 3 இலட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலும் எச்சரித்துள்ளது. நேற்று இரவு முதலே ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதும் கவனிக்கத்தக்கது.

இதனிடையே, கனடா ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்பிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ட்ரம்ப் பதிலளித்தார். சமீபத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசினீர்களா? என்று ட்ரம்ப்பிடம் கேட்டபோது, ‘நான் எல்லோரிடமும் பேசிவிட்டேன்’ என்று பதிலளித்தார்.

மேலும், “ஈரானை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தினேன். ஈரானில் எந்த அணு ஆயுதமும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினேன். இதற்காக நான் ஈரானுக்கு 60 நாட்கள் அவகாசம் கொடுத்தேன், அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். 61-வது நாளில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். விரைவில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் அல்லது ஏதாவது நடக்கும். ஆனால், ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்று அவர் கூறினார்.

மனித புதைகுழிகளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பார்வையிட வேண்டும்!

”செம்மணி புதைகுழி மற்றும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட புதைகுழிகளை இலங்கைக்கு வருகைதரும் ஐ.நா. பிரதிநிதி பார்வையிட்டு நீதிப்பொறி முறைக்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி ,

‘காணாமல் ஆக்கப்பட்ட எங்களது பிள்ளைகளுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும் அதற்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அம்பாறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தோம்.” – எனவும் குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரிலே எங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துவதுடன் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா. பிரதிநிதி காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும்.

அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்-என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர் யோகராசா கலாறஞ்சினி வலியுறுத்தினார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மணி புதைகுழி: மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகளே!

செம்மணியில்  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட  19  எலும்புக்கூடுகளில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என  அல்ஜசீரா ஊடகத்திற்கு செம்மணிமனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு  தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர்   தெரிவித்துள்ளார்

உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்துள்ள அவர் உடல்கள் புதைக்கப்பட்ட திகதியை கண்டறிவதற்காக ஆடைகள் அல்லது செல்லோபோன் உறைகள் போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம்  இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

வடபகுதிமனித புதைகுழிகள் – உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள்: நீதியமைச்சர் தெரிவிப்பு

வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை – பிரான்ஸுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கும் பிரெஞ்சு குடியரசுக்கும் இடையிலான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், இருதரப்பு ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக கையொப்பமிடப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல் திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இது, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்துகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பை வழிநடத்துவதில் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, பிரான்ஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது.  இருதரப்பு ஒப்பந்தத்தில், இலங்கை அரசாங்கத்திற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்தா சிறிவர்தன மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திற்காக திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பலதரப்பு விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைத் துறையின் உதவிச் செயலாளர் வில்லியம் ரூஸ் ஆகியோர்  கையெழுத்திட்டுள்ளனர்.

வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வேலியால் பாதிப்பு: பொதுமக்கள் குற்றஞ்சாட்டு

யாழ்ப்பாணம்: வலிகாமம் வடக்கின் பலாலி வடக்கில் கடந்த ஆண்டு விவசாய நடவடிக்கைக்காக காணிகள் விடுவிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ளநிலையில், தற்போதும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இறுக்கமான கண்காணிப்பிலே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காணி விடுவிப்புக்காக 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவு செய்யப்பட்டு அந்தக் காணிகள் துப்புரவாக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்ற இராணுவத்தினர் 18 மில்லியன் ரூபா தேவை எனத் தெரிவித்து காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றனர். அதனால் அந்தக் காணிகள் மீண்டும் பற்றைக்காடுகளாக மாற ஆரம்பித்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிவகித்தபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி ஒட்டகப்புலத்தில் நடந்த நிகழ்வில் ‘உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் பலாலி வடக்கு ஜே/254, பலாலி கிழக்கு ஜே/253, பலாலி தெற்கு ஜே/252, வயாவிளான் கிழக்கு, ஜே/244.வயாவிளான் மேற்கு, ஜே/245 கிராம அலுவலர் பிரிவுகளில் 234.83 ஏக்கர் காணி விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டது.

அவை 408 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. காணிகளை விடுவிப்பதற்காக அவை 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டு துப்புரவாக்கப்பட்டன. ஆயினும் காணிகள் விடுவிக்கப்பட்டுத் தற்போது 15 மாதங்கள் கடந்துள்ளபோதும். அவை இன்னமும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன. மக்கள் அந்தக் காணிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அங்குள்ள பாதுகாப்பு வேலி அகற்றப்பட வேண்டும். ஆயினும் அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்றிப் பின்னநகர்த்துவதற்கு 18 மில்லியன் ரூபா தேவை என்று தெரிவித்து இழுத்தடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMF உதவிகளைப் பெறாத நிலைமையை ஏற்படுத்துவோம்: ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!

1004391338 IMF உதவிகளைப் பெறாத நிலைமையை ஏற்படுத்துவோம்: ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!

இலங்கை தற்போது பெற்றுக்கொள்ளும் சர்வதேச நாணயநிதியத்தின் நீடிக்கபட்டபோது வசதித்திட்டத்தை, சவதேச நாணய நிதியத்துடன் இவ்வாறான ஒரு திட்டத்தில் ஈடுபடும் கடைசிச் சந்தர்ப்பமாக மாற்ற விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத்தின் பங்கேற்புடன் நேற்றுக்காலை கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2028ஆம் ஆண்டுக்குள் கடன்களை அடைப்பதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கமுடியும் என்று இலங்கை நம்புகின்றது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத்துக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே நேற்றுக் கொழும்பில் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது.

இது தொடர்பில் கலாநிதி கீதா கோபிநாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,

“பொருளாதார சீர்த்திருங்களில் இலங்கையின் வலுவான செயற்றிறன் மற்றும் உத்வேகத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பாக ஜனாதிபதி அநுரவுடன் கலந்துரையாடினேன். இந்தச் சீர்திருத்தங்களுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இணைந்து பயணிக்க தமிழரசு முன்வரட்டும்: ஆனந்தசங்கரி அழைப்பு

தமிழரசுக்கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். சுமந்திரனுக்கு இந்த அழைப்பை நான் விடுக்கின்றேன். தமிழர் விடுத்லைக் கூட்டணியில் மீண்டும் இணைவதன் மூலம் நன்மையான விடயங்களைப் பெறமுடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வையே நான் வலியுறுத்திவருகின்றேன். சிங்கள, இஸ்லாமிய மக்களும் அதனை வரவேற்றனர். அந்தத் தீர்வுத் திட்டத்துக்காக நாம் தொடர்ந்தும் முயற்சித்து வெற்றி பெறமுடியும். அதற்கான காலம் மீண்டும் உருவாகியுள்ளது.

அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். இன்று பதவிக்காக அலைகின்றனர். பதவிகளுக்காக கூட்டுச்சேருகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. இன்றைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து செயற்பட முன்வர வேண டும் – என்றார்.