Home Blog Page 12

தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள சம்பவங்கள்,   காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி  தெரிவித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மிக அவசியம் என  மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய ரீதியில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பல அட்டூழியங்கள் குறித்த ஞாபகங்கள், சில வருடங்களில் வேறு புதிய மீறல் சம்பவங்களால் மாற்றி எழுதப்படும். ஆனால் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதனால் ஏற்பட்ட துயரம் என்பது முடிவற்றதாகும். தீர்வளிக்கப்படாத குற்றங்கள் அதனையொத்த எதிர்கால மீறல்களுக்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

இலங்கை அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. அதன்விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையினால் கண்டறியப்பட்டதன் பிரகாரம் அப்போரில் ஈடுபட்ட இருதரப்பினராலும் சட்டங்களுக்குப் புறம்பான விதத்தில் மனிதகுலத்துக்கு எதிராக மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டன. இருப்பினும் அவை இன்றளவிலே இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் சிலரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கான எந்தவொரு எதிர்விளைவும் இல்லாததன் காரணமாக இது சாத்தியமாகியிருக்கின்றது.

இலங்கையில் இதுவரை ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதாக வாக்குறுதியளித்துவிட்டு, அதிலிருந்து விலகிச் செயற்பட்டுவந்திருப்பதன் மூலம், எதனைச் செய்தாலும் பின்விளைவுகளின்றி மீண்டுவிடலாம் என்பதைக் காண்பித்துவந்திருக்கின்றன. ஆகையினாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன் இலங்கையினால் நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்குரிய ஆணையை இம்மாதம் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 60 ஆவது கூட்டத்தொடரில் மீளப்புதுப்பிக்கவேண்டும்.

இலங்கையில் சுமார் 26 வருடகாலமாக நீடித்த உள்நாட்டுப்போரின்போது பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினராலும் மிகமோசமான மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டன. இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற சில மாதங்களில் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும், தமிழ் பொதுமக்களும் இலங்கை இராணுவத்தினால் மிகக்குறுகிய பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்திய அதேவேளை, இலங்கை இராணுவம் மனிதாபிமான உதவிகள் உட்செல்வதைத் தடுத்ததுடன் குறித்த சில பகுதிகள்மீது வான் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்னர் அவற்றை ‘யுத்த சூனிய வலயங்களாக’ அறிவித்தன. மருத்துவ சேவை வழங்கல்கள் தொடர்ந்து இலக்குவைக்கப்பட்டன. இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன.

ஜே.வி.பி எழுச்சி மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் என்பவற்றுடன் தொடர்புபட்ட விதத்தில் நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வேறு பணிகளின்போது தற்செயலாகவே கண்டறியப்பட்டன. அண்மையில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் 1990 களில் இராணுவக்காவலின்கீழ் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் 200 க்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும் போதிய தொழில்நுட்ப வசதிகள் இன்மை மற்றும் அரசியல் தன்முனைப்பு இன்மை போன்ற காரணங்களால் இதுவரையில் இலங்கையில் எந்தவொரு மனிதப்புதைகுழி தொடர்பிலும் விசாரணைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி மனித புதைகுழி குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கருத்து

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் கரிசனை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீயும் (Summer Lee) தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், செம்மணியில் நூற்றுக்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் மட்டுமன்றி, குழந்தையின் பால் போத்தல், பாடசாலை புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் நீதி கோரிக்கைகளை வலுப்படுத்துவதாகவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் தங்களின் எக்ஸ் தளப்பதிவுகள் ஊடாக செம்மணி சம்பவம் குறித்து ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், சம்மர் லீ தமது பதிவில், “நாம் தொடர்ந்து சுயாதீன விசாரணையை வலியுறுத்த வேண்டும். அதுவே நீதியை நோக்கி நகரும் பாதை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றக்குழுக்களுடன் தொடர்பை பேணிய அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை!

திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 50% க்கும் மேற்பட்ட போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு இந்தக் குற்றக் குழு பொறுப்பேற்றுள்ளது.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு மாதமும் பணம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “வரி வசூலிப்பது போலவே, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று பணம் பெற்றுள்ளனர். சில அமைச்சர்கள் அவர்களை ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்துள்ளனர்.

குறித்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்று ஜனாதிபதி கூறினார்.
குறித்த நபர்கள் நாட்டில் ஒரு பெரிய வலையமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

யாழில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கற்கோவளம் பகுதிக்கு இன்று (17) விஜயம் செய்திருந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் மற்றும் கடற்றொழிலாளர்கள் மீதான வாள்வெட்டு தாக்குதல் பற்றியும் அமைச்சரின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டது.

இந்தநிலையிலேயே அது பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதிகாரிகள் சகிதம் அவர் இன்று அங்கு சென்றிருந்தார். அதற்கமைய, சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றுக்கு நிச்சயம் முடிவு கட்டப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தீவக பகுதிகளில் காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது.

இனி சட்டத்தின் ஆட்சியே நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்தியா நேரடியாக உதவியதாக தகவல்!

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை கொழும்புக்கு நேரடியாக உதவியதாக இலங்கையின் முன்னாள் மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு பாதுகாப்பு மண்டலத்தின் தளபதியாகவும், கடற்படையின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளருமாக பணியாற்றிய டி.கே.பி.தசநாயக்க, சமூக ஊடக நேர்காணலில், இதனை குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 26 கப்பல்கள் இருந்தபோதும், அதில் 12 கப்பல்கள், இந்திய கடற்படையின் உதவியுடன் அழிக்கப்பட்டன என்றும் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2008 – 2009ஆம் ஆண்டு காலப்பகுதயில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் டி.கே.பி.தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் – உலக வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் அடுத்த பத்தாண்டுக்குள் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கை தொழிலாளர் பிரிவிற்குள் புதிதாக சுமார் ஒரு மில்லியன் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அந்தக் காலப்பகுதியில் 300,000 புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று உலக வங்கியின் துணைத் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் துணைத் தலைவரின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் உலக வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

உலக வங்கி குழு தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கும், போட்டித்தன்மை மற்றும் சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்துடன் கூட்டாக இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் துணைத் தலைவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனான தனது கலந்துரையாடலில், நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாராட்டியுள்ளார்.

மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் முக்கிய துறைகளை நவீனமயமாக்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் விஜித்த ஹேரத், அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் எக்ஸ் தளத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பதிவிட்டுள்ளதாவது,

நியாயமான, சமநிலையான வர்த்தகத்தை மேம்படுத்துதல் மற்றும் துறைமுகங்கள் முதல் பொது மக்கள் வரை அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடினோம்.

இந்தோ – பசிபிக் பங்காளர்களாக நாங்கள் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தைப் பாதுகாக்கிறோம். பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கியமான கடல் பாதைகளைப் பாதுகாக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் இன்று…

தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (17) நடத்தப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், 12ஆவது நாளான 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு தியாக தீபம் உயிர் நீத்தார்.

இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது:

“இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவை எவராலும் பிரிக்க முடியாது” என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக இலங்கை – இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியும், இரவு விருந்தும் நேற்றுமுன்தினம் (15) திங்கட்கிழமை இரவு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் தனுஜா ஜா ஆகியோரின் அழைப்பின் பேரில் அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நமது நெருங்கிய அண்டை நாடான இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இலங்கை – இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்திய அரசுக்கும், மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இந்த நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தின் மதிப்புகளை பாதுகாக்க அயராது உழைத்த மக்களின் ஒற்றுமையை நினைவூட்டுகின்றோம்.

இலங்கையர்களாகிய நாம் இந்தியாவின் சாதனைகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. இலங்கையும், இந்தியாவும் அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன.

கலாச்சார நிகழ்ச்சிகள், கல்வி நடவடிக்கைகள் உட்பட பல துறைகள் மூலம் இந்த நட்பை பாதுகாப்பதில் இலங்கை – இந்திய சமூகம் மதிப்புமிக்க பங்கைக் கொண்டுள்ளது.

நாட்டில் சவாலான காலங்களில், மனிதாபிமான உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு ஆதரவை வழங்கியுள்ளது.

நவீன யுகத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் பரவியுள்ளது. இலங்கையின் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்கள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் மற்றொரு எடுத்துக்காட்டு சுகாதாரப் பராமரிப்பு. கொழும்பில் அப்பலோ வைத்தியசாலைகளை நிறுவுதல் மற்றும் நாட்டில் நன்கொடையாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் சேவையைத் தொடங்குதல் உள்ளிட்ட நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.

கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் மற்றும் மூலோபாய உறவுகள், மேலும் உதவித்தொகைகள், பயிற்சித் திட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், கலை ஒத்துழைப்புகள், அத்துடன் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் இலங்கையின் பிராந்திய ஈடுபாடு போன்ற விடயங்கள் மூலம், இலங்கையும், இந்தியாவும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் தோளோடு தோள் நிற்கின்றன.

பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்யும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா தனது 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், இலங்கை கடந்த காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகிய துறைகளில் நாம் தொடர்ந்து உறவுகளை உருவாக்க வேண்டும்., முக்கியமாக, பல நூற்றாண்டுகளாக நம்மை வழிநடத்தி வரும் நம்பிக்கை, மரியாதை மற்றும் நட்பின் மதிப்புகளை நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பம் இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடுவது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், 79 ஆவது சுதந்திர தினத்தன்று, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத பரஸ்பர உறவு மற்றும் ஒத்துழைப்புப் பயணத்தில் இந்தியக் குடியரசுக்கு இலங்கை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இலங்கை – இந்திய சங்கம் 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வளர்ப்பதிலும், மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி பங்காளியாக உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான இன மற்றும் கலாச்சார உறவுகள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் மேலானவை” என்றார்.

செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1ம் திகதி “சிறுவர்கள் தின தேசிய வாரம்” என அறிவிப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி  உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு அரசாங்கம் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1ம் திகதி  “சிறுவர்கள் தின தேசிய வாரம்” என்று அறிவித்துள்ளது.

“அன்புடன் நம்மைப் பாதுகாத்துக் கொள்க – உலகை வெல்ல” என்ற தொனிப்பொருளின் கீழ் “சிறுவர்கள் தின தேசிய வாரம்” பல தேசிய திட்டங்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் உரிமைகளுக்கான ஆதரவைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.