Home Blog Page 119

வீழ்ச்சிப் போக்கில் உள்ள மலையக சுகாதார நிலை – மருதன் ராம்

சுகாதாரம் என்பது அடிப்படை மனித உரிமையாகும். எனினும் இந்த உரிமை மலையக மக்களுக்கு இலகுவில் கிடைப் பதில்லை. பல உரிமைகளையும் போராடி பெறவேண்டிய நிலையில் உள்ள மலையக மக்களுக்கான சுகாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சி பாதையிலேயே செல்கிறது. காலனித்துவ ஆட்சிக் காலப்பகுதியில் மலையக மக்களின் சுகாதார நிலைமைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்கள் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலங்களில் கட்டம் கட்டமாக வீழ்ச்சியடையத் தொடங்கின. 1930களில் இலங்கையின் பெரும் பான்மை மக்களின் பிரதேசங்களை விடவும் ஒப்பீட்டளவில் சிறந்த சுகாதார சேவைகளை உடையவர்களாக பெருந்தோட்ட மக்கள் காணப்பட்டனர்.
அந்நிலைமை 1970இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் மாற்றமடைந்தது. அவர்களுக் கான குடியுரிமை மற்றும் வாக்குரிமை என் பவை உறுதி செய்யப்பட்ட பின்னரும், 1972ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் அரச பெருந் தோட்டயாக்கம், மற்றும் ஜனதா எஸ்டேட் அபிவிருத்தி சபை என்பனவற்றின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னரும் பெருந்தோட்ட சுகாதார சேவைகள் அபிவிருத்தி அடையவில்லை.
குறித்த காலப்பகுதியில் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் என்ற அரச பெருந்தோட்டயாக்கம் மற்றும் ஜனதா எஸ்டேட் அபிவிருத்தி சபை ஆகிய நிறுவனங் கள் பெருந்தோட்ட மக்களின் சுகாதார சேவை களை பகுதியளவில் பொறுப்பேற்றுக் கொண் டன. அதன் தொடர்ச்சியாக அக்காலத்தில் சுகா
தார அமைச்சின் கீழ் இயங்கிய குடும்ப சுகாதார பணியகம், பெருந்தோட்ட மக்களின் சுகாதார திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை பொறுப்பேற்று நடாத்தியது. 1990களின் ஆரம்பத்தில் பெருந்தோட்டங்கள் 23 பெருந்தோட்ட நிறுவனங் களின் கீழ் கொண்டுவரப்பட்டு தனியார் மயமாக்
கப்பட்டதன் விளைவாக அந்த தோட்டங்களின் சுகாதார நலத் தேவைகள் தோட்ட நிர்வாக ங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டன. இதன் விளைவாக மீண்டும் பெருந்தோட்ட சுகாதாரத் துறை வீழ்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. பின்னர் அரசின் பங்களிப்புடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி நிதியத்தை ஸ்தாபித்து பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்களிப்புடன் பெருந்தோட்ட சுகாதார சேவைகளை வழங்க வழியேற்படுத்தியது. முக்கியமாக இந்த நிதியம் பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்
கின்றமையால் பெருந்தோட்ட சுகாதார சேவைகள் இன்னும் முழுமையான வளர்ச்சியடைய
வில்லை. பெருந்தோட்ட மக்களது குடியுரிமை உறுதிசெய்யப்பட்ட பின்னரும் மூன்றாம் தரப் பான தோட்ட நிறுவனங்களின் பொறுப்பிலேயே தொடர்ந்து இவர்களின் சுகாதாரம் ஒப்ப டைக்கப்பட்டிருக்கின்றது. எனவே இது ஒரு மனிதவுரிமை மீறலாகவே அவதானிக்கப்பட வேண்டும்.
தோட்ட வைத்தியசாலை முறைமைமலையக பிரதேசங்களில் தோட்ட வைத்திய சாலை என்ற சிகிச்சை நிலையங்கள் காணப் படுகின்றன. இருப்பினும் தகுதியுடைய ஆளணி யினரோ, அடிப்படை வசதிகளோ இல்லை. தோட்ட நிறுவனங்களின் கீழ் சுகாதார முறைமை காணப்படும் பல்வேறு தோட்டங்களிலுள்ள நிலைமை இவ்வாறுதான் இருக்கின்றது. இங்கு பணியிலிருக்கும் ஒரு சிலரும் எவ்வித பயிற்சியோ தகைமைகளோ அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். அங்கு வைத்தியர்கள் போன்று செயற்படுபவர்கள் உண்மையில் உரிய கல்வி தகைமைகளை கொண்ட வைத்தியர்கள் இல்லை. அவ்வாறானவர்கள் நுஆழு என்ற தோட்ட மருத்துவ உதவியாளர் என்ற பெயரில் அங்கு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
அவர்களுக்கான வேதனம் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடா கவே வழங்கப்படும். அவர்களுக்கான நியமனம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தின் ஊடாக வழங்கப்படுகிறது. அரசின் சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள சுகாதார திணைக்களத்துக்கும் இந்த தரப்பினருக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை. குறித்த தரப்பினர் பெருந்தோட்டங்களில் பணி
யாற்றும் தொழிலாளர்களுக்கு மாத்திரம் முதலுதவிகளை வழங்க முடியும். எனினும் அவர்கள் தொழிலாளர்கள் மாத்திரமின்றி பல இடங்களில் வைத்தியர்கள் என்ற பெயரில் மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளிக்
கின்றனர். அவ்வாறானவர்களின் செயற்பாடுகளினால் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
அதேநேரம் மேலும் சில தோட்டங்களில் அவ் வாறான தோட்ட வைத்தியசாலைகளும் மூடப்
பட்டுள்ளன. எனவே சிறியளவிலான நோய் களுக்கு கூட பெருந்தோட்ட மக்கள் நகரங்களை நோக்கியே செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். தோட்ட வைத்தியசாலைகளில் உரிய இடம் மற்றும் மருத்துவ வசதிகள் போதியளவில் காணப்படாமை, ஆளணியினரின் பற்றாக்குறை, மேலதிக சிகிச்சை வசதிகள் இல்லாமை, போக்குவரத்துக்கு தோட்ட நிர்வாகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை, பொருளாதார சிக்கல், நகரங்களுக்கு செல்வதற்கான செலவீனங் கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை போன்ற காரணிகளை இன்றளவும் தோட்டங்களில் காணமுடியும். அதேபோல் அந்த மக்கள் அரச வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதாயினும் அதற்காக தமது ஒருநாள் வேலையையும் அதற்கான வேதனத்தையும் இழக்க வேண்டியுள்ளது. இவற்றை கடந்து நகரங்களில் அமைந்துள்ள அரச வைத்தியசாலை களுக்கு செல்லும் பெருந்தோட்ட மக்கள் அங்கு மொழிப்பிரச்சினையையும் எதிர்நோக்குகின்ற னர்.
அண்மைய போக்குபெருந்தோட்ட மக்களின் அன்றாட உணவாக கோதுமை ரொட்டியும், அரிசி சோறுமே பிரதான இடம் வகிக்கின்றது. இது எவ்விதத்திலும் பிள்ளைகளுக்கோ, தாய்மாருக்கோ போதுமான போசாக்கை வழங்கப் போவதில்லை. நாளாந்த உணவு வேளையை போசாக்கு மிக்கதாக அமைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பொருளாதாரம் இல்லை. எனவே பிள்ளைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் நேரடியாக பாதிக்கின்றது. மறுபுறம் தோட்டங்களில் காணப்படும் ஆரோக்கியமான கீரை வகை, பழங்கள், மரக்கறிகள் போன்றவற்றை அந்த மக்கள் எவ்வாறு உணவு வேளையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு அறிவூட்டல் தேவைப்படுகின்றது. சில இடங்களில் அவ்வாறான தெளிவூட்டல் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
எனினும் அவை போதுமானதாக இல்லை.இந்த பின்னணியில் பெருந்தோட்ட மக்களுக்கு உரிய சுகாதார சேவையை வழங்க வேண்டிய தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இன்றளவும் அந்த பணி உரிய முறையில்இடம்பெறவில்லை.  இதற்காக நல்லாட்சி காலப்பகுதியில் பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு அது நிறை வேற்றப்பட்டது. எனினும் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மிகக் குறுகிய அளவிலான தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. எவ்வா
றாயினும் ஏனைய அரச வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான வைத்தியசாலைக ளின் தரம் குறைந்த அளவிலேயே உள்ளன.
குறிப்பாக சில இடங்களில் மாதாந்தம் இடம்பெறும் கிளினிக் என்ற பரிசோதனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் தோட்ட வைத்தியசாலைகள் அரச வைத்தியசாலைகள் என்ற பெயரில் இயங்குகின்றன. இன்னும் சில இடங்களில் அரச வைத்தியர்கள் அவ்வாறான தோட்ட வைத்தியசாலைகளுக்கு சென்று மருந்து களை வழங்குவதனை தோட்ட மருத்துவ உதவியாளர்கள் விரும்புவதில்லை என்ற குற்றச் சாட்டும் உண்டு.
அடிப்படை உரிமையான சுகாதாரத்தை பெருந்தோட்ட மக்களுக்கு முறையான வகையில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உரிய தரப்பினருக்கு உள்ளது. தேசிய சுகாதார அமைச்சிற்கு மேலதிகமாக ஒன்பது மாகாணங்களுக்கும் பிரத்தியேக சுகாதார செயலாளர்களும், ஆயுர்வேத மருத்துவ விநியோ கத்துக்கு பொறுப்பான திணைக்களமும் உள்ளன.
சுகாதார சேவைகளை வழங்கும் செயற்பாடுகளில் காலத்துக்குக் காலம் அரச முதலீடுக ளில் அதிகரிப்பு காணப்படுகின்ற போதிலும் தொடர்ந்து பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. பெருந்தோட்ட சுகாதார கட்டமைப்பை சீரமைக்க வேண்டியதும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதும் மலைய கத்துக்கான அவசர தேவைகளாகும். இது மலையக மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் கடமையாகும். குறிப்பாக தேர்தல் கால வாக்குறுதிகளில் இவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படுவதில்லை.
மாறாக சில சலுகைகளையே அரசியல்வாதிகள் முன்வைத்து வாக்கு கோரு கின்றனர். இந்த விடயத்தில் தொடர்ச்சியான அலட்சிய போக்கு பின்பற்றப்படுகிறது. பல தோட்டங்களில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை அளிக்க கூடிய வகையிலான வைத்தியசாலைகள் காணப்பட்ட போதிலும் அவை தற்போது கவனிப்பாரின்றி உள்ளன. இலங்கையில் காணப்படும் தேசிய வைத்தியசாலைகளின் எண் ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏனைய வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. எனினும் பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதார சேவையை வினைத்திறனாக்குவதற்கு வாய்ப்பாக உள்ள தோட்ட வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதில் இலங்கை அரசு, பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஏற்படுத்தி கொண்டு குத்தகை ஒப்பந்தமும் ஒரு விதத்தில் தாக்கம் செலுத்துகிறது. எனவே, முறையான சுகாதாரத்தை சகலருக்கும் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமையாகும்.

53 நாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து உள்ளிட்ட தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் – நீதி அமைச்சர்

வெளிநாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து தீர்ப்புகள் மற்றும் கடன் வழங்கல் மற்றும் பெறுதல் பிணக்கு தொடர்பான தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இச்சட்டத்தில் 53 நாடுகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18)  நடைபெற்ற  வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரமாக ஏற்றுக்கொள்ளுதல், பதிவு செய்தல்  மற்றும் வலுவுறுத்தல் தொடர்பான சட்டம் இதுவரை காலமும் இருக்கவில்லை.இவ்வாறான நிலையில்  2024 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க வெளிநாட்டு  தீர்ப்புக்களை பரஸ்பரம் அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும்  வலுவுறுத்தல் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் இந்த சட்டம் முறையாக செயற்படுத்துவதற்குரிய கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆக்கப்படவில்லை.

எந்தெந்த நாடுகளில்,  வழங்கப்படும் தீர்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு  புதிய கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள்   தற்போது  ஆக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கடன் வழங்குநர் மற்றும் கடன்  பெறுநருக்கு இடையிலான பிணக்குகளை  தீர்ப்பதற்கான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து தொடர்பான தீர்ப்பினை இந்த நாட்டில்  அமுல்படுத்துவதற்கும்  வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளின் அடிப்படையில் இதன் செல்லுபடித்தன்மை ஏற்றுக்கொள்ளப்படும்.

வெளிநாடுகளில்  வழங்கப்படும் குற்றவியல்  தொடர்பான தீர்ப்புகள் மற்றும்  தண்டனைகள் இந்த சட்டத்துக்கு செல்லுபடியாகாது,  வெளிநாடுகளில் வழங்கப்படும்  விவாகரத்து  தொடர்பான தீர்ப்புகள் மற்றும் கடன் வழங்கல் மற்றும் பெறுதல் தொடர்பான முரண்பாடுகளுக்கான தீர்ப்புகள் மாத்திரமே  இந்த சட்டத்துக்கு ஏற்புடையதாக அமையும். இந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஏற்றக்கொள்ளப்பட்ட நாடுகளின் பெயர்களை உள்ளடக்கிய வகையில் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படவில்லை.

எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களுக்கு அமைவாக நான் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டேன். அதற்கமைவாக  இந்த சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைகளை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பல  பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.53 நாடுகளை உள்ளடக்கியதாக  வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த சட்டத்துக்கு அமைய நாடுகளுக்கு இடையிலான தூதரகங்களின் செயற்பாடுகள் வினைத்திறனாக்கப்படும் என்றார்.

இலங்கையில் சுதேச வைத்திய பணியிடங்களை விஸ்த்தரிப்புச் செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி வேண்டுகோள்

நாட்டில் அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்றவாறு, நாடளாவியரீதியில் ஆயர்வேத, சித்த மற்றும் யுனானி ஆகிய சுதேசவைத்திய பணியிடங்களை விஸ்தரிப்புச்செய்வதுடன், நாடளாவியரீதியில் சுதேசவைத்திய அதிகாரிகளின் நியமனங்களையும் அதிகரிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றில் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

அதேவேளை நாட்டின் சனத்தொகையின் அடிப்படையில் சுதேசவைத்திய பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டால், 4,682சுதேச வைத்திய அதிகாரிகளும், 2,341 சுதேச C.M.O அதிகாரிகளுமாக நாடளாவிய ரீதியில் மொத்தம் 7,023சுதேச வைத்திய அதிகாரிகளை நியமஞ்செய்ய முடியுமெனவும் தெரிவித்தார். இதன்மூலம் நாட்டின் சுகாதார சேவையினை மேம்படுத்த முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

நாடாளுமன்றில் 18.06.2025 நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் சுதேச வைத்தியக்கல்வியைப் பூர்த்தி செய்து வைத்தியர் தகுதியினைப்பெற்ற பல சுதேசவைத்தியர்கள் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றனர். அவை எமதுமக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டுடன் இணைந்த வளர்ச்சியினாலும் சுகாதாரசேவைக்கான தேவைகளினாலும் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றது. எமது சித்த, ஆயர்வேத மற்றும் யுனானி மருத்துவங்கள் எமது நாட்டின் கிராமப்புறங்களிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிக்காணப்படும் பகுதிகளிலும், மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நிலையான மிகப்பெரும் பங்கை வகிக்கின்றன. எனினும் அரச சுதேசவைத்தியர் அதிகாரிகள் நியமனங்களின் பற்றாக்குறையினால் இவர்களது தேவை காணப்படுகின்ற சமூகங்களுக்கு சேவைசெய்ய முடியாத நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

சுதேச வைத்தியமானது எமது நாட்டின் சுகாதாரசேவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றபோதிலும், ஐந்து வருட தொழில்சார் சுதேசமருத்துவக்கல்வி மற்றும் அதனைத் தொடர்ந்து ஒருவருட உள்ளகப்பயிற்சி போன்றவற்றை நிறைவுசெய்தும் நாடளாவிய ரீதியில் தொழில்வெற்றிடங்கள் இருந்தும் கடந்தகால அரசாங்கங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யாமலும், மற்றும் நியமனங்களில் அக்கறை செலுத்தாமை போன்ற காரணங்களால் சுதேசவைத்தியர்களின் தொழில்வாய்ப்புக்கள் நிறுத்தப்பட்டு நியமனங்களுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு சென்றது. அவ்வாறு இருக்கையில் உயர்கல்வி அமைச்சானது இந்த சுதேசவைத்திய கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்ததின் காரணமாக கடந்த ஐந்து வருடங்களில் கல்விகற்று வெளியேறிய மாணவர்களின் எண்ணிக்கை 25 தொடக்கம் 50இலிருந்து 120 தொடக்கம் 200 ஆக உயர்வு பெற்றது.

இதனால் வேலைவாய்ப்பின்றிக் காணப்படும் வைத்தியர்களின் எண்ணிக்கை மேலும் கணிசமானஅளவு அதிகரித்துள்ளதுடன், வேலையற்ற சுதேசவைத்தியர்கள் பலதரப்பட்ட இன்னல்களையும் எதிர்நோக்குகின்றார்கள். அவையாவன

நிதி நிலையற்ற தன்மை மற்றும் பலவருடக்கல்வி, மருத்துவப்பயிற்சிகள் பயனற்றுப்போதல்.

தாம் வாழும் சமூகத்துக்கு, குறிப்பாக புறநகர் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு சேவை வழங்க இயலாமை.

தொழில்சார் தகுதிகள் இருந்தும் வேலையற்ற தன்மையின் காரணமாக உளவியல் ரீதியான பாதிப்புக்கள் மற்றும் சமூகத்தினரால் ஏற்படுத்தப்படும் களங்கங்கள் மற்றும் தற்போது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதீடு பரிந்துரைப்பில் 2720 சுதேசவைத்தியர்களின் நியமனங்கள் பற்றி குறிப்பிட்டுள்ள போதிலும் அடுத்த ஆண்டு ஜனவரி ஆகும் போது வேலையற்ற சுதேச வைத்தியர்களின் எண்ணிக்கையானது 2785 ஆகும்.

அந்தவகையில் வேலையற்ற சுதேசவைத்தியர்களின் எண்ணிக்கை 2062ஆக்காணப்படுகின்றது. உள்ளகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சுதேச வைத்தியர்கள் 360ஆகும். இதனைவிட 363 சுதேசவைத்தியர்கள், 2026இல் உள்ளகப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும் எமது நாட்டில் அதிகரித்துவரும் குடிமக்களின் எண்ணிக்கைக்கு அமைவாக சுதேசவைத்தியர்களின் நியமனங்களின் எண்ணிக்கையினையும் அதிகரிக்க வேண்டியநிலை காணப்படுகின்றது. அதனடிப்படையில் சுமார் 7023புதிய நியமனங்களை மேற்கொண்டு நாட்டின் சுகாதார சேவையினை மேம்படுத்த உதவுமாறு முன்மொழிகின்றேன். இந்த எண்ணிக்கையானது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சனத்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நான் முன்வைக்கின்றேன்.

நாட்டின் சனத்தொகையின் அடிப்படையில் சித்த, ஆயர்வேத மற்றும் யுனானி மருத்துவ அதிகாரிகளின் பணியிடங்களை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரத்துக்கான வேண்டுகோளாக முன்வைக்கின்றேன்.

2025 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில் எமது நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துள்ளமையை நாம் காணமுடியும். மற்றும் இந்த சித்த, ஆயர்வேத மற்றும் யுனானி ஆகிய சுதேச மருத்துவங்கள் எமது மக்கள் மத்தியில் இலகுவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய வகையிலும் முழுமையான மற்றும் பண்பாடு ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன.

எனினும் தற்போது நியமனத்திலுள்ள மற்றும் நியமிக்கப்படவுள்ள சுதேசவைத்திய அதிகாரிகளின் எண்ணிக்கையானது நாட்டின் சுதேச சுகாதாரத்தேவைகளுள் முழுமையாக வழங்குவதற்கு போதாதநிலையில் காணப்படுகின்றது. சனத்தொகை அதிகரிப்பு மற்றும் சுகாதாரத் தேவைகளையும் கருத்தில் கொண்டு இத்துறையிலுள்ள மருத்துவ அதிகாரிகளின் பணியிடங்களை அதிகரிக்க தங்களது மேலான கவனத்தினை அன்புடன் கோருகின்றேன் . இது சிறந்த சுகாதார முறைமையினையும், திறனான சேவையினைத் தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்க உதவும்.

அரச புள்ளிவிபரப்படி மாவட்டரீதியாக 25மாவட்டங்களிலும் 23411000 மக்ககள்தொகை காணப்படுகின்றது.

அந்தவகையில் குறித்த மக்கள்தொகைக்கு ஏற்றவாறு கடமையாற்றுவதற்கு சுதேசவைத்திய அதிகாரிகள் 4,682பேர் தேவைப்படுவார்கள் என எதிர்பார்க்கமுடிகின்றது. அத்தோடு 2,341 c.m.oஅதிகாரிகளின் தேவையும் ஏற்படுமென எதிர்பார்கமுடிகின்றது. அந்தவகையில் சநாடளாவியரீதியில் சுதேச வைத்தியத்துறையில் மொத்தம் 7023 புதிய பதவிகளை உருவாக்கவேண்டும்.

எமது நாட்டில் சுகாதாரத்துறையில் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாதிருக்க சில பரிந்துரைப்புக்களை முன்வைக்கின்றேன்.

நாட்டின் சனத்தொகைக்கேற்றவகையில் வைத்திய அதிகாரிகளின் பதவி வெற்றிடங்களை அதிகரித்தல்.

சுதேச வைத்திய கற்கைநெறிக்காகப் பல்கலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் அல்லது மட்டுப்படுத்தல். ஏன் எனில் பல்கலைக்கழகபீடங்கள் மற்றும், வைத்தியசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்கே வளங்கள் காணப்படுவதன்காரணமாக அதிகமான மாணவர்கள் கற்பதற்குரிய எந்தவொருசூழலும் இல்லை. இதனைவிட கல்வித்தரம் மற்றும், மருத்துவஅறிவுகளின் தரம் ஆகியன குறைவடைதல். அத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு உள்ளிட்ட சிக்கல் நிலமைகள் காணப்படுகின்றன.

கடந்த 2007 க.பொ.த உயர்தர ஆண்டு மாணவர்கள் தொடக்கம் தற்பொழுதுவரை 2400இற்கும் மேற்பட்ட வேலையற்ற சுதேச வைத்தியர்கள் காணப்படுகின்றார்கள். ஆனால் அண்ணளவாக 700சுதேச வைத்தியர்களே 2024ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டுகளில் நியமனங்கள் பெற்றுள்ளனர்.

சுதேசமருத்துவமானது, இயற்கையை மையப்படுத்தியதாகவும், ஆழமான புரிந்துணர்வுடனும் மாத்திரமே கற்கமுடியும். மாறாக பாரிய அளவிலான கல்வி மாதிரி மூலமாக அடையமுடியாது. இதனால் பாரம்பரிய வைத்திய அறிவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்நிலைசெலவாணியை நாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி வியாபாரத்தினை ஊக்குவிக்கும் வகையிலான சுதேசமருத்துவச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.

எனவே எமது நாட்டின் சுகாதாரசேவையில் பெரும் பங்கைவகிக்கும் சுதேசமருத்துவ சேவையினை எதிர்காலத்தில் தங்கு தடையின்றி நடாத்துவதற்கும் வேலையற்றுக் காணப்படுகின்ற சுதேச மருத்துவர்களுக்கான தொழில் நியமனங்களை வழங்குவதற்கும் இனிவரும் காலங்களில் உள்ளகப் பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறும் சுதேச வைத்தியர்களுக்கான பதவி நியமனங்களை தாமதிக்காது உடனடியாக வழங்குவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான புதிய மற்றும் நவீனபொறிமுறைகளை அமுல்படுத்தவும் தங்களின் மேலான ஆதரவினைக் கோருகின்றேன் – என்றார்.

இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் மோதலினால் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பணிபுரிந்து மீண்டும் இஸ்ரேலுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் இலங்கைக்குத் திரும்பிய இலங்கையர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அருகிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அங்குள்ள பணியாளர்கள் விழிப்புடன் இருப்பதற்கும் அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று ஏற்படாக தூதரகம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு சேவைகள் தொடரும் என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார எச்சரித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஈரானால் இஸ்ரேல் மீது அதிகளவான தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் எனவும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது!

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து தங்களது தரப்பு கரிசனை கொண்டுள்ளதாக இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை மீதான உரையாடலிற்காக இணைத்தலைமை நாடுகளின் சார்பில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலனோர் சான்டெர்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.இலங்கையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் மே மாதம் நடத்தப்பட்டதை வரவேற்பதுடன், 2009ம் ஆண்டு ஆயுதமோதலின் போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூருவது இம்முறை அமைதியான விதத்தில் இடம்பெற்றதை தங்களது தரப்பு கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு தண்டனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதை நிவர்த்தி செய்யவும், ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் சமூகத்தினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படகூடிய நிலையை ஏற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை என்பன, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பி;க்கையை பெறுவது மிகவும் முக்கியமானதாகவும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக குறிப்பிட்ட அரசாங்கம், அதனை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை மீண்டும் வலுப்படுத்துவதன் மூலம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்க்கப்படாத வழக்குகளை தீர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் இணைத் தலைமை நாடுகளின் சார்பில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலனோர் சான்டெர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் தமிழரசு கட்சி இணைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் குற்றஞ்சாட்டு

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் துணை நின்ற தரப்புடன் இலங்கை தமிழரசுக் கட்சி இணைந்து ஆட்சி அமைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதனால் தான் அவரின் தலைமைப்பதவிக்கு எதிராக அவரது கட்சிக்குள் கோஷங்கள் எழுப்பட்டு வருகின்றன’.  ‘தற்போது மட்டும் அல்ல தேர்தலுக்கு முன்பு இருந்தே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டவர்கள் போலிக்கருத்துகளை பரப்பி வந்தனர்’.

‘அதன் மற்றுமொரு அங்கமே பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் கட்சியுடன் கூட்டணி என்ற கதையாகும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘தேசிய மக்கள் சக்தி, பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரவில்லை. எந்தவொரு கட்சியுடனும் தங்களுக்கு இரகசிய ஒப்பந்தம் கிடையாது’ என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ராஜபக்சக்களுடன் கரம் கோர்த்து செயற்பட்டிருந்தார். அத்துடன் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமாக இருந்தவர்களுடன் யாழில் இலங்கை தமிழரசுக் கட்சி ஒன்று சேர்ந்துள்ளது.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வர்த்தமானியை மீளப்பெறுவதாக பொது வெளியில் குறிப்பிட்ட அரசாங்கம், அதனை நீதிமன்றில் கூற மறுப்பதாக சுமந்திரன் சாடல்

வடக்கு மாகாணத்தில் காணி உரித்தை உறுதிப்படுத்த முடியாத காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெறப்படும் என பொது வெளியில் அறிவித்த அரசாங்கம், அதனை நீதிமன்றில் கூறுவதற்கு தயங்குவதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதுடன் அந்த மனு நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் மன்னாரில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த எம்.ஏ.சுமந்திரன், அமைச்சரவையின் அனுமதியையும் பெற்றதன் பின்னரே, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைப்பதாக அரச தரப்பு சட்டவாதி மன்றுரைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 4 மாவட்டங்களில் சுமார் 6 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இதற்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இந்த பின்னணியில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்படும் என பொதுவெளியில் காணி விவகார அமைச்சு அறிவித்த போதிலும் இதுவரையில் அந்த நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அரசாங்கத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டவாதியும் அதனை நீதிமன்றில் கூறுவதற்கு மறுக்கிறார்.

அமைச்சரவையின் அனுமதியினை பெற்றதன் பின்னரே அதனை குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்- வலிகாமம் கிழக்கு சைக்கிள் சங்கு கூட்டணி வசம் !

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றையதினம் மதியம் 11.30 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவின் இது மூவர் போட்டியிட்ட முன்மொழியப்பட்ட நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இரகசிய முறையிலான வாக்கெடுப்புக்கு சபையின் 36 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில் முதலாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் முதல் நிலை பெற்ற வேட்பாளர் பெரும்பான்மைக்குரிய வாக்கை எட்டாத்தால் இரண்டாம் சுற்று தெரிவு இரகசியமா? பகிரங்கமா என்பது தொடர்பான வாக்கெடுப்பு சமமாக வந்த நிலையில் திருவுளச்சீட்டு முறைமூலம் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது என  தீர்மானித்து இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதனடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று சங்கு சைக்கிள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உபதவிசாளர் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு முறைமூலம் நடத்தப்பட்ட நிலையில் சங்க சைக்கிள் கூட்டணியின் உறுப்பினரன ஜனர்த்தனன் 14 க்கு 13 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பிரதேச சபையை தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பு

யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பிரதேசசபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது.

வலி வடக்கு பிரதேச சபைக்கான கன்னி சபை அமர்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வலி வடக்கு பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமாழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் வேட்பாளராக சோமசுந்தரம் சுகிர்தனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பத்மநாதன் சாருஜனும் போட்டியிட்டனர்.

தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்ய 24 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்புக்கு 10 உறுப்பினர்களும், நடுநிலையாக ஒரு உறுப்பினரும் பகிரங்கமாக நடைபெற்ற தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் பத்மநாதன் சாருஜன் 09 வாக்குகளையும் பெற்றனர்.

இந்நிலையில் வலி வடக்கு பிரதேசசபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது.

காணிகள் விடுவிக்கப்படுவது குரித்து வடக்கு ஆளுநர், பிரித்தானிய தூதுவருடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தின் வலி. வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கிற்கு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (18) வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன், முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார்.

வடக்கில் அமையப்பெறவுள்ள மூன்று முதலீட்டு வலயங்களினதும் உட்கட்டுமான அபிவிருத்திற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் தெரிவித்தார். வேலை வாய்ப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் இங்கு அதிகளவில் வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இளையோரிடத்தில் புலம்பெயர்வுக்கான சிந்தனை மேலோங்கியிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இங்கே உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலீட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துகொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டுநாயக்காவுக்கும் பலாலிக்கும் இடையிலான விமானசேவை ஆரம்பிப்பது பெருமளவு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் இதற்குரிய கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் மற்றும்  செம்மணி புதைகுழி அகழ்வு என்பன தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் களநிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த காலங்களில் பிரிட்டன் அரசாங்கம் ஐ.நா.வின் முகவர் அமைப்புக்கள் ஊடாக பல்வேறு நிதி உதவிகளை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், தற்போதும் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள அகதிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு உதவிகள் தேவை என்ற கோரிக்கையையும் ஆளுநர் முன்வைத்தார்.

மேலும், பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் கிராமிய வீதிகள், கிராமிய உட்கட்டுமானங்களுக்கான தேவைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தேவைப்பாடுகள் இன்னமும் உள்ளன எனவும் ஆளுநர் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார்.