Home Blog Page 118

நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே இலக்கு: இரா. சாணக்கியன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே எமது இலக்காகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” சமஷ்டி அடிப்படையில் தீர்வு கோருவது நாட்டை பிரிக்கும் நடவடிக்கை அல்ல. எனவே, சமஷ்டி தீர்வு பற்றி இந்த ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும். வடக்கு, கிழக்கை பிரிப்பதற்கு பங்கு வகித்தவர்களும் ஆட்சியில் இருக்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வு எனக் கூறப்பட்டாலும் இன்னும் முன்னேற்றகரமான நடவடிக்கை இல்லை. 30 வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகள், காடாவது வழமை. அதனை அடிப்படையாகக்கொண்டு மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு இடமளிக்க முடியாது.
ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எமக்கு கிடையாது.” – எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.

தமிமீழ தேசியத் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய வழக்கு தள்ளுபடி

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார். எனவே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது , இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டாமா என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஐநா மனித உரிமை ஆணையாளர் மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்: மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும்,தொடரும் காணி அபகரிப்புகள் குறித்து கரிசனையை வெளியிடவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள  ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் 12 பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

இது குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

2024 தேர்தல்களின் மூலம் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்தடவை.

இலங்கையில் நடந்துவரும் ஆட்சி மாற்ற பொருளாதா நெருக்கடிகளின் விளைவுகள்கடந்தகால வன்முறைகளின் சுழற்சிமூன்று தசாப்தகால மோதல்களின் நீடித்த விளைவுகள் ஆகியவற்றுடன் நாடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.

2024 அரசாங்க மாற்றம் சீர்திருத்தத்தை உறுதியளித்தது புதிய கலாச்சாரம் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை மீண்டும் தூண்டியது.

ஆயினும்கூட ஏழு மாதங்களுக்குப் பிறகும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய நிர்வாகம் மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் கடுமையான சமூக-பொருளாதார சவால்களையும் எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழலுக்கு மத்தியில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  சமீபத்திய பயன்பாடு சந்தேக நபர்களின் உரிய செயல்முறையை மீறியுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் போன்ற நீண்டகால பிரச்சினைகள் சமூகங்களுக்கு அவர்களின் நிலங்களை அணுகுவதற்கான உரிமை, சொந்தமாக்குதல் மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமை நடமாடும் சுதந்திரம் மற்றும் உயிர்வாழும் வழிமுறைகளை தொடர்ந்து மறுத்து வருகின்றன.

திசாநாயக்க அரசாங்கத்தின் கீழும் சித்திரவதை  மற்றும் காவல்நிலையத்தில் மரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் உண்மையான மற்றும் திறந்த உரையாடலை நடத்துங்கள் இதில் வடக்கு மற்றும் கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதும் அடங்கும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாகத் தடைசெய்து அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். சட்ட சீர்திருத்தங்களுக்கான எந்தவொரு எதிர்கால முயற்சிகளும் சர்வதேச தரங்களுக்கு இணங்க வேண்டும் மற்றும் பரந்த ஆலோசனைகளுக்குப் பிறகு வரைவு செய்யப்பட வேண்டும்.

பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்கான தேவைகள் குறித்து முன்னிலைப்படுத்துங்கள்

பல தனிநபர்களை சமூகங்களை தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றியுள்ள நிலங்களை கையகப்படுத்தல் ஆக்கிரமிப்பு குறித்து கரிசனைகளை எழுப்புங்கள்.வடக்குகிழக்கில் நிலம் கையகப்படுத்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.

மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொண்டு புதைகுழிகளை தோண்;டுவது ஆவணப்படுத்துவது அறிக்கையிடுவது அடையாளம் காண்பது போன்ற விடயங்களில் சர்வதேச தராதரம் பயன்படுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துங்கள்.

மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தினை தொடர்ச்சியாக கண்காணிக்கும் ஆதரிப்பதற்கான ஆணையை வழங்கும் புதிய தீர்மானத்திற்கான தேவை குறித்து பேசுங்கள் – இந்த தீர்மானம் இரண்டு வருடகாலத்திற்கானதாகயிருக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தினையும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அதன் திறனையும்  புதுப்பிக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் பரிந்துரைக்கின்றது.

இந்த பரிந்துரைகளில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள மனித உரிமைகள் பொறுப்புகூறல் நல்லிணக்க விவகாரங்கள் குறித்து அவசர கவனம் தேவை.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரும் அவரது அலுவலகமும் மேலே குறிப்பிடப்பட்ட கரிசனைகளை முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை விஜயத்தினை பயன்படுத்துவதுடன் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் உட்பட உடனடி நடவடிக்கைகளை வலியுறுத்தவேண்டும்.

வியட்நாம் தூதுவர் – பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (18) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு செயலாளரும் வியட்நாம் தூதுவரும் இரு நாடுகளுக்கிடையிலுமான நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது பிரமுகர்களும் புத்த மதத்தின் மூலம் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய தொடர்புகளை குறிப்பிட்டு பகிரப்பட்ட கலாச்சார மற்றும் மத பாரம்பரிய அம்சங்கள் தொடர்பில் முக்கியத்துவமிக்க விடையங்கள் குறித்து கலந்துரையாடினர்.

மேலும், இக் கலந்துரையாடல் பல்வேறு துறைகளில் இராஜதந்திர ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது.

வியட்நாமிய தூதரின் வருகைக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்ததோடு, இருதரப்பு நலனுக்காக வியட்நாமுடன் நட்புறவைத் தொடர்ந்து வளர்ப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டையம் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களை எந்த நேரத்திலும் அழைத்து வர தயார் – அரசாங்கம்

போர் சூழ்நிலை காரணமாக விசேட தேவை ஏற்பட்டால், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், எல்லையோர நாடுகள் வழியாக இலங்கையர்களை மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று (19) உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

சமூக ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற தம் மீது இலங்கைக்  கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக  இராமேஸ்வரம் மீனவர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக அரசால் ஆண்டுதோறும் அமுல் படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி  ஆரம்பமாகி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில் வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக மீன்பிடி அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும்  மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்பட்டது.

தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் மோதல்!! ஐ.நா. பாதுகாப்பு பேரவை அவசர கூட்டத்திற்கு அழைப்பு

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தீவிர நிலையை எட்டியுள்ளதை தொடர்ந்து இருநாடுகளும் ஒன்றையொன்று கடுமையாக தாக்கி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் அவசர அமர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் ஏவிய ஒரு ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் விமானப்படை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன், தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரானிய உள்நாட்டு பாதுகாப்பு தலைமையகத்தை அழித்ததாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூத்த அதிகாரிகளுடன் ஈரானுக்கான தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்பதைப் பார்க்க டிரம்ப் கடைசி நிமிடம் வரை காத்திருப்பதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவை அச்சுறுத்தி, ஒருபோதும் சரணடைய மாட்டேன் என்று அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினர்.

ஈரான் சரணடையவில்லை என்றால், அவர்களுக்கு “நல்வாழ்த்துக்கள்” ஈரானிய தலைவரை வாழ்த்துவதாக டிரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையில், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் அவசர அமர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியாவின் வேண்டுகோளின் பேரில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இஸ்ரேலும் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பான முடிவை இரு நாடுகளின் தலைவர்களிடமே விட்டுவிட வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ஈரான் ரஷ்யாவிடம் உதவி கேட்டதா என்று செய்தியாளர்கள் புடினிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

“எங்கள் ஈரானிய நண்பர்கள் இது குறித்து எங்களிடம் கேட்கவில்லை” என்று ரஷ்ய அதிபர் பதிலளித்ததாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

செம்மணி மனிதபுதைகுழி – உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்

செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இந்த புதைகுழி  குறித்த விசாரணைக்கு சர்வதேச சகாக்களுடன் இணைந்து பிரிட்டன் ஆதரவளிக்கவேண்டும் மனித என தெரிவித்துள்ளார்

மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி இலங்கைக்கு அவசியம் என அந்த அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு துணை செயலாளரின் பதில் மே 15 ம் திகதி கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் அந்த பதிலில் அவர் இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி  மற்றும் உண்மை நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் வலியுறுத்தும் என அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் யுத்தத்தின் முடிவில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி நிலைப்பாட்டப்படவேண்டும் என்பதற்கான உங்களின் தனிப்பட்டஆதரவிற்கும்  நான் நன்றியுடையவளாக உள்ளேன்.

இலங்கையின் வடபகுதியில் மூன்று குழந்தைகளின் உடல்களுடன் சமீபத்தில் மற்றுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்,இந்த அட்டுழியங்கள் எவ்வளவு புதியவை என்பதை  அதிர்ச்சியூட்டும் நினைவுபடுத்தல்களாக காணப்படுகின்றன.

2024 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் உடல்களை தோண்டுவதற்கான போதிய வளங்கள் இலங்கையிடம் இல்லை என தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த அடிப்படையிலும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் நீதி ஆகியவற்றிற்கான பிரிட்டனின் ஆதரவின் அடிப்படையிலும்  இலங்கைக்கு இந்த விடயத்தில் பிரிட்டனின் ஆதரவு குறித்த தற்போதைய அல்லது திட்டமிடப்பட்ட திட்டங்களை நீங்கள் வெளிப்படுத்தவேண்டும்.

இலங்கை அரசாங்கத்துடனான இரு தரப்பு ஈடாட்டங்களின் போது உங்கள் திணைக்களம் – அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் – இந்த விடயத்தை நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக தக்கவைத்துக்கொண்டால் அதற்கும் நன்றியுடையவளாகயிருப்பேன்.

மார்ச் மாதம் நீங்கள் தடைகளை அறிவித்தவேளை சர்வதேச அளவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்,பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல்கொடுக்கும் தொழில்கட்சியின் நீண்டகால பாரம்பரியத்தை நீங்கள் பின்பற்றினீர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தது போன்று ,யுத்த குற்றவாளிகளை  சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தவேண்டும் என்ற எனது வேண்டுகோளை நீங்கள் கருத்தில் எடுப்பீர்கள் என கருதுகின்றேன்.

உயிர்பிழைத்தவர்கள்,பதிலை தேடும் குடும்பங்கள் ,இந்த குற்றங்களின் நிழலில் வளர்ந்த அடுத்த தலைமுறை நாங்கள் கடன்பட்டுள்ளோம்.

இளைஞர்கள் மத்தியில் புகைபிடித்தல், மது அருந்துதல் அதிகரிப்பு!

இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 11.6 சதவீதமானோர் புகைபிடிப்பதாகவும், 18 சதவீதமானோர் மதுபானம் அருந்துவதாகவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேற்கொண்ட ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களை உள்ளடக்கி மது மற்றும் போதைப்பொருள்  தகவல் மையம் ADIC (Alcohol and Drug Information Centre)  இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்ததாவது,

“புகை மற்றும் மதுவை முதன்முறையாக பயன்படுத்தத் தொடங்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்கள் சமூக நிகழ்வுகளில் இடம்பெறுகின்றன. இதே போன்ற ஆய்வுகளில், நண்பர்கள் மற்றும் சமூகவட்டத்தின் அழுத்தமும் தூண்டுதலும் இந்த நடத்தை உருவாகும் முக்கியக் காரணிகளாக காணப்படுகின்றன. ஊடகம் மற்றும் பிற தளங்கள் வழியாக புகையிலை நிறுவனங்கள் மேற்கொள்ளும் பல்வேறு விளம்பரங்கள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் இவர்களது தயாரிப்புகளுக்கு நேர்மறையான பார்வையை உருவாக்கும் முக்கிய பங்காற்றுகின்றன”.

எனினும், கடந்த ஒரு தசாப்தத்தில் மதுபான பயன்பாடு குறைந்திருப்பதாகவும், 2022க்குப் பின்னர் மொத்த மதுவின் உற்பத்தி குறைந்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.  அதேவேளை, அரசாங்கத்தின் வரிசை விகித உயர்வுகள் காரணமாக ஊழியர் வரி வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளில், 36.5% பேர் புகைபிடிப்பதை நிறுத்தியும், 20.9% பேர் அதைப் பற்றிய பழக்கத்தை குறைத்தும், 27.9% பேர் மதுபானம் அருந்துவதை முழுமையாக கைவிட்டும் உள்ளனர்.

மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டு சிகரட் வரி 20% உயர்த்தப்பட்டதன் விளைவாக அரசுக்கு ரூ.7.7 பில்லியன் வருமானம் அதிகரித்துள்ளது. அதேவேளை, சிகரட் உற்பத்தி 521.5 மில்லியன் சீட்டுகளால் குறைந்துள்ளது இது 18% குறைவு ஆகும்.

இதேவேளை, பாடசாலை வளாகங்களைச் சுற்றிய 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை விற்பனை தடை, NATA சட்டத்தின் கடுமையான அமலாக்கம், தற்காலிக மதுபான உரிமங்களை நிறுத்துதல் மற்றும் பயணவளர்ச்சிக்கு பெயரில் புதிய உரிமங்களை வழங்குவதில் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என ADIC தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும்: அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை

அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 6 நாட்களாக தீவிர வான்வழி போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானின் உச்ச தலைவர் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இப்போதைக்கு அவரை கொலை செய்யப் போவதில்லை. அதேநேரம், பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குவதை ஏற்க முடியாது. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடன் போர் தொடங்கிய பிறகு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி முதன் முறையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

திணிக்கப்பட்ட போருக்கு எதிராக ஈரான் உறுதியாக நிற்கும். அதேபோல திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும். மேலும் ஈரான் யாரிடமும் ஒருபோதும் சரணடையாது.

ஈரான் வரலாற்றைப் பற்றி அறிந்த புத்திசாலிகள் ஈரானுடன் ஒருபோதும் அச்சுறுத்தும் மொழியில் பேசமாட்டார்கள். ஏனெனில் ஈரான் ஒருபோதும் சரணடையாது. இந்தப் போரில் அமெரிக்கா தலையிட்டால் அதன் விளைவு ஈடு செய்ய முடியாததாக இருக்கும்.

ஜியோனிஸ்ட் (இஸ்ரேல்) அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டது. அதற்காக உரிய தண்டனையை கொடுப்போம். நமது மக்கள் தங்கள் தியாகிகளின் ரத்தத்தை விட்டுவிட மாட்டார்கள். தங்கள் வான்வெளியை மீறுவதை நிறுத்த மாட்டார்கள்.

நமது ராணுவ வீரர்கள் நாட்டை பாதுகாக்க தயாராக உள்ளனர். ஜியோனிஸ, தீவிரவாத ஆட்சியாளர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கருணை காட்டக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.