Home Blog Page 11

பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வவுனியாவில் பெற்றோர் போராட்டம்!

வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டியும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் பெற்றோர்கள் இன்று (18)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பற்றாக்குறை தொடர்பாக பல முறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வு பெறப்படாத காரணத்தினால்  மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது விரைவில் இந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி : அடுத்த அகழ்வுக்கான பாதீடு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார்.

பாதீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்கான அறிக்கையை பெற்றுக்கொள்ள தவணையிட்டுள்ளது.

ஒக்டோபர் 1ஆம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமானால் ஒக்டோபர் 21ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி V.S.நிறைஞ்சன் தெரிவித்தார்.

ஏர் இந்தியா விமான விபத்து: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்குப் பதிவு

ஜூன் மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தவறான எரிபொருள் சுவிட்சுகள் விபத்துக்குக் காரணம் என்றும், விமானத்தின் வடிவமைப்பின் அபாயங்கள் குறித்து அறிந்திருந்தும் நிறுவனங்கள் “எதுவும் செய்யவில்லை” என்றும் குற்றம் சாட்டியது.

அமெரிக்க விமான உற்பத்தியாளர் இந்த வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதற்கு பதிலாக அது இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை சுட்டிக்காட்டியது.

லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 260 பேர் உயிரிழந்தனர்.

விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னர் என்ஜின்களுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

தமிழ் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மட்டுமே இந்தியாவால் எதனையும் செய்யமுடியும்!

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

மாகாணசபையை வலியுறுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், சில சந்தர்ப்பங்களில் அந்த மாகாண சபை தேவையில்லையென்றும் தெரிவிக்கும் நிலைப்பாடு இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் இவ் விடயத்தில் இந்தியாவினால் ஒருமித்த நிலைப்பாட்டை முன்னெடுத்து இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதில் சிக்கல் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் தூதரகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பின் போது இந்த விடயங்களை தூதுவர் தெரிவித்தார்.

இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதன்கீழ் தமிழ் பேசும் மக்களுக்காக 13ஆவது அரசியல் திருத்தத்தின் கீழ் மாகாணசபை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் (1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ம் திகதி)

இதற்காக தேர்தல் முதல் முறையாக 1988 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 04 ஆம் திகதி நடைபெற்றது. இறுதியாக இந்தத்தேர்தல் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்றது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு அப்பால் அதாவது கிழக்கு பிரிந்த மாகாணத்திற்காக தேர்தல் நடைபெற்றது.

வட மத்திய மாகாணத்திற்காக தேர்தல் ( 08.09.2012 ) சபரகமுவ மாகாணத்திற்காக தேர்தல் (08.09.2012) மத்திய மாகாணத்திற்காக தேர்தல் (21.09.2013) வட மாகாணத்திற்காக தேர்தல் (21.09.2013 ) வடமேற்கு மாகாணத்திற்காக தேர்தல் (21.09.2013) மேற்கு மாகாணத்திற்காக தேர்தல் (29.03.2014) தென் மாகாணத்திற்காக தேர்தல் (29.03.2014) ஊவா மாகாணத்திற்காக தேர்தல் (20.09.2014) நடைபெற்றது.

கடந்த 11 வருடங்களாக மாகாணசபை தேர்தல் நடைபெறுவதில் இலுபறி நிலை இருந்துவருகிறது. இந்நிலையில் மாகாண சபை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் கேட்கப்பட்ட போதே தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் ஐக்கியம் இல்லாத போதிலும் இந்தியா மாகாண சபை தொடர்பில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் தூதுவர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் இந்தியா மாகாண சபைக்குட்பட்ட அதிகாரங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு இந்த மாகாணசபையின் கீழ் முழுமையான பிராந்திய நிர்வாகம் நடைபெறவேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருந்து வருகிறது. அதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளின் மத்தியில் விசேடமாக வடக்கு, கிழக்கில் உள்ள அரசியற்கட்சிகளுக்கிடையில் இதுவிடயத்தில் ஒருமித்த கருத்துப்பாடு இல்லை. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாகாண சபை தொடர்பில் எழுத்து மூலம் எமக்கு உறுதியான நிலைப்பாட்டை அறியத்தந்தால், இந்தியா பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘தியாக தீபம்’ திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் இன்று…

“தியாக தீபம்” திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (18)அனுஷ்டிக்கப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

தமிழர்களின் பூர்வீக விவசாயக் காணிகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது: ரவிகரன் எம்.பி

வவுனியா வடக்கு வெடிவச்சகல்லு கிராம அலுவலர்பிரிவில் மகாவலி அதிகாரசபையின் பிடியிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களால் 1000ஏக்கர்வரையில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களுக்கு மகாவலி அதிகாரசபை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகாவலி “எல்”வலய வதிவிவத் திட்ட முகாமையாளருடன் கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்வதாகவும், அக்கலந்துரையாடலின் மூலம் குறித்த திரிவைச்சகுளத்தின் கீழான தமிழ் மக்களின் பூர்வீககாணிகள் பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை மற்றும் அதனை அண்டிய பகுதியில் 1000ஏக்கர்வரையில் அடர்வனங்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்ட பிணக்குகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ளர்.

குறித்த திரிவச்சகுளம் விவகாரம் தொடர்பில் மகாவலி அதிகாரசபையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தலைமையிலான  குழுவினருக்குமிடையில் புதன்கிழமை (17) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடிவச்சகல்லு கிராமசேவகர்பிரிவிலுள்ள திரிவைச்சகுளத்தின்கீழான தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் ஆக்கிரமிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களுக்கு குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை அண்மையில்  குறித்த திரிவைச்ச குளத்தை அண்டியுள்ள சுமார் 1000ஏக்கர்வரையிலான  அடர்வனப்பகுதிகள்  பெரும்பான்மையினத்தவர்களால் அழிக்கப்பட்டு பாரிய ஆக்கிரமிப்பு முயற்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக கடந்த 07.07.2025திகதியன்று அன்று பெரும்பான்மை இனத்தவர்களின் ஆக்கிரமிப்பிலுள்ள தமிழர்களின் பூர்வீக திரிவச்சகுளம் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களால் 1000ஏக்கர் வரையில் அழிக்கப்பட்டுள்ள திரிவச்ச குளத்தை அண்டிய பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த16.07.2025அன்று மகாவலி அபிவிருத்த அதிகாரசபையின் எல் வலய வதிவிடத் திட்ட முகாமையாளர் அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் வெடிவச்ச கல்லு கிராமமக்கள் உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று மகாவலி “எல்”வலய வதிவிடதிட்ட முகாமையாளருடன் கலந்துரையாடல் நடாத்தியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் பெரும்பான்மை இனத்தவர்கள் பத்துப்பேருக்கு திரிவைச்சகுளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு நெற்செய்கைக்காக மகாவலி அதிகாரசபையால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினரால் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்ட அடர்வனப்பகுதி தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் இணைந்து வழக்குக்குத் தொடரவுள்ளதாகவும் இதன்போது தெரியப்படுத்தப்பட்டது.

எனினும் இதுவரை மகாவலி அபிவிவிருத்தி அதிகாரசபையால் இவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இத்தகையசூழலில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்ட திரிவைச்ச குளத்தின்கீழான வயல் நிலத்திலும், அதனை அண்டியுள்ள சட்டவிரோதமாக அடர் வனப்பகுதி அழிக்கப்பட்ட பகுதியிலும் தற்போது பெரும்போக நெற்செய்க்கான பண்படுத்தல் வேலைகளை பெரும்பான்மை இனத்தவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இத்தகையசூழலில் ஏற்கனவே கடந்த 16.07.2025அன்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்ட உத்தரவாதம் இதுவரை நிறைவேற்றப்படாமை குறித்து கேட்டறிவதற்கு 17.09.2025 இன்று மகாவலி  அதிகாரசபையின் “எல்”வலய திட்ட முகாமையாளர் காரியாலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்  துரைராசா ரவிகரன், வவுனியாவடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் தனுசன், துரைராசா தமிழ்செல்வன், நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி கோசலை, வெடிவைச்சகல்லு கிராமத்தைச்சேர்ந்த மக்கள் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் மகாவலி அதிகாரசபையின் “எல்”வலய வதிவிட திட்ட முகாமையாளர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், குறித்த அலுவலகத்தில் அடுத்த நிலையிலுள்ள அதிகாரியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது இதுவரை திரிவைச்ச குளம் வயல்காணிகள் மற்றும், அதனைஅண்டியபகுதியில் இடம்பெற்ற பாரிய சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் மகாவலி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காமைகுறித்து இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் குறித்த பிணக்குத்தொடர்பில் ஆராய்வதற்கு மகாவலி “எல்”வலய திட்ட முகாமையாளருடன் பிறிதொருநாளில் கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்வதாகவும், குறித்த கலந்துரையாடலினூடாக இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தாம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளை அபகரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அபகரிக்கப்பட்ட எமது மக்ககளின் காணிகள் விடுவிக்கும்வரை எமது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகிப்போம் என்றார்.

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு சரிவு!

உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்துள்ளது.

செப்டம்பர் மாதம் 11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு; குறியீட்டின்படி, இலங்கை 97 வது இடத்தில் உள்ளது.

2024 ஆம் ஆண்டு, கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 96 வது இடத்தில் இருந்தது.

இலங்கையுடன் சேர்ந்து, ஈரானும் இந்த குறியீட்டில் 97 வது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் நுழையக்கூடிய இடங்களின் அடிப்படையில், உலகம் முழுவதும் உள்ள கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.

இந்த குறியீட்டின்படி, சிங்கப்பூர் உலகின் முன்னிலையான கடவுச்சீட்டாக உருவெடுத்துள்ளது.

அதே நேரம், தென்கொரியா மற்றும் ஜப்பான் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

இந்த கடவுச்சீட்டு குறியீட்டில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டமைப்புத் தேசியவாதமும் தமிழீழத் தேசிய ஒருமைப்பாடும் – மு. திருநாவுக்கரசு

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குப் பதில் கட்டமைப்புத் தமிழீழத் தேசிய எழுச்சியாகும். தேசியமென்பது சிதறு தேங்காயடி விளையாட்டல்ல. தேசியமென்பது ஐக்கியம், ஒருமைப்பாடு, கூட்டுச்சேரல்,  அணிசேரல் என்ற அணுவிலிருந்து அண்டம் வரையான ஒருமைப் பாட்டைக் குறிக்கிறது.
ஒரு மக்களினத்தை அழிப்பதற்கு முதலில் அவர்களின் பண்பாட்டையழித்தல்  அத்துடன் கூடவே அவர்களின் தேசியத் தன்மையை  அழித்து விடவேண்டுமென்ற உணர்வுக்குள்ளுள்ள நிலைப் பாட்டின் கீழ்த்தான் காலனி ஆதிக்கம் ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் தமது கொள்ளைக்கார, கொலைகார அரசியலை நடத்தியதாக விடுதலை வீரனும், சிந்தனையாளருமான அமில்கார் கப்ரால் (Amílcar Cabral)   கூறினார். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஆதிக்கமானது இதனை உணர்வு பூர்வமாக பல்பரிமாணத்துடன் கையாளுகிறது.
ஆதிக்க சக்திகளுக்கெதிரான பலம் பொருந்திய ஆயுதம்  தேசியம்.  அது மக்களைத் திரளாக்கி, மக்களை எதிரிக்கெதிரான பலம் பொருந்திய ஆயுதமாய் நிலைநிறுத்தி விடுகிறது.  அது மக்களை, மக்களுக்கு அரணாக்குகிறது. அந்தத் தேசியத்தினடித்தளம் பண்பாடும், வாழ்க்கை முறையும்,  ஒருமைப்பாடும், சனநாயக முறைமையு மாகும்.
தேசியமும், தேசிய  ஐக்கியமும், தேசிய ஒருமைப்பாடும் இல்லையேல் மக்களுக்கென்று பாதுகாப்பொன்றுமில்லை.  ஆதலால் தேசியம் எப்போதும் முதல் நிலையில் மக்களுக்கான பாது காப்பரணும், பாதுகாப்புக் கவசமும், கூடவே எதிரிக்கெதிரான ஈட்டியுமாகும்.
தமிழ்த் தேசியத்தைச் சிதறு தேங்காயாக் கும் பணியை  எதிரியின் சார்பில் தமிழ்த் தலை வர்கள்  நிறைவேற்றி வருகிறார்கள். களத்திலும், புலத்திலுமுள்ள தமிழ் அரசியற் செயற் பாட்டாளர்க ளும், பண்பாட்டாளர்களும் இப்பிரச்சினையை உணர்வு பூர்வமாகப் புரிந்து, தமிழ்த் தேசியத்தைப் புதிய சிந்தனையுடன் கட்டமைப்புச் செய்ய வேண்டும்.
தேசியத்தில் மக்கள், நிலம், மொழி, பண்பாடு, வரலாறு என்பன எவ்வாறு முக்கியமான அம்சங்களோ அவ்வாறே அத்தேசியத்திற்கான கட்டமைப்பும் முக்கியமான அம்சமாகும். காணப் படும் யதார்த்த பூர்வமான களநிலைக்குப் பொருத்தமாக, உலகளாவிய உள்நாட்டு, வெளி நாட்டு அரசி யலுக்குப் பொருத்தமாகத் தேசியம் எப்பொழுதும் இடையறாது கட்டமைப்புரீதியாகப் புதுப் பிக்கப்பட்டு கொண்டேயிருக்கவேண்டும்.
தற்போது ஈழத் தமிழர்கள் மத்தியிலுள்ள துயரகரமான நிலைமையென்னவெனில் தமிழ்த் தேசியத்தைச் சிதறடிப்பதையே தேசிய அரசியலாகத்தமிழ்த் தலைவர்கள் கொண்டிருக் கிறார்கள். ஆத லால் தமிழ்த் தேசியமானது தற்போது சிதறடித்தல் என்கின்ற பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது. இதனை அரசியற் கோட்பாட்டு ரீதியாகத் தேசிய நாசகாரச் செயல், அரசியல் நாச காரம் (Political Vandalism) என்றழைக்கலாம்.
இத்தகைய நாசகார அரசியலுக்குப் பதி லாக தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டரசியலை முன்னெடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத் தமிழரினதும் கடமையாகும். எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் ஒவ்வொரு சனநாயகவாதியின ரும் பொறுப்பும் , கடமையும், பணியுமாகும்.
யாரையும் திட்டிக் கொண்டிருப்பதையும், வசைபாடிக் கொண்டிருப்பதையும், இலட்சிய மாகக் கொண்டிருக்க முடியாது. திட்டுவதையும், சேற்றை வாரிவீசிக் கொண்டிருப்பதையும் தேசிய வாதமாக்கிவிடக்கூடாது. சிதறு தேங்காயடித் தலை யும், சேற்றைவாரி வீசலையும்  தேசிய மாக்கி விட்ட ஒரு காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் சேற்றுப் புழுக்களாய் நெழியுமொரு காலகட்டத்தில் வாழ் கிறோமென்ற துயர்தோய்ந்த இன்றைய வரலாற்றுக் கட்டத்தைப் புறந்தள்ளமுடியாது. எனவே இன் றைய நிலையிற்  புதிய பரிமாணத்துடன், புதிய சிந்தனையுடன் புதிய கட்டமைப்புச் செய்ய வேண்டும்.
இதற்கு உலகளாவிய இன்றைய உடனடி யதார்த்தத்தையும், சர்வதேச அரசியலையும், உள்நாட்டு, வெளிநாட்டு  அரசியலையும்; ஈழத் தமிழரின் உள்ளக அரசியலைத் தாயகம், புலம் பெயர் தேசமென இரு பரிமாணங்களிலும் யதார்த்தபூர்வமாகக் கணக்கிலெடுத்துச் செயற்பட வேண்டும். ஈழ மண்ணில் ஈழ நிலமும், அதன் கடல் சார்ந்த பிரதேசத்தையும் உள்ளடக்கிய சிந்தனையுடன்  அகத்திலும், புலம்பெயர் தேசத்தில் ஒரு புதிய கட்டமைப்புவாதத்தையுருவாக்க வேண் டும்.
முதலாவதாக ஈழத் தமிழரின் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும். எழுமாத்திர அரசியலையும்,  தான்தோன்றித்தனமான அரசிய லையும் புறந்தள்ளி, முற்றிலும் புத்தி பூர்வமான, அறிவார்ந்த திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்துதலென்கின்ற கோசம் முதலில் முன்னெடுக்க வேண்டும். இதற்கு இரண்டு விடயங் கள் மிகவும் அடிப்படையானவை.
முதலில் தமிழரரசியலை சனநாயக மயப்படுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழ்க் கட்சிகள் முதலாவதாக தம்மை சனநாயக மயப் படுத்த முயற்சிக்க வேண்டும்.  சனநாயக அம்சங் களையும், நடைமுறைகளையும் இவர்கள் பின் பற்ற வேண்டும்.  சனநாயகத்தின் கூரிய முது கெலும்பு வெற்றிக்கும், தோல்விக்கும் பொறுப் பேற்றலாகும்.
தோல்விக்குப் பொறுப்பேற்றுப்  பதவி விலகலைத் தலைவர்கள் ஒரு சனநாயக நடை முறையாகக் கொள்வதன் மூலம் தகுதியான புதியவர்களின் வருகையையும், சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான பாதையையும்  திறக்க லாம்.
இந்தியாவின் முன்னாள் பிரதமராயிருந்த  திருமதி இந்திரா காந்தி குறிப்பாக 1970களின் மத்தியில்  மேற்கொண்ட அவசரகாலச் சட்டத்தின் கீழான ஆட்சியில் இழைக்கப்பட்ட தவறுகளையும்,  அரசு மேற்கொண்ட கட்டாயக் கருச்சிதைப்பில் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளையும், பெருந் தவறாகப் பொறுப்பேற்று அதற்காக 1979 டிசம்பர் பொதுத் தேர்தலில் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அவரை மன்னித்து 1980 ஆம் ஆண்டு சனவரியில் அவரை மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கச் செய்தனர்.  தமிழினத் தலைவர்களும் தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினால் ஈழத்தமிழ் மக்கள் நிச்சயம் மன்னிப்பார்கள். திருந்தி மன்னிப்புக் கோருதலும், மக்கள் அதனை மன்னித்தலும் ஒரு சனநாயக நடைமுறைதான்.
எப்படியோ தற்போது ஈழத் தமிழ் அரசியற் களத்தில் முற்றிலும் பல்வேறு வழிகளிலும் சனநாயக மயப்படுத்தப்பட வேண்டும்.  இது உடனடியான, இலகுவான காரியமல்ல என்பது வெள்ளிடை மலை. ஆயினும் அதனை நோக்கி முன்னேற இப்போது அவசரமான கட்டமைப்பு களையுருவாக்க வேண்டியதவசியம்.
முதலாவதாக எத்தகைய அரசியற் தீர்மானங் களையும் அறிவார்ந்த அறிக்கைகளுக்குட்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்கள் மத்தியில்  அரசி யற் தீர்மானங்களை ஒட்டி அறிக்கைகள் தயாரிப்பதற் கான ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்க வேண்டும்.  இவர்கள் கட்சி அரசியல்களுக்கு அப் பாற்பட்டு ஒரு விடயத்தை முற்றிலும் அறிவார்ந்த ஆய்வு களினூடாக நேர்மையுடனும், விசுவாசமாக வும்  முன்வைக்க வேண்டும்.  ஊடகங்கள் இவற்றைப் பொறுப்புணர்வுடன் மக்கள் மத்தியிலெடுத்துச் செல்ல வேண்டும்.
நமது அரசு கொண்டுவருமொரு அரசியற் தீர்மானமென்றால் அதனை ஆய்வுக்குட்படுத்தி அறிக்கை  தயாரிக்க வேண்டும். அப்படிச் சமூகத்தி லெழக்கூடிய அரசியல், பொருளாதாரம், மூலவளம், சாதி, மத, சமூகப் பிரச்சினைகள், இயற்கை  அனர்த்தங்கள், கட்சிகளுக்கிடையே அல்லது உட் கட்சிக்குள்ளே நடக்கக்கூடிய பிரச்சினைகள், முரண்பாடுகளையும் அவ்வப்போது ஆய்வுக் குட்படுத்தி அறிக்கை  தயாரிக்குமொரு மையக் குழு உருவாக்கப்பட வேண்டும். இது தமிழ் தேசியத்தைச்  சரிவர இயக்குவதற்கேற்ற இருதய மான மைய விடயமாகும்.
இதில் அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என்போரது கூட்டுப் பங்களிப்பு தலையாயது. இதனை முற்றிலும் செயற்பூர்வமான பொறிமுறை அமைப்புக்கேற்ப கட்டமைப்புச் செய்ய வேண்டும். இந்த ஆய்வறிக்கைக் குழுவு க்கு அனுசரணையாக மும்மொழி கொண்ட மொழிபெயர்ப்புக் குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இவையிரண்டுக்கும் அனுசரணையாக வொரு வெளியீட்டுக் குழு உருவாக்கப்பட வேண்டும். அந்த வெளியீட்டுக் குழுவே அச்சு வெளியீடுகளையும், ஊடகங்களைக் கையாளும்  அதிகாரம் கொண்டதாகவிருக்கவேண்டும்.  இவை மூன்றும் தனித்தனியே சுயாதீனமானவையும் கூட்டானவையுமாகவிருக்கவேண்டும்.
இப்படியே புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக மேற்குலகில் மேற்குலக நாடுகளைக் கையாளவல்ல ஒரு செயற்பாட்டுக்குழு உருவாக் கப்பட வேண்டும். அது ஆய்வு செய்தல், கொள்கை வகுத்தல் போன்ற பணிகளை முதற் தரமாகச் செய்ய வேண்டும். இவற்றை நடை முறைப்படுத்துவதற் கென ஒரு தாய், தந்தை அணியை உருவாக்க வேண்டும் .
இங்கு இரண்டு இராசதந்திர அணிகள் உருவாக்கப்பட வேண்டும். ஒன்று குறிப்பாக மேற்குலக நாடுகளையும் ஏனைய நாடுகளையும் கையாள்வது. இரண்டு இந்தியாவையும், தமிழகத் தையும் கையாள்வது.
மேற்குலக நாடுகளில் ஐரோப்பிய ஒன்றி யத்தில் 28 நாடுகளும், வட அமெரிக்காவில் இரண்டு நாடுகளுமென முப்பது நாடுகளின் தடை பட்டியலில் புலிகள் இணைக்கப்பட்டுள்ளார்கள். வெறுமனே புலிகளுக்கெதிரான தடைமட்டுமல்ல. கூடவே அது போராட்டத்திற்கெதிரான தடையும், மக்களின் தேசிய வளர்ச்சியை முன்னெடுப்பதற் கெதிரான தடையுமாகும்.
ஆசியாவில் மூன்று நாடுகளில் புலிகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள  இயக்கமாகும். அவை இலங்கை ,  இந்தியா, மலேசியா. இவற்றை வெறும் கற்பனையில் அல்லது எழுமாத்திரத்தில், அல்லது முற்கற்பிதத்தில் கையாள முடியாது. விஞ்ஞானபூர்வமான சர்வதேச அரசியல் நடுவர் களுக்கூடாகச் சாத்தியக் கூறுகளை ஒருங்கு திரட்டிக் கையாள வேண்டும். இவற்றிக்கு அரசியலறிவும் பாண்டித்தியமும் அவசியம். குரல்கள் எதிரிகளை உருவாக்குமே தவிர நண்பர்களை  உருவாக்காது. அழிவைத் தருமே தவிர மாற்றத்தையோ ஆக்கத்தையோ தராது . எல்லா வற்றிற்கும் உரமூட்டக்  கூடிய வகையிற் சிறப் பான தகவல் மையத்தையுருவாக்க வேண்டும். அந்தத் தகவல் மையம் அல்ஜசீரா போன்ற  ஒரு நம்பகரமான, திறமையான ஊடகமாகச் சுயாதீனமாக நடத்தப்படவேண்டும்.   இத்தகைய உயிரோட்டமானவற்றைச் செய்யாமல் மேற்கொள் ளப்படும் எத்தகைய ஆர்ப்பரிப்புகளும், ஆரவாரங் களும் பயனற்றுப் போகும்.
தியாகங்களை உயிரோட்டத்தோடு மக்கள் மையப்படுத்தாதுவிட்டால் வெறும் கல்லறைக் கொண்டாட்டங்களாக மட்டும் வைத்திருந்தால்  அவை கல்லறைக்குள் முடங்கி ஆளப் புதைந்து போய்விடும். தியாகங்களைக் கல்லறைப் பண்டங்களாகவல்லாமல் தியாகங்களுக்கு உயி ரோட்ட வேண்டுமென்றால் மக்கள் மயப்பட்ட அரசியல் உணர்வுகளினாலும், அதற்கான அரசியல் முன்னெடுப்புகளினாலுமே சாத்தியம். தியாகங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அரசியல் வெற்றிகளினாலும் முன்னெடுப்புகளினாலும் அவை உயிரூட்டப்பட வேண்டும். வெறும் கல் லறை கொண்டாட்டங்களாலல்ல.
இங்கு தியாகம் என்று சொல்வது போரா ளிகளை மட்டுமல்ல;  கூடவே படுகொலைக்குள் ளான மக்களின் வாழ்விழப்பையும், அவர்களின் சந்ததியினர் படும் துயரங்களையுமாகும். மரணம் இறந்தவரோடு போய் விடலாம், ஆனால் அவரது மரணத்தைச் சுமக்கும் உயிரோடுள்ள அன்புக்கு ரிய வர்களின், உறவினர்களின் ஒரு துயரமும் பெருந்தியாகம் தான் அதாவது பொதுவாக  வாழ் வில் இறந்தவரின் பொறுப்பு அவரது மரணத் தோடு முடிவடைந்து விடுகிறது. இறந்தவரின் கடமைகளையும், பணிகளையும் சுமக்க வேண் டிய பொறுப்பு அவரின் வாரிசுகளுக்குண்டு.  இறந்தவர்களோடு தியாகம் முடிவடைந்து விடுவ தில்லை;  அதை சுமப்பவர்க ளோடு தியாகம் நீள் கிறது. இந்நிலையிற் மிகுந்த பொறுப்புணர்வு டன் கல்லறைகளுக் குள்ளிருக்கும் தியாகிகளையும், அவர்களின் நீட்சியான மக்களின்  தியாகங்களையும் ஒருங்கு சேர முன்னெடுக்கவல்ல அரசியற் சிந்தனை வேண்டும்.
குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிற் காணப்படக்கூடிய சனநாயகச் சூழல் இவற்றை விரைவாகப் பெரிதாக முன்னெடுக்க அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.
இந்நிலையிற்  தமிழ்த் தேசியச் சிதை வுக்கான கோழிச் சண்டைகளைக் கடந்து தமிழ்த் தேசியத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான கட்டமைப்பு களையுருவாக்க வேண்டும்.  ஈழத் தமிழர்கள்  ஜே.வி.பி. யிடமிருந்து  ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியுண்டு.  அவர்கள் 1971 ஆம் ஆண்டு ஓர் ஆயுதப் போராட் டத்தை நடத்தி 14, 000 — 20, 000 இளைஞர் யுவதி களை இழந்தார்கள். பின்பு 1987 — 89 ஆம் ஆண்டுகளில் 1,00, 000 — 1,20, 000 இளைஞர் யுவதிகளை இழந்து இரண்டு ஆயுதப் போராட்டங்களிலும் படுதோல்வி யடைந்தனர்.
1971 ஆம் ஆண்டு ஜேவிபி யினர்  கடல் கடந்து வடகொரியாவிருந்து கப்பல் வழியாக ஆயுதம் கடத்துவதற்கெடுத்த முயற்சி தோல்வி முடிந்தது.  ஒரு தீவுக்கு ஆயுதப் போராட்டம் அதிகம் பொருத்தமுடையதல்ல என்பதை நடைமுறையில் முதற் தரமாக அவர்கள் கண்டு கொண்டாலும் இரண்டாம் தரமும் ஏற்பட்ட தோல்வியின் பின்பு அவர்கள் ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்து ஆயுதங்களுக்குப் பதிலாக இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியைக் கைப்பெற்றும் கலையில் வெற்றி பெற்றார்கள். சிங்கள மக்களை இனவாதத்தால் அணி திரட்டி ஆட்சியைக் கைப்பற்றுதல் என்கின்ற வித்தையை அவர்கள் புரிந்து கொண்டார்கள். மேலும் சிங்கள இனவாதத்தை முன்னெடுப்பதன் மூலம் மக்களை தெளிவாக அணி திரட்டலாமென்ற முயற்சியில் அவர்கள் முன்னணியிலுள்ளார்கள்.
கச்சதீவுக்கு எந்தவொரு சிங்கள நாடாளு மன்ற உறுப்பினரும்  அரசியற் பரிமாணத்துடன் வாழ்நாளில் பயணித்தது கிடையாது. ஆனால் அண்மையில் இலங்கை சனாதிபதி  கச்சதீவுக்கு. ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டு கடல் எல்லையையும், வானெல்லையும், தரை எல்லை யையும்  பாதுகாக்கப் போவதாக சிங்கள இன வாதத்தின் பெயரால் குரல் எழுப்பி சிங்கள இனவாதத்தின் கதாநாயகனாய்  சிங்கள மக்களின் மனங்களிலொரு  தேசியக்  கதாநாயகனாய் நிலை நிறுத்தப்படுகிறார் .
ஒடுக்கும் இனவாதம் அதுவும்  ஈழத் தமிழரின் கச்சதீவு மண்ணில் நின்று  தன்னை நுணுக்கமாகக் கட்டமைக்கிறது. ஆனால் ஒடுக் கப்படும் தமிழ் தேசிய இனம்  தமக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரமெல்லாம் தம்மை சிதறு தேங்காய் அடிக்கிறது.
இத்தகைய இழிநிலையிருந்து மீண்டெழு ந்து  தமிழீழத்  தேசியத்தை  இன்றைய புதிய சூழலுக்குப் பொருத்தமாக புதிய வகையில் கட்டி எழுப்பத் தொடங்க வேண்டும். அதற்கு உள்ளும், புறமும் புதிய கட்டமைப்புக்களை முற்றிலும் அறிவார்ந்த வகையில் வடிவமைக்க வேண்டும்.

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம்: வழக்குத்தாக்கல்

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு தீவகத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியது. அச் சமயம், மண்டைதீவில் உயிருடன் பிடிக்கப்பட்ட பொதுமக்களில் பலர் இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணைக் குழுக்களாலும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் அங்குள்ள தேவாலயக் காணியில் உள்ள கிணறு உள்ளிட்ட 3 கிணறுகளில் போடப்பட்டு மூடப்பட்டன என்று கூறப்படுகின்றது.

இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடாத்தி அந்தக் கிணறுகளைச் சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியங்கள் மற்றும் மதகுருமார் சிலரும் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நேற்றைய தினம் (17.09.2025) புதன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, ஊர்காவற்துறை பொலிஸாரினால் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்து. இதனையடுத்து இவ் வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொலிஸார் கால அவகாசம் கோரியமையால் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக  இலங்கை மாறி வருவதாக ஜனாதிபதி கருத்து

இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக  மாறி வருகிறது.  2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், சட்டத்தின் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் ஆண்டாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளை புதன்கிழமை (17)  முற்பகல் ஆரம்பித்து  வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு தசாப்த காலத்தை இழக்கிறது. ஆனால் தற்போதைய அரசாங்கம்  அந்த தசாப்தத்தின் பாதி அல்லது அதற்கும் குறைவான காலத்திற்குள் இந்த நிலைமையை மாற்ற உறுதிபூண்டுள்ளது.  இன்று ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஒரு தனித்துவமான சந்தர்ப்பம். ஒரு நாள் கூட தாமதிக்காமல், உரிய  நேரத்தில் பணிகளை நிறைவு செய்து ஒப்படைக்குமாறு  அனைவரையும் வலியுறுத்துகிறேன்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது.  நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்க அரசாங்கம்  பல கோணங்களில்  செயல்பட்டு வருகிறோம். சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல் மற்றும் அனைவரையும் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல், ஆயுத பயன்பாட்டுடனான குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுதல், அரசியல் அதிகாரத்திற்குள் பரவலாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், அத்துடன்  நவீன அரச சேவையை கட்டியெழுப்ப தேவையான சம்பள உயர்வு மற்றும்   வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை நாங்கள் அறிவோம். இதன் விளைவாக, முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் வீழ்ச்சியடைந்தது.

அத்தகைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, ஒரு நாடு  ஒரு தசாப்த காலத்தை இழக்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தில், ஒருவேளை பாதி காலத்திற்குள் அதை மாற்ற எங்கள் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் 2025  வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இழந்த தசாப்தம் ஒரு நீண்டகால நெருக்கடியை உருவாக்குகிறது. இந்த நெடுஞ்சாலைப் பகுதியை அதற்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தப் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியின் அளவு மற்றும் திசையினை  இது போன்ற திட்டங்களிலிருந்து அடையாளம் காணலாம். கடந்த ஜனவரி மாதம் நான் சீனாவுக்கு விஜயம் செய்தபோது, சீன உதவியின் கீழ் நமது நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு

ஆதரவளிக்குமாறு சீன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் அதில் விசேட  கவனம் செலுத்தி, அந்தத் திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டார். அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இந்த நெடுஞ்சாலைப் பகுதிக்கு ஒரு விசேட சலுகை கடன் திட்டத்தை வழங்குமாறு  நாங்கள் கோரினோம். அதற்கமைய டொலர் அடிப்படையில் விசேட  கடன் திட்டங்கள் எதுவும் இல்லாததால், அந்தக் கடன் திட்டத்தை யுவானில் வழங்க முடியும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சீன எக்ஸிம் வங்கி 2.5 – 3.5 சதவீத வட்டி விகிதத்தில் இந்தக் கடனை எங்களுக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்காக நாங்கள் எங்கள் விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை நாம் கவனமாக  ஆராய வேண்டும். பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவது பற்றி ஆராயும் போது, இந்த நெருக்கடி எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 2022-2023 பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட சமூக அவலம்  தற்செயலாக உருவாக்கப்படவில்லை. அதனுடன் தொடர்புடைய பல முக்கிய காரணிகளும் சிக்கல்களும் உள்ளன.

எங்கள் தலைமுறை அந்த பொருளாதார சரிவை அனுபவித்தது. மக்கள் வரிசையில் நின்று இறப்பதையும், சமூகக் கட்டமைப்பின் சரிவையும் நாங்கள் அனுபவித்திருக்கிறோம். அந்த சமூக அவலத்தின் சொந்தக்காரர்களாகிவிட்டோம். இலங்கையில் மீண்டும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாதவாறு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அதற்காக உட்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டும்  போதுமானதல்ல. கடந்த காலத்தில், உட்கட்டமைப்பு அபிவிருத்தி  மட்டுமே பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உட்கட்டமைப்பு என்பது ஒரு பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நிலைப்படுத்துவதற்கான ஒரு அங்கம்  மட்டுமே. இருப்பினும், அந்த அங்கம் மட்டுமே இருந்தால், அது அங்கவீன நிலைமையாகும். எனவே, நமது நாட்டில்  அங்கவீனமான அபிவிருத்தி மூலோபாயமே இருந்தது.

நிர்மாணத்துறைகளினால் மட்டுமே ஒரு நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை உருவாகாது. அதற்கு, பல பரிமாணங்களில் உள்ள விடயங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எனவே, நமது அரசாங்கம் இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை பல்வேறு பரிமாணங்களில் உருவாக்குகிறது. உட்கட்டமைப்பு அதன் ஒரு பகுதியாகும். இது போன்ற பல முக்கியமான பணிகள் உள்ளன. அதன்போது, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை நாங்கள்

நிலைநிறுத்துகிறோம். ஒரு நிலையான அரசை உருவாக்க, அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டும். அரசியல் கலாசாரத்தின் அழிவு காரணமாக, நமது நாடு ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களுக்கு பலியாகியுள்ளது. அவர்கள் இந்த நாட்டில் ஒரு பாதாள அரசை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தினதும், பொலிஸாரினதும் பாதுகாப்புக் கிடைத்தது.

இருப்பினும், இந்த பாதாள அரசை நாம் நிச்சயமாக முடிவுக்குக் கொண்டு வருவோம். அவ்வாறின்றி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புடன் கூடிய ஒரு அரசை, எதிர்கால பிள்ளைகளுக்கு உருவாக்க முடியாது. தற்போது நாம் கைது செய்துள்ள குழு, நம் நாட்டில் நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தில் சுமார் 50% க்கு பொறுப்பானவர்கள்.

அவர்கள் கிட்டத்தட்ட 75% ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் நம் நாட்டின் அரசியல் அதிகாரத்திற்கு பல்வேறு வழிகளில் பணத்தை வழங்கியுள்ளனர். இந்த ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களை ஒடுக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

மேலும், அரசியல் அதிகாரம் முழுவதும் பரவியுள்ள இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி ஆகியவை அபிவிருத்திக்கு பெரும் தடையாக உள்ளன. இது சமூக உறுதியற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. ஆனால், பொதுமக்களின் பணத்தில் ஒரு ரூபா கூடத் திருடாத, வீணாக்காத ஒரு அரசியல் அதிகாரத்தை இப்போது நாம் உருவாக்கியுள்ளோம்.

சில இடங்களில் இன்னும் பழைய பழக்கவழக்கங்களில் உள்ள அரச பொறிமுறை மற்றும் தனிநபர்களையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு புதிய அரசியல் கலாசாரத்திற்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நாம் கூறுகிறோம். அவர்களால் முடியாவிட்டால், அவர்கள் வெளியேறலாம். அல்லது நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம். பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பொதுச்சொத்தாக மதித்து அதனைப் பாதுகாக்கும் அரச சேவை நமக்குத் தேவை.

அதற்காக, அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட வசதிகளை நாம் வழங்கி வருகிறோம். எமது வரவு செலவுத் திட்டத்தில மிகப் பாரிய பகுதியை அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்காக ஒதுக்குகிறோம். 2026 ஆம் ஆண்டில் மட்டும் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டளவில், இந்த சம்பள உயர்வை செலுத்துவதற்காக மாத்திரம் 330

பில்லியன் ரூபாய்கள் செலவாகின்றது. இவ்வாறு, அரச சேவையை நவீனமயமாக்க நாம் அரப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இன்று, நாம் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நாம் வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் எதிர்பார்க்கப்படும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை விட குறைவான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை இலங்கையில் முதன்முறையாக இந்த வருடம், கண்டுகொள்ள முடியும். இலங்கையில் வருமான இலக்குகள் ஒருபோதும் எட்டப்படவில்லை.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு ஆண்டு முழுவதும் பல்வேறு குறைநிரப்பு பிரேரணகள் மூலம் பணத்தை மீண்டும் மீண்டும் ஒதுக்கும் கலாசாரம் இருந்தது. நாம் அவை அனைத்தையும் மாற்றியுள்ளோம். இவ்வாறு ஒரு திட்டத்துடன் பொருளாதார இலக்குகளை முறையாக செயற்படுத்தி வருகிறோம். அதன்படி, தொடர்ச்சியாக  சுமார் 5% அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைவதில் இரண்டு ஆண்டுகளை நெருங்கி வருகிறோம்.

இன்று, நாம் டொலரின் பெறுமதியை குறிப்பிடத்தக்க அளவில் நிலைப்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் டொலர் கையிருப்புக்களை 7 பில்லியன்கள் வரை அதிகரிக்கும் இலக்கை நோக்கி நாம் செயல்பட்டு வருகிறோம். வங்கி வட்டி விகிதங்களை ஒற்றை இலக்கத்தில் பேண முடிந்துள்ளது. இன்று, வங்கிக் கட்டமைப்பு தனியார் முதலீட்டிற்கு அதிக அளவில் பணத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் முதல் ஆண்டில் ஒரு பில்லியன் டொலர் நேரடி முதலீட்டை ஈர்க்க முடிந்தது. துறைமுக நகரில் 1.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள 04 திட்டங்களுக்கு நாங்கள் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளோம். மேலும் 1.2 பில்லியன் டொலர் மதிப்புள்ள மற்றொரு பாரிய திட்டத்திற்கு 90% வீதம் இணக்கப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன்,  ஜப்பான் விஜயத்தின் போது அந்த திட்டத்தை நிறைவு செய்தல் குறித்த இலக்கை அடைந்துகொள்ளும் நோக்கத்துடன் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இந்த ஆண்டு சுற்றுலாத் துறை, ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு வருமானம் ஆகியவற்றில் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கொண்ட ஆண்டாகவும் இருக்கும்.

இவ்வாறு,  வீழ்ச்சி அடைந்த ஒரு அரசு,  நிலையான அடித்தளத்துடன் கூடிய பொருளாதாரமாக கட்டியெழுப்பப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு இலங்கை வரலாற்றில் பொருளாதாரம், சமூக வாழ்க்கை, அரசியல் கலாசாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய அனைத்தும் மிக முக்கியமான திருப்புமுனையை அடைந்த ஆண்டாக மாறியுள்ளது.

அதன்போது, வீதிக் கட்டமைப்பு  மிகவும் முக்கியமானது. பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் இருந்த ஊழல் காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியின் பணிகள் தடைப்பட்டன. நாம் இவை அனைத்தையும் நிறைவு செய்கிறோம். மேலும், மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

மக்களுக்குத் தேவையான சேவைகளை செயற்திறனுடன் வழங்க வேண்டும். மேலும், மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பயணத்தில் நாங்கள் மிகவும் சீராக முன்னேறி வருகிறோம். வெளியே உள்ள அரசியல் குழப்பங்கள் எங்களுக்கு முக்கியமில்லை.

சீரழிந்த அரசியல் கலாச்சாரத்திற்கு பதிலாக, சீரான அரசியல் கலாசாரத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். முன்னேற்றத்தை நோக்கி நகரும் பாதையில், அரசியல் அதிகாரம் மற்றும் பிரஜை இருவரினதும் முன்னேற்றம் மிகவும் முக்கியமானது. எனவே, உலகில்  முன்னேறிய நாடாகவும்,   உலகில் அபிவிருத்தியடைந்த நாடாகவும், இலங்கையை கட்டியெழுப்பும் சவாலை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு அரசாங்கமாக,  உங்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் வழங்குவேன்.  ஒரு நாள் கூட தாமதிக்காமல் இந்த திட்டத்தை முடித்து தேசத்திற்கு வழங்குவதற்கு உங்கள் அனைவரையும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.