Home Blog Page 10

உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும்: பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

” உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுவருகின்றது. இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் சம உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் சூழல் உருவாக்கப்படும்.” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது நாம் வழங்கிய உறுதிமொழிகளில் ஒன்றாகும். எனவே, அது தொடர்பில் எமக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது.

இந்நாட்டில் நல்லிணக்கமென்பது மிக முக்கியம். தமது உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கின்றது என அனைத்து இன மக்களும் உணரும் நிலை ஏற்பட வேண்டும். இதற்காக நீதித்துறையின் சுயாதீனம் குறித்து நம்பிக்கை ஏற்பட வேண்டும்.” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு விசாரணைகளிலும் அரசியல் ரீதியில் அரசாங்கம் கையடிப்பதில்லை. அதனால்தான் கடந்த காலங்களில் மறைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில்கூட விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு என்ன செய்யலாம், நல்லிணக்க பக்கத்தில் எவ்வாறு தலையீடுகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றி நீதி அமைச்சு கலந்துரையாடல்களை நடத்திவருகின்றது. இவற்றுடன் தொடர்புடைய அலுவலகங்களை வலுப்படுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாம் இனவாதத்தை தூண்டுவதில்லை. இனவாத அரசியலை நிராகரிக்கின்றோம். இனவாத நோக்கில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. அதனால்தான் அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.” – என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நினைவுப் பதாதை காவல்துறையினரால் அகற்றம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நினைவுப் பதாதை  காவல்துறையினரால் அகற்றப்பட்டது. தியாக தீபம் திலீபனினின் நினைவு அனுஷ்டிப்புகள் வடக்கு கிழக்கு எங்கும் பரவலாக  நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருகோணமலையில் கடந்த நான்கு நாட்களாக அஞ்சலி நினைவேந்தல்கள் இடம்பெற்றுவந்த இடத்திலிருந்து நினைவுப் படம் திருக்கோணமலையில் போலீசாரால் 19.09.2025 இன்று காலை அகற்றப்பட்டது..

தமிழ் தேசியப் செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவு உருவப்படம் கொண்ட பதாதை சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு, வந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் திருக்கோணமலை பிரதான   காவல்துறை அதிகாரிகளால் குறித்த நினைவுபடம் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் தமது கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.

நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்!

நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025”  பிரதான மாநாடு வியாழக்கிழமை (18) கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் Disrupt Asia 2025, புதன்கிழமை (17)  ஆரம்பமானதோடு செப்டம்பர் 20 வரை நடைபெறும்.

சர்வதேச கவனத்தை ஈர்ப்பதன் மூலம் தெற்காசியாவில் வளர்ந்து வரும் புத்தாக்க மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதே இந்த மாநாட்டின்  நோக்கமாகும். புதிய தொழில்முனைவு  மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது சிறந்த பக்கபலமாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற பிரதான மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, புதிய தொழில்முனைவோர் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

நிகழ்வில்  உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று  தெரிவித்தார்.“Disrupt Asia 2025”   என்பது நாட்டில் இளைஞர் சமூகத்தை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் சிறந்த பக்கபலம் என்று பிரதி அமைச்சர் கூறினார். இந்தத் திட்டம் நாட்டில் திறமையான தொழில்முனைவோருக்கும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கும் என்றும் தெற்காசியாவில் புத்தாக்கத்திற்கான  நுழைவாயிலாக இலங்கையை நிலைநிறுத்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தியாக தீபம் திலீபனின் 05ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்!

தியாக தீபம் திலீபனின் 05ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்  வெள்ளிக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டன.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது: பிமல் ரத்நாயக்க

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று பார்வையிட்டதன் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ”இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. எனவே இதனை பாதுகாப்பதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என   அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி அழித்தார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள மந்திரிமனை இடிந்து விழுந்து பகுதியளவில் சேதம் அடைந்திருந்தது.

இதனை அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன்  ஆகியோர் பார்வையிட்டனர்.

அவர்களுடன் தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துல ஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் – சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டு

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் ஜெனிவா ஊடக அமையத்தில் நடைபெற்றது. தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தனால் தொகுத்தளிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞரான அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் ஜுலி டுபே கக்னன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஸ்ரீ ஞானேஸ்வரன் (நிகழ்நிலை முறைமையில்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அவர்கள் உள்ளகப்பொறிமுறைகள் மூலமாகவன்றி, சுயாதீன சர்வதேச விசாரணைகளின் ஊடாக மாத்திரமே இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யமுடியும் என்ற விடயத்தைப் பொதுவாக வலியுறுத்தினர்.

அதன்படி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சுட்டிக்காட்டிய ருக்ஷா சிவானந்தன், உள்நாட்டில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையொன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் தப்பிப்பிழைத்தோரின் நம்பிக்கையை வென்றெடுத்ததும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறவைக்கக்கூடியதும், தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கக்கூடியதுமான சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் வழக்குத்தொடரல் பொறிமுறையை விரைவாக ஸ்தாபிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார்.

அதேவேளை நிகழ்நிலை முறைமையில் உரையாற்றிய வடமாகாணத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் சிவில் சமூக அமையத்தின் செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன், 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பு யுத்தம், இனவழிப்பு கலவரம், இனப்படுகொலை, அரச அனுசரணையுடனான கண்காணிப்பு, ஒடுக்குமுறை, அத்துமீறல், கைது, வன்முறை, சித்திரவதை, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள், காணி சுவீகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்ததுடன் அவை இப்போதும் தொடர்வதாக விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியானது நம்பகத்தன்மை வாய்ந்ததும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணைப்பொறிமுறையொன்று உடனடியாக நிறுவப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இதுகுறித்து கருத்துரைத்த சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வேனர், தமிழ்மக்களின் மீண்டெழும் தன்மையைப் பாராட்டியதுடன் நீதிக்கான தொடர் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அத்தோடு இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஐ.நாவின் முயற்சியை அங்கீகரித்த அவர், இருப்பினும் சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் என்றார்.

மேலும் ஆதாரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட முழுமையான வழக்கு கோப்புகளை தயாரிக்கவேண்டிய முக்கிய வகிபாகத்தை தமிழ்ச்சமூகம் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அலைன் வேனர், பல்வேறு தேசிய நீதிமன்றங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் ஊடாக தமிழர்களின் நீதியைக்கோரும் செயன்முறை தொடரவேண்டும் என வலியுறுத்தினார்.

திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்!

திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (18) பிற்பகல் 4.06 மணியளவில் 3.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இருப்பினும், இலங்கைக் கடற்கரைக்கு எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஆகியன தெரிவித்துள்ளன.

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றும் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நாளை (19) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவே இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

இந்நிலையில், பொலிஸார் போராட்டக்காரர்களின் இடத்தை அகற்ற முற்பட்டபோதும் கூட அவர்களால் அதனை அகற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தருமாறு கோரியே இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது.

எந்தவொரு உள்ளக பொறிமுறையையும் நிபந்தனையின்றி நிராகரிப்பதாக புலம்பெயர் அமைப்புகள் தெரிவிப்பு

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வழிகளை அடிக்கோடிட்டு காட்டி தமிழ் புலம்பெயர் அமைப்புகளினால் கூட்டறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுடன் அதன் பிரதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை அரச தரப்பால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான ஆதாரங்களை சேரிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் சுயாதீன சர்வதேச புலனாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஈழத் தமிழர் தாயகத்தின் தனித்துவமான இறையாண்மையையும் சுயநிர்ணய உரிமையையும் தீர்க்கப்படாத காலனித்துவ பிரச்சினையாக அங்கீகரிக்கும் வகையிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது ஐ.நா.வின் வாக்கெடுப்பின் ஊடாக உச்சத்தை அடையும். அத்துடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தமிழ்நாட்டின் மூலோபாய புவிசார் அரசியல் முக்கியத்துவம் மற்றும் இந்த நோக்கங்களை முன்னெடுப்பதில் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் கொள்கை ரீதியான பங்களிப்பு என்பன தொடர்பிலும் குறித்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிக்கை தொடர்பிலும் குறித்த அறிக்கையில் கருத்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை உள்ளக பொறிமுறையை மையமாக கொண்டுள்ளமை தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அதற்கு கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இவ்வாறான உள்ளக பொறிமுறை என்பது குற்றவாளிகளை பாதுகாத்து,பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுவதையும் குறிக்கிறது என்றும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனித்து அல்லது கலப்பின முறையிலான எந்தவொரு உள்நாட்டு செயல்முறையையும் திட்டவட்டமாக நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சவுதி அரேபியாவிற்கு இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியாவை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பிராந்திய அரசியலில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வரும்  சூழலில் பாகிஸ்தான் பிரதமர் முதலில் கத்தாருக்கும், பின்னர் சவுதி அரேபியாவிற்கும் விஜயம் மேற்கொண்டார். இதன் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளையும் இணைத்து நேட்டோ போன்ற ஒரு இராணுவக் கூட்டணியை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின் காரணமாக, இனி பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், சவுதி அரேபியாவும் பதிலடி கொடுக்க நேரிடும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு புதிய இராஜதந்திர மற்றும் இராணுவ சவாலை உருவாக்கியுள்ளதாக கருதப்படுகின்றது.