ஈழத்தமிழினப் படுகொலை வாரத்தில் (மே 12-18) இறைமையின் குரலாக மாறுவதே ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டிய பணி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 334

கனேடிய உயர் நீதிமன்றம் கனடாவின் ஒன்ரோரியா மாகாணப்பாராளுமன்றத்தின் 104ம் இலக்கத் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிரா கரித்து மேன்முறையீடு செய்வதற்கான கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஈழத்தமிழினப்படுகொலைகள் குறித்த வரலாற்றையும் விளைவுகளையும் மே மாதம் 12 ம் நாள் முதல் 18ம் நாள்வரை ஒன்ரோரியா மாகாணப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களில் எடுத்து விளக்குவதற்கான அருமையான வாய்ப்பு கனடிய ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள ஊடக சமுக ஊடக வலிமை கொண்டு உலகிற்கும் இக்காலகட்டத்தில் ஈழத்தமிழரின் அரசியல் எதார்த்தத்தைப் புரிய வைக்க முடியும் என்பது முக்கியமான விடயம். இதனை சரியான முறையில் சரியான சான்றாதாரங்களுடன் உலகுக்கு நிரூபிப்பதற்கு உரிய படைப்பாக்கங்கள், அனுபவமும் அறிவும் உள்ள வளவாளர்கள் உரைகள், சான்றாதாரமாக அமையவல்ல சாட்சிகள் ஏப்ரல் 12 முதல் மே 12க்கு இடைப்பட்ட ஓருமாதகாலத்தில் ஈழத்தமிழர்களால் ஒருங்கிணைந்த கூட்டின் மூலம் இணைக்கப்பட வேண்டியது முக்கிய பணியென்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது. இது ம்பலுக்குரிய காலமல்ல. உணர்ச்சியூட்டலுக்கான காலமுமல்ல. அறிவார்ந்த நிலையில் ஈழத்தமிழர் சமகால வரலாற்றை மாணவர் முதல் பல்கலைக்கழகத்தினர் ஈறாக அனைத்து மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் பணச்சுமையும் நேரப்பளுவும் இடையறாத உழைப்பும் தேவையான காலம். இருப்பதோ ஒரே ஒரு மாதம். இதற்கிடை செய்யப்பட வேண்டிய வேலைகளோ பல. இதற்குத் தேசங்கடந்துறை மக்களாக உலகின் பலநாடுகளிலும் அந்நாடுகளின் குடிகளாக வாழும் அத்தனை ஈழத்தமிழரும் தங்களிடையுள்ள வேறுபாடுகளை விருப்பு வெறுப்புக்களைக் கடந்து தேசங்கடந்துறை ஈழத்தேசியத்தவர்களாகத் தேசமாக எழுந்தேயாக வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார அழைப்பாக உள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழினப் படுகொலைகள் வெளிப்படையாகச் சிறிலங்காவால் நிகழ்த்தப்பட்டும் அதனை சிறிலங்கா தனது இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்குமான பாதுகாப்புச் செயற்பாடுகள் என நியாயப்படுத்துவதை உலக நாடுகள் அமைப்புக்கள் ஏற்பதே அதற்கான அனைத்துலகச் சட்ட நீதியை ஈழத்தமிழர்கள் பெற இயலாதிருப்பதற்கும் முதன்மைக்காரணமாக உள்ளதென்பதையும் இந்த தமிழினப்படுகொலை வாரத்தில் உலகுக்குத் தெளிவாக்க வேண்டும்.
இதற்கு இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றைப் பக்கச் சார்பின்றி இக்காலகட்டத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது. ஈழத்தமிழர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில் ஒருவர். இவர்களுடைய இறைமையுள்ள யாழ்ப்பாண வன்னி அரசின் நிலப்பரப்புக்கள் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களாகப் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் ஈழத்தமிழர்களின் விருப்பின்றி மாற்றப்பட்ட 1833இன் கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தம் காரணமாக இன்று உள்ளன. பிரித்தானிய காலனித்துவத்தின் 1931ம் ஆண்டின் டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்தத் தாயகத்தில் தேசஇனம் என்ற நிலை இழந்து சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். அதே போலவே பிரித்தானிய காலனித்துவத்தின் 1948ம் ஆண்டின் சோல்பரி அரசியல் அமைப்பின் விளைவாகவே ஈழத்தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் தங்கள் இறைமை ஒடுக்கப்பட்ட நிலையில் இன்று வரை வாழ்கின்றனர். ஆகவே இந்த தீர்வு காணப்படாத காலனித்துவ காலப்பிரச்சினைக்கு அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழரின் இறைமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் யாராலும் பிரிக்கப்பட இயலாத தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களின் பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் முன்னெடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் உலக நாடுகள் அமைப்புக்களுக்கான ஒரேயொரு கோரிக்கையாகவுள்ளது என்பது இலக்கின் உலகப் பிரகடனமாகவுள்ளது. மேலும் இவ்வருடம் இக்காலகட்டத்தில் ஏற்படுத்தப்படக் கூடிய உலகளாவிய சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பு குறித்த சான்றாதார விழிப்புணர்ச்சியின் பின்னணியில்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, எதிர்வரும் செப்டெம்பரில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அனைத்து அநீதிகளுக்கான தண்டனை நீதியை அதனைச் செய்தவர்கள் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பரிகாரநீதியைப் பெறவும் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப ஏற்புடைய செயற்பாடுகளைச் சரியான முறையில் சரியான நேரத்தில் செய்விக்க வைக்கலாம் என்பது இலக்கின் ஆணித்தரமான கருத்தாகவுள்ளது.
இந்நேரத்தில் கடந்த வாரத்தில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவது தொடர்பான சிறிலங்காவின் இன்றைய அரசின் நிலை குறித்து சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்காவின் பிரதமர் முனைவர் ஹரிணி அமரசூரிய அளித்துள்ள பதிலை இலக்கு அப்படியே எடுத்துரைக்க விரும்புகிறது. “காணாமல் போனோர் தொடர்பாக அநீதிக்குள்ளானவர்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்தை வழங்க அரசாங்கம் உறுதியுடன் உள்ளது. ஆனால் நாங்கள் நேரில் சென்று இந்த விசாரணைகளைச் செய்ய முடியாது. இந்த விடயம் சட்டரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலத்தில் எற்பட்ட நிறுவன ரீதியான தோல்விகளும், முறைமை ரீதியான தோல்விகளுமே இந்த விடயங்களில் தாமதத்திற்கு முதன்மையான காரணங்களாகவுள்ளன எனவும் நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் பிரபல்யமாவதற்காகவன்றி இது போன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நிறுவனங்கள் மற்றும் சூழலை உருவாக்குவது பற்றியும், ஏற்கனவே உள்ள அநீதிகள் குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நிவாரணம் வழங்கும் அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் என்பன பெயரளவில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அவற்றின் மீது நம்பிக்கையில்லை. போதுமான அளவு பலமில்லாதமையாலும் அவை தோல்வியடைந்தன. எனவே இதுதான் கடந்த காலங்களில் நடந்தது இதைத்தான் நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம். சரியான ஆட்கள் இருப்பதையும, வளங்கள் போதுமான அனவு ஒதுக்கப்படுவதையும் செய்தால் நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளைச் செய்ய முடியும் என்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள் இன்னும் உள்ளன. இவை கடந்த 16 ஆண்டுகளாக இருந்துவரும் வழக்குகள் இவை எளிதானவை அல்ல. எனினும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்காக நீதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் அளித்துள்ளது.” இதுதான் சிறிலங்காப் பிரதமரின் விளக்கம். கேட்க நல்லாகவுள்ளது. ஆனால் ஈழத்தமிழரின் இறைமை ஏற்கப்படாதவரை அவரால் இதில் அவர் சொல்லிய எதனையும் நடைமுறைப்படுத்த இயலாது என்பதே அரசியல் எதார்த்தம். அவர் இதனை உணர்ந்து உண்மையும் நேர்மையுமான அரசியல்வாதியாக மாறினால் இலங்கைத் தீவின் அத்தனை பிரச்சினைகளுக்கும் இலங்கைத் தீவின் நான்கு இன மக்களும் இணைந்து ஏற்புடைய தீர்வுகளைக் காணலாமே தவிர வேறு எந்த நாடுகளும் இலங்கைத் தீவின் மூலவளங்களையும் மக்களின் மனித வலுவையும் உழைப்பின் மூலதனங்களையும் சுரண்டுவார்களே தவிர எந்த மக்களுக்கும் பாதுகாப்பான அமைதியான வளர்ச்சிகள் கொண்ட வாழ்வு அமையாது என்பதை இலக்கு அடித்துக் கூற விரும்புகிறது.

ஆசிரியர்

Tamil News