யாழ்ப்பாண மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இந்தியாவின் ‘த இந்து’ ஆங்கில நாளிதழின் ஊடகவியலாளர் மீரா சிறிநிவாசனுக்கு 04.03.2025இல் அளித்த செவ்வியில், “சிறிலங்கா அரசாங்கம் வடக்கும் கிழக்கும் தங்களுக்கு மக்களாணையைத் தந்துள்ளதாகத் திருப்பித் திருப்பி குறிப்பிட்டு வரும் நிலை மாற்றப்பட வேண்டும்” என்று மிக முக்கியமான அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு கிழக்கில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியமையை மையப்படுத்தி அதனை வடக்கும் கிழக்கும் தங்களுக்கு தந்த மக்களா ணையாக தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்தி சிறிலங்கா அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்காவின் தலைமையில் சிறிலங்கா நாடாளுமன்றம் புதிய அரசியலமைப்பு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உட்பட தாங்கள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட வாக்குப் பலம் கொண்டு நிறைவேற்றும் எல்லாச் சட்டங்களுக்கும் ஈழத்தமிழர்களின் மக்களாணையும் இருந்தது என்று, ஈழத்தமிழரின் உள்ளக தன்னாட்சி உரிமையில் அதனை ஈழத்தமிழர் ஏற்கின்றார்கள் என உலகில் நிறுவி ஈழத்தமிழர்கள் தங்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அனைத்துலக சட்டங்களாலும் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து தன்னாட்சி வாழ்வைப் பெற இயலாத நிலையைத் தோற்றுவிப்பர்.
ஈழத்தமிழர் இன்று யுத்தம் ஏதுமின்றியே சிறிலங்காவால் அடிமைகளாக மாற்றப்படும் அபாயத்தைச் சட்டம் படித்தவர் என்ற முறையில் உணர்ந்த சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஈழத்தமிழரின் மக்களாணை தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என்பதை ஈழத்தமிழரின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் ஈழத்தமிழ்த் தேசியத்துக்கு விழுந்த வாக்குகளால் தெரிவு செய்யப் பட்டுள்ளனர் என்ற சரியான உண்மையைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தி ஈழத்தமிழர்களின் இறைமை அனைத்துலகச் சட்டத் தகுதியை இழக்கும் பேரபாயத்தில் இருந்து காத்துள்ளார் என்பதை இலக்கு தெளிவுபடுத்த விரும்புகிறது. ஆயினும் தமிழரசுக்கட்சியினர் தமிழர் சனநாயகக் கட்சியின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனையும் சேர்த்து தாங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் பதவிகளைப்பெற ஒரு கூட்டணியை உருவாக்க முயலும் செயற்பாடானது இன்றைய ஈழத்தமிழரின் இறைமைக்கு ஆபத்தான கட்டத்தில் சிங்கள அரசுக்குச் சாதகமாகச் செய்யும் செயலாகவே இலக்குக்குப் படுகிறது. இதனாலேயே உள்ளூராட்சித் தேர்தலை ஈழத்தமிழரின் மக்களாணையை ஈழத்தமிழரின் இறைமையைப் பேணுதலுக்கேயென ஈழத்தமிழர்கள் வாக்குகளால் உறுதிப்படுத்தி நிரூபிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விவேகமான தலைமையில் இணையும்படி இவ்வாசிரிய தலையங்கத்தால் இலக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு ஈழத்தமிழர்கள் வாக்களித்தது ஈழத்தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக அல்ல தாங்கள் உட்பட ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவர்கள் மக்களுக்கு அளித்து வந்த தேர்தல் கால வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் காட்டிய அக்கறையின்மைக்கு பாடம் புகட்டவே என்பதைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தனது செவ்வியில் உண்மையும் நேர்மையுமான முறையில் உலகுக்குத் தெளிவுபடுத்தி, இதனை தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க விரும்பும் ஈழத்தமிழரின் அரசியல் கட்சிகள் தமக்கு விழுந்த மரணஅடி என உணர்ந்து இன்று ஒற்றுமையாகச் செயற்படுவதைத் தவிர வேறு வழியெதுவும் இல்லையெனக் கூறியமைக்கு அவருக்கு இலக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறது. அநுரகுமர திசநாயக்கா நாட்டின் முதன்மையான பிரச்சனை இனவெறியென்று இனவெறியைத் தான் இலங்கையில் ஒழிக்கப் போவதாக அடிக்கடி பேசுவதை வரவேற்கின்றோம். ஆனால் பேச்சோடு மட்டும் நின்றால் போதாது இனவெறியை உருவாக்கும் ஒற்றையாட்சி முறைக் கட்டுமானங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சமஸ்டி என்பத பிரிவினை அல்ல. ஒரு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் ஒவ்வொருவரையும் பங்களிக்க வைக்கும் முறைமை. இதனை உணர்ந்து அநுரகுமார திசநாயக்கா செயற்பட்டாலே அவரால் இனவாதத்தை ஒழிக்க முடியும் என்பது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செவ்வியில் கூறியமை இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் உண்மைநிலையைச் சிங்களப் பெரும்பான்மையினர் உணரவைத்த செயற்பாடாக உள்ளதென்பதையும் இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
மேலும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்பாளர் நியமனங்கள் பெறப்படும் இவ்வாரத்தில் 2025ம் ஆண்டுக்கான அனைத்துலகப் பெண்கள் நாள் ஐக்கிய நாடுகள் சபையினால் 08.03.25 இல் “எல்லாப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும்: உரிமைகள் சமத்துவம் சக்தியளித்தல்” என்ற இவ்வாண்டில் செயற்படுவதற்கான மையக்கருவுடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்நேரத்தில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஈழத்தமிழ்ப் பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே முன்னெடுக்கக் கூடிய வகையில் எல்லா மாநகரசபைகள் நகரசபைகள் கிராம சபைகளிலும் உறுப்பினர்களாகத் தெரிவாகக் கூடிய முறையில் இவ்வாரத்தில் கட்டுப்பணம் செலுத்துகின்ற பொழுது செயற்படுமாறும் இலக்கு பணிவாக வேண்டுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஈழத்தமிழ்ப் பெண் உறுப்பினர் கூடத் தெரிவாக முடியாது போன வரலாற்றுத் தவறை இது ஓரளவுக்குத் தவிர்க்கும் என்பதும் இலக்கின் எண்ணமாக உள்ளது. மேலும் உள்ளூராட்சி என்பதே ஒரு நாட்டின் பாதுகாப்பான அமைதியான வாழ்வினதும் வளர்ச்சிகளதும் முதுகெலும்பு என்பதால் இந்நேரத்தில் ஒவ்வொரு வட்டாரத்தின் தேவைகளையும் தெரிந்த மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களை வேட்பாளர்களாக நியமிக்காவிட்டால் நிச்சயமாக தமிழ்த்தேசியப் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
இவ்விடத்தில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கருத்துத் தெரிவித்த அனைத்துலக யூரர்கள் ஆணைக்குழுவின் அனைத்துலகச் சட்ட ஆலோசனைப்பிரிவின் பணிப்பாளர் சான்ரா இபால் கடந்த கால மீறல்கள் குறித்து உள்ளக பொறிமுறை மூலம் இதுவரை பொறுப்புக் கூறல் உறுதிப்படுத்தப்படாது இருப்பது மீறல் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான தன்முனைப்பு இல்லை என்பதையும் அதற்கு உள்ளகப் பொறிமுறை போதுமானது அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார். முன்னாள் சிறிலங்கா அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் அல்ஜசீராச் செவ்வி சிறிலங்கா அரசியல் தலைமைகள் எவருக்கும் மீறல் குற்றங்களை ஆராய்வதற்கான தன்முனைப்பு சிறிதும் இல்லையென்பதை இவ்வாரத்தில் உலகுக்கு மேலும் தெட்டத் தெளிவாக்கியது. இத்தகைய முடிபுகளை மக்கள் மயப்படுத்தி அனைத்துலக மக்களின் பலம் கொண்டு வெளியகப் பொறிமுறையை பொறுப்புக் கூறலுக்குக் கொண்டு வரச் செய்ய வேண்டும் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
இறுதியாக அமெரிக்க அரச அதிபரின் அரசியலால் வேகமாக மாறிவரும் புதிய உலக அரசியல் முறைமையில் ஐரோப்பிய இராணுவத்தின் உருவாக்கத்துக்காக ஐரோப்பிய படைத்தலைமைகள் எல்லாம் பாரிசில் இணைக்கப்பட்டும் தற்பாதுகாப்பு பாதுகாப்புச் செலவுகளுக்கு அதிக நிதிகள் ஒதுக்கப்படும் இன்றைய சூழலில் ஈழத்தமிழர் இறைமையைப் பேணுவதற்கான பலமும் வளமும் பொருந்திய சிவில் சமுகத்தவர்கள் ஊடகத்தறையினர் கல்வியாளர்கள் பேரவையொன்றின் அவசியத்தையும் மீளவும் மீளவும் இலக்கு நினைவுறுத்த விரும்புகிறது.
ஆசிரியர்