சிறிலங்கா நாடாளுமன்ற 2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தின் பொழுது தமிழ்த் தேசிய மக்களின் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அநுர குமர திசநாயக்காவின் அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக 432 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதுவும் சிறிலங்காவின் 22 பாதுகாப்புப் பிரிவுகளில் 16 பிரிவுகள் வடக்கு கிழக்கில் நிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூறு குடிமக்களுக்கு 1.55 விகிதத்தில் பாதுகாப்புப் படையிருக்க வேண்டுமென்ற நியதி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றப்பட்டு இரண்டு குடிமக்களுக்கு ஒரு படையினர் என்ற விகிதத்தில் படையினர் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் தனது உரையில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சிறிலங்காவே போர் முடிந்து விட்டதென்று அறிவித்து 16 ஆண்டுகளுக்குப் பின்னர், சமுகநலன்கள் நாட்டிலே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய காலகட்டத்தில், சமுகநலன்களுக்கான செலவினை 42 பில்லியன் ரூபாக்களில் இருந்து 35 பில்லியன் ரூபாக்களாகக் குறைத்துவிட்டுப் பாதுகாப்புக்கு அதிக பாதீடு செய்த வரவுசெலவுத் திட்டமாக இது இருப்பதேன்? ஈழத்தமிழர்கள் தான் சிறிலங்காவுக்கு எதிரிகள் என்ற செய்தியையா இந்த வரவுசெலவத்திட்டமும் கூறுகிறது. இவை குறித்து நாங்கள் ஆலோசனைக் குழு மற்றும் நாடாளுமன்றத்தில் பேசினாலும் எந்த மாற்றமும் செய்யப்படுவதில்லை. இவ்வாறு இருந்து கொண்டு இனவாதத்தை எப்படி ஒழிப்பீர்கள்? ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் இந்த அரசாங்கத்தின் கொள்கையும் முன்னைய அரசாங்கங்களின் கொள்கையும் ஒன்றே. இந்த பாதுகாப்புக்கான ஒதுக்கீடு ஒன்றே இந்த அரசாங்கத்தின் வரவுசெலவத் திட்டத்தை எதிர்ப்பதற்கு போதுமான காரணமாகிறது.
இவ்வாறு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் இந்தப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதம் என்று கேட்டுக்கொண்டமையை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிறிதரன் அவர்களும் இணைந்து எழுப்பியதன் பேரில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்பொழுது 88 வாக்குகள் ஆதரவாகவும் 10 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு 78 மேலதிக வாக்குகளால் நிதி ஒதுக்கீடு நிறைவேறியது. இங்குதான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் சட்ட அறிவின் பின்னணியில் ஈழத்தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான உறுப்பினர்கள் இணைந்து வாக்களிக்க வேண்டுமென்ற அவரின் அரசியல் உத்தியால் ஈழத்தமிழர்கள் இந்த நிதிஒதுக்கீட்டை முற்றாகப் புறக்கணித்துள்ளமையை உலகம் அறியமுடிகிறது. ஈழத்தமிழர் தாயகப் பகுதி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் இவர்களுடன் இணைந்து வாக்களித்ததால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்த முதல் வெற்றியை ஈழத்தமிழர்களின் அரசியல் மாற்றத்திற்கான முதலடியாக இலக்கு கருதுகிறது.
மேலும் இந்த விவாதத்தின் பொழுது தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரனும் படையினரில் முக்கால் பகுதியினர் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ளனர் என்பதை எடுத்துரைக் கையில் வடக்கில் வலி வடக்கு பிரதேச செயலாளர் பகுதியில் 13 கிராம அலுவலர் பகுதியில் 2700 ஏக்கர் காணி படையினர் வசமுள்ளதென்றும் கிளிநொச்சியில் 39 வீத நிலம் படையினரிடமென்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துள் 2 ஏக்கர் காணியை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதெனவும் புள்ளிவிபரங்களுடன் உரையாற்றினார். அத்துடன் எள்ளங்குளம் மாவீரர் துயிலகத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அங்கு ஒரு உணவகமொன்றை நடாத்துகின்றார்கள் என்றும் அங்கு இளையவர்களுக்குப் போதைப் பொருட்களை வழங்குகின்றாரகள் எனவும் சில இளைஞர்கள் உள்ளாடையுடன் நிற்பதைத்தானே கண்டதாகவும் அவர்கள் தவறான வழிகளுக்குப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றும் ஒரு இனம் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகிறதெனவும் எடுத்துரைத்தார். மக்கள் திறந்த வெளிச் சிறைகளில் வாழும் நிலையிலும் அதனை எதிர்த்து சனநாயக வழிகளில் போராடினால் விசாரணைக்கு அழைக்கப்படும் நிலையும் தொடர்கிறதெனவும் ஈழத்தமிழரின் தாயக உண்மைநிலைகளை வெளிப்படுத்தினார். இவற்றைப் பாராட்டுகிற இலக்கு, ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலையும் ஈழத்தமிழர்களின் மண்ணின் மக்களின் வாழ்வியல் தேவைகளை முதன்மைப்படுத்தி கட்சி பேதங்களை மறந்து பழையவற்றைப் பேசாது புதிய அணுகுமுறையில் மக்களுக்குச் சத்தியூட்டும் உள்ளூர் ஆட்சியை மக்களுடையதாகவே மாற்ற உழைத்திட வேண்டும் என்பதை இந்த மாதத்திற்கான இலக்கின் கருத்தாக முன்வைக்க விரும்புகின்றது. இந்த ஈழத்தமிழரின் ஒருங்கிணைப்பை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளராகச் சட்டத்தரணி சுமந்திரன் வந்ததின் பின்னர் தமிரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தமிழ்த் தேசிய மக்கள் முன்ன ணிக்கு எழுதிய கடிதத்தில் இந்த ஒருங்கிணைப்பு புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டுமென கால இழுத்தடிப்பு செய்ய வைத்துள்ளார். அவ்வாறே வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்த செல்வம் அடைக்கலநாதனும் தன்னோடு சேர்ந்து குழு அமைக்க ஈழத்தமிழர்களின் நாடாளமன்ற உறுப்பினர்களை அழைத்துள்ளார். இந்நேரத்தில் ஈழத்தமிழரின் அனைத்து சிவில் சமுக அமைப்புக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் துணைநிற்க வேண்டுமென்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
ஈழத்தமிழர்களின் உள்ளூராட்சி என்பது அரசியலல்ல வாழ்வியல். எனவே மக்களின் தேவைகளைக் கண்டறிவதிலும் மக்கள் மயப்படுத்துவதிலும் ஊடகங்களுக்கும் இந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பெரும் பொறுப்பு உண்டு. கடந்த வாரம் பெப்ரவரி 26ம் நாள் ஈழத்தமிழர் ஊடகத்துறையில் செய்தி மன்னர் என்று சிறப்புச் சொல்லடை பெற்று வீரகேசரியில் 35 ஆண்டுகள் பணியாற்றி வீரகேசரி செல்லத்துரை எனவே யாழ்ப்பாண மக்களின் நாளாந்த வாழ்வில் அழைக்கப்பட்ட மதிப்புக்குரிய சின்னத்தம்பி செல்லத்துரை அவர்களின் பிறந்தநாளின் 110வது ஆண்டு இடம்பெற்றது. இவர் நான் செய்தி ஆசிரியராக யாழ்ப்பாணத்தில் பணி செய்த காலத்தில் இவரை இவருடைய ஸ்ரேசன் வீதியில் உள்ள வீரகேசரி அலுவலகத்தில் சந்தித்துப் பேசுகின்ற நேரத்தில் மாநகரசபை நகரசபை கிராமசபை தேர்தல்களில் அந்த அந்த வட்டாரத்தை வளர்த்தெடுக்க வல்லவர்கள் போட்டியிடுவதை ஊக்குவியுங்கள். இதனையே நானும் எனது ஊடகப்பணியில் தலைமை நோக்காகச் செய்து வருகிறேன். ஏனெனில் மக்களின் வாழ்வுக்கான தளம் உள்ளூராட்சியென்று கூறியதை அவரது பிறப்பின் நூற்றாண்டு வாரமாகிய இவ்வாரத்தில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இறுதியாக உலகளாவிய நிலையில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை மார்ச் மாதம் 6 நாள் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அவரின் சிறிலங்காவில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள். தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றார்கள். அதிலும் பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கையில் தாக்கப்பட்டும் சமுகவிலக்குக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர் என்ற கருத்தை அனைத்து உலகிலும் வாழும் ஈழத்தமிழர்கள் உலக மயப்படுத்த வேண்டும் என்பதையும் இலக்கு வலியுறுத்த விரும்புகிறது.
- ஈழத்தமிழரின் இன்றைய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 327
- Ilakku Weekly ePaper 328 | இலக்கு-இதழ்-328-மார்ச் 01, 2024