ஈழத்தமிழரின் இன்றைய முக்கிய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் என்பதாக உள்ளது. இது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளமைக்குக் காரணம் 2015இல் அக்காலத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சட்டத்தரணி சம்பந்தனும் அக்கட்சியின் அக்கால நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் இணைந்து நெறிப்படுத்திய “ஏக்கிய இராஜ்ஜிய” அரசியலமைப்பு என்னும் ஒற்றையாட்சியில் கூட தன்னாட்சியைச் செயற்படுத்த முடியாதவர்களாக ஈழத்தமிழர்களை சிங்கள நாட்டில் வாழும் சமுகமொன்றாக மாற்றும் அரசியலமைப்பு வரைபு. இது இன்று எந்நேரத்திலும் இன்றைய சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு தேசிய மக்கள் முன்னணியின் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர் பலத்தால் சட்டமாக்கப்பட்டுவிடலாம் என்னும் அச்சமேயாகும். இதனை உணர்ந்தே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் தமிழரசுக்கட்சியினரைச் சந்தித்து அவர்களின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனையும் சந்தித்து அவரையும் இணைத்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களில் 18 பேரில் 10 பேரை புதிய ஏக்கிய இராஜ்ஜிய அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்க வைக்க அரும்பாடுபட்டு வருகின்றனர். ஊடகங்கள் தங்களுடன் நிற்பது தமக்குப் பலமாக உள்ளதென செல்வராசா கஜேந்திரன் அவரது பேட்டியொன்றில் கூறியமையை ஊடகங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய நேரமிது. இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பதவிக்குச் சட்டத்தரணி எம் ஏ. சுமந்திரன் தெரிவு செய்யப்பட்ட நிலையில் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் “புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி உரிய நேரம் வரும்போது பேசுவோம்” எனப் பதிலளித்து, அரசியலமைப்பு உருவாக்கத்தைத் தகுந்த முறையில் எதிர்கொள்வதை மையப்பொருளாகக் கொண்டு ஈழத்தமிழ் அரசியல்வாதிகளைப் பொதுவேலைத்திட்டம் ஒன்றில் இணைக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடங்கிய முயற்சிக்கு திடீர் பிரேக் போட முயற்சிப்பது தெரிகிறது. இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இந்தத் தடைமுயற்சிகளைத் தாண்டி வேகமாகச் செயற்படுவதற்கான அனைத்துலக ஈழத்தமிழரின் ஆதரவுப் பலம் உடனடியாகக் கட்டியெழுப்பப்படல் அவசியம் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
அவ்வாறே தையிட்டி திஸ்ஸ விகாரை அமைப்பு என்பது குறித்து சமுகநீதிச் செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் அவர்கள் “இது சமயம் சார்ந்த விடயமல்ல. தமிழர்களை அரசியலில் வீழ்த்தியதின் அடையாளமாக இராணுவத்தினரால் கட்டப்பட்டது. அந்த வகையில் தனியார் காணியொன்றில் பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி இதனை அமைத்ததின் நோக்கமும் இதற்கான பணம் எவ்வாறு கிடைக்கப்பபெற்றதென்ற கேள்வி இவையெல்லாம் இந்தக் காணித்துண்டில் இராணுவத்தினர் ஈழத்தமிழர்களுக்குச் சமூகப்புதைகுழிகளை அமைத்திருந்து அதனை மறைக்க இத்தகைய செயல் நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளமை இவ்விடயத்தில் முக்கியமான திருப்பமாகிறது. இவ்விடத்தில் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகம்”தையிட்டி திஸ்ஸ விகாரை இனமுரண்பாட்டின் அடையாளமாக உள்ளதெனக் கண்டிக்கிறது. விகாரை முற்றாக அகற்றப்பட வேண்டும் என அதன் பணியக இயக்குனர் அருட்தந்தை சூ.யே. ஜீவரெட்ணம் அவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தையிட்டியில் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கில் போராட்டங்களில் கலந்து கொண்ட வேலன் சுவாமி, செல்வராசா கஜேந்திரன் மற்றும் வாசுகி சுதாகரன் ஆகி யோரை பொலிசார் அழைத்து விசாரணைக்குள்ளாக்கி வாக்குமூலங்கள் பெற்றமையும் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விகாரையை இடிக்க கடற்பாரைகளுடன் வருமாறு துண்டுபிரசுரங்கள் வழங்கியதாகப் போலியான துண்டு பிரசுரங்களைத் தயாரித்து அவர்மேல் வழக்கு பதிய முயற்சிப்பதும், இன்றைய அரசாங்கத்திலும் மக்கள் போராட்டங்கள் எவ்வாறு படைபல அச்சுறுத்தலுக்கு உள்ளாக் கப்படுகின்றன சட்டத்தின் ஆட்சியின் நிலை எவ்வாறு உள்ளதென்பதற்கு உதாரணங்களாகின்றன. இவற்றை எல்லாம் உடனுக்கு உடன் அனைத்து உலகிலும் உள்ள ஈழத்தமிழர்களும் தங்கள் நாடுகளின் மக்களுக்கும் பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் தெரியப்படுத்தி இது தொடர்பான அனைத்துலகக் கவனத்தை வேகமாகவும் விரைவாகவும் ஏற்படுத்த வேண்டுமென்பது இலக்கின் வேண்டுகோளாக உள்ளது.
இந்நேரத்தில் மன்னாரில் கனிம வள அகழ்வு ஆராய்வில் ஈடுபட வந்த 23 அரச திணைக்களங்களைச் சார்ந்த அலுவலர்களை மக்களின் கடும் எதிர்ப்புப் போராட்டம் பொலிசாரின் நீதிமன்ற தடையுத்தரவுகளையும் மீறி நடைபெற்றதால் அலுவலர்களை அரசாங்கம் திருப்பி அழைத்தது. இது குறித்து வன்னி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தாங்கள் இதனை சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்கா மன்னார் அபிவிருத்தி குழுத்தலைவர் பதில் அமைச்சர் உபாலி சமரசிங்கா ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று மன்னார் மக்களின் நலன்களுக்கு எதிரானவகையில் எதனையும் நடைபெறவிடாது தடுத்ததாகக் கூறியுள்ளார். இவ்வாறு மக்கள் நலன் கருதி தையிட்டி திஸ்ஸவிகாரைப் பிரச்சினையையும் தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப்பாராளமன்ற உறுப்பினர்கள் தங்களின் அரசத்தலைமைகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று அதனை அகற்றுவிக்க வேண்டுமென்று இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
அவ்வாறே ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக சமுகநீதிக்கான நாளை 20.02.25இலே கொண்டாடிக் கொண்டிருக்கையில் இதே நாளில் 2017ம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு நீதி கோரி தமிழ்ப்பெண்கள் போராடத்தொடங்கி 300க்கு மேற்பட்டவர்களை இந்தத் தொடர்போராட்டத்தில் இழந்தும் தளராமுயற்சியுடன் தங்கள் போராட்டத்தின் எட்டாவது ஆண்டில் கிளிநொச்சியில் கைகளில் தீச்சட்டியேந்தி பெரும்போராட்டம் நடத்தினர். இவர்களின் கோரிக்கைக்குச் சிறிலங்கா அரசாங்கம் மட்டுமல்ல அனைத்துலக அமைப்பான ஐக்கியநாடுகள் சபையும் கூட இதுவரை அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் எந்த நீதியும் வழங்காத செயலுக்கு இலக்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிட விரும்புகிறது. இந்நேரத்தில் பிரித்தானியாவின் ‘த கார்டியன்’ ஆங்கில நாளிதழில் பிரான்சின் வெளிநாட்டமைச்சர் ஜீன் நோயல் பரெட் “உலகின் பிரச்சினை வடக்கு தெற்கு மோதல் அல்ல-யார் அனைத்துலக சட்டங்களை ஆதரிக்கின்றார்கள்-ஆதரிக்கவில்லை என்பதுவே” என தலையங்கம் இட்டு 21.02.25இல் எழுதியுள்ள உண்மைகளை அனுரகுமர திசநாயக்கா அரசாங்கம் கவனத்தில் எடுத்து ஈழத் தமிழர்களின் இருப்பை அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பை உருவாக்கி இலங்கைத் தீவின் பொருளாதாரப் பிரச்சினைகளையும் இதன் பின்னணியில் பிறநாடுகளின் ஆதிக்கத்துள் இலங்கைத்தீவின் மக்கள் தங்கள் இறைமையை இழக்கும் இன்றைய நிலையையும் மாற்ற வேண்டும் என்பது இலக்கின் கருத்து. புதிய அரசியலமைப்பில் என்கிலும் ஈழத்தமிழரின் இறைமையும் எல்லைகளும் ஏற்கப்பட ஒருமைப்பாட்டுடன் உழைத்தலும், ஏப்ரலில் வர உள்ள உள்ளூராட்சி தேர்தலில் “இந்த மண் எங்களின் சொந்த மண்- இந்த மண்ணின் ஆட்சி எங்கள் ஆட்சியே” என்பதை ஈழத்தமிழர்கள் ஒருமைப்பாட்டுடன் வெளிப்படுத்த உழைப்பதும், எதிர் வரும் வாரங்களில் அனைத்து ஈழத்தமிழரின் தாயகக் கடனென இலக்கு கருதுகிறது.
ஆசிரியர்