சிறிலங்காவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைமையை மாற்றியமைத்தல் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை முன்னெடுப்பதற்கான முயற்சியில் ஆரவாரமின்றி பொருள் செலவின்றி வேகமாக முன்னேற வேண்டிய தேவை உள்ளது. ஆயினும் “நாட்டின் இப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை உறுதிப்படுத்துவதே முதன்மை விடயமாகவுள்ளது. புதிய அரசியலமைப்பை அவசரமாகக் கொண்டுவர வேண்டிய தேவை தற்போது கிடையாது”என சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளராக விளங்கும் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாரத்தில் கூட அறிவித்துள்ளார். இதற்குக் காரணம் வெளிப்படையாக அல்லாமல் இரகசியமாக அரசியலமைப்பை உருவாக்கி விட்டு தங்களுக்குப் பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு நினைத்த நேரத்தில் நிறைவேற்றுதல் என்கின்ற உத்தியே. இதற்கு உதவக் கூடிய ‘ரெடிமேட்டான’ அரசியல் அமைப்பாக 2015இல் சிறிசேன – ரணில் அரசாங்கம் நடைமுறையில் இருந்த பொழுது தமிழரசுக்கட்சியின் ஆதரவுடன் உத்தேச அரசியலமைப்பாக உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய இராஜ்ஜிய’ அரசியலமைப்பு தேசிய மக்கள் சக்தியினரிடம் உள்ளது. இதில் தமக்குத் தேவையான மாற்றங்களுடன் அதனை எந்நேரத்திலும் திடீரென புதிய அரசியலமைப்பாக மாற்றம் செய்யக் கூடிய சாத்தியம் உள்ளது. இதனால் இன்று சிறிலங்கா அரசாங்கத்துக்கான ஏக்கிய இராஜ்ஜிய அரசியலமைப்பின் தேவை என்னவென்பதையும் அது ஈழத்தமிழர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி காண்டீபன் சட்ட மொழிகொண்டே அழகாக கடந்த வாரத்தில் ஊடகங்களுக்கு மீளவும் விளக்கிய அடிப்படையில் இவ்வாசிரிய தலையங்கம் அமைகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் ஒற்றையாட்சி முறைமையில் வடஅயர்லாந்து ஸ்கொட்லாந்து வேல்ஸ் பாராளுமன்றங்கள் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தின் இறைமையுள் அதிகாரப் பரவலாக்கல் பெற்ற சமகால வரலாறானது சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு இத்தகைய அதிகாரப்பரவலாக்கல் இலங்கையிலும் நடைமுறைச்சாத்தியமாகிவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியதாலேயே “ஒற்றையாட்சி என்ற சொல்லையும் விலத்தி என்றுமே பிரியவோ பகுதியாக மாறவோ அல்லது மாகாணங்கள் ஒன்றிணையவோ முடியாத ஏகத் தன்மையுள்ள அரசு என்று சிங்களத்தில் பொருள்படும் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற சொல்லை உருவாக்கி, ஆங்கிலத்திலும் ‘யுனிட்டரி’ என எழுதாது ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்றே ஆங்கில எழுத்துக்களில் எழுதி, தமிழில் தவறான மொழிபெயர்ப்பாக ‘ஒருமித்த அரசு’ என்று அமைத்த உத்தேச அரசியலமைப்பைச் சிங்கள பௌத்த பேரினவாதம் 2015இல் வடிவமைத்துக் கொண்டது. அதாவது இன்றுள்ள சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறைமையில் இனத்துவச் சிறுபான்மையோரின் உள்ளக தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்டால் அவர்கள் தங்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்க முடியும் என்கிற தன்னாட்சித்தன்மை மறைவாக உள்ளதால் அதனை ஈழத்தமிழர்கள் எக்காலத்திலாவது பயன்படுத்த இயலாதவாறு ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமையை இல்லாதொழிக்கும் வகையில், இவ் அரசியலமைப்பு வடிவம் பெற்றுள்ளது. இந்த அரசியலமைப்பு மாதிரி மக்களின் கருத்தறிதலுக்கு வைக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் உள்ளதால் இனி பணத்தையோ உழைப்பையோ காலத்தையோ வீணடியாது திடீரென எந்நேரத்திலும் தேசிய மக்கள் சத்தி அரசாங்கத்தால் சட்டமாக்கப்படவல்லதாக இது உள்ளது. இதுவே இன்று ‘அவசரகால நிலை’ யில் இதனை ஈழத்தமிழ் மக்களுக்கு விளக்கி நன்கு திட்டமிட்ட முறையில் எதிர்வினை செய்ய அழைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழ் இனத்தைக் காத்து இறைமையைப் பேணுவதற்காக ஈழத்தமிழர்கள் அனைவரும் தாயகத்திலும் அனைத்து உலகிலும் தமக்குள் உள்ள கட்சி வேறுபாடுகளைக் கடந்து தேசமாக எழுவதற்கான செயற்திட்டம் ஒன்றைத் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணியினர் முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் இன்று சிறிலங்காப் பாராளுமன்றத்தில் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து தெரிவாகிய 8 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக இருப்பதால் மிகுதியாகவுள்ள தமிழ்த் தேசியத்தில் கொள்கைப் பற்றுள்ள 8 தமிழரசுக்கட்சி உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ்த்தேசிய சனநாயக முன்னணியின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதனும் இணைந்து 10 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஏக்கிய இராஜ்ஜிய அரசியலமைப்பை எதிர்த்தால் தான் 1948 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் சிங்கள பௌத்த நவகாலனித்துவத்துள் 77 ஆண்டுகளாக உள்ளநிலையில் தங்களின் தன்னாட்சி உரிமைக்காப் போராடுகின்றனர். இது பிரிவினையல்ல பயங்கரவாதமல்ல என்ற உண்மைகளும் உறுதியாகும். ஈழத்தமிழரின் தேசஇனத்தன்மை பேணப்பட்டு அவர்களின் உள்ளக வெளியக தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில் அனைத்துலக சட்டங்களால் ஏற்புடைய அரசியல் தீர்வைப் பெற வேண்டிய இன்றைய நிலை தொடர இவை அவசியம்.
இதுவே யாழ்ப்பாணப் பாராளமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ்த் தேசிய பாராளுமன்றப் பிரதிநிதிகளிடை இன்று ஒற்றுமையை முன்னெடுக்க முழுஅளவில் முயற்சிப்பதற்கான மூலகாரணமாக உள்ளது. இது சமகாலத்துக்கான பொதுவேலைத்திட்டமாகி அனைத்து தமிழர்களும் தங்கள் தங்கள் தனித்துவத்துடன் இதில் இணைவதற்கான புதிய தளத்தையும் உருவாக்கியுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளாக நெல்லிக்காய் மூட்டை போல் சிதறியிருந்த ஈழத்தமிழர்களை ஈழத்தமிழினத்தைத் காத்து அதன் இறைமையைப் பேணுவதற்கான பொதுத்தன்மை கொண்ட ஒரு தேசமாக எழவைக்கும் புதிய சக்தியளிப்பாக மாறுகிறது. இதுவரை ஈழத்தமிழர் அனைவரும் இணையக் கூடிய ஒரு பொதுவேலைத்திட்டம் வேண்டுமென்று உரக்கக் குரல் கொடுத்த ‘இலக்கு’ உட்பட்ட அனைத்து தமிழ் ஊடகங்கள் சமுகவலைத்தளங்கள் அனைத்தினதும் ஈழத்தமிழ் மக்களின் குரலுக்கான நிகழ்நிலைச் செயற்திட்டமாகவும் இது உள்ளதென இலக்கு கருதுகிறது.
இதனை யார் வேண்டுமானாலும் தேர்தல்களை உங்கள் விருப்பப்படி கட்சியாகவோ தனியாகவோ சந்தியுங்கள் ஆனால் இந்த அவசர நிலையில் ‘ஏக்கிய இராஜ்ஜிய’ அரசியலமைப்பை எதிர்த்து உரிய திருத்தங்களைக் கோர ஒன்று பட்டு ஒருதேசமாக எழுங்கள், என்ற காண்டீபனின் அழைப்பு உறுதியாக்குகிறது. இதனை ‘இலக்கு’ வலியுறுத்தி ஆசிரிய தலையங்கம் எழுதுவதற்குக் காரணம் இந்த ஏக்கிய இராஜ்ஜிய புதிய அரசியலமைப்பு ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை தனித்துவ இறைமை தேசியத்தன்மை மூன்றையுமே அது திடீரெனக் கொண்டுவரப்பட்டவுடனேயே ஒன்றாக அழிக்கும் சிறிலங்காவின் அரசியல் அணுக்குண்டு. எனவே இதனை நடைமுறைக்கு வராது தடுக்க அல்லது உரிய திருத்தத்தை ஏற்படுத்தி வரச்செய்ய தாயகத்திலும் அனைத்து உலகிலும் ஈழத்தமிழர் தேசமாக இணைந்தேயாக வேண்டும். அத்துடன் மாறிவரும் புதிய பூகோள அரசியலில் இந்த இணைப்புப் பலம் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உலகம் ஏற்று உறுதிப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்குதவற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உண்டென்ற காண்டீபனின் கூற்றையும் இலக்கு மீள்நினைவுறுத்த விரும்புகிறது. அனைத்துலக சகோதரத்துவ நாள் பெப்ரவரி 4இல் இடம்பெற்ற நிலையில் ஈழத்தமிழர் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இந்த ஆசிரிய தலையங்கம் எழுதப்படுவதும் பெப்ரவரி 13இல் அனைத்துலக வானொலி நாள் வருகையில் இதனை எழுதுவதும் சகோதரர்களாக வானலை வழி இதனை முன்னெடுக்க வைக்கும் அழைப்பாகவும் உள்ளது.
Ilakku Weekly ePaper 325 | இலக்கு-இதழ்-325-பெப்ரவரி 08, 2025