“இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள தமிழ் முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீதுதான் புதிய மறுமலர்ச்சியுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள். நாங்கள் அதற்காக கைகோர்த்துக் கொள்வோம்” என்னும் அறைகூவல் சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவால் அவரது முதல் உரையில் விடுக்கப்பட்டுள்ளது. கேட்கும் பொழுதும் வாசிக்கும் பொழுதும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் சிங்கள தமிழ் முஸ்லிம்களாகிய எம்மனைவரும் என்னும் உங்கள் விழிப்பு மொழி உண்மையாவதற்கு ஜனாதிபதியவர்களே உங்களின் அரசில் ஈழத்தமிழர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை இலங்கையில் தொன்மையும் தொடர்ச்சியுமாக உள்ள இறைமையை நீங்கள் மதித்து ஏற்க வேண்டும்.
வர்த்தகத்திற்காகக் குடிவரவாகி இன்று இலங்கையின் குடிகளாக உள்ள முஸ்லீம்களினதும், பெருந்தோட்டப் பணப்பயிர்ச் செய்கைக்காகவும் இலங்கையின் நிதி முகாமைத்துவத்துக்காகவும் குடிவரவு பெற்று இன்று இலங்கையின் குடிகளாக உள்ள மலையகத் தமிழர்களதும் அரசியல் உரிமைகளை நீங்கள் உத்தரவாதம் செய்ய வேண்டும்.
இவ்விடத்தில் இறைமை என்றால் பிரிந்து போவது தனித்துப் போவது என்று அர்த்தமல்ல. இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற மண் மீதான பற்றை உறுதி செய்வதே இறைமை. தன்னாட்சி என்றால் அடுத்தவர்கள் ஆட்சியை அடிமைப்படுத்துவது என்பதல்ல அர்த்தம். தன்னுடைய வாழ்வின் அரசியல் எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்கும் பிரிக்கப்பட முடியாத மக்கள் உரிமைதான் தன்னாட்சி உரிமை. என்னுடைய மண் என்னுடையவர்கள் என்ற இந்த உணர்வுதான் ஒருநாட்டின் மக்களை நாமனைவரும் ஒன்று என்று ஒன்று சேர்ந்து மக்கள் வலிமையாகி மண்ணின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலையை உறுதிப்படுத்தும். இது பிரித்தானிய காலனித்துவத்தால் 1910ம் ஆண்டின் ஆங்கிலம் படித்த சொத்துடைமையுள்ள ஆண்களின் வாக்குகளால் தெரிவாகும் படித்த இலங்கையர் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் முறைமையில் தொடக்கம் பெற்ற படித்தோர் குழாத்து சனநாயகத்தின் 114 ஆண்டுகால சாதாரண மக்களின் சனநாயகப் பங்களிப்பை மறுத்து பாராளமன்றக் கொடுங்கோன்மை இலங்கைத் தீவின் ஆட்சியாக வைத்த செயல். உங்களின் 21.09. 2024 வெற்றி மூலம் இந்த படித்தோர் குழாத்து சனநாயகத்துக்கு மட்டுமல்ல ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைமைக்கும் சாவுமணியடிப்பீர்கள் என இலக்கு எண்ணுகிறது.
அவ்வாறே நீங்கள் “சந்தர்ப்பவாதம் அதிகாரமோகம் சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமதுநாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாதுள்ளது. இருப்பினும் எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கின்றது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் செழிப்பான நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனப் பேசுகையில் எழுதுகையில் சிங்கள பௌத்த பேரினவாதம் ஒன்றின் தோற்றம் தானே அதுவும் வெளிநாட்டவர்கள் நம் மண்ணில் ஏற்படுத்திய இந்தச் சிந்தனைதானே எல்லா வளங்களுடனும் உள்ள எங்கள் நாட்டையே இன்று உலக வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் சுரண்டுவதற்கும் எங்கள் மக்களின் மனிதவலுவை குறைந்த விலையில் பெற்று உழைக்கும் மனிதர்களை ஒடுக்கவும் செய்கின்றது. பழைமை பேசி புண்களை ஆறாத வடுவாக்காது, வடக்கு கிழக்கு என்று தமிழர் தாயகத்தைப் பிரிக்காது, சமுகத்தவர் என்று தேசமக்கள் என்பதைத் திரிபுவாதம் செய்யாது, ஈழத்தமிழரின் இறைமையையும் இலங்கை முஸ்லீம்கள் மலையகத் தமிழர்களின் அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்துங்கள் அதுவே உலகநாடுகள் அளிக்கின்ற நிதி உதவிகளை விட அதிக நிதிப்பலத்தை எங்கள் மண்ணில் இருந்தே பெற்றுத் தரும். பிறரிடம் இருந்து பெறும் ஆயுதங்களின் பலத்தை விட எங்கள் மக்களின் கைமுஸ்டிகளின் பலம் பல்லாயிரம் மடங்கு பலம் தரும். மாசேதுங்கின் வார்த்தைகளான ஒருவாய் பிறக்கையில் இரு கைகள் அதற்கு உழைத்து உணவளிக்க உண்டு என்பதை மறவாதீர்கள். அணுக்குண்டும் மனிதவலுவுக்கு முன்னால் செயலிழக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
தயவு செய்து ஒரு மனிதன் தான் பிறந்த மண் தனக்குச் சொந்தம் என்பதை நிலைநிறுத்தப் போராடுவதைப் பிரிவினை என்றும் அதற்கான அவனுடைய போராட்ட முயற்சியைப் பயங்கரவாதம் என்றும் கூறுவதை நிறுத்துங்கள். உங்களுக்குச் சிலது தெரியும். சிலது தெரியாது. தெரிந்ததை மேம்படுத்தவும் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும் முயற்சித்து நாட்டுக்குச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துச் செயற்படுத்துவேன் என்று கூறினீர்கள்.
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வரலாற்றுத் தாயகம் உண்டு என்பது தெரிந்த விடயமாக அமைய வேண்டும். இலங்கைத் தீவின் தேச மக்களாகிய சிங்களவர்களும் தமிழர்களும் எம்மோடு குடிகளாக உள்ள முஸ்லீம்கள் மலையகத் தமிழர்கள் உடைய அனைத்து அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்தி நாமெல்லாம் இணைந்து இலங்கைத் தீவை பாதுகாப்பான அமைதியான நாடாகவும் எல்லா வளர்ச்சிகளையும் கொண்ட மகிழ்ச்சி வாழ்வுக்கான தளமாகவும் மாற்றும் வண்ணம் அரசியல் அமைப்பை நீங்கள் திருத்த வேண்டும். ஒற்றையாட்சியா சமஸ்டியாட்சியா ஒன்றிய ஆட்சியா என்பதல்ல முக்கியம் – மக்கள் ஒருவரையொருவர் புரிந்துணர்வுடன் சமமாகவும் சகோதரத்துவமாகவம் ஏற்று சுதந்திரமாக எத்தகைய ஆட்சி முறையனைவருக்கும் ஏற்புடையது என்பதைப் பேசிக்கண்டறிய வேண்டும் என்பதே முக்கியம்.
சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கள் தான் இலங்கை முழுவதும் இறைமையும் ஒருமைப்பாடும் உடையவர்களாக இருந்த ஈழத்தமிழர்களை 1956 முதல் இன்று வரையான இனஅழிப்பு அரசியலால் வடக்கு கிழக்குதான் உனது தாயகம் அங்கு போய் வாழ் என விரட்டி அடிக்கிறது. இதுவே வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்கின்ற எல்லைப்பட்ட ஈழத்தமிழர் தாயகம் உருவாக வைத்தது. அந்தத் தாயகத்தில் தங்களுக்கு உள்ள இறைமையை மீளுறுதி செய்வதே ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையாகியது.
ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பொழுது நீங்கள் அமைச்சராகவும் பாராளுமன்றப் பிரதிநிதி யாகவும் இருந்த பொழுது எந்த ரோகணவிஜயவீராவை யாழ்ப்பாணச் சிறையில் இருந்து ஈழத்தமிழர்கள் தங்கள் உயிரை யும் பொருட்படுத்தாது மீட்டு அனுப்பி வைத்து ஜே. வி. பி என்ற சிங்களப் பாட்டாளி மக்களின் பேரியக்கமாக வளர உதவினார்களோ அந்தத் தமிழர் இனஅழிப்புக்கும் இனத்துடைப்புக்கும் பண்பாட்டு இனஅழிப்புக்கும் உள்ளாகி 2009 இல் அதன் உச்சமாக 176000 ஈழத்தமிழர்கள் தேசமாகவே இனப்படுகொலைக்கு உள்ளான பொழுது உங்கள் மார்க்சிய லெனிச சிந்தாந்தங்களுக்கு மதிப்பளித்து உரிய எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாமல் விட்ட சமகாலவரலாற்றின் நினைவுதான் வடக்கு கிழக்கில் இன்று உங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சந்தேகிக்க வைத்து அச்சத்தால் வாக்குகளை அளிப்பதைக் குறைத்துள்ளது. இது உங்கள் மேலுள்ள தனிப்பட்ட பிரச்சினையல்ல மாரக்சியத்தின் மேலுள்ள பற்றின் செயலாகவும் உங்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் தரும் செயலாக உளளது. உங்களை விட்ட பிழைகளைத் திருத்தி அவற்றுக்கான உரிய தண்டனை நீதிகளையும் பரிகார நீதிகளையும் நீங்களே கட்டமைக்க அழைத்து “மனித சமத்துவம்-சமபகிர்வு-உழைப்பாளர் ஒன்றிப்பு” என்பவற்றை மீள் உற்பத்தி செய்ய தமிழ் மக்களாணையாகிறது.
ஈழத்தமிழர்களுடனும் முஸ்லீம்களுடனும் மலையகத் தமிழர்களுடனும் எல்லா நிலைகளிலும் உரையாடல்களைத் தொடங்கி அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் தவறுகள் அவர்களுக்கு அளிக்கும் வேதனைகளில் இருந்து அவர்கள் விடுபட்டு நம்பிக்கையும் செயற்திறனும் கொண்டெழச் செய்யுங்கள். உண்மையாகவே மானிடத்தை நேசிக்கின்ற மார்க்சியவாதிக்கு இது பெரிய விடயமல்ல. ஆனால் இன்றுள்ள அகபுறச் சூழ்நிலைகள் உள்ளூர் வெளியூர் அரசியல் அழுத்தங்கள் உங்களை எவ்வாறு நெருக்குகின்றது என்பதும் மக்களுக்குத் தெரியும். மக்கள் பலத்தை எவ்வளவு வேகமாகக் கட்டியெழுப்புவீர்களோ அவ்வளவு வேகத்தில் தடைகள் தவிடுபொடியாகும். பொதுத்தேர்தலை அறிவித்துள்ளீர்கள். உங்கள் பொதுத்தேர்தல் கொள்கை விளக்கத் திரட்டு ஈழத்தமிழர் இறைமை ஏற்பையும் முஸ்லீம் மலையக மக்கள் அரசியல் உரிமைகளையும் தெளிவாகப் பேசினாலேயே பாராளுமன்றத்தில் உங்கள் பலம் பலமடங்கு அதிகரிக்கும். இன்றைய இளையவர்கள் நிச்சயமாக உங்கள் பலமாவார்கள். அதற்காக வாழ்த்துகின்றோம்.
இறுதியாக இன்றைய மாற்றங்கள் சந்தர்ப்பவாதமாகாது ஈழத்தமிழர்களும் பொதுவேட்பாளர் முறைமை மூலம் நமக்கு நாமே வாக்களிக்கும் சனநாயகப் போராட்டத்தால் வாக்களித்து தேர்தலை நிராகரித்தும் நாம் அரசற்ற தேசஇனமென்று தேர்தலில் பங்கு பற்றாது புறக்கணித்தும் இருதடங்கள் வழியாகவும் சிங்கள தேசத்துக்கும் அனைத்துலகுக்கும் ஈழத்தமிழர் இறைமையின் அடிப்படையிலான தன்னாட்சி உரிமையை முன்னிறுத்தி வாழக்கூடிய தீர்வுகளையே ஏற்பர் என உலகுக்கு அறிவித்த அதே பாணியில் ஈழத்தமிழர் தேசியக் பொதுக்கூட்டணியொன்றின் மூலம் பாராளுமன்றத்துக்குச் சென்று இந்தச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைமை மாற்றப்பட்டு ஈழத்தமிழரின் இறைமையடிப்படையில் உரிய தீர்வுக்கான சனநாயகப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணம்.
ஆசிரியர்