எதார்த்தத்தை ஏற்றுச் செயற்படுதலுக்கான கொள்கை ஆய்வுகூடத்தால் இறைமையை நிலைப்படுத்தல் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 282

“2040 இல் உலகம்: UK அனைத்துலக விவகாரங்களை அணுகுவதைப் புதுப்பித்தல்” என்கின்ற முக்கியமான கொள்கை உருவாக்க நெறிப்படுத்தலை ஒக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகத்தின் கேர்ட்போர்ட் கல்லூரியும் இலண்டன் பல்கலைக்கழகத்தின் யூனிவர்சிட்டி கல்லூரியும் இணைந்த கொள்கை ஆய்வுகூடம் வெளியிட்டுள்ளது. இந்த கொள்கை ஆய்வு கூடமானது ஐக்கிய இராச்சியத்திலும் உலகிலுமுள்ள சமுதாயங்கள் எதிர்நோக்கும் சவால்களை விளங்கிக் கையாள்வதற்காகத் தனிப்பட்டவர்களையும் நிறுவனங்களையும் கூட்டுறவான முறைமைகளை உருவாக்கக் கட்டமைக்க அமைக்கப்பட்டுள்ளது. சமுதாயப் பழக்க வழக்கங்கள் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் பலதரப்பட்ட அரசியல், ஆராய்ச்சி, மற்றும் சமுதாய வலைப்பின்னல்களுக்கு இடையில் உரையாடல் வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. எவருக்காவது இவை குறித்த கருத்துருக்களை அல்லது சவால்களை கண்டறிந்து வெளிப்படுத்த விரும்பினால் [email protected]
மின்னஞ்சல் முகவரி மூலம் அதனைச் செய்வதற்கான உரிமையையும் அளித்து அனைத்து மக்களுக்கும் உரியதாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை ஆய்வுகூட அமைப்பின் இணைக் கூட்டுனர்களாக (Co- Conveners) ஏழு பிரதமர்களுக்கு அரசியல் ஆலோசகராக அனுபவம் பெற்ற ஒக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகத்தின் கேர்ட்போர்ட் கல்லூரியின் தலைவர் டொம் பிளட்சர் (Tom Fletcher) அவர்களும், பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகள் அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தினதும் (FCDO) அனைத்துலக அபிவிருத்தி அலுவலகத்தினதும் (DFID) முன்னாள் இயக்குனராகவும் இந்தோனேசியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் பிரித்தானிய தூதுவராகவும் அனுபவம் பெற்ற UCL கொள்கை ஆய்வு கூடத்தின் மதிப்புக்குரிய பேராசிரியர் மொசாம் மாலிக் ( Moazzam Malik) அவர்களும் பிரித்தானிய அமைச்சரவையின் செயலாளராக 2018 முதல் 2020 வரையும் கூடவே 2017 முதல் 2020 வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றித் தற்போது பிரபுக்கள் சபை உறுப்பினராக உள்ள செட்வில் பிரபு (Lord Mark Sedwill) அவர்களும் உள்ளனர்.
ஈழத்தமிழர்கள் தங்கள் சமுதாயம் எதிர்கொள்ளும் இன்றைய உலகுக்கான சமகாலச் சவால்களை எதிர்கொள்வதற்கு எவ்வாறு புத்திஜீவிகளையும் கருத்துருவாக்கிகளையும் தனிப்பட்டவர்களையும் நிறுவனங்களையும் தங்களோடு தொடர்புடைய பலதரப்பட்ட அரசியல், ஆராய்ச்சி மற்றும் சமுதாய வலைப்பின்னல்களையும் இணைத்து அனைவருக்குமான இவ்வாறான கொள்கை ஆய்வு கூடமொன்றை அமைத்தல் வழி முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரு யோசனையை ஈழத்தமிழரின் சமகாலத் தேவையைக் கருத்தில் கொண்டு இலக்கு இந்நேரத்தில் வலியுறுத்த விரும்புகிறது.
இந்தச் சிற்றறிக்கை 2040இல் உலகம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வருமாறு சுருக்கமாக எடுத்து விளக்குகிறது. உலகஅரசியல் சமநிலை வலுவானது பொருளாதார வலுவைச் சார்ந்ததாகவுள்ளது. சீனாவிலும் இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளால் உலகின் பொருளாதாரச் செல்நெறி ஈர்ப்பு கிழக்கு சார்ந்ததாகவுள்ளது. உலக மக்கள்தொகைக் கட்டமைப்பும் மாறியுள்ளது. 2040இல் உலகின் வேலைசெய்யும் வயதில் உள்ள மக்கள்தொகை ஆபிரிக்காவிலும் தெற்காசியாவிலுமே அதிகரித்துக் காணப்படும். நாங்கள் பனிப்போர் கட்டங்கள், அமெரிக்க தலைமையிலான அனைத்துலக ஒழுங்குமுறை என்பவற்றில் இருந்து தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்ற பன்முனை உலகமானது “பட்டியல்” (‘a la carte) உலகமாக எதையும் கணித்துக் கூற இயலாத அதிகப் பாதுகாப்பற்ற துண்டு துண்டுகளாகியுள்ளது.
இன்றைய உலகு ஒரு தனியான அரசியல் விழுமியங்கள் கொண்ட முறையால் மேலாதிக்கம் செய்யப்படலாம் என்பது ஆழ்ந்து சிந்திப்பின் கடினமானதே. பியூகியூகாமா (Fukuuama) எதிர்வு கூறியது போல பனிப்போர்க் காலத்துடன் வரலாறு முடிந்துவிடவில்லை. உலகில் பெரும்பான்மையானோர் நடுநிலையாளர்களாக எந்தக் கூட்டிலும் வலுக்கட்டாயங்களின் மூலம் இணைக்க முடியாதவர்களாகவே தங்களை நிலைநிறுத்துகின்றார்கள். மேற்குலக விழுமியங்களும் அவற்றின் அனைத்துலக ஒழுங்குமுறைக்கு மேலான மேலாண்மைகளும் இன்று வேறுபடும் மற்றைய நாடுகளின் அரசியல் மற்றும் விழுமியங்களால் சவாலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்தச் சவால்கள் அதிகாரமையங்களாக உள்ள அரசுக்களால் மட்டுமல்ல நன்கு ஜனநாயக நாடுகளாக உள்ளவற்றாலும் விடுக்கப்படுகின்றன. அதேசமயம் இன்று சட்டத்தின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறையைத் தக்கவைக்க இயலாது அனைத்துலக நிலத்தோற்றமானது தேசிய மற்றும் உள்ளூர் பிரச்சினைகளுக்கு ஏற்ப நகரும் தன்மையான கூட்டுக்களை உடையதாக உள்ளது. இன்று ஐக்கிய இராச்சியமானது இரண்டாவது உலகப் பெரும்போரின் பின்விளைவாக அதனை அடுத்த காலத்தில் உலகில் செல்வாக்குச் செலுத்தியது போல அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ செல்வாக்குச் செலுத்த இயலாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இது தொடரும் என்பதற்கு இலகுவான கணிப்பாக உலகின் மக்கள்தொகை மாற்றங்களும் கூட்டுப் பொருளாதாரங்களும் உள்ளன.
அனைத்துலக ஒழுங்குமுறை மாறுகையில் மனிதாயம் உள்திறமுள்ள இருத்தலியல் நாடுகடந்த (Potentially existential transnational) சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இதில் காலநிலை மாற்றம், முரண்பாடுகளும் பாதுகாப்பு இன்மைகளும், பெருந்தொற்றுக்கள், பொறுப்பற்ற முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல் உடன் கூடிய செயற்கை நுண்மதிகள், இவற்றுடன் நீதியற்றதும், போதாததும், வீணானதுமான உலகப் பொருளாதார முறைமை என்பன அடங்கும். உலகளாவிய 2030க்கான நீடித்த திறனுள்ள அபிவிருத்தி இலக்குகளுக்கு எதிரான செயற்பாடுகள் தேக்கநிலையை மட்டுமல்ல பின்தள்ளும் தன்மையானதாகவும் அமைந்து பலவிதமான நெருக்கடிகளைத் தோன்றச் செய்கின்றன. தேசியப் பிரச்சனைகள் நாடுகடந்தவையாகப் பிரதிபலிப்புற்று ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையனவாக நாடுகளை மாற்றிவிடுகின்றன. பழைய அரசியல் மாதிரிகளால் இதற்குத் தீர்வு காணஇயலாதுள்ளது. இந்த உண்மைகளைக் கவனத்தில் கொண்டு ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது.
மேலும் இத்தகைய சூழலில் பிரித்தானியா எவ்வாறு தனது வெளிநாட்டுத் தொடர்புகளைப் புதுப்பிக்க வேண்டும் என்பதை இச்சிற்றறிக்கை பின்வருமாறு எடுத்து விளக்குகிறது. “ஐக்கிய இராச்சியம் வேகமாக மாறுகின்ற இன்றைய உலகில் பிரச்சினைகளில் கரையில் இருந்து மிகத்தூரத்தில் கடலில் இருக்கும் (Off-shore) தேசமாகவும் நடுத்தர வலுவாண்மை (Middle Power) நாடாகவும் விளங்குகிறது. ஐக்கிய இராச்சியத்தின் எதிர்கால வளர்ச்சிகளையும் பாதுகாப்பையும் வடிவமைக்கும் சவால்களும் போக்குகளும் நீண்டகாலத்தன்மை கொண்டனவாகவுள்ளன. எங்களுடைய அனைத்துலக விடயங்கள் தொடர்பான அணுகுமுறைகள் இவற்றைப் பிரதிபலிக்கத் தக்கவையாக அமைந்து எதிர்காலத்தில் உலகில் எங்களுடைய இடத்தை வடிவமைக்க வேண்டும்.
அனைத்துலகில் செல்வாக்குச் செலுத்துவது என்பது உள்நாட்டில் அரசியலிலும் சமுக பொருளாதாரத்திலும் அடைகின்ற வெற்றிகளில் தங்கியுள்ளது. பிரித்தானியா தனது இலக்கு, வரலாறு, ஆர்வங்கள், கரையிலிருந்து வெகுதூரத்தில் கடலில் இருக்கும் தேசமாகவும் நடுத்தர வலுவாண்மையாகவும் உள்ள நிலையில் அதன் வளங்கள் உடைமைகள் என்பவற்றுடன் எவ்வாறு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போகிறது என்பதில் தெளிவு வேண்டும்.
நாங்கள் அனைத்துலக கூட்டுக்களைப் புதுப்பிப்பதுடன் கனடா யப்பான் நோர்வே சுவிட்ஸ்லாந்து போன்ற நடுத்தர வலுவாண்மை நாடுகள் உலகில் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் அவற்றுடன் புதிய கூட்டுக்களைக் கட்டியெழுப்பி சில உரிமைகளைப் பகிர்ந்து பன்முகத்தன்மைக்குப் பலமளிக்க வேண்டும். ஐக்கிய இராச்சியத்தின் அனைத்துலக நிறுவனங்களை தெளிவான நீண்ட பணியில் நிலைநிறுத்தக் கூடிய ஆணைகளால் வழிநடத்த வேண்டும். (உதாரணமாக அனைத்துலக விவகாரங்கள் அல்லது உலக விவகாரங்கள் திணைக்களம் ஒன்றை உருவாக்கல்) நாங்கள் அரசின் பாதுகாப்பு கடிவாளமாகவும் கூட்டான நெம்புகோல்களாகவும் விளங்க வேண்டிய தேவையுள்ளது. இதற்குத் சிறந்த மத்திய ஒருங்கிணைப்புக்களும் வழங்கல் கட்டமைப்புக்களும் (உதாரணமாக முகவர்கள், அபிவிருத்தி வங்கிகள்) உள்ளூர் பங்குதாரர்களுக்கான பரவலாக்கப்பட்ட அதிகார நிர்வாகங்கள் தேவை. சரியான மூலவளங்களும் கருவிகளும் ஆற்றல்களும் நிகழ்நிலைப்படுத்தப்பட்ட பொதுநிலை பணிகள் அதன் நுணுக்கங்களுடன் கட்டமைக்கப்பட்டு நிதியீட்டம் செய்யப்பட வேண்டும். இவைகளைக் கவனமாக வாசித்து ஈழத்தமிழர்களும் தங்களுக்கான வெளிநாட்டு விடயங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்பதே இலக்கின் இவ்வாசிரிய தலையங்கத்தின் நோக்காக உள்ளது.

Tamil News