சீன துறைமுகத்தின் தயவை நாடிவரும் இந்தியாவும் ஐரோப்பாவும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி கொள்கலன்களை ஏற்றிவரும் கப்பல்கள் வரப்போவதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து 250 கி.மீ தென்கிழக்காக உள்ள இந்த ஆழ்கடல் துறைமுகத்தை சீனா கட்டியிருந்தது. உலகின் மிகப்பெரும் கொள்கலன் கப்பல் போக்குவரத்து நிறுவனமான எம்.என்.சி நிறுவனத்தின் கப்பல் 4600 கொள்கலன்களுடன் வந்து 500 கொள்கலன்களை அங்கு கடந்த செவ்வாய்கிழமை(9) இறக்கியுள்ளது.

இந்த கொள்கலன்கள் பின்னர் எம்.எஸ்.சி ஸ்கை இரண்டு என்ற கப்பலில் அடுத்தவாரம் ஏற்றப்படவுள்ளது. மத்தியகிழக்கு, மேற்கு ஆபிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் இந்த நிறுவனங்கள் தற்போது இலங்கைளை நாட ஆரம்பித்துள்ளன.

செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்றம் தற்போது சீனாவின் துறைமுகத்தை இந்தியா நாடவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. எம்.எஸ்.சி நிறுவனத்துடன் எமது அம்பாந்தோட்டை துறைமுகம் மேற்கொண்டுள்ள உடன்பாடு முதலீடுகளை இலங்கையில் அதிகரிக்கும் சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கான கப்பல் போக்குவரத்தின் பாதையில் துறைமுகம் உள்ளதும் நன்மையானது என இலங்கையின் சி.எம் போட் நிறுவனத்தின் தலைவர் ஜோன்சன் லியூ தெரிவித்துள்ளார்.

துறைமுகம் மிக முக்கிய கேத்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ளதால் அதனை நாம் அதிகளவில் பயன்படுத்தமுடியும். அதன் ஆழம்

மற்றும் அமைவிடம் என்பது இலங்கையின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் செங்கடலில் கப்பல்கள் தாக்கப்படுவதால் ஐரோப்பாவுக்கும் மத்தியகிழக்கிற்கும் மற்றும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தில் ஒரு தற்காலிக தங்குமிடம் மற்றும் எரிபொருள் நிரப்பும் துறைமுகமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை எம்.என்.சி நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனம் இதுவரையில் கொழும்பு துறைமுகத்தை பயன்படுத்தியிருந்தது.

செங்கடலி தாக்குதலினால் கொழும்புத்துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்தும் இந்த வருடம் 33 விகித அதிகரிப்பை கண்டிருந்தது. ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகம் பல நோக்கு கொண்ட கொள்கலன்களை கையாளும் துறைமுகமாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது சீனாவின் பட்டுப்பாதையின் ஒரு அங்கமாக உள்ளதாக மேற்குலக நாடுகள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அதன் பங்ககளில் சீனாவின் வர்த்தக வங்கி 85 விகிதத்தையும், இலங்கை துறைமுக அதிகாரசபை 15 விகித பங்குகளையும் கொண்டுள்ளது. மேலும் சீனா அதனை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது.

ஆம்பாந்தோட்டையின் முதலாவது அபிவிருத்தி 2011 இல் ஆரம்பமாகியது. அது பின்னர் 2015 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதற்கான 1.5 பில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்திருந்தது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் வெளிநாட்டு முதலீடு அதுவாகும்.

இந்த துறைமுகம் மேலும் வளர்ச்சியடையும், நாம் அதில் தொடர்ந்து முதலீடுகளைச் செய்வோம் இந்த பிராந்தியத்தில் மிகச்சிறந்த துறைமுகமாக மாற்றுவதே நமது திட்டம் என லியூ தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன்கையாளும் ஒரு பகுதியையும் சீன நிறுவனம் நிர்வகித்துவருகின்றது.

தற்போது செங்கடல் பிரச்சனை காரணமாக கொழும்புத்துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை அங்கு கையாள முடியவில்லை. அது தொடர்பில் ஐரோப்பிய நிறுவனங்கள் கவலைகளை தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது.

எம்.எஸ்.சி கப்பல் நிறுவனம் இந்தியாவின் அதானி குழுமத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது. அதானி குழுமமம் அமெரிக்காவுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் பகுதியை அபிவிருத்தி செய்கின்றது. அதேசமயம், தென்னிந்தியாவின் வைசின்ஜாம் பகுதியிலும் துறைமுகம் ஒன்றை அமைக்கின்றது. அதன் வேலைகள் இந்த வரும் ஆரம்பமாகும். எனினும் தற்போது அவர்கள் சீனாவின் துறைமுகத்தை சார்ந்திருக்கவேண்டிய நிலை ஒன்று உருவாகியுள்ளது சீனாவுக்கு அனுகூலமானதாகவே பார்க்கப்படுகின்றது.