ஈழத்தமிழரின் இறைமையை மறுக்கும் அநுரகுமர திசநாயக்காவின் நுட்பமான உரை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 281

ஈழத்தமிழரின் இறைமையை மறுக்கும் அநுரகுமர திசநாயக்காவின் நுட்பமான உரை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 281

சிறிலங்காவின் ஜனாதிபதியாக வரக்கூடிய வேட்பாளர் என்கிற கருத்தை கருத்துக் கணிப்புக்களும் அமெரிக்கா இந்தியா கனடா நாடுகளின் உரையாடல்களுக்கான உத்தியோகபூர்வ அழைப்புக்களும் யப்பான் மற்றும் தென்கிழக்காசிய மத்திய கிழக்குத் தூதுவர்களின் சந்திப்புக்களும் ஏற்படுத்தியுள்ள பலங்களின் பின்னணியில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசநாயக்கா சமகாலத்தின் முக்கிய சிங்களத் தலைமையாகத் தமிழர் தாயகப் பகுதிகளிலும் தனது தேர்தலுக்கான ஆதரவு தேடும் உரைகளை நிகழ்த்தி வருகின்றார். இந்தத் தொடரில் இலங்கையின் ஆசிரிய சேவை சங்கத்தினர் தங்கள் வருடாந்த மாநாட்டை தங்களது வடமாகாண கிளையுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்தி அதற்குப் பிரதம விருந்தினராக அநுரகுமாராவை உரையாற்ற அழைத்திருந்தனர். அவர் அங்கு ஆற்றிய நுட்பமான உரை ஈழத்தமிழரின் இறைமையை மறுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிரதிநிதியாகவே அவரும் உள்ளார் என்பதைத் தெளிவாக்கியுள்ளது. அவர் தனது உரையில் மிக நுட்பமான முறையில் கூறிய சிலவிடயங்களை எடுத்து நோக்குவோம்.
“நாங்கள் வாக்குக் கேட்கவோ 13 பிளஸ் தருவோம் – சமஸ்டி தருவோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கொடுக்கல் வாங்கல் வியாபாரம் செய்யவோ உங்களிடம் வரவில்லை. வடக்கு கிழக்கு தெற்கு என்ற பேதங்கள் இல்லாமல் சிங்களவர் தமிழர் முஸ்லீம்கள் மலையகமக்கள் மலேயர்கள் பறங்கியர் என்ற பிரிவினைகள் இல்லாத இந்து இஸ்லாம் கத்தோலிக்க பௌத்த வேறுபாடுகள் இல்லாமல் நாங்கள் கூட்டு முயற்சியால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஆட்சியை மாற்ற வேண்டும் என அழைப்பதற்காகவே தான் வந்துள்ளதாக முதலில் கூறினார். ஆனால் இந்த வேறுபாடுகளை ஊக்குவிக்கும் முறையில் அரசியலமைப்பும் சிங்கள பௌத்த தலைமைகளும் உள்ளன என்றோ அதனை மாற்ற என்ன செய்யலாம் என்றோ அவர் வாயே திறக்கவில்லை.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் அனைவரது தலைவிதியை நிர்ணயிக்கும் தன்மையானது என்பதால் அதனைப் புறக்கணியாது கவனமான முறையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் விளக்கமளித்தார். ஆனால் ஜனாதிபதி தேர்தல் முறைமை சிங்கள பௌத்த ஜனாதிபதி ஒருவரையே தெரிவு செய்யக்கூடிய முறையில் அரசியலமைப்பில் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாற்றுவது குறித்து எந்தப் பேச்சும் அவர் பேசவில்லை.
தேசிய ஒருமைப்பாட்டின் மூலமே நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். வடக்கின் ஆதரவு இன்றி தெற்கு முன்னேற முடியாது. தெற்கின் ஆதரவு இன்றி வடக்கு முன்னேற முடியாது. தெற்கு சிங்களவாதம் வடக்கு தமிழ்வாதம் கிழக்கு இஸ்லாமியவாதம் இல்லாத அரசியல் உருவாக்கப்பட வேண்டும். அவர்களே எங்களைப் பிரித்தார்கள். நாங்கள் யுத்தங்களைக் கண்டு வாழும் பரம்பரையாக உள்ளோம். நாளைய எமது குழந்தைகளும் யுத்தத்தைக் கண்டு வாழும் பரம்பரையாகத்தான் வாழ நாம் அனுமதிக்க வேண்டுமா? உண்மையில் அப்படிப் பிரிவினைகள் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்களிடை இல்லை அவர்கள் பிரித்தார்கள். நாங்கள் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம் என்றார். ஆனால் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலமைப்பும் அதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களை இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பின் மூலம் படைபல பயன்பாட்டால் அவர்களின் வரலாற்றுத் தாயகத்தில் இருந்து வெளியேற வைப்பதும் எந்த வகையில் இன்று இவர்களால் மாற்றியமைக்கப்படவுள்ளது என்பது குறித்த எதுவுமே அவரின் பேச்சில் இடம்பெறவில்லை. தமிழர் தாயக மறுப்பாக வடக்கு கிழக்கு என்ற ராசபக்ச ரணில் சொல்லாட்சியையே அவர் உரை முழுவதும் கையாண்டார்.
மொழியுரிமை மதஉரிமைகள் உடன் இனங்களது கலாச்சாரத் தனித்துவங்கள் தங்களால் உறுதிசெய்யப்படும் என அடித்துக் கூறினார். ஆனால் மக்களுடைய உரிமை இழப்புக்கு மக்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் மறுக்கப்படுவதே காரணம் என்பதை அவர் மறந்தும் கூறாது கவனமாக உரையாற்றினார். இனங்களின் கலாச்சார தனித்துவம் பற்றிப் பேசும் அவர் ஈழத்தமிழரின் தனித்துவம் அவர்கள் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் வாழ்ந்து வருவதால் தொன்மையும் தொடர்ச்சியுமான அவர்களின் இறைமையின் அடிப்படையிலான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் உள்ள வாழ்வியல் என்பதை அவர் கூறவில்லை.
எல்லா மக்களுக்குமான அமைதியும் பாதுகாப்பும் வளர்ச்சியும் சிங்களப் படைகள் இல்லங்கள் தோறும் வீட்டுக்கு முன்னால் நிலையெடுத்து நின்று மக்களின் பாதுகாப்பையும் அமைதியையும் வளர்ச்சிகளையும் அடக்கி ஒடுக்கி இராணுவ சர்வாதிகாரத்தை சனநாயக ஆட்சி என்ற பெயரில் வழங்கிக் கொண்டிருக்கையில் எவ்வாறு நடைமுறைச் சாத்திமாகும். படைகள் திருப்பிப் பெறப்படாது 20 படையணிகளில் 18 வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ளமை குறித்து ஒரு சொல் கூட கவலை கூட தெரிவிக்காத நிலையில் எப்படி தமிழர்கள் முஸ்லீம்கள் மலையக மக்களின் நாளாந்த வாழ்வுக்குள்ள இனங்காணக் கூடிய அச்சத்தை இவர்கள் நீக்குவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
யுத்தத்தின் கொடூரமான விளைவுகள் ஏற்படுத்தியுள்ள வெளிவிளைவுகள் குறித்து நெஞ்சுருகப் பேசும் அவர் அதற்கான காரணங்களையோ அல்லது அதனை இனிமேலாவது மாற்ற வேண்டும் என்ற நோக்கையோ அவர் வெளிப்படுத்தவில்லை.
வெடுக்குநாறி ஆதிசிவன் விடயத்தில் அதனை ஈழத்தமிழர்களின் மனித உரிமையை மீறிய சிறிலங்காவின் செயலாக அல்லாமல் ஒரு பௌத்த தொல்பொருள் சின்னம் கண்டு பிடிக்கப்பட்டால் அது வரலாற்றைப் பேணும் செயல். அதற்கு எதற்கு எதிர்ப்புகள் காட்ட வேண்டுமென்று கேள்வி எழுப்பி ஈழத்தமிழர் வழிபாட்டுச் சுதந்திர மறுப்பும் நில இழப்பும் குறித்து எதுவித கவலையும் கூடத் தெரிவிக்காது வெறுமனே பொலிசார் 8 பேரைக் கைது செய்தமை தொடர்பாகவே இத்தகைய செயல்கள் பிரித்து வைப்பவர்களுக்குத் தேவையாக அமைகிறது என்று மட்டும் கூறினார். அநுரா குமார திசநாயக்காவும் ஈழத்தமிழர் இறைமை அவர்களின் தேசஇனம் என்ற தகுதிகளை மறுத்துப் பாதிக்கப்பட்ட சமுகம் ஒன்றுக்கான அனுதாபமாகவே தனது உரை முழுவதையும் கட்டமைத்தார். சுருக்கமாகச் சொன்னால் ராசபக்ச சிந்தனைகளுக்கும் ரணில் சிந்தனைகளுக்கும் இடதுசாரி விளக்கம் அளித்து நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சத்தியின் தலைமை நோக்கு என்பது அநுரகுமாராவின் உரையில் நன்கு தெளிவாகிறது என்பதை இலக்கு ஈழத்தமிழர்களுக்கு எடுத்துக்கூறிட விரும்புகிறது.
அநுரகுமார திசநாயக்கா ஈழத்தமிழர்களின் இறைமை மீட்பாக ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை பார்க்காது பேசித்திரிவது போலவே ஈழத்தமிழர்களின் அரசியல் வாதிகளும் புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் கூட ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிறிலங்காவின் இனஅழிப்பை அரசியலில் முன்னிலைப்படுத்தி மக்கள் இறைமையின் மூலம் அனைத்துலகச் சட்டங்கள் வழி பெற முயற்சிப்பது இல்லை. மாறாக ஈழத்தமிழர்களுக்கான அரசியலை சிறுபான்மையின உரிமை பெறுதலாக முன்னெடுத்துக் கெஞ்சிப் பெறலாம் கொஞ்சி அடையலாம் சலுகைகளை எனச் செயற்படுகின்றனர். இதுவே ஈழத்தமிழர்களால் 21ம் நூற்றாண்டின் உலகின் மிகக் கொடூரமான இனஅழிப்பைச் செய்தவர்களுக்கான தண்டனை நீதியையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகார நீதியையோ இன்றுவரை 15 ஆண்டுகள் பெற இயலாது உள்ளதென்பது இலக்கின் உறுதியான எண்ணமாகவுள்ளது.

Tamil News