கச்சதீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியமானதே – கூறுகின்றார் வைகோ

கச்சதீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியமானது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். தமது கட்சியின் மக்களவைத் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா வெற்றி பெறுமாயின் ராகுல் காந்தியே பிரதமர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள கருத்தை தாம் வழிமொழிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்> “இந்தியாவுடன் ஒப்பிட முடியாத நாடு ஒன்றுக்காக ஒரு போதும் கச்சதீவை விட்டுக்கொடுக்க முடியாது. நெருக்கடி நிலைக்காலத்தில் கச்சதீவை தாரை வார்த்து கொடுக்க மத்திய அரசு உறுதியாக இருந்தது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கச்சதீவை மீளப் பெற வேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு திராவிடமுன்னேற்ற கழகம் வந்தது.

கச்சதீவை தாரைவார்த்து கொடுக்கக் கூடாது என சட்டப்பேரவையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தபோதிலும் அது பலனளிக்கவில்லை. கச்சதீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியமானதாகும். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் சட்டமூலம் நிறைவேற்றவேண்டும். கச்சதீவு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அது தொடர்பாக நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்” என்றும் வைகோ சுட்டிக்காட்டினாா்.