ஈழத்தமிழர் இறைமை மறைக்கப்பட்ட புதியநாடு புதிய கல்வி ரணிலின் நரித்தந்திரத் திட்டம் | Ilakku Weekly ePaper 280 | ஆசிரியர் தலையங்கம்

ஈழத்தமிழர் இறைமை மறைக்கப்பட்ட புதியநாடு புதிய கல்வி ரணிலின் நரித்தந்திரத் திட்டம் | Ilakku Weekly ePaper 280 | ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கைத் தீவில் சிங்களத் தேச இனத்துக்கு எல்லாவகையிலும் சமத்துவம் உள்ள தேச இனமாக ஈழத்தமிழர்களும்  குடிமக்களாக முஸ்லீம் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் வாழ்கின்றார்கள் என்ற வரலாற்று உண்மையை மறுத்து சிங்கள பௌத்த மக்களுடைய நாடாகவும் அதில் வாழும் சமூகங்களாக மட்டும் ஈழத்தமிழர்களையும், முஸ்லீம்களையும், மலையக மக்களையும் கொண்ட ஒரு புதிய நாட்டைத் தனது சிந்தனை சொல் செயல் மூலம் உலகில் நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் மூலம் சிறிலங்கா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கை ரணில் விக்கிரமசிங்கா தனது சிறிலங்கா ஜனாதிபதி என்ற பதவிநிலை அதிகாரத்தைக் கொண்டு சிறிலங்காவின் நிலப்பரப்பான தேசமாக வெளிப்படுத்தும் முயற்சியே பொருளாதார எழுச்சி பெற்ற புதிய நாடாக்குவோம் என்னும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் நரித்தனம்.
ஈழத்தமிழர் இறைமை மறைக்கப்பட்ட  ரணிலின் இந்த புதிய நாட்டுக்கான புதிய கல்வித் திட்டம் ஒன்றும் அவரது அரசால் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைச் சிறிலங்காவின் முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிலாஜ் காரியவாசம் அவர்களால் ஜனாதிபதி அலுவலகத்தில் மார்ச் 25 இல் ஒழுங்குசெய்யப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உடனான தனது சந்திப்பின் பொழுது சிறிலங்கா ஜனாதிபதி உறுதிப்படுத்தினார். “நாட்டுக்குப் புதிய கல்வி முறையைச் செயற்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. இதற்காக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் தேர்தலின் பின் புதிய பாராளுமன்றத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்” என அந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார். எந்தப் பாராளமன்றம் வந்தாலும் அந்தப் பாராளுமன்றம் ஈழத்தமிழர்களின் இறைமை மறைக்கப்பட்ட புதிய கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்ற சிறிலங்கா ஜனாதிபதியின் தெளிவான கூற்று சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஈழத்தமிழர்களின் இறைமையை அழிக்கும் செயற்திட்டம் எல்லா சிறிலங்கா அரசுக்களாலும் அன்றும் இன்றும் நாளையும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்ற சிங்கள அரசியல் எதார்த்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
01. பல்கலைக்கழகப பேராசிரியர்கள் உட்பட்ட ஏனைய புத்தி ஜீவிகளையும் இணைத்து    அறிவை உருவாக்குதல்
02. அந்த அறிவைப் பகிர்ந்தளித்தல்
03. இதன்வழியாக நாட்டின் தேசிய தேவைகளை நிறைவேற்றுதல்
என்ற செயற்திட்டம் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட பொழுது இலக்கு மின்னிதழ் மற்றும் உயிரோடைத் தமிழ் வானொலி என்பன உலகத்தமிழர்களாக உலகின் முக்கியமான நாடுகளில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக் கும் ஈழத்தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களின் துறைசார் புத்திஜீவிகளையும் மற்றைய தாயகத்தில் உள்ள புத்திஜீவிகளையும் கொண்ட குடைநிழல் அமைப்பினைத் தோற்றவித்து ஈழத்தமிழர்களுக்கான அறிவை உருவாக்குங்கள். பகிர்ந்தளியுங்கள். ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சிக்கான தேவைகளுக்கான தீர்வுகளை முன்னெடுக்கும் வேகத்தை அதிகரித்துக் தீர்வுக்கான காலத்தைக் குறையுங்கள் என எத்தனை முறைகள் வேண்டுகோள்களை விடுத்தன என்பதனையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் தேச உருவாக்கத்தில் அறிவினைக் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற முறையில் உற்பத்தி செய்தல் என்பதும் அதனைப் பகிர்ந்தளிக்கிற செயற்திட்டங்களும் தான் அந்தத் தேசத்தின் தேசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான மக்கள் சத்தியையும் மண்ணின் வளத்தையும் ஒருங்கிணைக்கும்.
இதற்கு ஆரம்ப மற்றும் இரண்டாந்தரக் கல்வி முறைமைகள் மண்ணினதும் மக்களினதும் வரலாற்றை மானிடவியலை தொல்லியலை சமுகவியலை மொழியை மொழியின் இலக்கிய இலக்கணங்களை பொருளியலை அரசியலை ஆன்மிகத்தை முதலாம் வகுப்பு முதல் 13ம் வகுப்பு வரை திட்டமிட்ட முறையில் நன்கு ஒழுங்கு அமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வழி படிப்பிக்கப்படல் வேண்டும். கூடவே மனிதநேயமே எந்த ஆட்சி முறைமையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மறவாது ஒவ்வொரு மனிதனினதும் சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் என்பவற்றை அறிவாக்கக் கூடிய முறையில் ஆசிரியத்துவம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதற்கு எதிர்மாறாகச் சிறிலங்காவில் ஆரம்ப இரண்டாந்தரக் கல்வி முறைமைகள் சிங்கள நாடு சிங்கள இனம் பௌத்தம் என்பனவே இலங்கைத் தீவில் அன்றும் இன்றும் என்றும் நிலைநிறுத்தப்பட வேண்டியன என்பதையே சிறிலங்காவின் கல்வித் திட்டமிடல் நடைமுறைப்படுத்தல் என்பன தனது தலைமை இலக்காகக் கொண்டுள்ளன. இதுவே திறமைக்கு ஏற்பப் பல்கலைக்கழக அனுமதி என்ற பல்கலைக்கழக அனுமதி முறைமையை 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் கல்வி அமைச்சர் ஐ. எம். ஆர். ஏ ஈரியக்கொல தரப்படுத்தல் மூலம் பல்கலைக்கழக அனுமதியை அறிமுகம் செய்ய வைத்தது. தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிகள் கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் பதியூதீன் முகம்மது அவர்களால் தரப்படுத்தல் தமிழர்களுக்குப் பல்கலைக்கழக அனுமதியை மறுக்கும் மனித உரிமை மீறலைச் சிங்களவர்களின் உயர்கல்வி; நலன்பேணும் திட்டமாக 1970இல் மீள் உறுதி செய்ய வைத்தது. சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலமான சிங்களத்தில் தேர்ச்சி இல்லாதவர்க்கான தொழில் செய்யும் உரிமை மறுப்பும் திறமைக்கு ஏற்ற கல்வி மறுப்பும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் மறுப்பாகவும் மனித உரிமைகள் வன்முறையாகவும் 1956, 1970கள் முதல் இன்று வரை தொடர்வதே ஈழத்தமிழர் தாம் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் தங்கள் மண்ணின் இறைமை மீட்பின் மூலமே தங்களுக்கான பாதுகாப்பான அமைதி வாழ்வை பெற முடியும் என்ற நிலையில் தங்கள் வாழ்வையே போராட்டமாக முன்னெடுத்து வருகின்றார்கள்.
இந்நிலையில் மீளவும் பல்கலைக்கழகக் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைத்து பொருளாதார வளர்ச்சிக்குப் பெருமளவில் பங்களிக்கும் நிறுவனமாக மாற்றுவது என்ற ரணிலின் திட்டம் ஈழத்தமிழர்களின் இளம் சந்ததியினருக்கு அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் குறித்த அறிவினை உற்பத்தி செய்வதை திட்டமிட்ட வகையில் இல்லாதொழிக்கும் கல்வி முறைமையாகவுள்ளது.
அதே வேளை பல்கலைக்கழகக் கட்டமைப்பை பல்கலைக்கழக ஆணைக்குழுவில் இருந்து பிரித்து சுயாதீன கல்வி நிறுவனங்களாக மாற்றுதல். பல்கலைக்கழகக் கல்வியையும் வெளிநாட்டவர்க்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் விற்றுப் பிழைக்கும் ரணிலின் திட்டாக உள்ளது. இதனால் பணம்படைத்தவர்க்கும் வெளிநாட்டினருக்கும் பல்கலைக்கழகக் கல்வி நிலை விரைவுபெறும். சிறிலங்காவின் இனஅழிப்பால் வறுமையுற்றுள்ள ஈழத்தமிழ் இளையவர்களுக்கு இதுமிகப்பெரிய உளவியல் நிதியியல் தாக்கத்தை விளைக்கும்.
பல்கலைக்கழகங்களில் முன்பு போல அரசியல்வாதிகள் நேரடியாகப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கலந்துரையாடல்களை நடாத்துதலை மீளவும் தொடங்குதல் என்ற சிந்தனை சிங்கள இனவெறி மொழிவெறி மதவெறி வளர்க்கும் பள்ளிகளாகப் பல்கலைக்கழகங்களை மாற்றும் பேரபாயத்தையும் விளைவிக்கும்.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தங்களின் தேசிய தேவைகளுக்கான கல்விமுறைமையை உருவாக்கவும் நடைமுறைப்படுத்தவும் புலம்பெயர் ஈழத்தமிழ் புத்திஜீவிகளும் நிதிவளமுடையவர்களும் இணைந்து சிந்திக்க வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.

Tamil News