நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது | Ilakku Weekly ePaper 279 | ஆசிரியர் தலையங்கம்

நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது | Ilakku Weekly ePaper 279 | ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்காப் பாராளுமன்றத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடைய உரை நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. அவர் ‘வெடுக்குநாறி மலையில் எந்தக் கோயில்களும் இல்லை, இந்த மலையை தொல் பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்குச் சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது. பௌத்த மரபுரிமைகள் உள்ள பகுதிகளில் பிறிதொரு தரப்பினர் தமது மதவழிபாடுகளை முன்னெடுக்கும் பொழுது முரண்பாடுகளே தோன்றும். 2023ம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் சிவலிங்கத்தை நிறுவினர். மார்ச் 4இல் மதிமுகராசா என்ற பூசகர் வெடுக்குநாறி மலையில் பூசை வழிபாட்டில் ஈடுபட வவனியா நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவை அளித்து அது நிராகரிக்கப்பட்டது. இவர் மார்ச் 8 சிவராத்திரி தினத்தன்று 400 பேருடன் சட்டவிரோதமாக வழிபாடு நடாத்தியுள்ளார். தொல்பொருள் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய முறையில் அடுப்பு மூட்டித் தீ வளர்த்துள்ளார்.
6மணிக்கு மேல் மலையில் தங்கக் கூடாதென்ற சட்டத்தையும் மீறி 40பேருடன் அங்கு தங்கியுள்ளார். இந்தச் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தொல்பொருள் திணைக்கள மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தடுத்து நிறுத்துமாறு பொலிசாரைக் கேட்டுக்கொண்டதற்கு அமையவே சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிசார் 8 பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர் என விளக்கமளித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகராவும் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் “வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டே அதன்மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டது. பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன்மீது பிறமத அடையாளங்களைக் காட்சிப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையைக் கோழைத்தனம் எனக் கருதவேண்டாம்” என எச்சரிப்பு வேறு விடுத்துள்ளார். இவை பாராளுமன்றத்துக்கு முன்னால் வடக்கு கிழக்குப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் வெடுக்குநாறி மலை விடயத்தில் ஈழத்தமிழர்களின் வழிபாட்டுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், சட்டத்தின் முன் குடிகள் அனைவரும் சமம் போன்ற அடிப்படை மனிதஉரிமைகள் மறுப்புக்கு எதிராகச் சனநாயக முறையில் அமைதிவழியில் பதாகைப் போராட்டம் நடத்தியதற்குச் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்தின் பதிலாக இந்த இருவரது பேச்சும் அமைந்து சிறிலங்காவில் எத்தகைய சனநாயகம் உள்ளது, எத்தகைய சட்டத்தின் ஆட்சி உள்ளது என்பதை மீண்டும் உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன் இவ்வுரைகள் உள்ளக பொறிமுறையில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்குச் சிறிலங்கா அரசாங்கம் தீர்வு அளித்தல் என்பதற்கான அரசியல் கலாச்சாரம் சிறிலங்காவில் என்றுமே இல்லை என்பதையும் மீள்நிரூபணம் செய்துள்ளன. இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் நாளாந்த வாழ்வில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு அறிவிக்க வல்ல பொதுக் கருத்துக்கோளத்தை உருவாக்கும் தங்களுக்கான ஈழத்தமிழர் தேசிய ஊடகத்தை உடன் நிறுவுவதும் அந்த ஊடகத்தின் மூலம் ஈழத்தமிழர் தாயகம் எங்கும் ஊடகவியலாளர்களை உருவாக்கி ஊடகத்தின் வழி ஈழத்தமிழர்களின் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்பதும் இலக்கின் எண்ணமாக உள்ளது.
அதுமட்டுமல்ல சரத்வீரசேகரா வடக்கு கிழக்குப் பிரதிநிதிகள் கொழும்பில் சனநாயக முறையில் போராட்டம் நடத்தி விட்டு வடக்குக் கிழக்குக்குத் திரும்பிச் செல்வதே சிங்கள பௌத்தர்களின் கருணைச்செயல் எனப்பேசி மறைமுகமாக மனித உரிமைகள் வன்முறையைத் தூண்டும் எச்சரிப்பையும் தனது பாராளுமன்ற உரையில் விடுத்துள்ளார். சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஈழத்தமிழின அழிப்பை நடாத்திய அதே இராணுவ மனநிலையில் மீண்டும் ஒரு ஈழத்தமிழ் இனஅழிப்பை மதவெறி இனவெறி வழி தூண்டுகின்ற போக்கில் நிகழ்த்தும் இத்தகைய உரைகளை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையும் ஆணையகமும் அனைத்துலகச் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறும் செயல் என்ற வகையில் கவனத்தில் எடுத்து இவ்வாறு அனைத்துலக சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக அனைத்துலகத் தடைகளை விதித்து ஈழத்தமிழர்களை இன்னுமொரு இனஅழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்பது இலக்கின் மற்றொரு கவனப்படுத்தலாக உள்ளது. இலக்கின் இந்தக் கவனப்படுத்தலை நடைமுறைக்குக் கொண்டு வரக் கூடிய நெறிப்படுத்தல் உரையைப் பிரித்தானிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மார்ச் 20 அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து நடாத்திய விவாதத்தில் காசல்டன் வோலிங்டன் கொன்ச்வேடிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மாண்பமை எலியட் கொல்பேர்ன் அவர்கள் நிகழ்த்தி பிரித்தானிய அரசுக்கு மட்டுமல்ல உலகுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். அவரது உரையின் முக்கிய சில கருத்துக்களை மட்டும் இங்கு மீள்பதிவு செய்கின்றேன்.
“சிறிலங்காவின் 2009 முரண்பாடு இரத்த ஆற்றில் முடிவுற்றது. இறுதி மாதங்களில் சிறிலங்காவின் இராணுவம் பத்தாயிரக் கணக்கில் தமிழ்ப் பொதுமக்களை நன்கு திட்டமிட்ட முறையில் இராணுவ இலக்குகளாக்கிக் கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அந்த இருண்ட அத்தியாயம் இன்னமும் திறந்தபடிதான் உள்ளது. 70000 முதல் 170000 தமிழர்களுக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புக்கூறல் இல்லாதநிலையில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றே ஊகிக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கம் யுத்தக் குற்றங்களையும் மனிதாயத்துக்கு எதிரான குற்றங்களையும் தொடர்ந்து மறுத்து வருவதால் அவர்கள் இனஅழிப்புக்குத்தான் உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்ற கோபம் தூண்டப்பட்டு குணப்படுத்தலை அளிக்கக் கூடிய சமாதானப்பாதைக்கு இது தடையாக உள்ளது. தமிழர்களின் நிலையும் அத்துடன் முஸ்லீம் சிறுபான்மை மக்களின் நிலையும் தொடர்ந்தும் ஆபத்திலேயே உள்ளது. சிறிலங்காவில் தண்டனையின்மை ஆட்சி செய்கிறது. மனித உரிமைகள் வன்முறைகள் நிலைத்ததாக உள்ளன. பலமான இராணுவமயமாக்கல் வார்ப்பு நீண்டகால நிழலாக உள்ளது. சிறிலங்கா இவற்றுக்குப் பொறுப்புக் கூறுவதில் தவறுவதும் நிலைமாற்று நீதிக்கான பொறிமுறைகளைத் தொடர்வதற்குத் தொல்லைகளை ஏற்படுத்துவதும் நிரந்தரமான அமைதிக்கும் மறுவாழ்வுக்குமான எல்லா நம்பிக்கைகளையும் இழக்க வைத்துள்ளது. அனைத்துலக சமூகத்தின் பொறுப்புக் கூறலுக்கான அழைப்பு உறுதியான செயற்பாடாக மாற்றப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் சிறிலங்கா உய்வதற்கு முக்கியமான இழப்பாக உள்ளது அதன் பொறுப்புக் கூறலின்மையே என்பதை சரியாகக் கண்டறிந்து அடையாளப்படுத்தி உள்ளது. பல தசாப்பதங்களாகத் தேசிய உணர்வால் செலுத்தப்படும் ஆற்றலற்ற ஆட்சியே முரண்பாட்டின் மூலகாரணமாகி நாட்டின என்பதைக் கொள்ளையிட்டு இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது.
அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாகச் சிறிலங்காவின் கடந்தகால, நிகழ்கால மனித உரிமை வன்முறைகளுக்குப் பொறுப்புக் கூற வைப்பதற்குரிய ஆற்றலுள்ள பொறிமுறைகளைக் கையாண்டு அனைத்துலக விசாரணையை நடாத்தி வழக்கினைப் பதிவதால் மட்டுமே சிறிலங்காவை அர்த்தமுள்ள நீதியையும் மறுவாழ்வையும் அளிக்கச் செய்து இந்த இருண்ட அத்தியாயத்தை மூட வைக்கலாம்.” என்பது மாண்பமை எலியட் கொல்பேர்ன் அவர்களின் உண்மையும் நேர்மையுமான வழிகாட்டலாக உள்ளது. இவர் தனது உரையில் சிறிலங்காவின் இராணுவ வார்ப்பால் மூடப்பட்ட பகுதியாக வடக்கு கிழக்கு மக்களின் பிரதேசம் உள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தி சிறிலங்காவின் 20 இராணுவ அணிகளில் 18 வடக்கு கிழக்கிலும் குறிப்பாகப் 14 வடக்கிலும் நிலைஎடுக்க வைக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிபரத்தையும் பதிவு செய்தார். ஈழத்தமிழர்களின் சமகால நிலையின் காட்சியாக இவரின் உரை அமைந்தது. இடம் கருதி அதனை முழுமையாகப் பதிவு செய்ய இயலாத நிலையில் இவரது உரையையும் மற்றையப் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையும் வெளிவந்துள்ள பிரித்தானியப் பாராளுமன்றக் கன்சாட்டை உலகத் தமிழர்கள் உடனடியாக ஒரு நூலாக உலக மக்கள் அனைவருக்கும் அவரவர் மொழியில் வழங்குவதற்கு ஆவன செய்தாலே ஈழத்தமிழரின் உண்மைக் குரலாக அது மாறும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.

Tamil News